மறுக்கப்படும் மருத்துவ உள் ஒதுக்கீடு 7.5% சரியா? தவறா?

சாவித்திரி கண்ணன்

அரசுப் பள்ளி ஏழை,எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு விரும்பவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது! தமிழகத்தின் மொத்த ப்ளஸ் டூ மாணவர்களில் 41% அரசுப்பள்ளி மாணவர்கள்! ஆனால், மருத்துவ படிப்புக்கு இதில் ஒரு சதவிகித மாணவர்களுக்கு கூட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.இதைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு தமிழக அரசு கொண்டு வந்தது.ஆனால், இன்று வரை அதற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல் தரவில்லை. இதன் பொருள் இதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பது தான்! இது மக்களை கொந்தளிப்பு மன நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதியே மிகுந்த வருத்ததை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக தலைவர் ராமதாஸே உள் ஒதுக்கீட்டிற்கு ஏன் ஒப்புதல் தரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்ட சபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டத்தை அமல்படுத்தும் போது பேசிய சில வாசகங்களை இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.

’’தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களில் 0.15 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் கிடைக்கின்றன.

அரசுப் பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெவ்வேறு சமூகப் பொருளாதாரப் பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் கற்கும் பள்ளி, வளரும் வீட்டுச் சூழல், பெற்றோர் வருமானம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன.

எனவே, இவர்களைச் சமநிலையில் வைத்துப் பார்ப்பது சமநீதிக்கு எதிரானது. தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு உரிய அளவுக்கு மருத்துவ இடம் கிடைப்பதில்லை. எனவேதான், தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தனியாக உள் ஒதுக்கீடு அவசியமாகிறது என்பதை இத்தருணத்தில் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

தற்போதுள்ள மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களில், இந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300-க்கு மேல் இடங்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு இதன் மூலம் சம நீதி வழங்க இது வழிவகுக்கும்.

நான் 21.3.2020 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தேன். இது சம்பந்தப்பட்ட அனைத்துப் புள்ளிவிவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசனின் தலைமையின் கீழ் 21.3.2020 அன்றே ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.அவ்வாணையம் கடந்த 8.6.2020 அன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்குச் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதும், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது சமநீதிக்கு முரணானது என்றும், அதனால் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதே சமநீதியை நிலைநாட்ட வகை செய்யும் என்றும் ஆணையம் பரிந்துரை செய்தது.

மேலும், அரசுப் பள்ளிகளில் பயின்று, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு, அனைத்து இளநிலை மருத்துவப் பிரிவுகளிலும் உள் இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக ஒரு சிறப்புச் சட்டம் இயற்றிட அவ்வாணையம் பரிந்துரைத்தது.

கடந்த 15.6.2020 மற்றும் 14.7.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், ஆணையத்தின் பரிந்துரை விவாதிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டு முதல், மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க தமிழக அரசு முடிவு செய்து, அதையே சட்டமாக்க இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட முன்வடிவினை அறிமுகம் செய்கிறேன்’’ என்றார்.

ஆக, இவ்வளவு நியாயங்கள் இருந்தும் இந்த சட்டத்திற்கு மத்திய அரசு ஒத்துழைக்காதது தவறு என்று தான் எனக்கும் முதலில் தோன்றியது. ஆனால், 41 சதவிகித மாணவர்கள் பயிலும் போது அவர்களுக்கு  வெறும் 7.5% போதுமென்று அரசு முடிவுக்கு வந்தது சரியா ? என யோசித்தேன். அவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அவர்கள் தங்களுக்குரிய இடத்தை பெற வைப்பவது தானே நமது நோக்கமாக இருக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே அரசு பள்ளிக்கூடங்களில் இருந்து தானே சுமார் 90 சதவிகித மணவர்கள் மருத்துவ கல்விக்கு வாய்ப்பு பெற்றார்கள்.

உண்மையில் அரசு பள்ளியில் தரமான கல்வி சாத்தியப்பட்டால் இந்த உள் இடஒதுக்கீடு அவசியமில்லை. தரமான பாட திட்டங்கள், திறமை வாய்ந்த ஆசிரியர்கள்,சிறப்பான கல்விச் சூழல் ஆகியவற்றை உறுதிபடுத்தாமல், உதாசீனப்படுத்தி வரும் தமிழக அரசு, தனது கையாலாகத்தனத்தின் காரணமாக இந்த உள் ஒதுக்கீட்டை வழங்கிறது என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

’ஏழை எளிய குடும்பத்தின் மாணவர்களுக்கு கல்வி மண்டையில் ஏறாது’ என்று அரசு நினைக்கிறதா? இது முற்றிலும் தவறு.அவர்கள் இயற்கையிலேயே மிகச் சிறந்த அறிவாற்றல் உள்ளவர்கள்.அவர்களுக்கு தரமான கல்வியை வழங்காதது  அரசின் குற்றம். அவர்களுக்கு தரமான கல்வியை தருவதற்கு ஆத்மார்த்தமாக,இதய சுத்தியோடு இயங்குவது தான் அரசின் கடமை. அரசு தரமான கல்வியை வழங்கத் தவறிய தன் தவறை மறைக்க,ஏதோ சமூக நீதி கண்ணோட்டத்தில் உதவுவது போல நடிக்க கூடாது.காலமெல்லாம் அரசு பள்ளிகளை பின் தங்கிய நிலையிலேயே வைப்பது என்று அரசு முடிவெடுத்துவிட்டதா?

காலப்போக்கில் இது ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கே வித்திடும் என்பதால், பிற மாநில அரசுகளும் இந்த ரீதியிலான குறுக்கு வழியில் முயற்சிப்பார்கள்! இதையே நாளை என்ஞினியரிங் கல்வி உட்பட அனைத்திற்கும் அமலாக்க முனைவார்கள்! ஆக,இது பிரச்சினையில் தான் முடியும்!

# அரசு மேல் நிலைப் பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு பாடங்களை எடுக்க ஆசிரியர்களே இல்லாத நிலையில் பள்ளிச் சூழல் உள்ளது.

# கடந்த இருபது ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து பல அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இன்னும் பத்தாண்டில் இந்த  எண்ணிக்கை பல மடங்கு குறைய வாய்ப்புள்ளது! இது குறித்து அரசு தன்னை சுயபரிசீலனைக்கு உட்படுத்தி, இதற்கான காரணங்களைக் களைந்து, பழைய சூழலுக்கு பள்ளிகளின் கல்வித் தரத்தை மீட்டெடுக்க வேண்டும்! 30,40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் படித்து வந்தவர்கள் மருத்துவ கல்வியில் அதிக வாய்ப்பு பெற்றதை மனதில் கொண்டு, பழைய கல்விச் சூழலை மீட்டெடுக்க வேண்டும்.

# இது நாள் வரை அரசு பள்ளியில் சேரத் தயக்கம் காட்டிய மாணவர்கள்  இந்த ஆண்டு மட்டும் உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதையடுத்து  குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஆறாம் வகுப்பில்  அதிக மாணவர்கள் சேர்ந்தார்கள். வழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட வகுப்பில் மட்டும் இவ்வளவு மாணவர்கள் சேர்வது ஏன் என விசாரித்த போது தான் இந்த உண்மை தெரிய வந்தது! ஆறாம் வகுப்பில் இருந்து அரசு பள்ளியில் படித்தால் தான் மருத்துவ உள் ஒதுக்கீடு சாத்தியம் என்பதால், இந்த அதீத மாணவர்கள் சேர்க்கை ஆறாம் வகுப்பில் நடந்துள்ளது. இதில்,சில மாணவர்கள் வசதியான வீட்டுப் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு மக்கள் எப்படி முயற்சிப்பார்கள் என்பதற்கு இதுவே சான்றாகும்! கல்வியை தரமாகத் தந்தால் ஏழைக் குழந்தைகள் எந்த இடஒதுக்கீடுமின்றி, தானாகவே உயர்ந்து வருவார்கள். ஆனால்., நீங்களோ..இன்னும் சிலபஸ்ஸைக் கூட நீட் தேர்வை எதிர் கொள்ளதக்க வகையில் கட்டமைக்க மறுத்து மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கி வருகிறீர்களே!

# முதலில் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதில் உள்ள ஊழல்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டால் தான் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பார்கள். அதன் பிறகு அந்த ஆசிரியர்களை காலத்திற்கேற்ப ’அப்டேட்’ செய்யவும் வேண்டும்.

# அரசு பள்ளிகளை முடமாக்கிவிட்டு, ’’ஊன்றி நடக்க ஊன்றுகோள் தருகிறேன்’’ என முன்வருவது கருணையாகாது. அயோக்கியத்தனமாகும்! வேண்டியது ஊன்றுகோள் அல்ல, முடமாக்கத்திலிருந்து முற்றிலும் குணமாவது தான். மாணவர்கள் அப்போது தங்கள் சொந்தக் காலிலேயே நடந்து காட்டுவார்கள்.

# இத்தனையையும் மீறி, இந்த உள் ஒதுக்கீடு அமலானால், அதை சிலர் கோர்ட்டுக்கு சென்று தடுப்பார்கள்! மத்திய அரசின் மனநிலைக்கு ஒத்து தான் தீர்ப்பும் வெளியாகும். இதை சில அரசியல் கட்சிகள் அரசியலாக்கி பிழைப்பை ஓட்டும். அவ்வளவே! இதை நம்பிய மாணவர்களை இது விரக்திக்கே கொண்டு செல்லும்!

# நீட் தேர்வு ஒழிந்தால் நல்லது. ஒழியாத பட்சத்திலோ அல்லது ஒழிந்தாலுமே கூடவோ ப்ளஸ் டூ பாட சிலபஸை, அகில இந்திய அளவுக்கு உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு நிகராக மாற்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தர வேண்டும்! இதை கற்பதன் மூலமாகவே மருத்துவ வாய்ப்பை எளிதில் வெற்றி கொள்ளதக்க வகையில் இருக்க வேண்டும். தரமான ஆசிரியர்களை அரசு பள்ளியில் உத்தரவாதப்படுத்துவதும், சிறந்த கல்விச் சூழலை அங்கு கட்டமைத்துத் தருவதும், அரசின் தலையாய கடமை! இதை தட்டிக் கேட்டுப் பெற வேண்டியது நமது உரிமை!

 

 

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time