யாருமே யோசிக்காத வகையில், கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிக் கூடம் இல்லாததால் சிறுவர் சிறுமியர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்! சத்துணவு சாப்பிட வழியற்ற நிலை, ஆன்லைன் வகுப்பிற்கான செல்போன் இல்லாமை, படிப்பிலிருந்து விலகி சென்று கொண்டிருக்கும் மனநிலை, வேலை இழந்த பெற்றோர்களால் குழந்தை தொழிலார்களானவர்களின் நிலை..என பலவாறாக கள ஆய்வுகள் செய்து அதிர்ச்சிகரமான தகவல்களை தருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்!
அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் எந்த நிலையில் உள்ளது? சத்துணவை மட்டுமே உண்டு வந்த பல பிள்ளைகளின் நிலை என்ன? வருமானமிழந்த வீட்டின் சிறுவர்கள் கூலி வேலைக்கு சென்று உள்ளார்களா? இப்படி மிக விரிவாக, குழந்தைகளை மையப்படுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நேரடியாக கள ஆய்வு செய்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.
இப்படி ஒரு சிந்தனை வந்ததற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை நிச்சயம் நன்றி பாராட்ட வேண்டும். கொரோனா பெரும் தொற்றால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது, சிறு வியாபாரம் செய்பவர்கள் நலிவடைந்துவிட்டனர், பலர் வேலை இழப்பு, வருமான இழப்பு அடைந்தனர். பல நிறுவனங்கள் பணியாளர் குறைப்புசெய்தனர் என முழுக்க முழுக்க பெரியவர்களை முதன்மைபடுத்தியே இந்த கொரோனா காலத்தில் பேசிக் கொண்டு இருக்கிறோம்.
அறிவியல் இயக்கத்தினர் தங்கள் ஆய்வை இவ்வாறாகப் பிரித்து கொண்டனர். 35 மாவட்டங்களில், ஒரு மாவட்டத்திற்கு 2 அல்லது 3 ஒன்றியங்கள், அப்பகுதியில் உள்ள கிராம, நகர பகுதிகளைத் தேர்வு செய்து, கிராமத்திற்கு 10 முதல் 20 மாணவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 141 கிராமங்களையும், 41 நகரங்களையும் ஆய்விற்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஜூலை 10 மற்றும் 11-2021 தேதியில் பயிற்சி அளிக்கப்பட்ட 202 தன்னார்வலர்களை கொண்டு 2137 மாணவர்களிடம் (1177 ஆண் குழந்தைகள், 957 பெண் குழந்தைகள் என்று) நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு மாணவரிடம் பேசி தகவல் சேகரிக்க குறைந்தது 25 நிமிடங்கள் என்ற அடிப்படையில் செய்துள்ளனர்..!
சத்துணவு இல்லாததால் பட்டினியில் வாடும் பிள்ளைகள் !
மதிய உணவை பள்ளியில் சாப்பிட்டு கல்வி கற்று வந்த பல லட்சம் பிள்ளைகள் கடந்த 18 மாதங்கள் சத்துணவு இல்லாமல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குழந்தைகளின் பெற்றோர்கள் கொரனோ இந்த நாட்டில் இல்லாதபொழுதே மிக வறுமை நிலையில் இருப்பவர்கள். இப்பொழுது கொரனோ வந்துள்ள இந்த 18 மாதங்களில் முற்றிலும் வேலை இழந்துள்ளனர். இவர்களின் குழந்தைகளும் உணவு போதாமல் ஆரோக்கியம் குறைந்து உள்ளனர். இப்படியாக மொத்தம் 38 விழுக்காட்டு குழந்தைகள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் சொல்கிறது.
அபாயகரமான நிலை
இந்த ஆய்வில் தெரிந்த மிக அபாயகரமான செய்தி, 3 % மாணவர்கள், குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இவர்கள் பள்ளி திறந்தாலும், மீண்டும் பள்ளிக்கு வருவதற்கு வாய்ப்பு மிகக் குறைவே. உதாரணத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 3ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி தீப்பெட்டி தொழிலுக்கு செல்வதால் தினமும் 150 ரூபாய் வருமான வருவதாக சொல்கிறாள்! அந்த குடும்பத்தின் முக்கிய வருமானமாக அது பார்க்கப்படுகிறது!
7வது படிக்கும் சிறுமி அதே தொழிலில் தினமும் 500 ரூபாய் பெறுகிறார். இதில் விசித்திரம் அவர்கள் பெற்றோர் கூட தினமும் 500 ரூபாய் பெறுவதில்லை. இத்தகையை குழந்தைகள் மீண்டும் பள்ளி திறந்தால் வருவது மிகப் பெரிய கேள்வி குறியே. அவர்கள் பெற்றோர் அருகில் இருக்கும் பொழுதே, ”நாங்கள் பள்ளிக்கு வரமாட்டோம்” என்று அந்த குழந்தைகள் சொல்கிறார்கள்.
அனைத்து குழந்தை தொழிலாளர்களும் 500 ரூபாய் பெறுவதில்லை. தினமும் 100 ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெறும் குழந்தைகள் 60 விழுக்காடாக உள்ளனர். அதுவும், இந்த ஏழைக் குழந்தைகளின் வேலை நேரம் 10 மணி நேரத்திற்கும் மேல் செல்கிறது…என்பது தான் கொடுமை!
கொரானா காலத்தில் அவர்கள் பெற்றோர்களில் சிலரும் வேலை இழந்துள்ள நிலையில் குழந்தைகளின் வருமானம் முக்கியமானதாகியுள்ளது!
அரசு மீண்டும் பள்ளிகளை திறக்கும்பொழுது முன்பு பள்ளிக்கு வந்து கொண்டிருந்த அனைத்து பிள்ளைகளும் பள்ளிக்கு வருகிறார்களா என உறுதிப்படுத்த வேண்டும். அப்படி வராத பிள்ளைகளின் நிலையை அறிந்து, அதனைக் களைந்து மீண்டும் அவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் தினகரன் கேட்டுக் கொண்டார்.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை 5% உயர்வு
அரசு பள்ளியில் இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் சேர்க்கிறார்கள்…என்பதை தமிழ்நாடு அறிவியில் இயக்கமும் ஆய்வில் உறுதிப்படுத்தி உள்ளது. ஏன் இந்த வருடம் மட்டும் அரசு பள்ளியில் இந்த உயர்வு என்றால்,’’பெற்றோர்களின் வேலை இழப்பு, வருமானம் குறைப்பு போன்ற காரணங்களால் அவர்களால் பிள்ளைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்கச் வைக்க முடியவில்லை அதனால் அரசு பள்ளியை நோக்கி வருகின்றனர், அதே சமயம் தனியார் பள்ளிகளிலும் 7 சதவிகிதம் பிள்ளைகள் சேர்க்கை குறைந்து உள்ளது’’ என்று சொன்னார். அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் மணி.
அரசு பள்ளிக்கு விரும்பி வந்து சேர்க்கும் நிலையில் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வழியாக கற்றுக் கொள்வதற்கு மிக முக்கியமாக தேவை இண்டர்னெட் வசதியுள்ள செல்போன். அது 60% ஏழை மாணவர்களிடம் இல்லை. இருக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைப்பது அரிதாகவுள்ளது. அது அனைத்து பகுதிகளிலும் சீராக கிடைப்பதில்லை. அப்படி 54 விழுக்காடு மாணவர்கள் இன்டர்நெட் இணைப்பு தொடர்ந்து கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். அதனால் படிப்பு முழுமையானதாக இல்லாமல் பாதியில் நின்றுவிடுகிறது. இத்தகைய பிள்ளைகள் தேர்ச்சி பெற்று (அனைவரும் தேர்ச்சி) அடுத்த வகுப்பு சென்றாலும், முந்திய வகுப்பு பாடங்கள் என்ன என்று தெரியாமல் இருப்பார்கள். அவை புதிய வகுப்பு பாடங்களை புரியாமல் செய்துவிடும்.
கல்வி தொலைக்காட்சி கற்பதற்கு தோதாக இல்லை.
கல்வி தொலைக்காட்சி வழியாக படிக்கையில் பாதி மாணவர்கள் மட்டுமே முழுமையாக புரிந்து கொள்ளபவர்களாக உள்ளனர். 66 விழுக்காடு பிள்ளைகளுக்கு கல்வி தொலைக்காட்சி பாடங்கள் புரிவதில்லை! காரணம், பொதுவாக ஒவ்வொரு வகுப்பிலும் குறைத்த கற்றல் திறன் உள்ள குழந்தைகள் இருப்பார்கள். அவர்கள் தொலைக்காட்சி பார்த்து கற்றுக் கொள்ள் இயலாத நிலையில் உள்ளனர். நேரடியாக ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் முறையில், தடுமாறும் பிள்ளைகளைக் கண்டறிந்து ஆசிரியர் பயிற்றுவிப்பார்! சந்தேகங்களை தெளிவுபடுத்துவார். இந்த வாய்ப்புகள் தொலைக்காட்சி வழியாக இல்லை என்பதால் குறைந்த கற்றல் திறன் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு படிப்பு மீதான ஆர்வமே குறைந்து பயம் உருவாக ஆரம்பித்துள்ளது. மீண்டும் பள்ளிகள் திறந்தால், இந்த குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதே எங்களுடைய கள ஆய்வு முடிவுகள் சொல்வதாகும்’’ என்கிறார் அறிவியல் இயக்கம் மாநில ஒருங்கணைப்பாளர் பாலகிருஷ்ணன்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை!
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல அரசுப் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களில் 64 விழுக்காடு பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள். இதில் பல பெற்றோர்கள்(தாய்-தந்தை) வாரம் முழுவதும் கூலி வேலைக்கு செல்வதால் அவர்கள் விட்டு பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாவிட்டால் பாதுகாப்பு இல்லை என்கின்றனர்.
பகல் பள்ளிக்கு சென்று மாலை வீட்டிற்கு வரும் பிள்ளைகள், நாங்களும் வேலைக்கு சென்று மாலை வீட்டிற்கு வந்துவிடுவோம் ஆனால் கடந்த 18 மாதங்கள் நிலைமை தலைகீழ் ஆனது. வீட்டிலேயே பெண் பிள்ளைகள் தனிமையில் இருப்பதால் பாதுகாப்பற்ற உணர்வில் இருப்பதாக கருதுகிறார்கள்.
ஆச்சரியமான செய்தி!
பள்ளிக்கூடம் எப்போது திறக்கும் என பிள்ளைகள் ஏக்கத்துடன் உள்ளனர். பள்ளிகள் திறந்தால் 95 விழுக்காடு பிள்ளைகள் செல்ல தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். வீடு போல் பள்ளியும் மகிழ்ச்சி கொடுக்கும் இடம் என்று 77 விழுக்காடு குழந்தைகள் குறிப்பிடுகிறார்கள். 11 விழுக்காடு பிள்ளைகள் பள்ளி திறந்தால், பள்ளிசெல்வதற்கு பல தடைகள் உள்ளன என்று குறிப்பிடுகிறார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கும்பொழுது
பல மாதங்கள் பிறகு பள்ளிக்கு செல்வதால் குழந்தைகள் பழைய நிலைமைக்கு வருவதற்கு சற்று பொறுக்க வேண்டும். போக போக பாடங்களை அதிகப்படுத்தி செல்லலாம் என்று அறிவியல் இயக்க பொது செயலாளர் சுப்பிரமணி குறிப்பிடுகிறார். அது வரை,பாடங்கள் குறைவாகவும்,விளையாட்டுடன் இணைந்த வகையிலும் ,மகிழ்ச்சியான போதனை முறைகளுடன் கற்பித்தல் வேண்டும் ‘’என்கிறார்.
1.1 விழுக்காடு குழந்தைகளின் பெற்றோர்கள் கொரோனா தொற்றால் உயிர் இழந்து உள்ளனர். அதனால் அத்தகைய குழந்தைகளை சரியாக கண்டுபிடித்து அவர்களுக்கு உதவித் தொகை கொடுத்து, பள்ளி படிப்பு முடியும் வரை அவர்களை கவனித்து கொள்வது முக்கியமாகும்.
Also read
சத்துணவு சாப்பிட்டு கல்வி கற்ற குழந்தைகளுக்கு இப்பொழுது பள்ளிகள் திறக்கும் சூழுல் இல்லையென்றாலும் ஆங்காங்கே இருக்கும் அங்கன்வாடி மையங்கள் மூலம் அவர்களுக்கு ஊட்டசத்து உணவு கிடைக்க வழிவகை அரசு செய்ய வேண்டும். அப்பொழுதான் பள்ளி திறக்கும்பொழுது இத்தகைய பிள்ளைகள் ஆரோக்கியமாக வரமுடியும்.
கொரோனா பாதிப்பே இல்லாத சில கிராமங்கள் தமிழகத்தில் உண்டு. பள்ளி திறப்பை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வைத்து கொள்ளாமல் அந்த அந்த இடங்களுக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்து பள்ளிகள் திறக்க வேண்டும்.
கடைசியாக கொரோனா வருவதற்கு முன்பு குழந்தைகள் எப்படி பள்ளிக்கு வந்து சென்றார்களோ அதே போல் மீண்டும் பள்ளிகள் திறந்த பிறகு அனைத்து குழந்தைகளும் வருகிறார்களா? அப்படி இல்லை என்று அதற்கான உண்மை நிலையை அறிந்து தடைகளைக் களைந்து, அவர்களை பள்ளிக்கு வரவைக்க அரசு கவனம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள்; முனைவர் தினகரன் – மாநில தலைவர்,
எஸ்.சுப்பிரமணி – மாநில பொது செயலாளர் – 7598340424
எஸ்.டி. பாலகிருஷ்ணன் – மாநில ஒருங்கிணைப்பாளர் – 9443668881
கட்டுரையாளர்; – செழியன். ஜா
good journalism
Furthermore, female rats showed higher levels of leukocyte infiltration and inducible nitric oxide synthase expression in the lung parenchyma viagra costs All women received the same dose or placebo with no exclusions for women at risk for thrombotic disease