மு.கருப்பசாமி, அருப்பு கோட்டை, விருதுநகர்
”கோயில் சொத்துகளை அபகரித்து வைத்திருப்பவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால்,பெருச்சாளிகளாக பிறப்பார்கள்” என்கிறாரே மதுரை ஆதீனம்?
அவர் வாக்கு பலிக்கப்பட்டும். அப்படியே பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதிகளாக – கேட்பாரில்லாத சுகபோக வாழ்க்கையை – அனுபவிக்கும் ஆதினங்களுக்கு அடுத்த பிறவி என்ன? என்பதையும் சொன்னால் தேவலாம்.
ஜி.வெங்கடாச்சலம், வத்தலக்குண்டு, திண்டுக்கல்
மாரிதாஸுன் கைது கருத்து சுதந்திரந்திற்கு எதிரானதா? திமுக இதில் பின்வாங்குமா?
கருத்து சுதந்திரத்தையும், அவதூறு பரப்பலையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது.
ஒரு இயக்கத்திடம் இருந்து கடுமையாக கருத்து மாறுபடுவது என்பதற்கும், அந்த இயக்கத்தையே கருவறுக்க துடிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.
மாரிதாஸ் ஒரு ஆரோக்கியமான விமர்சகரும் அல்ல, ஊடகவாதியும் அல்ல, அவர் அதிகாரவர்க்க ஆசீர்வாதத்துடன் இங்குள்ள திராவிட இயக்கத்தாரை கேரக்டர் அசாஷினேஷன் செய்வதற்காக ஏவிவிடப்பட்ட அம்பு. அவருக்கு பின்னணியில் இருந்து அவரை ஊக்குவித்தவர்கள் இன்று வெளிப்பட்டுள்ளனர்.
திமுக எதிர்கட்சியாக இருந்த போது ஆர்.எஸ். பாரதி மாரிதாஸ் மீது நடவடிக்கை கோரி காவல்துறையிடம் அவ்வப்போது புகார் அளித்தார். ஆனால், அந்த புகார்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. உதாரணத்திற்கு காஷ்மீரில் 370 விலக்கப்பட்டு கொள்ளப்பட்டத்தை திமுக ஏற்க மறுத்தது. அப்போது திமுகவிற்கு பாகிஸ்தானோடு உறவு இருப்பதாக பொருள்படும் படி பேசினார் மாரிதாஸ்!
இந்த விவகாரத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால், இப்போதும் கடந்த ஆறுமாதமாக அவதூறுகளை பேசியபடி தான் இருந்தார் மாரிதாஸ்! நிதி அமைச்சர் பி.டி.தியாகராஜன் காலதாமதமான அழைப்பினால் ஜீ.எஸ்.டி கூட்டத்தில் பங்கேற்கமுடியாமல் போனதை மிகக் கேவலமாக விமர்சித்திருந்தார், மாரிதாஸ். அது தொடர்பாக திமுக ஐ.டி.விங் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுமட்டுமின்றி , ஏகப்பட்ட அவதூறுகளை முதல்வர் மீதும், அவர் குடும்பத்தார் மீதும் சொல்லிக் கொண்டே இருந்தார். எதிர்கட்சியாக இருந்த போது காவல்துறையில் புகார் அளித்த ஆர்.எஸ்.பாரதி ஆளும்கட்சியான பிறகு மாரிதாஸின் அவதூறுகளை பொருட்படுத்தவே இல்லை.
இப்போதும் கூட பழைய புகார்களுக்கு உயிர் கொடுக்கலாம். அல்லது புதிய அவதூறுகளுக்கு புகார்கள் தரலாம். இரண்டையுமே செய்யவில்லை திமுக. தற்போது முதல் கைது திமுக கொடுத்த புகாரில் நடந்தது. பிறகு மாரிதாஸ் மீது யாரோ ஒருவர் தந்த மற்றொரு புகார் மீது நடவடிக்கை எடுத்ததாகவே காட்டப்படுகிறது. இந்த அளவுக்கு திமுக தயங்குவது எல்லாம் மாரிதாஸ் யார் கைகளின் அம்பாக இருக்கிறார் என்பதை நாம் யூகிக்க வைக்கிறது. உண்மையில் திமுகவிற்கு மாரிதாஸ் விவகாரத்தில் ‘தில்’ இல்லை. தார்மீக நெஞ்சுரம் இல்லை. திமுக மாரிதாஸ் விவகாரத்தில் பின்வாங்குமா? இல்லை, சட்டப்படியான வழிமுறைகளில் உறுதி காட்டுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
மாரிதாஸ் விடுதலையானால் திமுகவை காரணமில்லாமலே மீண்டும், மீண்டும் கழுவி ஊற்றுவார். அதை துடைத்துப் போட்டுக் கொண்டு காதில் விழாதது போல பயணிப்பார்களோ என்னவோ…?
எஸ்.கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை
போயஸ்கார்டன் வீடு ஜெயலலிதாவின் வாரிசுகளாக கருதப்படும் அவரது அண்ணன் பிள்ளைகளுக்கு கிடைத்துள்ளது குறித்து?
சசிகலா கைகளுக்கு போகாதது ஒரு மகிழ்ச்சி என்றால், எடப்பாடியின் ஆசைப்படி அது ஜெயலலிதா நினைவகமாக மாற்றப்படாதது அதைவிட மகிழ்ச்சி. ”பயன்படுத்திய கட்டில் உட்பட பலபொருள்கள் அங்கு எதுவுமே இல்லாமல் துடைத்து வைக்கப்பட்டுள்ளது” என தீபா சொல்லி இருப்பது அதிர்ச்சியோ அதிர்ச்சி!
கோமதிநாயகம், கோவை
இரண்டு டோஸ் ஊசி செலுத்திக் கொண்டவர்கள் தான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் கூறுகிறதே?
சாமிக்கு சக்தியில்லை. அதுவும் சாதாரண ஆசாமி தான். கோயில் என்ற இடத்திற்கான எந்த சக்தியும், தெய்வீகத் தன்மையும், காத்தருளும் பவரும் இல்லை என்பதை மீனாட்சி கோவில் நிர்வாகம் சொல்லாமல் சொல்லி உள்ளது.
ஆரோக்கியமான மனிதர்களை நோய் பரப்புபவர்களாகக் கருதுபவர்கள் மனங்களில் தான் நோய் பரவியுள்ளது.
தயாளன், தாம்பரம்,செங்கல்பட்டு
ஸ்டாலினுக்கு பிறகு திமுக உதய நிதியிடம் சென்றால் மக்கள் ஏற்பார்களா..? பின்னடைவு ஏற்படுமா?
ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதியிடம் மட்டுமே திமுக செல்லும் என்பது தமிழகத்தில் சாதரண பள்ளி மாணவனுக்கும் புரிந்த அரசியலாக உள்ளது. அதே சமயம் அது இப்போதே நடந்தால் அதற்கு மக்களிடம் இசைவு இருக்காது. அந்தஏற்பிற்கான சூழலை கட்டமைக்கும் வேலைகள் பூர்த்தியாகி சந்தர்ப்பம், சூழல்கள் பொருந்தி வரும் போது அறிவிக்கவே செய்வார்கள். அந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் இருக்காது என்றே நினைக்கிறேன்.
அப்துல்நாசர், ஹைதராபாத்
சமீபத்தில் மனம் சோர்வடைய வைத்த அனுபவம் ஏதாவது?
ஆண்டி இந்தியன் படம்பார்த்துவிட்டு அதை விமர்சிக்க கூகுளில் போட்டோக்கள் தேடினேன். அந்த படத்தின் எந்த ஸ்டில்லுமே இல்லை. இயக்குனர் இளமாறனின் போஸ்டர்களும், பேனர்களும் மட்டுமே கொண்டதாக அதன் அனைத்து விளமபரங்களும், தகவல் தொடர்புகளும் இருந்தன! அவரது சாவு போஸ்டரும் சில வரை படங்களும் மட்டுமே பார்க்க முடிந்தது. இந்த அளவுக்கு தன்னை மட்டுமே முன்னிலை படுத்திக் கொண்ட ஆரம்ப நிலை படைப்பாளியை சினிமா உலகம் பார்த்திருக்குமா தெரியவில்லை.
மு.ரத்தினவேல், விருதாச்சலம்
உள்ளாட்சித் தேர்தலில் பலத்தை காட்டுவோம் என ஜி.கே.வாசன் கூறி இருக்கிறாரே..?
வாழ்ந்து கெட்ட பண்ணையார் அவ்வப்போது தன் இருப்பை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். மாநிலங்களவை எம்.பி பதவியை எப்படியோ மல்லுக்கட்டி பெற்றதன் மூலம் ஏதோ கொஞ்சமேனும் மரியாதையோடு வளம் வருகிறார். எஞ்சியுள்ள மிகச் சிலர் இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிபார்கள் எனத் தெரியாது. உள்ளாட்சியில் ஓரம் கட்டப்பட்டுவிட்டால், ஒரு போதும் தலை தூக்க முடியாத நிலை தோன்றலாம். பாஜகவில் சேர்வது மட்டுமே கடைசி வாய்ப்பாக இருக்கும். அங்கு போனாலும் உரிய மரியாதை கிடைக்குமா என்று உத்திரவாதமில்லை.
எம்.சத்தீஸ், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
அடுத்த முப்படைத் தளபதியை தேடுகிறார்களாமே..?
தேவை இல்லாமல் ஒரு புதிய பதவியை உருவாக்கி ராணுவத்தின் கட்டுக் கோப்பையே கலகலக்க வைத்து ஒரு மனிதரை பறி கொடுத்துள்ள நிலையில், அதே பாதையில் இன்னொரு முயற்சி செய்வதை மறு பரிசீலனை செய்வது நல்லது.
ஆர்.தணிகாச்சலம், திருக்கோவிலூர், விழுப்புரம்
மாநாடு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் வழக்கு போட்டு இருக்கிறாராமே…?
அப்படி போடாவிட்டால் தான் ஆச்சரியம்! சிம்புவோடு கைகோர்த்து நல்ல வாய்ப்புகளை தந்த எந்த தயாரிப்பாளரை நிம்மதியாக வாழவிட்டு இருக்கிறது டி.ராஜேந்தர் குடும்பம்? மற்றவர்கள் தன் பிள்ளையை தூக்கி உயர்த்தி வைத்தாலும், அந்த தூக்கிய கையை வலிந்து காயப்படுத்துவதை வன்மமாகச் செய்கிறது அந்தக் குடும்பம்.
அ.அறிவழகன், மயிலாடுதுறை
தற்போது தமிழகத்தில் 10,375 எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாமே..? இது சாதனை தானே?
ஏதோ பெட்டிக் கடை ரேஞ்சுக்கு மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவதும்,இடங்களின் எண்ணிக்கையை மளமளவென்று அதிகப்படுத்துவதும் நடக்கின்றன. மருத்துவ கல்வி என்பது வெறும் எண்ணிக்கை விளையாட்டு அல்ல. தரமான கல்விக்கு முறையான திட்டமிடல் அவசியம்.
மருத்துவ கல்லூரிகளை திறக்கும் ஆர்வம் மருத்துவமனைகளை திறப்பதில் இல்லையே! மருத்துவத்திற்கு உதவியாக உள்ள செவிலியர்கள் கல்லூரிகளை முறைப்படுத்துவதில் இல்லையே..? மருத்துவ அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் இப்படியே போனால், வருங்காலத்தில் டாக்டர் படிப்புக்கு மரியாதை இல்லாமல் போகும் வாய்ப்புள்ளது. சாதனையாக பார்க்கப்படுவதும், சோதனையாக பார்க்கப்படுவதும் அரசு எப்படி இதை அமலாக்குகிறது என்பதில் உள்ளது.
Also read
எம்.மருதமுத்து, கரூர்
துக்ளக் சத்யா அவர்களின் நகைச்சுவை கட்டுரைகள் பற்றி உங்கள் கருத்து?
அபாரமான நகைச்சுவை எழுத்தாளர். திமுகவை எதிர்ப்பதில் அவரிடம் வெளிப்பட்ட கூர்மை, ஜெயலலிதா விஷயத்தில் காணாமல் போனது.
குறிப்பு;
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
கேள்வி கேட் க ஆர்வமுள்ள வாசகர்கள் மேலேயுள்ள லிங்கை சொடுக்கி சுலபமாக தங்கள் கேள்வியை கேட்கலாம்.
//சத்யா அவர்களின் நகைச்சுவை கட்டுரைகள் பற்றி உங்கள் கருத்து?
அபாரமான நகைச்சுவை எழுத்தாளர். திமுகவை எதிர்ப்பதில் அவரிடம் வெளிப்பட்ட கூர்மை, ஜெயலலிதா விஷயத்தில் காணாமல் போனது.// good