அரசும், நீதிமன்றமும் ஆடும் நாடகமா..?- எழுவர் விடுதலை!

-சாவித்திரி கண்ணன்

தனக்கு முடிவெடுக்க அதிகாரமற்ற ஒரு விவகாரத்தில் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு வருஷக்கணக்கில் கமுக்கமாக இருந்த கவர்னரின் பெருந்தன்மையை என்னென்பது?

அவருக்கு அதிகாரம் இருக்கிறதா எனத் தெளிவு பெறாமலே அவரிடம் ஒரு மனுவைத் தந்து வருடக்கணக்கில் காவடிதூக்கி, கை கூப்பிய ஆட்சியாளர்களின் ஆண்மையை என்னென்பது?

முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத கவர்னர் மூன்று நாட்களில் முடிவெடுப்பார் என நீதிமன்றத்திற்கு உத்திரவாதம் வழங்கிய மத்திய அரசின் சொலிடர் ஜெனரலின் சட்ட அறிவை என்னென்பது?

முடிவெடுக்க அதிகாரமில்லாத கவர்னருக்கு ஒரு வாரக் கெடு கொடுத்து, ”ஐயா உடனடியாக முடிவெடுத்து சொல்லுங்கள்’’ என வாய்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் அறியாமையை என்னென்பது…?

அதிமுகவும், திமுகவும் எழுவர் விடுதலையில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முடியாமல் ஒருவருக்கொருவர் குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் குதர்க்க அரசியலை என்னென்பது…?

அரசியல்வாதிகள் மக்களை அடிக்கடி முட்டாளாக்கிய சம்பவங்கள் அனேகம் உண்டு! ஆனால், அங்கீகாரம் பெற்ற சட்ட அதிகாரப் பதவியில் உள்ளவர்களும், நீதி அமைப்புகளும் சேர்ந்து மக்களை முட்டாளாக்கிய சம்பவம் அனேகமாக இதுவாகத் தானிருக்கும்!

வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை நாம் தொலைக்கத் துணியவில்லை என்பதன் அடையாளமாகத் தான் அவர்களின் விடுதலை தாமதமாவதை புரிந்து கொள்ளமுடிகிறது! அவர்கள் விடுதலை தள்ளிப் போவது நவீன சமூகத்திற்கே அவமானமாகும்!

நினைவுபடுத்துகிறேன்; மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே, விஷ்ணு கோட்சே, மதன்லால் பாவா ஆகியோர் 16 ஆண்டுகளில் ஆயுள் தண்டனை முடிந்து வெளியானார்கள்! காந்தி கொலை சதியில் ஈடுபட்டு விடுதலையான குற்றவாளிகள் பிராமண சமூகத்தினர் என்பதை கவனப்படுத்துவதை என்னால் தவிர்க்க முடியவில்லை! அந்த காந்தி கொலை சதியாளர்கள் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரையில் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டதை மறுக்கவோ, மன்னிப்பு கேட்கவோ தயாராக இல்லாதிருந்தார்கள் என்பதை நீதிமன்றமும், நாடும் அறிந்தே இருந்தது! இவ்வளவு அறிந்தும் காந்தியின் சீடர்கள் இன்று வரை அந்த விடுதலையை எதிர்த்து கருத்து தெரிவிக்கவில்லை, அது தான் காந்தி கற்றுத் தந்த அகிம்சை,சகிப்புத் தன்மை என்ற தத்துவங்களின் வலிமையாகும்!

ராஜிவ் கொலை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விஷயத்தில் சோனியா அம்மையாரும், ராகுலும், பிரியங்காவும் வன்மத்தை வெளிப்படுத்தாமல், ”நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கிறோம்” எனக் கூறிவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் விடுவிக்க கட்டளையிட்ட பிறகும் கவர்னரின் கைகளை கட்டிப் போட்டு மத்திய பாஜக அரசு ஆடும் நாடகத்தை என்னென்பது..?

ராஜிவ்காந்தி கொலை கடுமையான கண்டணத்திற்குரியது. அதற்காக அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மனிதாபிமானமின்றி வருடக்கணக்கில் சிறுகச் சிறுக சித்திரவதைப்படுத்திக் கொல்வது அநீதியானது! உச்சபட்ச தண்டனைக் காலம் முடிந்த நிலையில், அவர்களை விடுவிக்க கோருவது ராஜிவ் கொலைக்கு ஆதரவானதாகிவிடாது. மனித நேயத்தை வாழ்வியல் அறமாக கொண்ட ஒரு தேசம் அவர்களின் விடுதலையை தவறான கண்ணோட்டத்தில் அணுகாது! இந்த எழுவர் விடுதலை வெறும் தமிழர்களின் கோரிக்கையாக மட்டுமின்றி, அகில இந்திய குரலாக வலுப்பெற வேண்டிய காலம் கனிந்துவிட்டது என்றே தோன்றுகிறது! இது ஏதோ பிராந்தியவாத கோரிக்கையல்ல, ஆன்ம நேய பலத்தில் இந்தியாவின் மதிப்பீட்டை கோரும் பிரச்சனை என்றே தோன்றுகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time