குஷ்புவின் தடுமாறும் அரசியல் பயணம்…!

சாவித்திரி கண்ணன்

ஊசலாடிய குஷ்பு, உறுதிப்படுத்தினார் காங்கிரஸை! அந்த மட்டுக்கு தற்போதைய சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளியை பலமாக வைத்துவிட்டார்.

குஷ்பு நல்ல பிரச்சாரகர்,சிறந்த புத்திசாலி,அரசியல் அறிவுமுள்ளவர்!

ஆனால், சந்தர்ப்பவாத குணமுள்ளவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவில் சேர்வதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததை யடுத்து, அவருக்கு காங்கிரசில் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்காக கட்டாயம் ஏற்பட்டு விட்டது.  அதை நேற்றைய வடசென்னை ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாகவே செய்துவிட்டார்.

அதே சமயம் கடந்த சில மாதங்களாக அவர் பாஜகவில் சேர்வதற்கு எடுத்த பிரயத்தனங்கள் தெரிய வந்தவர்களுக்கு குஷ்புவின் நேற்றைய பேச்சுகள் குழப்பமாகவோ,அதிர்ச்சியாகவோ கூட இருக்கலாம்!  ஆனால்,அவரது நடவடிக்கைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவன் என்ற வகையில் எனக்கு இது ஆச்சரியமில்லை

முதலில் அவர் அதிமுகவில் சேருவதற்குத் தான் விரும்பினார். ஆனால்,அங்கு சசிகலாவை மீறி தன்னால் ஜெயலலிதாவிடம் முக்கியத்துவம் பெற முடியாது என்பதும்,ஒரு பெண் இன்னொரு பெண்ணை வளர்த்துவிடுவது அரித்திலும் அரிது,அதுவும் ஜெயலலிதா விஷயத்தில் அதை ஒரு போதும் எதிர்பார்க்கமுடியாது என தெளிவாக கிரகித்துக் கொண்ட பிறகு திமுகவில் சேர்ந்தார்.

2010 முதல் 2014 வரை திமுகவில் நான்காண்டுகள் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார்.அவர் பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்தது அவருக்கு திராவிட இயக்கதவர்களிடையே ஓரு மரியாதையைப் பெற்றுத் தந்திருந்தது.திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் தொலைகாட்சித் தொடர்களில், நிகழ்வுகளில் நடித்து வந்தார்.ஜெயா தொலைக்காட்சியில் ஜாக்பாட் என்ற வாராந்திர நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த போது ஒரு நாள் கால்சீட்டுக்கு ஒரு லட்சம் வாங்கினார். திடீரென்று அவர் திமுகவில் சேர்ந்ததால் அந்த நிகழ்ச்சியில் தொடர முடியாமல் போனது.ஆனாலும் திமுகவினர் அவரை பிரச்சாரத்திற்கு அழைப்பதன் மூலம் கணிசமாகப் பணம் தந்தனர்.2014 நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு சீட் எதிர்பார்த்தார் குஷ்பு.அது கிடைக்கவில்லை! திமுகவில் அவர் கருணாநிதியுடன் காட்டிய நெருக்கம்  ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை.குஷ்புவிற்கும்,ஸ்டாலினுக்கும் ஒத்துப் போக முடியவில்லை.இதனால்,அவர் திமுகவிலிருந்து வெளியேற நேரிட்டது.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் ராகுலைச் சந்தித்துப் பேசி, அகில இந்தியச் செய்தி தொடர்பாளர் என்ற பெரிய பதவியைப் பெற்றார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சீட் எதிர்பார்த்தார்  கிடைக்க வில்லை.  ஆனால், அவர் பிரச்சாரம் செய்வதற்கென்று காங்கிரசிட மிருந்து  50 லட்சம் பெற்றார்.ஆனால்,அதற்கு அவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்தார். மற்றபடி அவரை பிரச்சாரத்திற்கு அழைத்தவர்களிடம் ஒவ்வொரு விசிட்டுக்கும் இரண்டு லட்சம் வாங்கினார்.ஆனால்,குஷ்புவை அழைப்பதால் கூடுதல் கூட்டம் வருவதில்லை என்பதால் காங்கிரசார் அவரை அழைத்து கூட்டம் போடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை!

குஷ்பு காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் என்ற வகையில் காங்கிரசின் கொள்கைகளை,பாஜகவின் மக்கள் விரோத  கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சிக்க கடமைப்பட்டவர்.ஆனால்,அத்திபூத்தார்போலத் தான் அவர் அப்படி விமர்சித்தார்.

இதற்கிடையில்,பாஜக கொண்டு வந்த சனாதனக் கொள்கை கொண்ட படு பிற்போக்குத்தனமான கல்விக் கொள்கையை ஆதரித்து குஷ்பு டிவிட்டர் செய்தார்.இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது! அதுமட்டுமின்றி, ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்த போது ஜோதிராதித்திய சிந்தியா அல்லது  சச்சின்பைலட் ஆகியோருக்கு பொறுப்பு தரலாம் எனக் கருத்துகளை பொது வெளியில் கூறினார். ராகுலைத் தவிர வேறு யாரையும் கட்சித் தலைவராக நினைத்துப் பார்க்க முடியாத காங்கிரஸ் தொண்டர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஷ்பு தலைவர் பதவிக்கு குறிப்பிட்ட இருவரில் ஒருவர் பாஜகவில் சேர்ந்துவிட்டார்.மற்றவர் பாஜகவில் சேர முயற்சித்தார் என்பது கவனத்திற்குரியது.

சமீபத்தில் பாஜக கொண்டு வந்த விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்கள்,தொழிலாளர் விரோத சட்டங்கள்,சுற்றுச் சூழல் மசோதா ஆகிய எதற்குமே எதிர்வினை செய்யாமல் குஷ்பு அமைதி காத்தார்.

உ.பி பெண் பாலியல் துயரம் குறித்து பொத்தாம்பொதுவாக, ’’இது போன்ற பாலியல்  பலாத்காரங்கள் எந்த கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதிகம் நடக்கிறது என்று புள்ளி விபரக்கணக்குகளை சொல்லி, பழி போடுவது உதவாது.இது போன்ற சம்பவங்கள் எங்குமே நடக்காமல் இருக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என டிவிட்டரில் குறிப்பிட்டு விட்டு, நடந்த சம்பவத்தை மறைத்து,குற்றவாளிகளைக் காப்பாற்ற உ.பியின் யோகி அரசு செய்தவை  குறித்து, எதுவும் சொல்லாமல் தவிர்த்துள்ளார். இப்படி டிவிட்டரில் மேலோட்டமாக அரசியல் செய்ததற்கு மேல் ஒன்றும் செய்யவில்லை. ராகுல்காந்தி தாக்கப்பட்டதற்குக் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்தச் சூழலில் தான் பாஜக தலைவர் முருகனிடம் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி பேசியதாகத் தகவல்கள் வருகின்றன.,குஷ்பு பாஜக வருவதென்றால்,அவருக்கு அதிகாரமிக்க முக்கிய கட்சிப் பதவியுடன் சில நிபந்தனைகளை விதித்ததாகத் தெரிகிறது. ஆனால்,பாஜக மேலிடமும், ஆர்.எஸ்.எஸும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். அத்துடன் அவரது இஸ்லாமியப் பின்னணி,சுதந்திர மனப்போக்கு ஆகியவை அவர் பாஜகவிற்கு ஏற்றவரல்ல என்பதோடு, அவரால் மக்கள் திரளை ஒரளவு சேர்க்க முடியுமேயன்றி அதை ஓட்டாக மாற்றக் கூட முடியாது என்றும் பாஜக கருதியதாம்! இதையடுத்தே இருக்கும் இடத்தையாவது பலப்படுத்திக் கொள்ள நேற்றைய நிகழ்வை குஷ்பு பயன்படுத்திக் கொண்டார்.

அரசியலில் நுழைவதற்கும்,கவனிக்கப்படுவதற்கும் ஒருவரது சினிமா கவர்ச்சி உதவியிருக்கலாம்! ஆனால்,ஒரு குறிப்பிட்ட ஒரு கொள்கை முகம் இல்லாதவர்கள் எவரும் காலப்போக்கில் காணாமல் போய்விடுவார்கள்.

பல கோடிகளில் புரண்டு, செல்லுலாய்டு பிலிம்களில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் கலைஞர்களிடம் அரசியல் அறத்தை எதிர்பார்ப்பதைப் போன்ற முட்டாள்தனம் வேறில்லை!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time