உடல்வலி, காய்ச்சல், தலைபாரம் விலக!

-எம்.மரியபெல்சின்

மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லை என்பார்கள். இந்த பழமொழியைப் போல இப்போதெல்லாம் காய்ச்சல், கொரோனா போன்றவை வந்தாலும் அதன் பிறகும் தொடரக்கூடிய உடல்வலி, தலைபாரம், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட சிக்கல்கள் பலரை பாடாய்ப்படுத்தி எடுக்கின்றன. காய்ச்சலை மட்டுமல்ல, அதை தொடர்ந்து வரக்கூடிய தொல்லைகளையும் விரட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதப்பட்டதே இந்தக்கட்டுரை. இன்றைய சூழலில் இந்தத் தகவல் பலருக்கும் தேவையாக இருக்கிறது என்பது உண்மை.

முதலில் இன்றைக்கு வரும் காய்ச்சலை விரட்டுவது பற்றிப் பார்ப்போம். காய்ச்சலில் பல வகை இருக்கலாம். எப்பேர்ப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும்  அதை உண்டு இல்லையென்று பார்த்துவிடக்கூடியது நமது பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தக்கூடிய மூலிகைகள். இங்கே நாம் மூலிகை என்று சொன்னதும் அந்த அரிய வகை மூலிகைகளுக்கு எங்கே போவாது? என்று சிலர் யோசிக்கத் தொடங்கியிருக்கலாம். மிக எளிதாக நம் வீட்டு சமையலறையில் அன்றாடச் சமையலுக்காக வைத்திருக்கும் கறிவேப்பிலை அதில் முக்கியமான மூலிகை. அடுத்தது பகைவன் வீட்டில் போய்கூட உணவருந்தும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் மிளகு. பிறகு உள் உறுப்புகளை சீர்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் சீரகம். இவற்றுடன் கொஞ்சம் இஞ்சி, கொஞ்சம் தேன் போதும்.

கறிவேப்பிலை இரண்டு ஈர்க்கு எடுத்துக்கொண்டு அதனுடன் 5 மிளகு, அதைவிட ஒரு மடங்கு அதிகமாக சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து வெந்நீர் விட்டு வடிகட்ட வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு தேன் சேர்த்துக் குடித்தால் போதும். காய்ச்சல் வந்த வழியைப் பார்த்து தலைதெறிக்க ஓடிவிடும். அந்த அளவுக்கு இந்தக் கசாயம் மதிப்புமிக்கது.  பிரச்சினையின் தீவிரத்தைப்பொறுத்து காலை, மதியம், இரவு என இந்தக் கசாயத்தை புதிதாக தயாரித்துக் கொடுத்தால் வேகமெடுக்கும் காய்ச்சல் விருட்டென கீழே இறங்கும். இது மட்டுமே போதுமா? என்றால் சிலருக்குப் போதும். இன்னும் சிலருக்கு வேறு வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால், அவற்றுக்கும் சேர்த்து மருத்துவம் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

காய்ச்சலுடன் சேர்ந்தோ அல்லது முன்கூட்டியோ வரக்கூடியது சளி, இருமல் பிரச்சினைகள். இவற்றுக்கு இரவில் பூண்டுப்பால் குடிப்பது நல்லது. பூண்டுப்பாலா…? அப்படியென்றால் என்ன என்று கேட்பவர்களுக்காக இந்தத் தகவல். 10 பல் வெள்ளைப்பூண்டு பற்கள், 50 மில்லி பால், அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். பூண்டு வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து ஒரு கொதிவிட வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்கியதும் பனங்கல்கண்டு சேர்த்து நன்றாகக் கடைந்து இரவு தூங்குவதற்குமுன் சாப்பிட வேண்டும். இதேபோல் பகல் உணவுடன் சின்ன வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடுவது சளித்தொல்லையிலிருந்து விடுவிக்க உதவும். சிலர் இரவில் வெங்காயம் சாப்பிடுவார்கள்; அதைத் தவிர்ப்பது நல்லது. இரவில் சாப்பிடுபவர்கள் வேக வைத்துச் சாப்பிடுவதே நல்லது.

மூக்கடைப்பு, மூச்சுவிட சிரமம் எனச் சொல்பவர்களுக்கும் எளிய முறைகள் ஏராளமாக உள்ளன. மூக்கடைப்புக்கு திருநீற்றுப்பச்சிலை இலையை சுவாசித்தாலே போதும். இன்னும் சொல்லப் போனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருநீற்றுப்பச்சிலையை வெறுமனே மென்று சாப்பிட்டாலே அதிலிருந்து விடுபடலாம். அந்த அளவுக்கு மிகச்சாதாரணமாகக் கிடைக்கும் திருநீற்றுப்பச்சிலைக்கு மகத்துவம் இருக்கிறது.

முருங்கை விதையைச் சாப்பிட்டால் நெஞ்சில் சளி கட்டி மூச்சுவிட சிரமப்படுபவர்களும், ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டதாகக் கருதுபவர்களும் நல்ல நிவாரணம் பெறலாம். ஆயிரக்கணக்கில் செலவு செய்யவேண்டிய அவசியமும் இல்லை, எந்தவிதச் சிரமமும் இல்லாமல் முருங்கை விதையைச் சாப்பிடலாம். இதனால் எத்தகைய பக்கவிளைவும் ஏற்படாது என்பதால் வயது வித்தியாசமின்றி அனைவரும் சாப்பிடலாம்.

இவை தவிர, இப்போது வரக்கூடிய காய்ச்சல் உடல்வலியையும், தலைபாரத்தையும் விட்டுச் செல்கிறது. காய்ச்சல் நின்றபோதிலும் கை கால் மூட்டுகள், முதுகு மற்றும் இடுப்புப் பகுதி என ஒவ்வொரு மூட்டு எலும்புகளின் இணைப்பிலும் தீராத வலி எடுக்கிறது.

இவற்றுக்கெல்லாம் நொச்சி இலைக் குளியல், மஞ்சணத்தி என்ற நுணா, புங்கை மர இலை, யூகலிப்டஸ் இலை போன்றவற்றை நீர் விட்டு கொதிக்க வைத்துக் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். இவைதவிர அமுக்கரா என்ற அஸ்வகந்தா பொடியை பால் அல்லது வெந்நீரில் கலந்து காலை மற்றும் இரவுவேளைகளில் குடித்து வந்தால் வலியிலிருந்து விடுபடலாம். நறுக்குமூலம் என்ற கண்டதிப்பிலியை ரசத்தில் சேர்த்துக் கொள்வதாலும் இடுப்பு வலி மற்றும் உடல் வலி நீங்கும்.  முருங்கை இலை மற்றும் அதன் ஈர்க்கில் ரசம், சூப் வைத்துக்குடிப்பதாலும் வலிகளிலிருந்து விடுபடலாம்.

கற்பூரவல்லி இலை

காய்ச்சல் நீங்கினாலும்கூட சிலருக்கு தலைபாரம் தொடர்ந்து தொல்லை கொடுக்கும். அப்படிப்பட்டவர்கள் நல்லவேளை, நாய்வேளை போன்ற மூலிகைச் செடிகளை வேருடன் பிடுங்கி அவற்றை லேசாக சிதைத்து தலையின்மீது வைத்துக் கட்டி ஒரு மெல்லிய துண்டைக் கொண்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும். இது தலை நீரேற்றத்தைக் கட்டுப்படுத்தும். அதேபோல் தலைக்கு குளிப்பதற்குமுன் அரை ஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்துப் பொடியாக்கி உச்சந்தலையில் வைத்து 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் தலையில் நீர் சேராமல் பார்த்துக்கொள்ளும்.

குளிப்பதற்குமுன் ஓமம் வைக்க மறந்துவிட்டால் குளித்து முடித்தபிறகு நான்கைந்து மிளகை கல்லில் வைத்து இடித்துப் பொடியாக்கி மெல்லிய துணியில் வைத்து தலையில் தேய்த்தாலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

இவை தவிர, நாக்குச்சுவையின்மை, உணவில் நாட்டமின்மை ஏற்படும். அத்தகைய நேரங்களில் கொத்தமல்லி விதையை (தனியா) வறுத்து துவையல் செய்து சோற்றுடன் சாப்பிடலாம். வெள்ளைப் பூண்டினை நெய்யில் வதக்கி புளி சேர்த்து அரைத்து துவையல் செய்யலாம். நிறைய நீர் அருந்துவது, சுக்கு மல்லி காபி, கல்யாண முருங்கை – தூதுவளை துவையல், கற்பூரவல்லி இலை சாப்பிடுவதும் பலன் தரும். துளசி, தூதுவளை, கற்பூரவல்லி, மிளகு, சீரகம், இஞ்சி கலவையில் கசாயம் வைத்துக் குடிப்பதும் இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும். மிக எளிதாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உடல்நலம் காக்கலாம்.

கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்

இயற்கை வழி மருத்துவர், உடல் நல ஆலோசகர், மூத்த பத்திரிகையாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time