கடலை பற்றிச் சொல்ல கடலை விட அதிக செய்திகள் உள்ளன! ஏழு கடல்கள் என்னென்ன? கடலுக்குள் என்னென்ன உள்ளன? கடல் எல்லைகளை நாடுகள் எப்படி வரையறுக்கின்றன! கடலின் அதிசயங்கள், அற்புதங்கள் என்னென்ன..? கடல் ஆராய்ச்சிகள் கண்டடைந்தது என்ன?
கடல் புவியின் அனைத்துப் பெருங்கடல் நீரையும் உடனிணைத்த ஓர் அமைப்பாகும். இவ் வமைப்பில் “பெருங்கடல்கள்” என்று அழைக்கப்படும் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல், தென்முனைப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய ஐந்தும் அடங்கும்!
கடல் இந்த உலகின் 71 % மேற்பரப்பினை மூடியுள்ளது. இதனால், மனிதர்களும் தரை வாழ் விலங்குகளும் வாழக்கூடிய இடம் மீதமுள்ள 29% மட்டுமே. பெரும்பாலான மேற்பரப்பினை கடல் முடியுள்ளதால், இந்த பூமியை நாம் ‘நீல கிரகம்’ என்றும் அழைக்கிறோம். இந்தக் கட்டுரையில் கடலைப் பற்றி சில சுவையான தகவல்களை நாம் காண்போம்.
காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும், பருவக் காற்று மூலம் ஏற்படும் மலைகளும் கடலையே சார்ந்துள்ளன. தமிழில் கடலை முந்நீர் என்று கூறுகின்றனர். இதன் பொருள் கடல் மூன்று மூலங்களிலிருந்து தனது நீரைப் பெறுகிறது என்று பொருள். இந்த மூன்று மூலங்கள் ஆற்று நீர், மழை நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியனவாகும்.
கடல்கள் இயற்கையின் படைப்பில் மிகவும் சுவாரசியமானவை, அற்புதமானவை. கடல்களின் சராசரி ஆழம் 4 கிலோ மீட்டர்கள். கடலின் மிக ஆழமான பகுதி 11 கிலோ மீட்டர்கள். உலகின் மிக ஆழமான கடல் பகுதி பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட அதிகமாகும். கடல்கள் மிக அதிக எண்ணிக்கையிலான செடிகள் மற்றும் விலங்குகளுக்கு வாழிடமாகும். கடலின் மேற்பரப்பு ஒன்றாகக் காணப்பட்டாலும், உலகின் வெவ்வேறு பாகங்களில் உள்ள கடல் நீரின் வெப்பநிலை, உப்பின் அளவு, அடர்த்தி ஆகியன வேறுபடுகின்றன.
புவியின் தோல்!
நாம் வாழுகின்ற இந்தப் புவிக்கோளின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்டு இருக்கிறது. மண்ணில் எத்தனை விந்தைகள் உள்ளனவோ அதைவிடக் கூடுதலாக ஆழ்கடலுக்கு உள்ளே விந்தைகள் நிறைந்து உள்ளன. கடல்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள், கடலை விட அதிகம் என்றே சொல்லலாம்.
உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள் (ஏறத்தாழ 5,50,000 கிலோ மீட்டர்) ஆகும். இந்தியாவின் கடற்கரை 7,517கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது. அதில், தமிழ்நாட்டின் கடற்கரை 997 கிலோ மீட்டர்கள் நீளம்.
கடலின் எடை
கடலில் உள்ள தண்ணீரின் மொத்த எடை, 1, 450,00,00,00,00000,0000 மெட்ரிக் டன்கள் ஆகும். எப்படி வாசிப்பது என்று மலைப்பாக இருக்கின்றதா? ஆயினும், இது புவியின் மொத்த எடையில், ஒரு விழுக்காடு கூட இல்லை. வெறும் 0.022 விழுக்காடு தான்.
உலகின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கடல் என்றாலும், அந்தக் கடலும், நிலத்துக்கு மேலேதானே அமைந்து உள்ளது! பூமியின் குறுக்கு வெட்டு நீளம் சுமார் 12,700 கிலோமீட்டர்கள் ஆகும். அதில் மேல்பரப்பில் சுமார் ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே கடல் நீர் இருக்கின்றது. நிலத்தில் உள்ள கற்கள், பாறைகள், மலைகள், மணலின் எடைதானே நீரை விட அதிகம்.
நமது உடலை மூடி உள்ள தோல் போல, இந்த உலகை கடல் மூடிக்கொண்டு இருக்கிறது. அவ்வளவு தான். அதாவது, உட்புறம் நெருப்புக் குழம்பாகக் கொதித்துச் சுழன்றுகொண்டு இருக்கின்ற இந்தப் புவியின் மேற்பரப்பைக் குளிர்விக்கின்ற ஒரு குளிர்விப்பானாகக் கடல் அமைந்து இருக்கின்றது. எனவே அதை புவியின் தோல் என்றே அழைக்கலாம்.
கடலின் வகைகள் ஏழு !
உலகில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன என்று நாம் படித்து இருக்கிறோம். அதை, இப்போது ஏழாகப் பகுக்கிறார்கள். வட, தென் அட்லாண்டிக் பெருங்கடல், வட, தென் பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் என்பவையே அந்த ஏழு பெருங்கடல்கள்.
தமிழ் இலக்கியங்களில், ‘உப்புக்கடல், கரும்பச் சாற்றுக் கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்தநீர்க் கடல்’ என ஏழு கடல்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியை, தீவு என்று அழைக்கிறார்கள். கடல்களின் உள்ளே அமிழ்ந்து கிடக்கின்ற மலைகளின் உச்சிப்பகுதி,கடலுக்கு மேலே நீட்டிக் கொண்டு இருக்கும். அதுதான், தீவுகள் ஆகும். மூன்று புறங்களில் நீரால் சூழப்பட்ட பகுதி, தீபகற்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா ஒரு தீபகற்பம்.
பசிபிக் பெருங்கடல்!
பசிபிக் பெருங்கடல், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குக் கிழக்கே அமெரிக்காவுக்கு மேற்கே இடைப்பட்ட பகுதியில் பரந்து விரிந்து உள்ளது. உலகில் தற்போது உள்ள அனைத்து நாடுகளின் நிலப்பரப்பையும், பசிபிக் கடலுக்கு உள்ளே வைத்தாலும், அதற்கு மேலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பை வைக்கின்ற அளவுக்கு, பசிபிக் கடல் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. ஆயினும், கடலில் தீவுகள் குறைவு; மிகச்சிறிய தீவுகளே உள்ளன.
இந்தப் புவி கிழக்கு நோக்கிச் சுழல்வதால், காற்று மேற்கு நோக்கி வீசும். இடையில் தடுப்புகள் ஏதும் இல்லாததால், பசிபிக் கடலில் காற்றின் வேகம் அதிகம். எனவே, கிழக்கு நோக்கிக் கப்பலைச் செலுத்துவது கடினம்.
தென் பசிபிக் பகுதியில், மிகப்பெரிய அலைகள் உருவாகின்றன. உலகின் பெரும்பாலான சுனாமி தாக்குதல்கள், பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான் ஏற்படுகின்றன. அக்கடலுக்கு உள்ளே ஏற்படுகின்ற நில நடுக்கங்களால் பொங்குகின்ற அலைகள், ஜப்பானியக் கடற்கரையைத்தான் தாக்குகின்றன. எனவேதான், கடலின் கோர விளையாட்டுக்கு அடிக்கடி இலக்கு ஆகிறது ஜப்பான்.
அண்டார்டிகா பகுதியில் இருந்து பிரிந்து வருகின்ற பனிப்பாறைகள், பசிபிக் கடலில் மிதந்து கொண்டே பல இடங்களுக்கு நகர்ந்து செல்கின்றன. ஆனாலும், உருகுவது இல்லை. எட்டு மாதங்கள் வரையிலும் உருகாமல் அப்படியே மிதந்து கொண்டே நியூசிலாந்து வரையிலும் வருகின்றன.
ஆழம், அது அளக்கும் ஆழமல்ல!
தரையில் இருந்து கடலுக்கு உள்ளே ஓரிரு மைல்கள் வரை இருக்கும் பகுதியை நாடுகளின் எல்லை என வரையறுத்து இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 600 அடி இருக்கலாம். இதற்கு அப்பால்தான், உண்மையான கடலின் ஆழம் தொடங்குகிறது. இதற்கு,‘காண்டினென்டல் ஷெல்ப்’ என்று பெயர். இந்தப் பகுதியிலும் 3 விழுக்காடு தான் கடல் உள்ளது. அதற்குப் பிறகுதான், 97 விழுக்காடு கடல் இருக்கிறது. இங்கு ஆழம் 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. இந்தப் பகுதியை ‘அபிஸ்’ என்று அழைக்கிறார்கள். இதன் உள்ளே பிரமாண்டமான சமவெளிகள், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத் தொடர்கள் எல்லாம் இருக்கின்றன.
சூரிய ஒளி, கடலுக்கு உள்ளே 100 அடி ஆழம் வரையிலும்தான் தெளிவாக இருக்கும். அதற்குக் கீழே போகப்போக, சூரிய ஒளி மங்கிக்கொண்டே போகும்; கும்மிருட்டுதான். கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது? என்ற கேள்வி பல நூற்றாண்டுகளாக மனிதனின் தூக்கத்தைக் கெடுத்தது.
கிரேக்கத் தத்துவமேதை அரிஸ்டாட்டில், ‘கடலுக்கு அடியில் ஏதோ இருக்கிறது’ என்று சொன்னதைக் கேட்ட அவரது சீடர் அலெக்சாண்டர் என்பவர், ஒரு கண்ணாடி பலூன் வடிவத்தைச் செய்து, அதற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு,கடலுக்கு உள்ளே சிறிது ஆழத்துக்குச் சென்று வந்தார். அப்போது அவர் பிரமாண்டமான திமிங்கலத்தைப் பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார்.
எந்த ஒரு கருவியின் துணையும் இல்லாமல், மூச்சை அடக்கிக்கொண்டு ஒருவர் 285 அடி ஆழம் வரையிலும் இறங்கி இருக்கிறார். ஒரு கயிற்றில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிலேட்டுப் பலகையைக் கட்டி விட்டார்கள். அந்தப் பலகைகளில் கையெழுத்துப் போட்டுவிட்டு வரச்சொன்னார்கள். 285 ஆவது சிலேட்டு வரை கையெழுத்துப் போட்டுவிட்டு,சுயநினைவை இழந்து விட்டார். இதுதான் மூச்சை அடக்கி, கடலில் நீண்ட நேரம் மூழ்கிய சாதனை.
கடல் எல்லையை எப்படி வரையறுக்கிறார்கள்?
1982 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மன்றம், ஒரு அமைப்பை உருவாக்கி, உலக நாடுகளின் கடல் எல்லைகளை வரையறுத்தது. இவர்கள் வரைந்த ஒப்பந்தத்தில், இதுவரையிலும், 158 நாடுகள் கையெழுத்து இட்டு உள்ளன. கடலில், மூன்று வகையான எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. கரையில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்டது ‘கரைக்கடல்.’ இதில் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அடுத்த ஆறு நாட்டிகல் மைல், ‘அண்மைக் கடல்.’ இதில் விசைப் படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதன்பின் உள்ளது தான் ‘ஆழிக்கடல்.’ இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம். இப்போது கரை ஓரங்களில் மீன்வளம் குறைந்து விட்டது. எனவேதான், கட்டு மர மீனவர்கள், அண்மைக்கடலுக்கும், ஆழிக்கடலுக்கும் செல்லுகிறார்கள்.
ஒரு நாட்டின் கடல் எல்லையான 12 நாட்டிகல் மைல் என்பது, தோராயமாக 22.2 கிலோ மீட்டர்கள் ஆகும். அந்த எல்லைக்கு உள்ளே பயணிகள் கப்பல் போகலாம். ஆனால், மீன்பிடிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், வணிகக் கப்பல்கள் செல்வதற்கு அந்த நாட்டின் கடலோரக் காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும். மீன்பிடி படகுகளில், மரக்கலங்களில், கப்பல்களில் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் பறக்க வேண்டும்.
18 ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டு வரையிலும், ஒரு நாட்டின் கடல் எல்லை, ஆறு கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருந்தது. ஏனெனில், அப்போது இருந்த பீரங்கிகள் வீசுகின்ற குண்டுகள், ஆறு கிலோ மீட்டருக்கு மேல் பாயாது. எனவேதான், அத்தகைய கட்டுப்பாடு. ஆனால், இப்போது, கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்து விட்டன. இப்போதும், சிங்கப்பூர், ஜோர்டான் போன்ற நாடுகள், தங்களுடைய கடல் எல்லையை, 6 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலேயே நிறுத்திக் கொண்டு உள்ளன.
கடலோரக் காவல்படையினர், ஒரு நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால், மேலும், 22 கிலோ மீட்டர் தொலைவுக்கும் சென்று, கண்காணிப்பு, காவல் பணிகளில் ஈடுபடலாம். அதற்கு மேல் ‘பொருளாதார எல்லை’ என்று ஒன்று உள்ளது. அதன்படி, சுமார் 393 கிலோ மீட்டர் வரையிலும் கடலில் உள்ள எல்லா வளங்களும், அதற்கு அருகில் கரையைக் கொண்டு உள்ள நாட்டுக்கே சொந்தம் ஆகும். மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற உரிமைகளை அந்த நாடு கொண்டு உள்ளது.
கணக்கில்லா கடல் வாழ் உயிரினங்கள்!
இந்த உலகில்,மனிதன், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், நுண்ணுயிரிகள் என எத்தனையோ ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழுகின்றன. உலகில் வாழும் உயிரினங்களுள், தரையில்வாழும் உயிரினங்கள் ஒரு விழுக்காடு மட்டும்தான்; 99 விழுக்காடு உயிரினங்கள் கடலில் தான் வாழுகின்றன.
உலகின் மேற் பரப்பில் முதலில் தோன்றிய உயிரினமே, கடல் பாசிதானே! சுமார் 25 மில்லியின் உயிரினங்கள், கடலுக்கு உள்ளே வாழ்வதாகக் கணிக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் பெயர் கொடுத்து முடிக்கவே இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகும். தமிழில் எத்தனையோ கடல் வாழ் உயிரினங்களின் பெயர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே, நீங்கள் ஒரு புதிய கடல் உயிரினத்தைப் பற்றி ஆராய்ந்தால், அதன் உடல் அமைப்பு, குண நலன்களைக் குறிக்கும் வகையில் அதற்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள். கடலில் 4 கிலோ மீட்டர் ஆழம் வரையிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கே ஒளிரும் மீன்கள் உள்ளன.
கடலில் கொட்டப்படும் கழிவுகள்
நாம் கடலில் இருந்து பிடிக்கின்ற மீன்களைப் போல மூன்று மடங்கு கழிவுகளைக் கடலில் கொட்டுகிறோம். இப்படியே போனால், நிலைமை என்ன ஆகும்? சென்னை நகரில் ஓடிக் கொண்டு இருந்த கூவம் ஆற்றில் குப்பைகளைக் கொட்டி நிறைத்ததைப் போல, கடலும் குப்பைகளால் பாதிக்கப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. எண்ணிப் பாருங்கள் அப்படி ஒரு நிலைமையை? அதெல்லாம் நடக்காது என்று சொல்ல முடியாது. எனவே, மனிதர்கள் நிலத்தில் உருவாக்குகின்ற பல குப்பைகளை அழிப்பது எப்படி என்பது தான், இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி. அதற்கான வழி காண வேண்டும்.
Also read
மனிதர்களாகிய நாம் உயிர் வாழ்வதற்கு கடற்கரையில் உள்ள நண்டு, இறால், பல வகை மீன்கள், கணவாய் போன்ற உயிரினங்களை நாம் சாப்பிடுகிறோம். கடல் பகுதி என்ற ஒன்று இருப்பதால் தான் நம்மால் இது மாதிரியான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாய் வாழ முடிகிறது. மனிதர்களின் உணவுத் தேவையில் கணிசமான பங்களிப்பை கடல் தருகிறது.
காக்கை கூடு நடத்திய ‘செங்கால் நாரை விருது’ போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை!
கட்டுரையாளர்; ப. ஜோதி மீனாட்சி
நுண்ணுயிரியல் மூன்றாம் ஆண்டு
டாக்டர். உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி
காரைக்குடி
அரிய பல பயனுள்ள தகவல்கள். மிகவும் அருமை
அருமை.
நல்ல பல கடல் தகவல்களை வழங்கியமைக்கு வாழ்த்துகள்
அருமை. நல்ல கருத்துக்கள்