விபத்துக்கள் இல்லாத தீபாவளியை ஏன் சாத்தியப்படுத்த முடியவில்லை?

-சாவித்திரி கண்ணன்

நெஞ்சைப் பிளக்கும் கோர விபத்துக்கள் இல்லாத தீபாவளி என்பது கடந்த கால் நூற்றாண்டாக ஒரு நிறைவேறாத கனவாகவே தொடர்கிறது. எதைத் தவிர்த்தால்.., இந்த கோர விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என அலசுகிறது இந்தக் கட்டுரை!

சடசடவென்ற வெடிச்சத்தங்கள், கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளம்.. இல்லாத தீபாவளியை நினைத்துக் கூட பார்க்கமுடியாத ஒரு நிலைக்கு சமூகம் வந்துவிட்டது. ஆனால், விபத்துகள், உயிரிழப்புகள் இல்லாத தீபாவளியை நம்மால் ஏன் சாத்தியப்படுத்த முடியவில்லை..?

தீபாவளி பட்டாசுகளுக்கான விபத்துக்கள் மூன்று வகை!

ஒன்று தயாரிக்கும் இடங்களில் நடக்கும் விபத்துகள்!

இரண்டு விற்பனை செய்யும் இடங்களில் நடப்பவை!

மூன்று வெடிக்கின்ற போது சமூகத் தளத்தில் பரவலாக ஏற்படுபவை!

இந்த மூன்றினாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். படுகாயமடைந்த பலர் நரக வாழ்க்கைக்கு தள்ளப்படுகின்றனர். தீ விபத்தால் பெரும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன!

இந்த விபத்துகளுக்கு யார்யாரெல்லாம் காரணம் என்பதை இறுதியில் பார்ப்போம்.

இந்தக் கட்டுரையில் நான் பிரதானமாக எழுதப் போவது பட்டாசு தயாரிக்கும் இடத்தில் நடக்கும் மிகக் கோரமான விபத்துகளைத் தான்! கடந்த 30 ஆண்டுகளாக – எந்த ஒரு ஆண்டும் – விபத்து இல்லாத ஆண்டாக விடிந்ததில்லை. ஆண்டுக்குச் சராசரியாக தற்போது 25 விபத்துகள் உற்பத்திக் கூடங்களில் நிகழ்வதாகத் தெரிய வருகிறது. தெரிய வராமலே போவது இன்னும் அதிகம்! இவற்றில் ஆண்டுதோறும் குறைந்தது 100 லிருந்து 200 பேர் வரை இறக்கிறார்கள்! இறப்பவர்களின் எண்ணிக்கை பலவாறாக மறைக்கப்படுவதால் சரியான அல்லது உண்மையான தகவல்களை நாம் அரசு தரப்பு அமைப்புகளிடம் இருந்து பெற முடியாது.

முற்றிலும் பாதுகாப்பற்ற வகையில் நடத்தப்படும் இந்த பட்டாசு தயாரிக்கும் தொழிற் சாலைகளும், அவற்றின் விபத்துக்களும் ஆண்டுதோறும் தடையின்றி தொடர்வது ஒன்றே போதும், நமது நிர்வாக அமைப்புகளின் பொறுப்பின்மை, ஊழல், பேராசை ஆகியவற்றை உறுதிபடுத்த!

தற்போதைய நிலவரப்படி அரசின் பதிவு பெற்ற 1070 நிறுவனங்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவதாக சொல்லப்பட்டாலும், அனுமதி பெறாதவையும் கணிசமாக உள்ளன. அனுமதி பெற்றவைக்கும்,பெறாதவைக்கும் பாதுகாப்பு அமசங்களை கடைபிடிப்பதில் பெரிய வேறுபாடுகள் இல்லை! மிக முக்கியமாக லைசென்ஸ் பெற்று வைத்துள்ளவர்களில் பெருமளவிலானாவர்கள் இந்தத் தொழிலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. காண்டிராக்ட் விட்டோ, அவுட்சோர்ஸ் மூலமாகவோ எந்த உழைப்புமின்றி பெரும் பொருள் ஈட்டுகின்றனர்!

பட்டாசுத் தொழிற்சாலைகளை மூன்று வகையாக பிரிக்கலாம். ஒன்று, மத்திய அரசின் நாக்பூர் லைசென்ஸ் வைத்திருக்கும் பெரிய தொழிற்சாலைகள்! இவை 60 முதல் 100 அறைகள் கொண்ட கூடமாக இருக்கின்றன. அடுத்தது மாவட்ட ஆட்சியாளர் அனுமதித்த நடுத்தர லைசென்ஸ் தொழிற்சாலைகள். மூன்றாவதாக டி.ஆர்.ஓ எனும் மாவட்ட வருவாய்த்துறை லைசென்ஸ் பெற்று நடத்தப்படும் சிறு தொழிற்கூடங்கள்!  இது ஐந்தாறு அறைகள் கொண்டவை! இவை எதுவுமே விபத்திற்கு விதிவிலக்கல்ல. பெரும்பாலும் பெரிய தொழிற்சாலை விபத்துகளே வெளியில் கவனம் பெறுகின்றன. சிறு தொழிற்கூட விபத்துகளும், மரணங்களும் மறைக்கப்பட்டு விடுகின்றன!

வானம்பார்த்த பூமி, மழையில்லா வறண்ட பகுதி, விவசாய வேலை பொய்த்துப் போனது… ஆகியவை தான் இந்த தொழிலில் மக்கள் ஈடுபட காரணம் என்பது முழு உண்மையல்ல. மானாவாரி விவசாயத்தை இங்கே வெற்றிகரமாக செய்து புஞ்சை பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளும் கணிசமாக உள்ளனர். அரசாங்கம் நீர் மேலாண்மை திட்டங்களை விரைவில் இங்கு விரைந்து நிறைவேற்றி இருந்தால், இன்னும் விவசாயம் வளம் பெற்று இருக்கும்!

இந்த பட்டாசுத் தொழிலில்  தற்போது அதிகபட்சம் ஒரு லட்சம் தொழிலாளர்கள் தான் உள்ளனர். அதிலும், உள்ளுர்காரர்கள் என்ற நிலைமாறி பீகார், வங்காளம், அஸ்ஸாம் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து சிவகாசிக்கு  வேலைக்காக வந்து தங்கியிருப்பவர்கள் அதிகமிருக்கிறார்கள்!  அவர்களை நவீன கொத்தடிமைகளை போலவே இந்த தொழில் நிறுவனங்கள் நடத்துகின்றன என்பதும் கவனத்திற்கு உரியதாகும்!

ஆரம்ப காலங்களில் சீனிவெடி, ஓலைப் பட்டாசுகள், கம்பிமத்தாப்பு, சங்கு சக்கரம், பூச்சட்டி என்ற புஸ்வானம்..போன்ற பட்டாசுகள் தயாரித்து வந்த காலங்களில் விபத்துகள் மிக அரிதாகவே நடந்தன. பிறகு, அதிக லாபம் தரும் பேன்ஸி வகைகளை தயாரிக்க தொடங்கியதில் இருந்து தான் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. அதுவும் கொடூரமான பெரிய விபத்துகள்! உடல்கள் கரிக்கடையாய் எரிந்துவிடும். இறந்தவர் யார் என்றே கூட தெரியாது. தப்பி பிழைத்தாலும் கால், கைகள், உடல் உறுப்புகள் சிதைந்து படுகாயத்துடன் அவர்கள் வாழ்வது கொடும் நரக வாழ்க்கை தான்!

வான வேடிக்கை எனும் பேன்சி ரக வெடிகளை தயாரிப்பதற்கு முக்கியமான மூலப்பொருள் மணி மருந்து. பேன்சி ரக வெடிகள் மேலே போய் வெடிக்க உந்து சக்தியாக இருப்பது இந்த மணி மருந்துதான். சிவப்பு கலர் கொடுக்க ஸ்டான்சியம் நைட்ரேட், பச்சை கலர் கொடுக்க பேரியம் நைட்ரேட், சோடியம் ஆக்சைலேட், கரி மருந்து, சல்ஃபர், வெடி உப்பு, அலுமினிய பவுடர் ஆகிய வேதி பொருள்களின் கலவைத்தான் இந்த மணி மருந்து. இந்த மணிமருந்து வெயில் பட்டால் தீப்பிடித்துவிடும். அதிக உற்பத்திக்காக காயவைக்கப்பட்ட மணிமருந்தே கூட உரசலினால் தீப்பிடித்து விடுகிறது. மேலும், பேன்சி ரக ராக்கெட்டுகளை உற்பத்தி செய்த உடனே தாமதிக்காமல் பேக்கிங் செய்ய வேண்டும். அதிக உற்பத்தியின் போது, பேக்கிங் செய்யப்படாத ராக்கெட்டுகளால் தீ பிடிப்பதே பெரும்பாலும் நடக்கின்றன.

இந்த பேன்ஸி வெடிகளை முற்றிலும் தவிர்த்தாலே 80 சதவிகித விபத்துகள் தடுக்கப்பட்டுவிடும். இவை தயாரிக்கப்படும் இடத்தில் மட்டுமல்ல, வெடிக்கும் தருணங்களிலும் கூட அதிக விபத்துகள் இந்த பேன்ஸி வெடிகளால் தான் நிகழ்கின்றன! இந்தியா முழுமையும் ஆயிரக்கணக்கான தீபாவளி விபத்துகள் இந்த ராக்கெட்டு வெடிகளால் தான் நிகழ்கின்றன!

இத்தனை உயிர் இழப்புகளுக்குப் பின்பும் கூட பாடமும் கற்காமல், குற்றவுணர்வுமில்லாமல் தொடர்ந்து விபத்துக்களுக்கு காரணமான அம்சங்கள் களையப்படாமல் தொடர்வது தான் வேதனையாகும்! உற்பத்தி நிறுவனங்களின் பேராசையும், ஊழல் நிறைந்த அரசு அமைப்புகளும் கைகோர்த்து அத்துமீறல்களை தொடர்ந்து நிகழ்த்துகின்றன!

இதற்கெல்லாம் காரணம் மிதமிஞ்சிய ஊழல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாததே!  பட்டாசு ஆலை லைசென்ஸ் விவகாரத்தில் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத் துறை, போலீஸ், வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை என்று  பல துறைகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதில் சம்பந்தப்படுகின்றன!

இந்த அமைப்புகளிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கித்தான் பட்டாசு ஆலைகளுக்கு லைசென்ஸ் பெற முடியும். இதில் ஒவ்வொரு லைசென்ஸுக்கும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு , தீயணைப்பு துறைக்கு , போலீஸுக்கு , சுகாதாரத்துறைக்கு , தொழிலாளர் நலத்துறைக்கு, வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறைக்கு என ஒவ்வொரு துறைக்கும்தக்க சட்டவிரோத பணப்பட்டுவாடா நடக்கின்றன!

இந்த மனசாட்சியற்ற – அரசு சம்பளம் பெறுகின்ற – மனிதர்களின் வலுவான சங்கிலி பிணைப்புதான் ஒவ்வொரு ஆண்டும் இந்த எளிய மக்கள் கொடுந்தீயில் வெந்து மடியக் காரணமாகின்றன! ஒவ்வொரு விபத்துகளுக்குப் பின்பும் தங்கள் லைசென்சை கேன்சல் செய்யாமலிருக்க இன்னும் அதிகப் பணம் இவர்களுக்கு கொட்டுவதால் ஒரு வகையில் இந்த விபத்துகள் தொடர்வதை லாபகரமாக எண்ணுகிறார்கள் என்றும் தெரிய வருகிறது.

இவர்கள் மட்டுமா காரணம்? சிவகாசியில் இருந்து ஆண்டுதோறும் அரசியல்வாதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு என்று கிப்ட் பேக்காக அனுப்பப்படும் பட்டாசுகள் கொஞ்ச நஞ்சமல்ல, இவற்றின் மதிப்பே பலகோடிப் பெறும்!  இந்த கிப்ட் பேக்கின் நோக்கம் என்ன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஷண நேரம் தோன்றி மறையும் அந்த ஒளி வெள்ளத்தில் திளைக்க, நாம் இந்த ஆண்டும் பட்டாசுகள் வாங்கி காசை மட்டும் கரியாக்கப் போவதில்லை. பல எளிய மனிதர்களின் உடல்களையும் கரிக்கட்டையாக்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதை உணரவும் போவதில்லை!

அதிக சப்தம் எழுப்பும் அணுகுண்டுகள், வான வேடிக்கை காட்டும் விதவிதமான ஜாலம் காட்டும் ராக்கெட்டுகளை முற்றிலும் தவிர்த்தாலே முக்கால்வாசிக்கு மேற்பட்ட விபத்துகள் முடிவுக்கு வரும்! இவற்றின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு மூன்றும் தடை செய்யப்பட வேண்டும்!

நமது நிர்வாக அமைப்புகளின் பொறுப்பின்மை, ஊழல், பேராசை.. ஆகியவை முடிவுக்கு வந்தால் நிச்சயம் விபத்துகளும் கணிசமாக முடிவுக்கு வரும்!

தீமைகள் இல்லாத தீபாவளியைக் கொண்டாட நாம் உறுதி ஏற்க வேண்டும். பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான மாற்றுத் தொழில் வாய்ப்பை அரசாங்கம் விரைவில் கண்டறிந்து நடைமுறைப்படுத்தி, கணிசமானவர்களை இதிலிருந்து விடுவிக்க  வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time