பள்ளிகள் திறக்கப்பட்டு 19 மாதங்களுக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் வருகின்றனர். நமது தமிழக முதல்வர் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளை வரவேற்று மிகவும் கனிவுடன் அறிவிப்பு தந்துள்ளார்.
பள்ளிகள் திறப்பையொட்டி கடந்த ஒரு வார காலமாகவே அதற்கான ஆயுத்தப் பணிகள் நடந்தன! தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மிகவும் கவனமாக திட்டமிடல் செய்தனர்! ஆயினும் அடிப்படை வசதிகற்ற நிலையிலும், ஆசிரியர் பற்றாக்குறைகளிலும், விதவிதமான சவால்களை சந்திக்கின்றனர்.
ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறெல்லாம் திட்டமிட்டனர், கள எதார்த்தம்,அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன..? என்பன குறித்து அறம் இணைய இதழுக்காக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களைச் சேர்ந்த சில அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் பேசினோம். அவர்கள் பகிர்ந்ததை அப்படியே பதிவு செய்கிறோம்.
ஆசி. மோகன் தலைமையாசிரியர் , சில்வார் பட்டி மாதிரிப் பள்ளி , தேனி மாவட்டம் .
” இருப்பதோ 21 வகுப்பறைகள். தேவையோ 44 வகுப்பறைகள்.
இருப்பதோ 27 ஆசிரியர்கள், தேவையோ 52 ஆசிரியர்கள்.
மற்ற இடங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களைக் கூட மாற்றுப் பணிக்கு அனுப்ப மறுக்கின்றன நிர்வாகத் தலைமைகள். உபரியாக இருந்தாலும் தேவையான இடம் சென்று பணியாற்ற மறுக்கிறார்கள் ஆசிரியர்கள்.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்தி மக்கள் பள்ளியாக மாற்றத் தொடர்ந்து நம்பிக்கையோடு உழைக்கிறோம்., இருப்பதை வைத்துக்கொண்டு இருக்கும்வரை சிறப்பாக செய்து நம்பிக்கையின் துணையோடு இயங்குகிறோம். இதில் அரசுப்பள்ளியை மேம்படுத்துவோம் என வெற்றாகப் பேசும் வாய்ச்சொல் வீரர்களையும் கடந்து தான் செல்கிறோம்” என்றார்.
இவர், மிகக் குறுகிய காலத்தில் 500 க்கும் குறைவாக இருந்த தனது பள்ளி மாணவர்களது எண்ணிக்கையை இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளார். ஆசிரியர்கள் நியமனம் இல்லாததால் தொடர்ந்து கல்வி அலுவலரிடம் கேட்டு கடிதமாக எழுதி உள்ளார். இதனால், நிதி உதவி பெறும் பள்ளியில் இருக்கும் உபரி ஆசிரியர்கள் 20 பேருக்கு மாற்றுப் பணிக்காக ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் கூட இப்பள்ளிக்கு வரவில்லை. ஆதலால் மாற்றுப் பணி ஆணை ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இவர் அலுவலர்களிடம் மன்றாட , தொடக்கப் பள்ளிகளிலிருந்து 20 பேருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. . இவர்களையும் பணியிலிருந்து விடுவிக்க சங்கங்கள் தீவிரமாய் களத்தில் உள்ளன!’’ என்கிறார்.
அதிகாரிகளின் அலட்சிய பேச்சு மனதை கனமாக்குகிறது .நம்மை நம்பிய பெற்றோரையும், குழந்தைகளையும் காக்க முடியாத நிலையை நினைத்தால் ஒட்டுமொத்த கல்வித் துறை மீதும் ரௌத்திரமாய் வருகிறது. இந்தத் தகவல் கல்வித்துறை சார் அனைத்து அதிகாரிகளுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. என் குழந்தைகள் எங்கே செல்வார்கள் ? இடமும் இல்லை , ஆசிரியர்களும் இல்லை , என்று உண்மையாகவே கண்ணீர் சிந்துகிறார் மோகன்
கருப்பம்புலம் பாலாஜி, பட்டதாரி ஆசிரியர், நாகப்பட்டினம்
எங்கள் பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லை.இது மழைக்காலம், மழை பெய்தால் ஒழுகும் வகுப்பறைகள், கழிவறையைப் பராமரிக்கவோ நிதி இல்லை.மேல்நிலைப் பள்ளியானபடியால் ஆசிரியர்கள் நியமனமே இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை ஒரு சவாலாக உள்ளது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.20 மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை எனும்போது வகுப்பறைகள் போதவில்லை. அதனால் 6,7,8 மாணவர்களை ஒரே நாளில் வர வைக்க இயலவில்லை. 6,7,8 மாணவர்களுக்கு எப்படி இட வசதி செய்வதென்றே தெரியவில்லை. மழைக்காலம் என்பதால் சில வகுப்பறைகளை நம்பி மாணவர்களை அமர வைக்க இயலவில்லை. சுழற்சி முறையில் வருவதால் பாடவேளை அதிகரித்துவிட்டது.
தொடர்ந்து பள்ளிக்கு வராமல் விட்டு விட்டு வருவதால் பாடங்களை முடிப்பதும் சிரமமாக உள்ளது.10,12 தவிர மற்ற வகுப்புகளுக்கு பாடம் முடிப்பது சிரமம். ஒரு மாணவ ரோ அல்லது அவரது குடும்பத்தை சார்ந்தவரோ கொரோனாவால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என்பதற்கு போதிய வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை.எனக்குத்தெரிந்த ஒரு அரசுப்பள்ளி மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு முதுகலை ஆசிரியர் கூட இல்லை. ஒரே ஒருவர் பதவி உயர்வில் வந்தார். அவர்தான் பொறுப்புத் தலைமை ஆசிரியர், 11,12 ஆம் வகுப்பில் 100 மாணவர்களுக்கு மேல் உள்ளனர்…என்ன செய்வது. ? என்கிறார்.
ஜான் பெளலா, ஆசிரியர், கொடைக்கானல்
எங்கள் பள்ளி நடுநிலைப் பள்ளி. ஆனால், துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடவசதி உள்ளது.எப்படி வகுப்புகள் பிரித்து பாடங்கள் எடுப்பது? பெற்றோர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஏன் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கு குழந்தைகளை வரச் சொல்கிறீர்கள் என்று! என்கிறார்
இராமு தா, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி,பீ நாயக்கனூர், திருப்பத்தூர்
எங்கள் பள்ளி 2017 ம் கல்வி ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயரத்தப்பட்டு இன்று வரை தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவருகிறது .. 2 ஏக்கர் நிலம் அரசின் பெயரில் உள்ளது. ஆனால் வகுப்பறைகள் நபார்டு மூலம் இன்னும் கட்டப்படவில்லை ..
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உதவியோடு தற்காலிகமாக ஒரு வகுப்பறை கட்டி, அதில் பாடம் கற்பித்து வருகிறோம்.. கழிவறை நிலையோ சொல்லவே தேவையில்லை…! இருப்பினும் தேவையான ஏற்பாடுகள் செய்து வருகிறோம்’’ என்கிறார் . எங்கள் பள்ளியில் இடவசதி இல்லை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் முறையில் வகுப்புகள் நடைபெறும்.
பொன்னுதுரை, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , பெருங்காட்டூர்,
ஜவ்வாதுமலை ஒன்றியம் , திருவண்ணாமலை மாவட்டம்
எனது பள்ளியில் மொத்தம் 223 மாணவர்கள் உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் இரண்டு பேர் மட்டுமே உள்ளோம்.ஒவ்வொரு வகுப்பிலும் 40 முதல் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வகுப்பு மட்டுமே கையாள முடியும்.வகுப்பறை மூன்று மடடுமே உள்ளது.
ஆசிரியர் ருக்மணி, கிருஷ்ணகிரி மாவட்டம்
ITK இல்லம் தேடிக் கல்வியில் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே கருத்தாளர்களாக செயல்பட வேண்டுமாம் .தினமும் யாராவது ஒருவர் மாலை 7 மணி வரை இருக்கவேண்டுமாம். தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டுமாம்..இதெல்லாம் நேற்று CEO கூட்டத்தில் கூறிய தகவல்கள். பள்ளியிலும் பதிவேடுகள் பராமரித்து கற்பித்தலில் ஈடுபட வேண்டும் ,
எங்கள் பள்ளியோ ஈராசிரியர் பள்ளி ….! அதனால், பணிச்சுமை அழுத்தத்தில் எப்படி சமாளிப்பது எனப் புரியவில்லை.
ஆசிரியர் வருணனி , நாகப்பட்டினம் மாவட்டம்
எங்கள் பள்ளியில் கஜா புயலின்போதே முழுமையாக பழுதடைந்த கழிவறைகளை அப்புறப்படுத்தி தர இதுவரை 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் நகராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை. இந்த முறையும் மேம்போக்காக பழுது நீக்கம் மட்டுமே பார்க்கப்படுகிறது.
நேற்று பள்ளித்திறப்பு தொடர்பாக பெற்றோர்களுடன் கூட்டம் நடைபெற்றது. இந்த மழை நாட்களில் ஏற்படும் சாதாரண சளிக்கும், கொரோனா தொற்று சளிக்கும் எப்படி வேறுபாடு கண்டறிவது என சில பெற்றோர் கேட்டனர். பதில் சொல்லத் தெரியவில்லை.
சாந்தி , தலைமையாசிரியர் ,ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி, இடங்கன சாலை, சேலம்
ஏற்கனவே இடப்பற்றாக்குறையில் திணறுகிறோம்,
மழை பெய்வதில் ஒழுகுகின்றன வகுப்பறைகள்,
இடிந்து விழத்துடிக்கும் கட்டிடம் வேறு பயமுறுத்துகிறது.
சுற்றுச் சுவர் இல்லாத மைதானம் என்பதால் குப்பைகள் வந்து விழுந்துள்ளன!,
சலிக்காமல் கழிவுகள் அள்ளிப் போட்டு ஆசிரியர்கள் சோர்ந்து போனோம்.
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளைப் பொறுத்தவரை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO)
தான் கட்டிடத்திற்கு பொறுப்பு. அவர் சென்ற முறை எனது தபால் பார்த்துவிட்டு பள்ளிக்கு வந்தார்…..!
நீங்களே பராமரிப்பு மானியத்தில் சரிசெய்து கொள்ளுங்கள்…என்று சொன்னார்….
மேற்கூரையோ மழையில் சேதமடைந்து….கொஞ்சம் கொஞ்சமாக பெயர்ந்து விழுகிறது….!
கம்பிகள் மழை நீரில் நனைந்து இத்துப்போய்விட்டன….!
பராமரிப்பு மானியத்தில் சரிசெய்ய இயலாது என்று நாங்களும் நிலைமையை விளக்கினோம்.
அதன் பின்னர் எந்த பதிலும் இல்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது ஒரு பெற்றோர் தானே முன்வந்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்….
இன்று BEO வந்து பார்த்து விட்டு சென்றார்…
184 மாணவர்கள், 7 ஆசிரியர்கள்… ’’ என வேதனைப் படுகிறார் .
ஆசிரியர் ஹம்சவல்லி, ஈரோடு மாவட்டம்
எங்கள் பள்ளியில் வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சுழற்சி முறையில்தான் மாணவர்களை வர வழைக்க முடியும். 6 முதல் 12 வகுப்புகளுக்கு
9 வகுப்பறைகளே உள்ளன . ஆனால் மாணவர் எண்ணிக்கை 275 தாக உள்ளதால் இடைவெளிவிட்டு உட்கார வைப்பது பெரும் சவால்’’ என்கிறார்.
ஆசிரியர் அழகு சுந்தரம், தேனி மாவட்டம்
எங்கள் பள்ளியில் ஒரே கட்டிடம் தான் உள்ளது. இடப் பற்றாக்குறை இல்லை. தினமும் மாணவர்கள் வரலாம். ஈராசிரியர் பள்ளி என்கிறார்.
லதா ஆசிரியர் , நாமக்கல் மாவட்டம் .
எங்கள் பள்ளிக்கு இடப் பற்றாக்குறை இல்லை. தினமும் மாணவர்கள் வரலாம். ஈராசிரியர் பள்ளி என்று சில குரல்களும் மேலே குறிப்பிட்ட படி பல குரல்களும் எழுகின்றன.
ஒவ்வொரு ஆசிரியரிடமும் 15 பதிவேடுகள் இருக்க வேண்டுமாம் !
1.கல்வித் தொலைக்காட்சி பதிவேடு
2.ஒப்படைப்புப் பதிவேடு
3.வாராந்திர மதிப்பீட்டு பதிவேடு
4. கல்வித்தொலைக்காட்சி தினசரி பார்வை பராமரிப்பு பதிவேடு
5. மாணவர்களின் ஒப்படைப்புகள்,
6. Reduced syllabus & monthly cue sheets
7. மாணவர்களின் தினசரி வெப்பநிலை பராமரிப்பு விவரப்பதிவேடு
8. பணிமுடிப்பு பதிவேடு(workdone register)
9. பாடக்குறிப்பு
10. பாட ஆசிரியர் மதிப்பீட்டு பதிவேடு
11. வகுப்பாசிரியர் பதிவேடு
12. மாணவர் திரள் பதிவேடு
13 . புத்தகப்பூங்கொத்து பதிவேடு
14. Maths kitbox usage பதிவேடு
15 . வாசித்தல் திறன் பதிவேடு
குழந்தைகளைப் பள்ளிக்குள் வரவழைத்து கற்றல் – கற்பித்தலில் கூட வேண்டாம் , மகிழ்ச்சியாக அவர்களை வழி நடத்துங்கள் எனக் கூறி விட்டு பின்னாலேயே பதிவேடுகளுக்கான அழுத்தங்கள் தரப்பட்டு உள்ளது.
இங்கே பள்ளி திறந்தவுடன் மாணவர்களை வரவழைக்கவும், அவர்களிடையே தொடர்ந்து பள்ளிக்குள் கற்றல் கற்பித்தலை எடுத்துச் செல்லவும் உள்ள சிக்கல்களை ஒருசில மாவட்ட ஆசிரியர்கள் பகிர்ந்துள்ளனர் . தமிழகம் முழுக்க இது போன்ற ஆயிரக்கணக்கான பள்ளிகளில் கட்டமைப்பு சார்ந்தும், ஆசிரியர் பற்றாக்குறை, இட நெருக்கடிகள் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் , ஏராளமான தேவைகள் இருக்கும்போது அவற்றை நிராகரித்துவிட்டு, இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை நோக்கி முழுக் கவனமும் கல்வி அலுவலர்கள் தருவதையும் பார்க்க முடிகிறது.
Also read
இதுபோன்ற பிரச்சனைகள் எல்லாம் நமது தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர், முதல்வர் போன்றோரின் கவனத்திற்கு சென்றதா..? என்று தெரியவில்லை. இவை குறித்தெல்லாம் கவனமெடுத்து சரி செய்யப்பட்டாலே கற்றல் இடைவெளிகள் பெரும்பாலும் நிறைவடைந்து விடும். ஆகவே, இன்றைய அவசியத் தேவையாக அரசு பள்ளிகளின் பற்றாக்குறைகள் களையப்பட வேண்டும்.
கட்டுரையாளர்; ஈரோடு உமா
கல்வியாளர், கல்வி தொடர்பான காத்திரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருபவர்! அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கத்தின் ( A 3) மாநில ஒருங்கிணைப்பாளர். ‘கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி’ நூலின் ஆசிரியர்
Leave a Reply