இந்து ஆக்டிவிஸ்டாக மாறுகிறாரா ஜக்கிவாசுதேவ்..?

-சாவித்திரி கண்ணன்

என்னாச்சு இந்த யோகா குருவிற்கு…? அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டக்களமாக ( மார்ச்-26) தமிழகத்தின் பிரபல கோவில்களை மாற்றிவிட்டார் ஜக்கி! ‘’அரசாங்கமே கோவிலில் இருந்து வெளியேறு’’ என்று ஜக்கியின் ஆட்கள் கோஷம் எழுப்பியும், பேசியும் பக்தர்களிடம் பிரச்சாரம் செய்தனர். இவர்களுக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது! ஆன்மீக, யோகா அமைப்பாக இருந்த ஈஷாவில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தின் பின்னணி என்ன?

தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுமையும் லட்சக்கணக்கனக்கான மக்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி என்ற பிரணாயாமம் ஆகியவற்றை கொண்டு சேர்த்ததில் கடந்த கால் நூற்றாண்டாக பிரமிக்கதக்க பணிகளை செய்த நிறுவனம் ஈஷா யோகா மையம்!

ஆரம்ப காலத்தில் தன்னுடைய யோகா தொண்டுகளின் மூலம் மதங்களைக் கடந்து மனித நேயப் பார்வையோடு இயங்கி வந்தனர். அந்த நாட்களில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள்..அவ்வளவு ஏன் நாத்திகர்கள் கூட அங்கு சென்று வரக் கூடிய சூழல்கள் இருந்தது. அந்த வகையில் 1997 ஆம் ஆண்டிலேயே நான் ஈஷாவில் யோகா பயிற்சி பெற்றவன். அப்போது அவரிடம் நேரடியாகப் பேசிப் பழகியுள்ளேன்.

அப்போது அரசியல் சார்பற்றும், மதச் சார்பற்றும் இயங்கிய ஈஷா மிகப் பெரிய சக்தியாக வளர்ந்தது! உலகம் முழுக்க அதற்கு கிளைகள் உருவாகின! நன்கொடைகள் குவிந்தன! இன்று அமெரிக்காவின் பிரதான இடத்தில் 1,400 ஏக்கர் பரப்பளவில் அவர்களுக்கு சொந்த இடம் உண்டு. அது போல உலகின் பல நாடுகளிலும் உள்ளன.

கோவை வெள்ளியங்கிரியில் இன்று மிகப் பெரிய அளவில் ஈஷா தலைமை அமைப்பு உள்ளது. அது ஒரு மிகப் பெரிய ஓலைக் குடிலில் இயங்கிய காலத்தில் அங்கு சென்றுள்ளேன். தற்போது மிகப் பெரிய கட்டிடங்கள் அங்கு உருவாகியுள்ளன. அதன் உள்ளே சுமார் நான்காயிரம் ஆன்மீக தொண்டர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள தியானலிங்கமும், ஆதி யோகி சிலையும் தினசரி 30,000 லிருந்து 60,000 பேர் வரை சென்று பார்க்கின்ற – தற்போது தமிழகத்தின் மிக முக்கிய – டூரிஸ்ட் ஸ்பார்ட்டாகிவிட்டது!

ஒரு ஆன்மீக ஞானியின் இயல்புக்கு மாறாக தீடீரென்று தற்போது போர்முரசு கொட்டுகிறார் ஜக்கி வாசு தேவ்! ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற பெயரில் அவர் பிரயோகித்துள்ள சொற்கள் அதிரடியான அரசியல் பேசுகின்றன.

# கோவில்களை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அபகரித்துக் கொள்ளையடித்தனர்!

# இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும்,ஊழியர்களுமே கோவில்களில் திருடுகின்றனர்.

# கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

# கோவில்களை அரசாங்கத்திடமிருந்து மீட்காவிட்டால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தில் கோவில்களே இருக்காது

# கோவில்களில் இருந்து அரசாங்கம் வெளியேற வேண்டும்! பக்தர்களிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும்.

# அக்கரை இல்லாதவர்களின் கையில் கோவில் இருக்கக் கூடாது!

 

இப்படியாக ஆவேசப்படுவது, ஆள் திரட்டுவது, கோஷமிட வைப்பது, போராட்டம் நடத்தத் தூண்டுவது என திடீரென இந்து ஆக்டிவிஸ்ட்டாக ஜக்கி மாறியுள்ளார்.

அதாவது, இது நாள் வரை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்களும் கட்சிகளும் மட்டுமே பேசியதை அவர்களின் அதே தொனியிலேயே ஜக்கியும் பேசுகிறார்.

ஞான வழியில் சென்று கொண்டிருந்த ஒரு கர்மயோகியாக வெளிப்பட்டவர் ஜக்கி! கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா என்ற உயர்ந்த தளத்திற்கு தானும் பயணப்பட்டு மற்றவர்களையும் அழைத்துச் செல்லும் ஞானிகள் இது போல பேச வாய்ப்பே இல்லை.

நமது கோவில்கள் எப்போதெல்லாம் தனியார் கைகளில் இருந்ததோ, அப்போதெல்லாம் அவற்றின் சொத்துகள் களவாடப்பட்டுள்ளன. அதனால் தான் 1927 ல் நமது முன்னோர்கள் அதை காப்பாற்றும் பொருட்டு இந்து அற நிலைய வாரியம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தனர். அன்று நீதி கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த வரலாற்றுத் தகவல்களை நான் முழுமையாக முன்று கட்டுரைகளின் வழியே அறத்தில் எழுதியுள்ளேன்.

அற நிலையத் துறை அவசியமா? அனாவசியமா?

கோயில் சொத்துக்களை அபகரித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? யார்?

அதன் பிறகு உத்தமராயும், ஆன்மீகவாதியாகவும் இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் இந்து அற நிலையத்துறை வலுப்படுத்தினார். அதற்கு அன்று கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்த அதிக்க சமூகம் எதிர்த்தது. சொத்து ஆவணங்கள் முதலிய தகவல்களை மறைத்தது. அரசாங்கம் எடுத்துக் கொள்ளப் போகிறது என்பதை அறிந்த பல சனாதனிகள் அன்று கோவில்  சொத்துகளை தங்கள் பெயருக்கு மாற்றிய சம்பவங்களும் நடந்தன. ”யாரெல்லாம் தங்களை கடவுளின் பிரதிநிதிகளாக இந்த சமூகத்திற்கு காட்டி பெரிய மனிதர்களாக வலம் வந்தார்களோ அவர்கள் தான் இந்த அநீதிகளை கொஞ்சமும் மனசாட்சியின்றி செய்து வந்தனர்’’ என்று அன்று ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் பேசிய பேச்சுக்கள் இன்றும் ஆவணமாய் உள்ளது.

அவருக்குப் பிறகு வந்த ராஜாஜியும் சரி,காமராஜரும் சரி இந்து அற நிலையத்துறையை பலப்படுத்துவதில் தான் ஆர்வம் காட்டினர். தனியார்கள் ஆக்கிரமிப்பில் கோவில்கள் இருந்தவரை அவற்றில் தலை விரித்தாடிய தீண்டாமையை களை எடுக்க முடியவில்லை. அரசு கட்டுப்பாட்டில் எடுத்ததினால் தான் அவை சாத்தியமாயிற்று. 1937 ஆம் ஆண்டு  சென்னை மாகாண பிரதமராயிருந்த ராஜாஜி தாழ்த்தப்பட்டவர்கள் ஆலய நுழைவு சட்டம் கொண்டு வந்தார். அப்போது, ”அரசு கைவசம் நம் கோவில்கள் வந்ததினால் தான் இது சாத்தியமானது! என் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளை நான் நிறைவேற்றினேன்’’ என்றார் ராஜாஜி.

சிதம்பரம் கோவிலை தீட்சிதர்கள் தங்கள் வசப்படுத்தி வைத்துக் கொண்ட காலகட்டத்தில் வருமானமாக அவர்கள் காட்டிய கணக்கும், அது அரசு வசம் வந்த பிறகு தெரிய வந்த உண்மையான வருமானத்திற்குமான வித்தியாசம் மடுவுக்கும், மலைக்குமாக இருந்தது. ஆக, தங்கள் வசம் இருந்த போது கோவில் வருமானத்தை அவர்கள் எப்படி சுரண்டி உள்ளனர் எனத் தெரிய வந்தது. இது போல நூற்றுக்கணக்கான சம்பவங்களை பட்டியலிடலாம்!

அரசு நிர்வாகத்தில் சில பல குறைகள் இருக்கலாம். அவற்றை நாம் தட்டிக்கேட்டு சரிபடுத்த முடியும். ஆனால், தனியார்வசம் சென்றால், வேறு வினையே வேண்டாம்! இது குறித்து தமிழக மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

இன்றும் கூட சில இந்து கோவில்கள் மடாதிபதிகளின் ஆதிக்கத்தில் உள்ளன! அவற்றில் அவர்கள் எந்த மாதிரியான நிர்வாகம் செய்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அவ்வளவு ஏன் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மிகப் பெரிய தொழில் அதிபரான வேணு சீனிவாசன் தமிழக கோவில்கள் சிலவற்றில் கைங்கரியங்கள் செய்ய ஒரு அறக்கடளை ஆரம்பித்தார்.அதற்கு உலகம் முழுக்க இருக்கும் இந்து பக்தர்களிடம் நிதி திரட்டினார். ஸ்ரீரங்கம்,மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சில கோவில்களை தன் கட்டுப்பாட்டில் எடுத்து பணிகள் செய்தார். அவர் கையில் எடுத்த கோவில்களில் எல்லாம் சிலைகள் காணாமல் போயின. அவர் மீது எப்.ஐ.ஆர். கூட பதிவானது. கைதாகி இருக்க வேண்டியவர் பிரதமர் அலுவலகம் வரை லாபி செய்து தப்பித்தார்.

இதையெல்லாம் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், ஆச்சார அனுஸ்டானங்களை கொண்ட பக்தனாக தன்னைக் காட்டிக் கொண்ட வேணு சீனிவாசன் போன்ற தனி நபர்கள் கையில் கோவில் போனால், இன்று கேட்கும் கேள்விகள் கூட கேட்க முடியாது. அவர்கள் வைத்தது தான் சட்டமாகிவிடும். வெளிப்படைத் தன்மை இருக்காது, நம்பகத் தன்மை சிறிதும் இருக்காது. இன்று பொதுப் பணத்தை நேர்மையாக கையாளும் ஒரு பத்து நல்ல நபர்களை ஜக்கி முதலில் அடையாளம் காட்டுவாரா?

ஈஷாவிற்கு உண்மையிலேயே அக்கரை இருக்குமானால், அவர்களால் தமிழக கோவில்களின் மறுமலர்ச்சிக்கு நிறைய பங்களிக்க முடியும். அதை செய்யலாமே! அப்படி செய்வதற்கு அரசாங்கம் ஒரு தடையே இல்லை. அதைவிடுத்து கோவில்களை அரசிடமிருந்து விடுவித்து, ஆதிக்க சாதிகளிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் மிக ஆபத்தானவை. இதை விட பெரிய தீமை தமிழகத்திற்கு வேறில்லை! இதை தமிழகத்தின் 98 சதவிகிதமான மக்கள் ஏற்கமாட்டார்கள். உண்மையான பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் இந்த யதார்த்தம் நன்கு தெரியும்.

இந்து அற நிலையத்துறை சட்டங்கள் கடுமையானவை! சுலபத்தில் யாரும் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிக்க முடியாது! இப்போதுள்ள ஏற்பாடுகளே சரியானவை. கோவில்கள் பராமிப்பின்றி போனதற்கு அரசாங்கம் காரணமில்லை. பக்தர்கள் வருகை குறையும் போது வருமானம் குறைகிறது. வருமானம் குறையும் போது கோவில்களை நடத்த முடிவதில்லை. பக்தர்கள் எல்லா கோவில்களுக்கும் செல்ல வேண்டும் அந்த கோவில்களில் ஒரு கால பூஜை நடத்துவதற்கான நிதியை தாருங்கள். அல்லது எண்ணெய், புஷ்பம் உள்ளிட்டவற்றை வாங்கித் தாருங்கள் என்று ஜக்கி கூறலாமே!

அந்தந்த பக்தியில் வாழ்பவர்கள் ஒரு குழுவாக இணைந்து கோவில்களை பாதுகாக்கவும், புணரமைக்கவும் அரசோடு இணைந்து செயல்படுங்கள் எனக் கூறலாம். எந்த அதிகாரத்திலும் இல்லாத சில தனி மனிதர்கள் தான் இன்றும் பல கோவில்களில் ஒரு கால பூஜை நடக்க உதவி வருகின்றனர். அவர்கள் யாரும் கோவிலே தங்கள் அதிகாரத்தின் கீழ் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லை! அது போல தன்னுடைய செல்வாக்கால் கோவில்களை புனருதாரணம் செய்ய ஜக்கி உதவலாம். கோவில் சொத்துகளில் குடியிருப்போர் ஒழுங்காக வாடகை தாருங்கள் எனக் கூறலாம்!

தமிழகத்தின் பிரபல கோவில்களில் ஈஷா ஆதரவில் அரசுக்கு எதிரான பிரச்சாரங்கள் மார்ச் 26 மாலை நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்களில் சுமார் 90% பிராமணர்களாகவே இருந்தனர் என்பது நமது நண்பர்களின் நேரடி விசிட் மூலம் தெரிய வந்தது. இதன் மூலம் இந்த இயக்கத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்ற விஷயம் நன்றாக தெரிகிறது. பாவம் ஜக்கி! என்ன நிர்பந்தமோ அவருக்கு!

சினிமா துறையில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினிகாந்த் கை நழுவிப் போன வருத்ததில் இருந்த ஆர்.எஸ்.எஸ், பாஜக வகையறாக்கள் தற்போது கிட்டதட்ட ஆனிமீக சூப்பர் ஸ்டார் என்று சொல்லதக்க அளவில் பெரும் செல்வாக்கு பெற்ற ஜக்கியை நன்றாக வளைத்து போட்டுவிட்டனர் என்று தான் தோன்றுகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time