தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டா..?  – கவனிக்கத் தவறியவை..!

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு ஏக தடபுடலாக அறிவித்து கொண்டாடப்படுகிறது! உண்மையில் இது தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு அல்ல, சென்னை மாகாண சட்டமன்றத்தின் நூற்றாண்டு என்றே கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும். 1921 ல் முதல் சட்டமன்றமானது அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரா, கேரளா, கர்நாடாகாவின் பகுதிகளையும் உள்ளடக்கியது. தமிழ் நாட்டுக்கேயான சட்டமன்றம் என்பது 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்பது மொழி அடிப்படையில் உருவான பிறகே ஏற்பட்டது! அதன் பிறகே ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா மாநிலங்களுக்கும் என தனியாக சட்டமன்றம் தோற்றுவிக்கப்பட்டது. அந்த வகையில் 1956 ல் தான் தமிழ்நாட்டிற்கு என்று தனியான சட்டமன்றம் தோற்றம் பெற்றது. சென்னை மாகாணம் என்ற தாய் சட்டமன்றத்தின் தொடர்ச்சியாக தமிழ் நாடு சட்டமன்றத்தை கொள்ளலாம் என்ற வகையில் இந்த நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அன்று நம்மோடு இருந்த சென்னை மாகாண சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த மற்ற மாநில மக்களுக்கும் கூட இந்த பெருமையில் சற்று பங்கு உண்டு!  ஏனெனில், தென் இந்தியாவிலேயே சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாடத் தகுதி பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு தான் உள்ளது.

இன்றுகொண்டாடும்தமிழ்நாடுசட்டமன்றத்தின் நூற்றாண்டில் முதல் 35 ஆண்டுகால வரலாற்றில் நம்மோடு பங்கு பெற்ற அண்டை மாநில மக்களையும் இதில் பெருமைபடுத்தும் வகையில் அந்தந்த மாநில முதல்வர்களையும் கூட இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு நாம் அழைத்திருக்கலாம்!இந்த சட்டமன்ற நூற்றாண்டில் முதல் 26 ஆண்டுகள் பிரிட்டிஷாரின் அடிமை ஆட்சியின் கீழ் நாம் செயல்பட்ட ஆண்டுகள் என்பதை மறந்துவிடக் கூடாது. அந்த அடிமை வரலாற்றுக்கும் சேர்த்தே தான் நாம் தற்போது விழா எடுத்துக் கொண்டு இருக்கிறோம். மற்றொரு விஷயம் இன்று நாம் விழா கொண்டாடிக் கொண்டிருப்பது கூட இந்த அடிமை தேசத்தில் அவன் எழுப்பிய கட்டிடத்தில் தான். அந்த கட்டிடம் அழகான, உறுதியான, எழில் வாய்ந்த கட்டிடம் என்பதால் அதில் கொண்டாடுவதில் தவறில்லை.

ஜனநாயகம் என்பதும், மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சிமுறை என்பதும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் பெற்ற பாடங்களே! மன்னர் ஆட்சிகால சர்வாதிகாரத்தில் இருந்து மக்கள் ஆட்சிகாலத்திற்கு மாறிய பரிணாமத்தின் வளர்ச்சி போக்கின் அடையாளம் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம் பெற்ற சட்டமன்றமாகும்.

இந்தியாவிலேயே சென்னை மாகாண சட்ட மன்றத்தில் தான் இட ஒதுக்கீடுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, ‘அரசியல் சுதரத்திரம் பிறகு பார்த்துக்கிடலாம், முதலில் சமூக சமத்துவம். சமூக நீதி தான் முக்கியம்’ என்று இயங்கிய ஒரு முன்னோடி சட்டமன்றம் இது தான்! இவை எல்லாமே அன்றைக்கு சென்னை மாகாண சட்டமன்றத்தில் இருந்த முற்போக்கான தெலுங்கு உள்ளிட்ட தென்னக வம்சா வழி தலைவர்களின் பங்களிப்போடு சாத்தியமானது என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்!

அதே போல முதன் முதலாக பெண்களும் ஓட்டுபோடவும், தேர்தலில் நிற்கவுமான மாற்றத்தையும் 1923 லேயே கண்டதும் இந்த சட்டமன்றம் தான்! தேவதாசி ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்ததும், 1937 லேயே மதுவிலக்கை பிடிவாதமாக அமல்படுத்தியதும் இந்த சட்டமன்றமே! 1937ல் தேர்தலில் நேரடியாக நின்று வர முடியாத அறிஞர் பெருமக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்பட்ட சட்டமன்ற மேலவை பின்னர் தலைவர்களின், துதிபாடிகளுக்கான இடமாக மாற்றம் கண்டது.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் சட்டமன்ற மேலவையில் கோலோச்சினார். அப்படிப்பட்ட சட்டமன்ற மேலவையில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை கொண்டுவர எம்ஜி.ஆர் செய்த முயற்சியில் அவர் ஏற்கனவே திவால் நோட்டீஸ் பெற்றவர் என்ற வகையில் நீதிமன்றத்தின் கடும் விமர்சனத்திற்கு ஆளானதில் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

பிரிட்டிஷார் ஆட்சிகாலத்தில் இருந்து சுதந்திரத்திற்கு பிறகான சட்டமன்றம் குணாம்ச அளவில் எந்த அளவுக்கு வளர்ச்சியும், மேம்பாடும் அடைந்துள்ளது என நாம் பார்க்க வேண்டும். படித்த மேல் தட்டு வர்க்கத்தினர் மட்டுமே இடம் பெற்று வந்த சட்டமன்றத்தில் மிக எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களும் இடம் பெற முடியும் என்பது வளர்ச்சி. அதிகாரத்திற்கு எளியவர்களும் வரமுடியும் என்பது குணாம்சரீதியான மாற்றம். அது காமராஜ், கக்கன் காலத்திலேயே நிரூபிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், அதேசமயம் தலைவர்கள் துதிபாடலும், எதிர்கட்சி தலைவர்கள் மீதான துவேஷமும் அதிகமாக கடந்த காலங்களில் வெளிப்பட்டுள்ளது! கூச்சல், குழப்பம், ரகளை, அடிதடி..இழிவான வார்த்தை பிரயோகங்கள், மைக்கை பிடுங்கி தாக்குதல், வேட்டி, சட்டையை கிழித்தல்..ஆகிய அனைத்தும் சட்டமன்றம் சந்தித்த கசப்பான நிகழ்வுகளாகும்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வளவு இழிவாக பேசினாலும், அதை சபாநாயகர் சட்டமன்ற குறிப்பேட்டில் இடம் பெறாது என தெரிவித்துவிட்டால், அதை கண் எதிரே பார்த்த அங்கிருந்த எந்த பத்திரிகையாளரும் எழுதவோ, வெளியே சொல்லவோ முடியாது. அப்படி சொல்லும்பட்சத்தில் அது சட்டமன்ற கெளரவத்திற்கு இழுக்காக கருதப்பட்டு அந்த பத்திரிகையாளர் சிறையில் அடைக்கப்படலாம் என்ற விதிகள் அடியோடு மாற வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத் தொடரும், பாராளுமன்ற கூட்டத் தொடர் நேரடியாக ஒளிபரப்பப்படுவது போல ஒளிபரப்ப வேண்டும். தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா.. நம் பிரச்சினையை எதிரொளிக்கிறார்களா..? என்று பார்க்கும் வசதியை மக்களுக்கு செய்து தர வேண்டும். இந்த நூற்றாண்டு விழாவை தொடக்கமாகக் கொண்டு சட்டமன்ற விவாதங்களை நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time