எது நம்பிக்கை துரோகம்?  The Arbitration – விமர்சனம்

பீட்டர் துரைராஜ்

இந்த ஆங்கிலப் படம் நமக்கு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.  இப்போது நெட்பிளிக்சில் நிறைய ஆப்பிரிக்க படங்கள் காணக் கிடைக்கின்றன. அதனை Nollywood  Movies என்று  சொல்லுகிறார்கள். இது, 112 நிமிட ஆங்கிலப்படம். திரைக் கதை, நடிப்பு, காட்சியமைப்பு, இயக்கம், யதார்த்த வாதம் என அனைத்தும் அருமை.

ஒரு பெண்ணின் தனிமை என்ற வெறுமைக்குள் நுழைந்த ஒரு ஆண் அவளை அரவணைத்து பாதுகாப்பான உறவு என்ற நம்பிக்கையை விதைத்து, அவளை தன் விருப்படியெல்லாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய முனையும் போது, அதை அந்தப் பெண் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதை! ஒவ்வொரு கதைக்கும் மூன்று கோணங்களில் நியாயம் கற்பிக்கலாம் என்றும் படம் சொல்கிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் கதை நடைபெறுகிறது. ஆப்பிரிக்காவின் பணக்கார நாடு இது. ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருத்தி தலைமை  நிர்வாகி ஒருவனோடு சேர்ந்து பணிபுரிகிறாள்.அவன் ஏற்கெனவே திருமணமானவன்; அது இவளுக்கு தெரியும். ஏறக்குறைய தம்பதிகளாக இருக்கிறார்கள். இவளுடைய உழைப்பினால் நிறுவனம் நல்ல இலாபம் அடைகிறது. திடீரென்று ஒரு நாள்,  ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு,  அவன் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்துகிறாள் நாயகி.

இது குறித்து விசாரிக்க நிறுவனமே ஒரு மத்தியஸ்தரை நியமிக்கிறது. விசாரணையில் இருவரும் தத்தமது வழக்கறிஞரோடு பங்குபெறுகிறார்கள். இரு தரப்பிலும் சாட்சிகள் வருகிறார்கள். ஒரு நாளில் விசாரணை முடிகிறது. இந்த விசாரணைதான் The arbitration என்ற  படம். பத்து பேர்தான் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக  நடிக்கும் ஏடிசா ஈடோமி (Adesua Etomi), பாதிக்கப்பட்டவளுக்கு உள்ள மனநிலை, உடல்மொழி, ஒரு மூத்த நிர்வாகிக்கு உரிய அழுத்தமான பாவம் இவற்றை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறாள்.

 

நிறுவனத்தின் மூத்த நிர்வாகியாக  நடிக்கும் OC Ukeje  தனது அதிகாரம், ஆணுக்கே உரிய ஆதிக்க மனநிலையை நன்கு வெளிப்படுத்துகிறான். இருவரின் வழக்கறிஞர்களுமே பெண்கள். ஒருத்தி நீண்ட காலம் வழக்கறிஞராக இருந்தவர்.பாதிக்கப்பட்டவளின் வழக்கறிஞர் இப்போதுதான் முன்னேற்றப் பாதையில் செல்லத் துடிப்பவர். இவர்கள் தங்கள் வயது, அனுபவம், அறிவு இவைகளுக்கு ஏற்றபடி  உடல்மொழியை இயல்பாக வெளிப்படுத்துகிறார்கள். ஒரு பார்வையாளனாக நாம் ஒரு தரப்பை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ கடினம்.

இதில் எது ஆதார கேள்வியாக எழுகிறது என்றால், ஏற்கெனவே மணம் புரிந்தவன்  என்பதை தெரிந்து கொண்டுதானே  இவள் அவனோடு பழகினாள். அவர்கள் இருவரும் பழகியது அவன் மனைவி உட்பட எல்லாருக்கும் தெரியும்.இப்போது திடீரென்று “தான் பெண் – பாதிக்கப்பட்டவள்” என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா ? என்பதுதான்.

இருவரும் பாலியல் தேவைகளை பரஸ்பரம் தீர்த்துக் கொண்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். தன் மனைவிக்கு குழந்தை பிறக்காது.கண்டிப்பான தனது மாமனாரால் தனது  திருமணம் நடந்து விட்டது. விரைவில் விவாகரத்து சட்டப்படி செய்துவிடப் போகிறோம். அதன் பிறகு நாம்  திருமணம் செய்து கொள்ளலாம் என்ற புரிதலின் அடிப்படையில் உடலுறவு கொள்ளுவது நம்பிக்கை துரோகம் என்ற வரையறையில் வருமா, இல்லையா ?

தனது இளமையின் செறிவான காலங்களில், நிறுவனத்திற்காக உழைத்து, அதனை உயரிய நிலையில் வைத்த ஒருத்தியை, திடீரென்று உனக்கு இந்தக் கம்பெனியில் பங்குகள் இல்லை, உனக்கு பங்குகள் வேண்டுமென்றால் மேலும் சில ஆண்டுகள் என்னோடு பணி புரிய(இருக்க) வேண்டும் என்று  நிபந்தனை வைத்தால்  அவளால் என்ன செய்ய முடியும்.

தான் அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தினாலேயே ஒருவருக்கு அநீதி இழைப்பது என்னவிதமான அறம். இதுதான் இந்த திரைப்படம் சொல்லும் சேதி. இந்தக் கேள்விக்கு ஒருவன் எத்தகைய பதில் அளிக்கிறான் என்பதைப் பொறுத்துதான் இந்த வழக்கின் தீர்ப்பை நாம் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முடியும்.

மத்தியஸ்தர் இவர்கள் இருவர் சொன்னதை வைத்து மட்டுமல்லாது, தன்னுடைய சக உதவியாளர் (Para Legal) சொல்லும் தொடர்பில்லாத ஒரு சம்பவத்தின் அடிப்படையில், நைஜீரிய நாட்டு மத்தியஸ்த சட்டப்படி  முடிவெடுக்கிறார்.

கடந்த ஆண்டு வந்த,  இந்திப் படமான Section 375  ஐ எடுத்தவர்கள் இதனைப்  பார்த்திருப்பார்களா ! (அதில் ஒரு திரைப்பட  நடன இயக்குனரிடம் வாய்ப்புத் தேடி, உறவு கொண்ட பெண்,  பாலியல் குற்றச்சாட்டை சுமத்துவாள் ).The arbitration யதார்த்தமான திரைக் கதை. சட்ட நெறி முறைகளின் படி  நடக்கும் விசாரணயை ரசித்துப் பார்தேன். இயக்குனர் Niyi Akinmolayan பாராட்டுக்கு உரியவர்.

 

 

 

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time