குளறுபடி தேர்தல் ஆணையம்! கமுக்கமான உச்ச நீதிமன்றம்!

-ச. அருணாசலம்

வாக்கு எண்ணிக்கையை சொல்லுவதில் குளறுபடி! வன்முறையை தூண்டிவிடும் மோடியை கண்டிக்க பயம், எதிர்கட்சிகளை மிரட்டி பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி..என இந்திய வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் ஆணையம், தேறாத ஆணையமாக காட்சியளிக்கிறது. ‘பத்துமுறை கூட பிரதமராவேன்..’ என கதையளக்கும் மோடி..!

முதல் நான்கு கட்ட வாக்கு பதிவுகளில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த தேர்தல்களின் வாக்காளர்கள் எத்தனை பேர்?, எத்தனை பேர் வாக்கு அளித்தார்கள்? என்ற எண்ணிக்கையை வெளியிடாமல் வாக்கு சதவிகிதத்தை கூட்டியும், மாற்றியும் குளறுபடி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய மூடு மந்திர வேலையை இந்தியா கூட்டணிக் கட்சிகளும், ஜனநாயக ஆர்வலர்களும் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர். காங்கிரஸ் தலைவர் கார்கே, பிற கூட்டணி கட்சிகளுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடிதம் அனுப்பினார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான ADR என்ற அமைப்பு தேர்தல் ஆணையம் வெளிப்படையாக வாக்கு எண்ணிக்கை விவரங்களை வெளியிட வற்புறுத்துமாறு உச்ச நீதிமன்றத்தை நாடக் கூடிய அவல நிலை இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை.

மே மாதம் 17 அன்று இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அதற்கு பதிலளிக்கும் முன்னரே காங்கிரஸ் தலைவர் பிற கூட்டணி கட்சிகளுக்கு எழுதிய கடிதத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டது தேர்தல் ஆணையம். மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது அவ நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் கார்கே கடிதம் எழுதியுள்ளார் என தே. ஆணையம் கடுமையாகச் சாடியது.

உச்ச நீதிமன்றத்தில் ADR அளித்த மனுவிற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கை 24ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

படிவம் 17 சி. யில் அடங்கிய விவரங்களை பொது வெளியில் கூறுவதும் இணையதளத்தில் வெளியிடுவதும் சட்டப்படி அவசியமானதல்ல. இதை வலியுறுத்த பொதுமக்களுக்கோ, மற்றவர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை. அவ்வாறு வெளியிட்டால் அதனால், தேவையற்ற குழப்பங்கள் தான் நிலவும் என “மேதாவித்தனமான “ பதிலை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை நாம் அறிவோம்.

பாஜ க தவிர, அனைத்து கட்சிகளும், ஜனநாயக ஆர்வலர்களும், பொதுமக்களும் அறிவார்ந்த சமூகமும் இத்தகைய பதிலைக் கண்டித்தனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த கோமாளித்தனத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்ற “நியாயமான” நம்பிக்கையுடனும் காத்திருந்தனர்.

ஆனால், மே 24ல் , நீதிபதிகள் திபாங்கர் த்த்தா மற்றும் சத்தீஷ் சந்திர சர்மா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ”இந்த விவகாரத்தில், ஐந்து கட்ட தேர்தல்கள் முடிந்து ஆறாவது கட்டத்தில் நுழையும் வேளையில், பணிச் சுமைகளில் திளைக்கும் தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் வற்புறுத்த முடியாது” என கையை விரித்தது.

நம்பிக்கைகள் தகர்ந்த நிலையில், ‘இனி யாரை நம்பியும் பயனில்லை’ என ஆறாவது கட்ட தேர்தலையும் எதிர்கட்சிகள் சந்திக்க தயாராயினர்.

இவிஎம் இயந்திரக் கோளாறு, போதிய வசதிகளில்லாததால் தாமதப்படுத்தப்படும் வாக்குப்பதிவு, வாக்காளர் பெயர் நீக்கம், தேர்தல் அதிகாரிகள் சிலரின் ஓர வஞ்சனை போன்ற பல்வேறு புகார்களின் ஊடாகவே ஆறாவது கட்டத் தேர்தலும் நடந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று -மே 25- மதியத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை நடந்த 429 தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையையும், அதில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையையும் பொதுவெளியில் வெளியிட்டது!

அதற்கு முன்தினம்(மே24) உச்ச நீதிமன்றத்தில் இத்தகவல்களை வெளியிடுமாறு கேட்டவர்களை வசைபாடி அவர்களது கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் 12 மணி நேரத்திற்குள் இத்தகவல்களை தானே முன்வந்து வெளியிட்டிருப்பது குற்ற உணர்ச்சியால் ஏற்பட்ட மனமாற்றமா? அல்லது இன்னும் மறைத்தாலோ, குளறுபடிகள் செய்தாலோ அவமானமாகிவிடும் என்ற தடுமாற்றமா?

காலங்கடந்து வந்த ஞானோதயமா? அல்லது காற்று திசை மாறுகிறது என்று களத்தில் உணர்ந்த பின்பு கடமையை உணர்ந்து கொண்டனரா..? என்று பல கேள்விகள் தேர்தல் ஆணையத்தின் முன் உள்ளன!

ஏப்ரல் 19-ல் தொடங்கி மே 25-ல் ஆறாவது கட்டத்தை எட்டியுள்ள தேர்தல், இது வரை நடந்த விதமும், இக்களத்தில் எதிரும் புதிருமாக நிலை பெற்றுள்ள மோடி மற்றும் இந்தியா கூட்டணியின் நகர்வுகளும் நமக்கு சில உண்மைகளை உணர்த்தக்கூடும்!

ஜனநாயகத்தை மீட்டெடுப்பதும், அரசமைப்பு சட்டத்தை, இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதும் வேலை வாய்ப்பு மற்றும் அனைவருக்குமான நியாயமான வளர்ச்சி நோக்கி பயணிப்பதும் என்ற மூன்று பிரதான அறைகூவல்களை முன்னெடுத்து அதில் உறுதியாக இந்தியா கூட்டணி பயணித்ததை நாமறிவோம்!

ஆனால், மறுபுறம் மோடி, “ஆப் கி பார் 400 சீட்டைப் பார்” என பரப்புரையை ஆரம்பித்தார். ”2047ல் இந்தியாவை ‘விகசித் பாரத்’ தாக மாற்றிக் காட்டுவேன்” என்றார். 2024 ஜூன் முதல் முதல் நூறு நாடகளுக்கான திட்டத்தை கூட்ட “காபந்து சர்க்காரின்” அமைச்சரவையை கூட்டி விவாதித்தார் மோடி! மத்திய ரிசர்வ் வங்கி சென்று, ”அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள்” என அதிகாரிகளிடம் ‘அறைகூவல்’ விடுத்தார் மோடி!

இது அறை கூவலா? அல்லாது அரை வேக்காட்டுத்தனமா? என மக்கள் அவதானிக்கும் முன் முதற்கட்ட தேர்தலின் போது “ கச்சத்தீவை இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வார்த்து ,தேச நலனை புறக்கணித்து விட்டார்” வருங்காலங்களில் இதை தான் மீட்டெடுப்பது போல தம்பட்டமடித்தார்!

கடந்த பத்தாண்டுகளில் தனது சாதனைகள் என சொல்லத்தக்கன எதுவும் இல்லாத நிலையில், எழுப்பிய கோஷங்கள் எல்லாம் வெறும் ‘ஜும்லா’ வாக மாறியதை மக்கள் புரிந்து கொண்டதால், மக்களின் அடிமனதில் மோடி அரசின் மீது வெறுப்பும், சலிப்புமே மிஞ்சி நிற்கிறது.

இந்த லட்சணத்தில், ‘மூன்றாவது முறையும் மோடி பிரதமரானால், என்ன நடக்குமோ..’ என அவருக்கு ஏற்கனவே வாக்களித்தவர்கள் கூட சிந்திக்கத் தொடங்கியுள்ளதை தாமதமாக புரியத் தொடங்கினார் மோடி!

இதனால், இரண்டாம்கட்ட தேர்தல் முடிவில், ‘’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் தாலி கூட பறிக்கப்படும்”  என பதட்டத்தை விதைத்தார்.

”இந்துக்களின் சொத்தை இஸ்லாமியர்களுக்கு பிடுங்கி கொடுத்து விடுவார்கள் காங்கிரசார்” என ‘வெறுப்பை ‘ கட்டமைக்க முயன்றார்..

அப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்த தேர்தல் ஆணையத்திற்கு இப்போது என்ன வந்தது?

நான்காம் கட்ட தேர்தலின் போது, ‘அதானி அம்பானி காங்கிரசிற்கு டெம்போக்களில் கறுப்பு பணத்தை அனுப்பி உள்ளனர்’ என உளறினார் மோடி. சொந்த கட்சிக்காரர்களே இந்த உளறலை எப்படி எடுத்துக் கொள்வது என்று மண்டையை பிய்த்துக் கொண்டு அலைய ஆரம்பித்தனர்.

ஆனாலும், தேர்தல் ஆணையம் தீவிர விசுவாசியாக வலம் வந்தது!

”எதிர்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு வாய்ப்புகள் பிடுங்கப்பட்டு, அவை முஸ்லீம் மக்களுக்கு அளிக்கப்படும்” என்றும் அபாண்டமாக பொய்யுரை ஆற்றினார்.

இந்த பரப்புரைகள் எடுபடாத நிலையில், என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஒவ்வொரு கோடி மீடியாவை அழைத்து பேட்டி கொடுத்து ஒளி பரப்பச் செய்தார்.

இதன் மூலம் தினமும் முக்கிய வேளைகளில் (prime time) தொலைக் காட்சியில் தன்னை முன்னிறுத்த தலைப்பட்டார் .

தந்தி டி.வி யில் தொடங்கி என்.டி.டி.வி., இந்தியா டி.வி., டைமஸ் நௌ., ஆஜ் தக்., ரிப்ப்ளிக் டி.வி., என நாற்பதுக்கும் மேற்பட்ட ஊடகங்களுக்கு “ பேட்டி” என்ற பெயரில் இவர் சிந்திய “முத்துக்களை” என்னவென்பது?

அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம், ‘ எதிர்கட்சிகள் தேர்தல் களத்தில் சம்மான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, 1991ல் ஒருவர் இறந்து போனதற்காக

(ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை கூறுகிறார்) அவர் போட்டியிடும் தொகுதியில் மட்டும் தேர்தலை நிறுத்தவில்லை. ஒட்டு மொத்த தேர்தலும் சில நாடகள் தள்ளி வைக்கப்பட்டது

அப்படி எதுவும் இப்போது நடக்கவில்லை என்று கூறினார் மோடி!

“ நீங்கள் மீண்டும் பிரதமரானால் மூன்றாது முறையாக தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நேருவின் சாதனையை முறியடித்து விடுவீர்களா” என்று ஒரு கேள்வி,

அதற்கு மோடியின் பதில்: “ நான் பத்து முறை கூட பிரதமராக வென்று வருவேன். அது எனக்கு பெரிய விஷயமில்லை, ஆனால், வரலாற்றில் எனது பங்கு என்பது என்ன என்பது தான் முக்கியம்”.

புது தில்லி மதுபானக்கொள்கை “ஊழல்” வழக்கில் 2022 முதல் அரவிந்த கெஜ்ரிவால் கைதுக்குப் பிறகும் கூட ஒரு தடயமும் அமலாக்கத்துறையிடம் இல்லை என்று கூறப்படுகிறதே என்றதற்கு மோடி, “ கெஜ்ரிவால் ஒரு கைதேர்ந்த திருடர், அவர் எப்படி ஆதாரங்களை விட்டு வைப்பார்? அவர் மீண்டும் சிறைக்கு திரும்புவார்” என பதிலளித்துள்ளார்.

தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் ஒரு மோசடி, சட்டத்திற்கு புறம்பானது என உச்ச நீதி மன்ற தீர்ப்பை ஒப்புக்கு கூட ‘ மதிக்கிறோம், கட்டுப்படுவோம்’ எனக் கூறாத பிரதம,ர் இந்த தீர்ப்புக்காக பின்னாளில் ‘அவர்கள்’ வருந்த வேண்டியிருக்கும் என்றார்!

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பேட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளும், அதற்கான பதில்களும் தயாரித்து வழங்குவது பிரதமர் அலுவலகந்தான். இது ஊரறிந்த ரகசியம்!

இத்தகைய பிதற்றல்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக மோடி திருவாய் மலர்ந்து உரைத்தது;

 

இது தான்: “ நான் (அதாவது மோடி) தாயின் வயிற்றில் பிறக்க வில்லை…… நான் இறைவனால் படைக்கப்பட்டு ஒரு நோக்கத்திற்காக இங்கு வந்தவன் என அறிந்து தெளிந்துள்ளேன்”

இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமர் தேர்தல்களினூடே பேசுவதை என்னவென்பது?

பிரதமர் முக்தி அடைந்து விட்டாரா அல்லது அவருக்கு ‘முத்தி’ விட்டதா பைத்தியம்?

இவருக்கு முக்தி கிடைத்ததால், தேர்தல் ஆணையத்திற்கும் முக்தி கிடைத்து விட்டதா?

இறைவனால் படைக்கப்பட்டவர், இறைத் தூதனாக தன்னை எண்ணிக் கொள்பவர் ஏன் தேர்தல் களத்தில் நிற்கிறார்?

அதானி, அம்பானி போன்றோரிடம் இந்திய சொத்துக்களில் மிகப் பெரும்பான்மை குவிந்துள்ளதே ,கடந்த பத்தாண்டுகளில் இந்த ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளதே? என்று கேள்வி  கேட்டால், “இறைத்தூதர் மோடி”,  ”அவர்களையும் ஓட்டாண்டிகளாக ஆக்கவா?” என பதில் கேள்வி கேட்கிறார்!

இத்தகைய “மனிதரிடம்” கடந்த பத்தாண்டுகள் அண்டிப் பிழைத்த பின் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும், ஐ ஏ எஸ் லாபியினருக்கும் இனி வரும் ஆண்டுகளிலும் இந்த படகில் பயணிக்க பயம் வந்து விட்டதா?

‘கரை சேராது’ என கட்சியினர் உணர்ந்த பின்னரும், கப்பலில் தொடர்ந்து பயணிக்க தேர்தல் ஆணையர்கள் விரும்பவில்லையா அல்லது பட்டது போதும் என ஒதுங்குகிறார்களா?

எது எப்படியிருப்பினும், இந்த வெளிப்படையான அறிவிப்பு, ‘தேர்தல் திருட்டு’ நடக்காமலிருக்க உதவும் அடிப்படைத் தகவல் என்ற வகையில் இந்த அறிவிப்பை வரவேற்போம்!

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time