போலிச் சாமியார்களும், அரசியல்வாதிகளும் கூட்டாளிகளா..?

- சாவித்திரி கண்ணன்

கள்ளக் காதல் செய்து அடுத்தவர் குடியைக் கெடுத்த பெண்மணியான அன்னபூரணி சாமியாருக்கும், இந்து ராஜ்ஜியத்தின் பெயரால் ரத்தபலி கேட்கும் சாமியார்களுக்கும் பக்தர்கள் கிடைப்பது எப்படி? இது போன்ற சாமியார்களுக்கும், இன்றைய அரசியல் சூழலுக்குமான தொடர்புகள் என்ன..?

மக்களில் பெரும்பாலோரின் வாழ்க்கை துன்பகரமானதாகவே உள்ளது! அந்த துன்பத்தை எப்படி எதிர்கொள்வது என்ற பயிற்சியும், பக்குவமும் அடையாதவர்கள் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்த்து ஏங்கிய வண்ணம் வாழ்கிறார்கள். அந்த துன்பத்திற்கான ஆறுதல் அல்லது தீர்வு எங்கோவோ, யாரிடமோ தமக்கு கிடைக்கும் என்ற அவர்களின் தேடுதலில் கண்டடையப் படுபவர்களே சாமியார்கள்!

அந்த சாமியாருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றோ, குறைந்தபட்சம் இவர் யோக்கியமானவர் தானா என்று கூட அந்த நேரம் மனம் சிந்திக்காது! ஒரு குறிப்பிட்ட சாமியாரின் தோற்றமோ அல்லது சூழலோ பிடித்துப் போய்விட்டால், மக்கள் சரணடைந்து விடுகின்றனர். பெரும்பாலோர் அந்த சாமியார் தனக்கெனவே இறைவனால் அனுப்பட்டவர் என நினைக்கத் தளைப்பட்டு விடுகின்றனர்.

பொருளாதார பிரச்சினை தான் இன்று மிகப் பலரையும் வாட்டுவது, அத்துடன் அன்பு கிடைக்காத ஏக்கம், சுயநலமிக்க சமுதாயத்தால் அடைந்த நிராதரவு நிலை இவை எல்லாமே ஒரு சாமியாரிடம் மனிதனை கொண்டு சேர்க்கும் காரணிகளில் முக்கியமானவை. மற்றொரு முக்கிய காரணம், தீராத நோய் அல்லது உடல் உபாதைகள் கடவுளின் அருளால் தீருமென்று நம்பியும் தீராதவை சாமியார் மூலமாகவாவது தீர்த்து வைக்கப்பட வாய்ப்புள்ளது என அவர்கள் நம்புகிறார்கள்.

தற்போது அன்னபூரணி சாமியாரினியின் கடந்த கால கள்ளக் காதல் விஷயங்கள் பொது வெளிக்கு வந்த நிலையில், போலீசார் அவரை கொரானாவை மீறி கூட்டம் நடத்தினார், மீண்டும் புத்தாண்டில் திருமண மண்டபத்தில் நடத்த உள்ளார்  என்ற வகையில் சிறைப்படுத்த முயன்ற நிலையில், தலைமறைவாகிவிட்டார்! மீண்டும் கூட அவர் தலைதூக்க வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியமான குடும்பச் சூழல், அன்பு செய்யும் உறவுகள், நம்பிக்கையான சுற்றம், பகுத்தறியும் அறிவுத் திறன் ஆகியவற்றில் நிலவும் பற்றாகுறைகளே போலிச் சாமியார்களுக்கு வாய்ப்பாகின்றன என்பது ஒருபுற உண்மை என்றாலும், ஆட்சி நிர்வாகத் தலைமையின் அலட்சியமும்,போதாமைகளும் போலிச் சாமியார்கள் காட்டில் மழை பெய்ய காரணமாகிறது.

போலி சாமியார்களைப் போலவே இன்று மக்கள் நலன்களை காக்கவே ஆட்சி செய்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி பொதுச் சொத்தை சூறையாடும் அரசியல்வாதிகளுக்கு போலிச்சாமியார்களை கைது செய்து சிறையில் தள்ளும் அறச் சீற்றம் கொள்ள வாய்ப்பில்லை. மாறாக அவர்கள் அந்த போலிச் சாமியார்களின் பின்னுள்ள பக்த கோடிகளின் ஓட்டுகளை மட்டுமே கணக்கில் கொள்கிறார்கள். உண்மையில் அந்த போலிச் சாமியார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் வேறு யாரைவிடவும் அவரை நம்பி ஏமாறும் பக்தர்களுக்கே அதிக நன்மை தருவதாகும். ஆனால், அந்த துணிச்சல் இன்று எந்த ஆட்சியாளருக்கும். இல்லாத சூழல் தான் போலிசாமியார்கள் ஊருக்கு ஊர் பெருக காரணமாகிறது.

ஒருவகையில் போலிச் சாமியார்களைப் போலவே அரசியல்வாதிகளும் போலி வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்களே. மக்களின் அறியாமையும், துணிச்சலின்மையும், அதிகாரத்திற்கு அடி பணியும் மனோபாவங்களுமே அரசியல்வாதிகள் தலைத்தோங்க உரங்களாகின்றன! இந்த மூன்றையும் மக்களிடம் நிலை நிறுத்தி பயிற்றுவிக்கும் சாமியார்கள் அரசியல்வாதிகளுக்கு மறைமுகமாக நன்மை செய்தவர்களாகின்றனர். அதனால் தான் நித்தியானந்தா போன்றவர்களை பிடித்து சிறையில் அடைக்காமல் தப்பவிட்டது பாஜக அரசு!

மனித குலம் தோன்றியதில் இருந்து போலி சாமியார்கள் தோன்றியவண்ணமே உள்ளனர். அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் போலிச் சாமியார் குறித்து தனியாக, ‘கூடா ஒழுக்கம்’ ஒரு அதிகாரம் எழுத வேண்டியதாயிற்று.

”பிறரை நம்ப வைத்து வஞ்சிக்கின்ற – பிறர் துன்பத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிற – போலி ஆன்மீகவாதிகளுக்கு ஈடாக வேறு தீயவர் இல்லை” என்கிறார் திருவள்ளுவர்.

மறுபடியும் உறுதிபடச் சொல்கிறேன், எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள், சமரசமற்ற நீதியை நிலை நாட்ட விரும்பும் நேர்மையான ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தால் போலிச் சாமியார்களை மக்கள் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் குறைந்துவிடும். அப்படியே சிலர் இருந்தாலும் அவர்களின் கொட்டத்தை கட்டுப் படுத்திவிடலாம். இல்லாவிட்டால் ஆட்சியாளர்களே போலிச் சாமியார்களுடன் கூட்டணி கண்டு மேன்மேலும் மக்கள் ஏமாறக் காரணமாகலாம்! இது தான் தற்போது நடந்து கொண்டு உள்ளது!

இதில் பாஜக அரசியல்வாதி, பகுத்தறிவு அரசியல்வாதி என்ற பாகுபாடெல்லாம் இல்லை. மதவாத சாமியார்களை பாஜக தன் அரசியலுக்கு பயன்படுத்துகிறது என்றால், மேல்மருவத்தூர் சாமியார், கிறிஸ்த்துவ பிரச்சாரகர் தினகரன் போன்ற துறவுக்கே சம்பந்தமில்லாத பகல் கொள்ளைக் காரர்களை திமுக பயன்படுத்திக் கொள்வதை பார்க்கிறோம். திருவள்ளூர் மாவட்டத்தில் சிவயோகி சிவகுமார் என்ற போலிச் சாமியார்- பெண்களை தவறாக கையாள்பவர் – ஸ்டாலின் முதல்வராவதற்கு நான் தான் காரணம் என சொல்லித் திரிகிறார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே சாமியார்களை சந்தித்து ஆசிகள் பெற்றதை அறிவோம்.

அதிமுக அரசியல்வாதிகள் பற்றி கேட்கவே வேண்டாம். ஜெயலலிதா தன் வெற்றிக்கு யாகங்கள், வேள்விகளை நம்பியவர்! ஒரு காலத்தில் சினிமாவில் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்த ஜெயலலிதாவை தமிழக மக்கள் தங்கள் வாழ்வை தீர்மானிக்கும் இதய தெய்வம் அம்மாவாக்கி ஆட்சிபீடத்தில் அமரவைத்தனர்!

ஹரித்துவாரில் இந்து சாமியார்கள் பலர் கூடி வன்முறையைத் தூண்டும் வகையில் பகிரங்கமாக பேச முடிகிறது. அவர்களின் ரத்த வெறி பேச்சுக்களை ஆட்சியாளர்கள் கண்டிக்கவோ, தண்டிக்கவோ தயாரில்லை என்பதல்ல, அவர்களின் ஆசி வேண்டி நிற்கிறார்கள் மோடியும், அமித்ஷாவும்! இந்தக் கொடுமை ஒரு புறமென்றால், இதை எதிர்கட்சி அரசியல்வாதிகளும் கண்டும், காணாமல் நழுவுகிறார்கள். எனில், இந்த தேசம் எப்படிப்பட்ட அரசியல் ஆளுமைகளை பெற்று உள்ளது என்பதற்கு இதைவிட பெரிய சான்றுகள் வேண்டாம்.

இந்த நேரத்தில் தான் நாம் காந்தியை நினைவு கூற வேண்டியுள்ளது. அவர் யார் நிராதவர்களாக உள்ளார்களோ, உடனே எந்த தயக்கமுன்றி அவர்களை பாதுகாக்க களம் காண்பார். அவர்களை அரவணைப்பார், வெறுப்புடன் பேசுபவர்களிடம் கூட அதை மாற்றிக் கொள்ளும்படி அன்புடன் உரையாடல் நடத்துவார்.

இன்று காந்தியும் இல்லை. அப்படிச் செயல்படத் துணிவுள்ள காந்தியவாதிகளும் இல்லை. அனைவரையும் சமமாக பாவித்து ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களும் இல்லை.

ஆகவே தான்  ஹரித்துவாரில் இஸ்லாமியர்களை கொல்ல வேண்டும். அவர்களை அழித்துவிட வேண்டும் எனப் பேசியது தொடர்பாக வழக்கறிஞர்கள் குழு ஒன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இது தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை கவனம் பெறாமல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் இந்தியாவின் முக்கிய வழக்கறிஞர்களாக அறியப்படும்  பிரசாந்த் பூஷன், விருந்தா குரோவர், துஷ்யந்த் தவே போன்ற வழக்கறிஞர்களும், சல்மான் குர்ஷித் போன்ற முக்கியஸ்தர்களும், ”இது போன்ற நிகழ்வுகளை தடுக்க நீதித்துறையின் அவசர தலையீடு தேவை. அரசின் நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்து இந்த கடிதத்தை எழுதுகிறோம்” என்று தலைமை நீதிபதி ரமணாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சமூக வலை தள தொழில் நுட்பத்தாலும், அதை சாமனிய மக்கள் கையாளும் வாய்ப்புகளும் இன்று அன்னபூரனியை எளிதாக அம்பலபடுத்த காரணமாயிற்று. அதே போல ஹரித்துவார் வன்பேச்சுகளை பெரிய ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் மறைத்தாலும், சாமானிய மக்கள் சமூக வலைத் தளங்களில் அம்பலப்படுத்தி விவாதப் பொருளாக்கி இன்று நீதிமன்றத்தின் கவனத்தை பெற வைக்க முடிந்துள்ளது.

ஆட்சியாளர்களும், ஊடகங்களும் தங்கள் கடமைகளை செய்யத் தவறினால், அதை செய்ய வைக்க மக்களால் முடியும் என்பதை தகவல் தொழில் நுட்பயுகம் சாத்தியப்படுத்தி உள்ளது. சாமியார்களும், அரசியல்வாதிகளும் ஏமாற்றி பிழைப்பதில் கைகோர்த்தாலும் சமூகம் அவர்களை நிராகரிக்கும் வல்லமை பெற வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time