அமுக்கரா என்றொரு அதி அற்புத மூலிகை!

அமுக்கரா என்று ஒரு மூலிகை உள்ளது. ஆனால், நம்மில் பலருக்கு இது ஆண்மைக் குறையை சரி செய்யும் மூலிகை என்பது தெரியும்!ஆனால், உண்மையில் அமுக்கரா ஓர் அற்புதமான மூலிகை. காய்ச்சலில் தொடங்கி உடல் வலி மற்றும் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்யக் கூடியது.

இந்த மூலிகையின் பெயரை உச்சரித்தாலே நம்மை ஒருவிதமாக பார்ப்பார்கள். காரணம், அந்த மூலிகைப் பொடியின் முகப்பில்  இதனாலேயே பலர் இந்த மூலிகையை கடைகளில் கேட்டு வாங்கக் கூட கொஞ்சம் யோசிப்பார்கள்.

அமுக்கராவுக்கு அமுக்கிரா, அமுக்கிரி, அசுவகந்தி, அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி என பல வேறு பல பெயர்கள் உள்ளது. Withania somnifera என்பது இதன் தாவரவியல் பெயர்.

அமுக்கராவில் அதன் வேர் மற்றும் இலைக்கு மட்டுமே மருத்துவகுணம் உண்டு. அசுவகந்தாவில் உள்ள அசுவம் என்பதை வடமொழியான சமஸ்கிருதத்தில் குதிரை என்று சொல்வார்கள். இந்த மூலிகையைச் சாப்பிட்டால் குதிரையின் பலம் கிடைக்கும் என்கிறார்கள். வீரியம் மிக்கது என்ற ஒரு பொருளும் உண்டு. உடலில் ஏற்படும் கட்டிகளின் மீதும், வலி உள்ள இடங்களிலும் அமுக்கரா இலையை அரைத்துப் பூசலாம். அமுக்கராவின் வேரையும் அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.

அமுக்கரா பெயருக்கு ஏற்ற மாதிரி ஆண்மைக் குறையை சரி செய்யக் கூடியது. இன்றைய சூழலில் ஆண்மைக் குறையால் அவதிப்படும் பலருக்கு இந்த மூலிகை வரப்பிரசாதம் என்று சொன்னால் மிகையாகாது. கசப்புச் சுவையுடைய இந்த மூலிகைப்பொடியை பாலில் கலந்து பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். அமுக்கரா வேருடன் சம அளவு பூனைக்காலி விதை சேர்த்து இடித்துப் பொடியாக்கி காலை, மாலை வேளைகளில் அரை ஸ்பூன் முதல் ஒரு ஸ்பூன் வரை பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் ஆண்மைக்குறை விலகும். தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபட முடியாதவர்களுக்கும் அமுக்கரா சூரணம் நல்ல தீர்வைத் தரும். அதனால் தான் இதை `மூலிகை வயாகரா’ என்று சொல்வார்கள்.

முன்னர் சொன்னதுபோல அமுக்கரா… ஆண்மைக்குறையை சரி செய்யக் கூடிய மூலிகை என்று மட்டுமே நினைத்துவிட வேண்டாம். அதையும் தாண்டி இன்னும் பல்வேறு நோய்களை தீர்ப்பதில் அதி அற்புதமாக செயல்படக் கூடியது. வலியுடன் கூடிய காய்ச்சலைப் போக்குவதில் அமுக்கராவின் பங்கு அளப்பரியது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், மூட்டு மற்றும் உடல் முழுக்க வலியை ஏற்படுத்தும் சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அமுக்கரா சூரணத்தை காலை, இரவு என பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வேறு மருந்துகளை சாப்பிட்டாலும் அமுக்கராவை தாராளமாகச் சாப்பிடலாம்.

60 வயது நிறைந்த பெண்மணி ஒருவர் சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில் காய்ச்சல் விலகினாலும் மூட்டு இணைப்புகளில் வந்த வலி விலகாமலிருந்தது. அவர் இதற்காக என்னென்னவோ சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் அமுக்கரா சூரணம் சாப்பிட்டதில் ஒரு மாதத்தில் வலிகளிலிருந்து முழுமையாக குணம் பெற்றார். இதே போல் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களும் உடல் வலி மற்றும் மூட்டு வலியால் மிகுந்த சிரமப்பட்டனர். அவர்களுக்கு அமுக்கரா சூரணம் நல்ல நிவாரணத்தை பெற்றுக்கொடுத்தது. பக்கவிளைவு இல்லாத இந்த அமுக்கரா சூரணத்தை வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் சாப்பிடலாம்.

அமுக்கரா சூரணத்தை சாப்பிடுவதால் மனச்சோர்வு நீங்குவதுடன் தூக்கமின்மை பிரச்சினையும் விலகும். மேலும் மூளை சுறுசுறுப்பாவதுடன் ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும். பாலூட்டும் தாய்மாருக்கு ஏற்படும் உடல் சோர்வை போக்குவதுடன் மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு வரக்கூடிய உடல் மற்றும் மன பலவீனத்தில் இருந்து மீட்க உதவும். பொதுவாக உடல் நோய்களுக்கு தனியாகவும் மன நோய்களுக்கு தனியாகவும்தான் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், உடல் மன நோய் என இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்தாக செயல்படக்கூடியது அமுக்கரா என்று சொன்னால் மிகையாகாது.

 

சக்தி கொடு… சக்தி கொடு…என்று யார் யாரிடமோ கேட்பதைவிட சக்தி நிறைந்த அமுக்கரா சூரணத்தைச் சாப்பிட்டால் நிச்சயம் சக்தி கிடைக்கும். ஊக்க மருந்துகளை உட்கொள்ளும் விளையாட்டு வீரர்கள்  அதற்குப் பதிலாக நல்ல ஊட்டம் நிறைந்த உடல் பலத்தை கொடுக்கக்கூடிய அமுக்கரா சூரணத்தைச் சாப்பிட்டாலே போதும். மூளை செல்களைத் தூண்டி புத்துணர்ச்சியூட்டக்கூடிய அமுக்கராவை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக உடல் உழைப்பு செய்பவர்கள் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், மருந்தை மருந்தாக மட்டுமே சாப்பிட வேண்டும். நாம் பொதுவாக பலன் தருகிறது என்பதற்காக அதை அளவுக்கதிகமாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொண்டு அளவோடு உண்டு பலன் பெறுங்கள்.

காச நோய், முடக்குவாத நோய்கள், வயதான நேரங்களில் ஏற்படக்கூடிய உடல் மெலிவு மற்றும் சோர்வினைப் போக்கவும் அமுக்கரா உதவும். ஆஸ்துமா மற்றும்  மூட்டு வாதத்துக்கு  பயன்படக் கூடிய ஸ்டீராய்டுகளில் ஒன்றான கார்டிசோன் அமுக்கராவில் நிறைந்துள்ளது. நரம்புத் தளர்ச்சி, உடல் பலவீனத்திற்காக ஏதேதோ மருந்துகளை உட்கொள்பவர்கள் அமுக்கரா சூரணத்தைச் சாப்பிட்டாலே போதும். இன ஹார்மோன் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பதால் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இதைச் சாப்பிடலாம். பெண்களின் மார்பக வளர்ச்சியை அதிகரிக்க அமுக்கரா சூரணம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

அமுக்கரா சாப்பிட்டால் உடல் பருத்து விடும் என்ற ஒரு தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. அது உண்மையல்ல… எல்லோருக்கும் உடல் பருமனாகி விடாது. மெலிந்த தேகம் உள்ளவர்களின் உடல் பருக்கும்; அதேநேரத்தில் பருமனாக உள்ளவர்களின் உடல் மெலியும். அமுக்கரா சூரணமாக மட்டுமல்லாமல் லேகியமாகவும் கிடைக்கிறது. இவற்றில் இரண்டில் ஒன்றை வாங்கிச் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்களது நோயின் தன்மைக்கேற்ப சாப்பிட்டு வந்தால் முழுமையான பலன் கிடைக்கும்.

கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time