பறப்பதற்கு ஆசைப்பட்டு, இருப்பதையும் இழந்த பன்னீர்!

-சாவித்திரி கண்ணன்

சுய புத்தியும் இல்லாமல், சொந்த பலமும் தெரியாமல் அடுத்தவர் தயவிலேயே தகுதிக்கு மீறிய பதவிகளை பெற்று அனுபவித்து விட்ட பன்னீர் செல்வம், டெல்லி பாஜக தலைவர்களின் தயவால், தலையீட்டால், மீண்டும் அதிமுகவில் முக்கியத்துவம் பெற முயற்சித்து வருகிறார்!

டெல்லியில் இன்று பிரதமரை சந்தித்து பேச முயன்று தோற்றுப் போன பன்னீர் செல்வம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் தலையீட்டை பாஜக தயவில் பெற்று அதிமுகவில் அதிகாரமிக்க பதவியை நிலை நாட்டிக் கொள்ள தவிக்கிறார்!

அதிமுக பதவியில் இருந்த போது 11 எம்.பிக்கள் தயவும், பாஜக தயவும் அதிமுகவிற்கு தவிர்க்க முடியாத நிர்பந்தமாக இருந்தது! தமிழக கவர்னரே தலையிட்டு இ.பி.எஸ்,ஒ.பி.எஸ் இருவர் கைகளையும் சேர்த்து பிடித்து இணைத்து வைத்தார்!

கேள்விக்கு இடமில்லாத வகையில் 100 சதவிகித அடிமையாக இருக்க தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்ட பன்னீர் செல்வத்தை எடப்பாடிக்கு செக் வைக்கும் கருவியாக்கி கொண்டது பாஜக! இந்த ஆதரவு ஒரு புறம் இருந்தாலும் கட்சியில் தனக்கு கிடைத்த பதவிக்கு தக்க வகையில் உழைப்பையும், ஈடுபாட்டையும் காட்டி இருந்தால் கூட பன்னீர் தொடர்ந்து இருப்பார்.

ஆனால், தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள எந்த மெனக்கிடலையும் பண்ணாமல் பந்தாவாக மரியாதைகளை மட்டும் பெற்று வந்தார். ஆனால், அரசியலில் தலைமைப் பதவி என்பது மிகவும் சவாலானது. அதை சாத்தியப்படுத்திக் கொள்ள நிறைய பாடுபட வேண்டும். மனித உறவுகளை இடையறாது பேண வேண்டும். தன்னைச் சார்ந்து இருப்போரின் தேவை அறிந்து உதவ வேண்டும். மற்றவர்களின் மனதை அளக்கும் ஆற்றல் வேண்டும். போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளும் ஆற்றல் வேண்டும். இவை எதுவுமே இல்லாதவர்கள் தலைமையை எட்ட முடியாது!

பன்னீர் எப்போதுமே தலைவராக இருந்தவர் இல்லை. பன்னீரின் பணிவு கண்டு ஜெயலலிதாவால் முதல்வர் பதவியில் பொம்மையாக வைக்கப்பட்டவர் தானே அன்றி, திறமையை மதித்து அவருக்கு வழங்கப்பட்டதல்ல அது! திறமையான மிகப் பலர் அந்தக் கட்சியில் இருந்தும், பதவி இவருக்கு வழங்கப்பட்டதற்கான காரணம் திறமை மட்டுமல்ல, சுயத் தன்மையும் இல்லாதவர், சொன்ன பேச்சை மட்டுமே கேட்பவர் என்பதால் தானே!

சமரச முயற்சிகள் அனைத்தையுமே தவிர்த்து ஏகத்துக்கும் சென்றுவிட்டார் பன்னீர்! அளவுக்கு மீறி பாஜக அவருக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டதோ என்னவோ..? சொந்தக் கட்சியினரின் மன நிலையைக் கூட படித்தறிய முடியாதவராய் அவர் பதவிக்கான பிடிவாதத்தில் மிக அதிக தூரம் பயணப்பட்டு விட்டார்! திரும்பி கட்சிக்குள்ளே வர முடியாத அளவுக்கு ‘எக்ஸ்டீரீம்’ எல்லைக்கு போய்விட்டார்!

‘கட்சிக்குள் தனக்கு செல்வாக்கு இல்லை’ என்ற நிதர்சனத்தை ஏற்க மறுத்து பொதுக் குழுவை தடுத்து நிறுத்த அவர் செய்த பிரயத்தனங்கள் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் எவ்வளவு காயப்படுத்தி இருக்குமானால். அது அவரது வருகையின் அப்படி கொந்தளிப்பாக வெளிப்பட்டு இருக்கும்!

வெளி சக்திகளை நம்பி சொந்த கட்சிக்குள் தலைமைக்கு ஆசைப்பட்டு, அவமானங்களுக்கு மேல் அவமானங்களை சுமக்கிறார்! குறைந்தபட்ச அறிவு இருந்திருந்தால் கூட அவர் நேற்று தான் தடுக்க துடித்த பொதுக் குழுவிற்குள் காலடி எடுத்து வைத்திருக்க மாட்டார். மற்றொரு பக்கம் சசிகலாவின் தூண்டுதலால் ஒ.பி.எஸ்சுடன் இருக்கும் வைத்தியலிங்கம் வழி காட்டுதலில் இயங்கிக் கொண்டுள்ளார்.

நேற்று ஒ.பி.எஸ் மீது ஏதாவது தாக்குதல் நிகழ்ந்திருந்தாலோ, சட்டை கிழிந்திருந்தாலோ, ஒரு சொட்டு ரத்தம் சிந்தி இருந்தாலோ நிலைமையே வேறாக மாறி இருக்கும். ஒ.பி.எஸ்சை அனுப்பியவர்கள் அப்படி எதுவும் நடக்காதா என்ற தவிப்பில் தவியாய் தவித்தனர். காங்கிரஸ் கட்சியில் உள் கட்சி சண்டைகளில் இப்படி நடப்பதுண்டு. அதே சமயம் அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அது எவ்வளவு பெரிய பின் விளைவுகளை கொடுக்கும் என்பதை இ.பி.எஸ் அணியில் உள்ள தலைவர்கள் உணர்ந்தே இருந்தனர். அப்படி தாக்கப்பட்டு இருந்தால், ஒ.பி.எஸ்சுக்கு மிகப் பெரிய அனுதாப அலையை உருவாக்கி இருப்பாரகள், பாஜக மற்றும் திமுக ஆதரவு ஊடகங்கள்! தண்ணீர் பாட்டில் வீசி எறி எறிந்த சிறு சம்பவம் அவ்வளவு கொந்தளிப்புள்ள கூட்டத்தின் ஒரு மிகச் சிறிய வெளிப்பாடு தான்! அதையே பல ஊடகங்கள் பூதாகரப்படுத்தப் பார்த்தார்கள்!

தன் மீது இவ்வளவு அதிருப்தி கட்சிக்குள் இருக்கிறது, தனக்கு யாரும் மரியாதை தரத் தயாரில்லை என்பதை நிதர்சனமாக காணும் அவலம் நிகழ்ந்த பிறகும் அந்தக் கட்சிக்குள் ஒரு தலைமையைப் பெற அவர் நீதிமன்றம் சென்றால் தான் என்ன? தேர்தல் கமிஷன் சென்றால் தான் என்ன?டெல்லியில் பாஜக தலைவர்களுடன் சேர்ந்து சீன் காண்பித்துவிட்டால் எல்லாம் சாதித்துவிட முடியுமா..? இ.பி.எஸ்சுமே கூட தற்போது பணத்தை வீசி எறிந்து தலைமையை நிலை நாட்ட முயன்றுள்ளது ஏற்க முடியாத ஒன்றாகும்! பணம் மட்டுமே வெற்றியை ஈட்டி கொடுக்க முடியாது! தன் தலைமைப் பதவியை நிலை நாட்ட இ.பி.எஸ்சும் நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டும். எப்படி தாக்குபிடிக்க போகிறார் என்பதற்கு காலம் தான் விடை சொல்ல முடியும்!

இன்றைக்கு அதிமுக ஐ.டி விங்கில் கோவை சத்யன் உள்ளிட்ட சிலரின் டிவிட்டுகளைப் பார்த்தேன்! அவற்றை கீழே பார்க்கலாம்!

அதிமுக வரலாற்றில், பொதுக்குழு கூட்டத்தில் இப்படி அவமானப்பட்டு வெளியேறும் நபரை இது வரை யாரும் கண்டதில்லை. முன்னாள் முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் இன்று சொந்த கட்சி பொதுக்குழு நபர்களால் துரோகி என்றும் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்றும் கோஷம் போட்டு வெளியேற்றப்படும் அவமானம் மிகவும் கொடியது.

தன்வினை தானே தன்னை சுடும். இத்தனை எதிர்ப்புகள், அதிருப்தி, தொண்டர்களின் அவநம்பிக்கை அனைத்தையும் தாண்டி யாருக்காக எதற்காக இந்த பதவியை இருக்க கட்டி பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும்? அப்படியே அந்த பதவி கிடைத்தாலும் அந்த பதவியை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும்? கட்சியின் தலைவனாக இருந்தாலும், தொண்டர்களின் தலைவனாக OPS இருக்க முடியுமா?

இது ஒரு சிறு துளி தான்! இந்த மன நிலையே பல தொண்டர்கள் மனதிலும் ஓடுகிறது. நீதிமன்றம் ஒரு கட்சியின் தலைவர் இவர் தான் என நிர்பந்திக்க முடியாது. தேர்தல் கமிஷனும், ‘இந்தக் கட்சிக்கு இவர் தான் தலைவர்’ என தீர்மானிக்க முடியாது. பெரும்பாலான நிர்வாகிகள் பலமும், பெரும் தொண்டர் பலமும் யாருக்கு இருக்கிறதோ, அவர் தான் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.

கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது, ஒடிந்த கிளை ஒட்டாது!

அது போல அதிமுகவில் இழந்த மரியாதையை ஒ.பி.எஸ்சால் இனி ஒரு போதும் மீட்டெடுக்க முடியாது. பாஜகவில் சேர்ந்தால் அண்ணாமலைக்கு கீழ் தான் பணியாற்றச் சொல்வார்கள்! என்ன செய்யப் போகிறாரோ..! ஆனால், ஒன்று பாஜக அதிமுக உள்கட்சி விவகாரத்தில் அளவுக்கு மீறி மூக்கை நுழைத்தால், அவமானப்படுவது உறுதி!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time