பாஸிசத்திற்கும்,மனித நேயத்திற்கும் இடையே நடக்கும் உளவியல் போராட்டம் அழகான திரைமொழியில் ஹிட்லரின் ஜெர்மானிய காலகட்ட சமூகத்தின் வழியே சொல்லப்பட்டிருக்கிறது!
இன்றைய சமகால இந்தியாவின் நிகழ்வுபோக்குகளோடு நாம் இதை ஒப்பீடு செய்து தெளிவு கொள்ளத்தக்க வகையில் இருப்பதால்,இதன் காலப் பொருத்தப்பாடு சிலிர்க்கவைக்கிறது!
இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கிறது. ஹிட்லர் உலகையே வெற்றி கொள்ளப் போவதாக எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; அவனது புகழ்பாடுகிறார்கள். ஜெர்மனியில் வசிக்கும் பத்து வயது நாயகனான சிறுவன் ஜோஜோவும் அப்படித் தான் நம்புகிறான். அப்போது நடந்த சம்பவங்களை ஜெர்மானிய சிறுவன் பார்வையில் இப்படம் சித்தரிக்கிறது. இது வெற்றிகரமான நகைச்சுவைப் படம்.
பள்ளிக் கூடங்களில் நல்லொழுக்கப் பாடத்திற்குச் செல்வதைப் போல, ஜோஜோ ஹிட்லர் இராணுவம் நடத்தும் சிறுவர் முகாமிற்குச் செல்கிறான்.( ஆர்.எஸ்.எஸ் சிறுவர்களுக்கு நடத்தும் சாஹா பயிற்சி போல) ஹிட்லர் சொல்வதைக் கேட்டாலே போதும் புத்தகங்கள் எதற்கு ? மற்ற மாணவர்களோடு சேர்ந்து அவனும் புத்தகத்தை எரியும் நெருப்பில் போடுகிறான். எதிரியைக் கொல்ல மனோ தைரியம் இருக்கிறதா என்பதைத் சோதிப்பதற்காக, முயலின் கழுத்தை திருகிக் கொல்லும்படி, பயிற்சி அளிக்கும் வீரன் சொல்லுகிறான். அப்பாவித்தனம் இன்னும் மாறாமல் இருக்கும் சிறுவனால் இதைச் செய்ய முடியவில்லை. முகாமில் இருக்கும் சக மாணவர்கள் இவனை பரிகாசம் செய்கிறார்கள்.’ராபிட்’ என்ற கேலிப் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். தனது சாகசத்தை நிரூபிக்க, இராணுவ வீரனிடமிருந்து பறித்து குண்டை வீசுகிறான்; அது தவறாக விழுந்து அடிபட்டுவிடுகிறான்.மேலும் அவனுக்கு தன் வீரத்தை காட்ட வேண்டிய அவசியம் வருகிறது.
பதவிக்காகவும்,அதிகாரத்திற்காகவும் ‘ஹிட்லர் வாழ்க” ஹிட்லர் வாழ்க’ என்று முழக்கமிட்டுக் கொண்டே இருக்கும் பெரியவர்கள் மத்தியில் சிறுவனான ஜோஜோ கற்பனையில், ஹிட்லர் வந்து, அவ்வப்போது ஆலோசனை சொல்கிறான். ’’ யூதர்களைக் கண்டால் இராணுவத்திடம் சொல்ல வேண்டும். ஜெர்மானிய இனம்’ தூய இனம்’ அரசு சொல்லும் உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும்’’ என்று ஹிட்லர் இவனிடம் கற்பனையில் சொல்லுவதை அப்படியே நம்புகிறான் ஜோ.
சிறுவன் ரோமன் கிரிபின் டாவிஸ்( Roman Griffin Davis) அற்புதமாக நடித்திருக்கிறான். அவனுடைய அப்பா வெளியூரில் நாஜி இராணுவத்தில் தான் பணி புரிகிறார். அக்கா ஏற்கெனவே காய்ச்சலினால் இறந்துவிட்டாள். அம்மாதான் இவனுக்கு ஒரே ஆதரவு. தங்களது வீட்டில் ஜோவின் அம்மா, இவனது அக்கா வயதை ஒத்த ஒரு யூதப் பெண்ணை யாருக்கும் தெரியாமல் மாடியில் பாதுகாத்து வருகிறார். இதைப் பற்றி ’கெஸ்டபோ’ படையிடம் சொல் என்று ‘நமது ஹிட்லர்’ அவனது கனவில் சொல்லுகிறார். ஆனால் அப்படிச் சொன்னால் ஜோ அம்மாவிற்கு ஆபத்து என்பதால், அந்தப் பெண்ணிடம் பேசி வெளியேற்றப் பார்க்கிறான்; முடியவில்லை. அந்தப்பெண் இவன் அக்காவோடு சேர்ந்து படித்தவள்.வேறு வழியில்லாமல், அந்தப் பெண்ணோடு தொடர்ந்து பேசுகிறான். முதன்முதலாக ஹிட்லருக்கு எதிரான வாதங்களை இவன் எதிர் கொள்கிறான்.
ஒரு புறம் ஹிட்லர்; மறுபுறம் அம்மா. என்ன செய்வது ! இதுதான் ஜோஜோ எதிர்கொள்ளும் சவால்!
இங்கு தான் பாஸிசம் அதைப் பின்பற்றுபவர்களின் குடும்பத்தையே பதம் பார்க்கும் என்ற அனுபவம் பெறப்படுகிறது!.
Also read
இவனது வீட்டை சோதனையிட கெஸ்டபோ படை வருகிறது.முடிவில் சோவியத் படைகள் வருகின்றன. ஜெர்மனி தோற்றுப் போகிறது.
அந்தப் பதின்ம வயது சிறுமிக்கு என்ன ஆகும்! அவள் தன் காதலனோடு இணைவாளா ? ஹிட்லரை எதிர்த்து, போர் வேண்டாம் என விமர்சித்து துண்டுப் பிரசுரம் கொடுக்கும்சிறுவன் ஜோவின் அம்மா கதி என்ன ? இவனுள் இருக்கும் ஹிட்லர் என்ன ஆகிறான்..?
சிறுவனுடைய அறியாமை, மாசற்ற குணம் வழியே கதை நடக்கிறது. நல்ல திரைக்கதை.
போரின் விளைவுகளைச் சொல்கிறது!
அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் மனிதர்களைப் படம்பிடித்துள்ளது!
ராணுவ சீருடைக்குள் தென்படும் மனிதத்தையும் இப்படம் தொட்டுக் காட்டிக் கொண்டே செல்கிறது….!
கிறிஸ்டியன் லியன்ஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படத்தை வால்ட்டிஸ்னி ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது! டைகா வைடிடி(Taika waititi) எழுதி இயக்கியுள்ளார்.
கலைஞர்கள் இப்படிப் படம் எடுப்பது கூட ஒருவகையில் சாகசம்தான். இது பிரைம் தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைக்கிறது. பல விருதுகளை பெறும் வாய்ப்பு இந்த படத்திற்கு இருக்கிறது.
JoJo Rabbit/Dir.Taika wartiti/ 108 நிமிடங்கள்.
1 Comment