ரஜினி செய்தது தப்பா…? யார் மீது தவறு?

சாவித்திரி கண்ணன்

ரஜினி எப்பவுமே தன்னை தனிமனிதனாகத் தான் உணர்ந்து வாழ்ந்துகிட்டு இருக்கிறார்!

பொது மனிதனாக அவர் எப்போதும் தன்னை உணர்ந்தது இல்லை. நாம தான் அவரை இல்லாத உயரத்துல வச்சிருக்கோம்…

இப்ப இது சம்பந்தமாக நான் அவர் கிட்ட கேட்கிறேன்னு வச்சுக்கிடுங்க..அவர் பதில் எப்படி தெரியுமா இருக்கும்!

’’என்னப்பா பெரிய தப்பை கண்டுபிடிச்சிட்டீங்க..!

ஆறுமாசமா ஒன்னுமே வருமானமில்லாத இடத்துக்கு நீங்க வரியை லட்சக்கணக்குல போடுவீங்க…., நான் ஏன் எதுக்குன்னு கேட்டா, நியாயமில்லைன்னாக்கா அது தப்பா?

பணம் என்னா மரத்துலயா காய்ச்சு தொங்குது…?

நானே வருஷத்துக்கு ஒரு படத்துல தான் நடிக்கிறேன்…ஆல்மோஸ்ட் ரிடையர் லைவ் வாழ்ற 70 வது வயது ஒரு முதியவர்…சொத்துவரியை கொஞ்சம் குறைச்சிக்க சொன்னதைக் கூட புரிஞ்சிக்காம எல்லாம் கேலி பேசுறீங்க…!

நான் ஒரு வார்த்தை சொன்னா நான் கட்ட வேண்டிய வரியை எனக்காக கட்ட பல பேரு காத்துக்கிட்டிருக்காங்க…தெரியுமா? ஆனா, நான் நேர்மையானவன் யார்கிட்டயும் கை நீட்டி பணம் வாங்க மாட்டேன்!’’

அப்படின்னு சொல்லி இருப்பார்…!

அப்ப நான் என்ன சொல்லி இருப்பேன் தெரியுமா?

’’விடுங்க சார், நான் மற்றவர்கள் மாதிரி உங்க மேல சமயம் பார்த்து கல் எறிய மாட்டேன்…ஆனா…என்ன பிரச்சினையின்னா… ’’நீங்க ஒரு பெரிய தலைவர்.. எல்லோர் பாதிப்புக்குமா குரல் கொடுப்பவர்’’ன்னு சில முட்டா பயக நம்பிட்டாங்க..அவங்களுக்கு தெரியாது நீங்க சராசரியான ஒரு ஆளு தான்னு!

நாட்டில் எத்தனையோ பேர் சொத்து வச்சிருக்காங்க…அதுக்கு வருமானம் இருக்கா,இல்லையா என்பதை ஆய்வு செய்து மாநகராட்சி வரி வாங்கறது இல்லை! இது சொத்துக்கான வரி அவ்வளவு தான்! ஆனா, அதுல வருமானம் வந்திருந்தா பணம் கட்டுவது பிரச்சினையா இருந்திருக்காதுன்னு நினைக்கிறப்ப, நீங்க என்ன செய்திருக்கணும்….இது மாதிரி மற்ற சிலரும் சிரமப்படறாங்களான்னு விசாரிச்சு…அவங்க சார்பாகவும் நீங்க அரசுக்கே எல்லோருக்குமாக குறைக்க சொல்லி ஒரு பொது வேண்டுகோள் வைத்திருக்கலாம்! பல பேரு…அவங்க குரலாய் நீங்க ஒலித்தீர்கள் என சதோஷப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு! பொதுத் தன்மையில் அனைவருக்குமாக  வரியை கொஞ்சம் குறைக்கச் சொல்லி பேசி இருந்தால்,சொத்துள்ள மற்ற பலரின் பலமான ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கும்!

ஒரு தலைவனுக்குரிய அடிப்படை குணம் தனி மனிதனாக மட்டுமே சிந்திக்காமல், காம்பிரிகேன்சிவ்வாக…பிரச்சினைகளை அணுகும் பக்குவம் தானே! இப்ப பாருங்க ஒரு சின்ன பிரச்சினையைக் கூட எப்படி டீல் பண்ணனும் என்று தெரியாமல் சென்னை ஹைகோர்ட்டுல குட்டு வாங்கிப் பொது வெளியில் அவமானப்பட்டு நிற்கிறீர்கள்!

நீங்களும் கொஞ்சம் யோசித்துப் பாருங்க…அரசுக்கும் இந்த ஆறு மாசத்துல வருமானமே இல்லை….ஆனா,கொரானாவை எதிர்கொண்டதுல எக்கசக்கமான செலவுகள்..இந்த மாதிரி நேரத்துல உங்கள மாதிரி வசதியானவங்க கட்ட வேண்டிய வரியையும் கட்டமாட்டேன்னு சொன்னா..எப்படி அரசாங்கத்தால சமாளிக்க முடியும்…?

சரி, இப்ப உங்க வீட்டம்மா நடத்துற பள்ளிக் கூடத்துல.’’.கொரானா பள்ளிக் கூடமே நடக்கல..அதனால பாதி பீஸ் மட்டும் கட்டுனா போதும்னு சொன்னாங்களா…’’ இல்லையே… எத்தனையோ பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு கொரானா காலத்துல வேலை பறிபோயிருக்கும்…அவங்கள உங்க மனைவி ’கன்சிடர் ’ பண்ணினாங்களா…!

அப்புறம் ஒன்று சார்…இவ்வளவு பெரிய மண்டபத்தை கொரானா காலத்துல அப்படியே பூட்டி வைச்சிருந்தீங்களே…இது நியாயமா சார்!

கொரானா காலத்துல மாநகராட்சிக்கு ஏராளமான கல்யாணமண்டபங்கள் சிகிச்சையளிக்க தேவைப்பட்டது! அப்போ…எங்க நம்ம இடத்தை கேட்டுடப் போறாங்களோ என்று சூசகமாக உங்க மனைவி நாங்க பாராமரிப்பு பணி செய்ய வேண்டியிருப்பதால் அங்கே எந்த நிகழ்ச்சிக்கும் தர வாய்ப்பில்லை என்றார்களே…என்ன சார்?

அருமையான விதத்தில் பராமரிக்கப்பட்டு, அனுதினமும் உடனுக்குடன் பராமரிப்பு பணிகள், முகூர்த்தம் இல்லாத நாட்களில் முழுமையான திட்டமிடல் என்று இயங்கிய ராகவேந்திரா மண்டபத்தை உங்க வீட்டம்மா மாநகராட்சிக்கு கொடுக்காமல் தவிர்பதற்காகத் தானே அவ்வாறு கூறீனார்கள்…அவங்களை மீறி உங்களால் இந்த சமூகத்திற்கு  ஒரு சிறிய நற்பணியைக் கூட செய்ய முடியவில்லையே…!

எத்தனையெத்தனை விஷயங்களுக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை பயன்படுத்தி இருக்கலாம்னு பட்டியல் சொல்லட்டுமா..?

# புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும்,வேலை இழந்தும் பசியில் வாடிய போது, அவர்கள் தங்க நாட்டில் எத்தனையெத்தை திருமண மண்டபங்கள், சமூக கூடங்கள் பயன்பட்டன தெரியுங்களா…! அந்த வகையில் நீங்களும் பல பேருக்கு தங்க இடம் தந்து சாப்பாடும் போட்டு இருக்கலாமே…!

# உங்கள் சினிமா துறையில் வேலை இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்டவர்களை தற்காலிகமாக தங்க வைத்திருக்கலாமே…!

# சித்தா மருத்துவம்,இயற்கை வைத்திய அணுகுமுறையில் கொரானாவிற்கு சிகிச்சையளித்த சித்த மருத்துவர்கள் சிவராமன்,,வேலாயுதம்,வீரபாபு போன்றோர்கள் சிகிச்சையளிக்க பயன்படுத்திக் கொள்ள தந்திருக்கலாமே…

எவ்வளவு சமூக தேவைகளுக்கு அந்த இடத்தை பயன்படுத்தி இருக்கலாம்…ஆனால்,சும்மா எப்படி சார் வைத்திருந்தீர்கள்…?

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ராகவேந்திரா கல்யாண மண்டபத் திறப்புவிழாவன்று நீங்கள் பேசியது..! ’’ஏதோ ரஜினிகாந்த் சம்பாதிப்பற்காக ஒரு கல்யாண மண்டபத்தை கட்டி இருக்கான்னு நினைக்காதீங்க… நான் மனசுல இருக்கிறத உடனடியாக சொல்லிடறேன். ஏன்னா, மனித மனம் ஒரு குரங்கு இன்னைக்கு தோணும், நாளைக்கு எதுக்குன்னு மாறிடும்! ஏன் அடுத்த நிமிஷமே கூட மாறிடும்! அதனால ஒரு தர்மம் செய்யணும்னு நெனைச்சா உடனே செய்திடனும்… நான் இந்த மண்டபத்தை ஏழைகள் கல்யாணங்களுக்கு தருவேன் அதுக்குத் தான் முதல் முக்கியத்துவம் கொடுப்பேன்’’ என்றீர்கள். மேடையில் இருந்த தமிழக முதல்வர் கலைஞர் உட்பட கூட்டம் அத்தனையும் அரங்கம் அதிர கைதட்டியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.அப்போது ஒரு போட்டோ ஜர்னலிஸ்டாக நான் அந்த நிகழ்வை படம் எடுத்த வகையில், அதில் உங்கள் மனைவி லதாவும்,இயக்குனர் பாலச்சந்தரும் குத்துவிளக்கு ஏற்றும் படத்தை பெரிசா ’ப்ளோஅப்’ பண்ணி நானும், நக்கீரன் கோபால் அவர்களும் அடுத்த இரு நாளுக்குள் கொண்டு வந்து தந்த போது நீங்கள் நெகிழ்ந்து நன்றி சொன்னதெல்லாம், இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது. சரி, போகட்டும், இதில் என் கேள்வி என்னவென்றால்….,

அன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதியை எவ்வளவு காப்பாற்றீர்கள் என்பதை கொஞ்சம் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க…ரஜினி சார்!

இந்த தமிழ்ச் சமூகம் கண்ணை மூடிக் கொண்டு என்னமோ உங்களை ஒரு நேர்மையாளர்னு நம்புகிறது.அப்படி நம்ப வைக்க, பில்டப் தர மீடியாக்களை நீங்களும் பயன்படுத்திக்கிட்டீங்க… ஆனா, கஷ்டமான தருணங்களில் ஒரு மனிதன் தன்னை வாழவைத்த சமூகத்திற்கு என்ன கைம்மாறு செய்கிறான் என்பதில் தான் அவனுடைய உண்மையான குணம் தெரிய வரும்!

அந்த வகையில் தான் தற்போது நீங்கள் வெளிப்பட்டு உள்ளீர்கள்…!

ரஜினி செய்தது அவரைப் பொறுத்த அளவில் சரியானது, நம்ம மக்கள் தான் அவரை தாறுமாறாக அதிக உயரத்தில் வைத்து பார்த்து தப்பு செய்துள்ளார்கள்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time