அற்புதப் பலன்களை தரும் அம்மான் பச்சரிசி!

-அண்ணாமலை சுகுமாரன்

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். பியூட்டி பார்லர் போகாமலே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதில் இருந்து தாய்ப் பால் சுரப்பு, பித்த வெடிப்பை சரி செய்தல்.. என ஏகப்பட்ட, வியக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பயன்படுத்துவது எளிது, பலன்களோ பெரிது;

வித்தியாசமான இதன் பேரைக் கேட்டதும், ‘இது அரிசி போன்று இருக்குமோ…’ என்று நினைக்க வேண்டாம்.  இது ஒரு மூலிகையே..! இதற்கு ‘சித்திரப் பாலாடை’ என்ற பெயரும் உண்டு.

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும். மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.  சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப் பெருக்கம் அடைகிறது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும், செந்நிறமும் சேர்ந்து காணப்படும். இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

அம்மான் பச்சரிசி  என்பது  சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய இந்திய மூலிகையாகும், இது ‘ஆராக்ஸிலம் இண்டிகம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை Apocsynaceae குடும்பத்தின் ஒரு பகுதியாகும். மற்றும் பொதுவாக அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு பெயர் பெற்றது. வயிற்றுப் புண்கள், தோல் நோய்த் தொற்றுகள் மற்றும் வாதக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.


Tamil – Amman Pacharisi
English – Snake weed
Sanskrit – Dugdhika
Telugu – Reddine narolu
Malayalam – Nela paalai
Botanical name – Euphorbia hirta

இந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒரு வித பால் வரும். அது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் – பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

– அகத்தியர் குணபாடம்.


தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான அளவு சுரக்காமல் இருக்கும் போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும். சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும், அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும்.

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும். அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும். ஆண்மை அதிகரிக்கும்.

இதில்  பின்வரும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன:  ஸ்டெரால்கள், ஆல்கலாய்டுகள், டானின்கள், கிளைகோசைடுகள், ட்ரைடர்பெனாய்டுகள், அல்கீன்கள், பினாலிக் அமிலங்கள், கோலின் மற்றும் ஷிகிமிக் அமிலம் உள்ளது. இது ஆன்டி வைரல் மற்றும் பாக்டீரியா பண்புகளைக் கொண்டுள்ளது.
இலை, தண்டு, பால், பூ, ஆகியவை பயன் தரும்.

அவுரி அழவனம் அவரை அம்மான் பச்சரிசி அறுகு தோல் காக்கும்’ என்று தோல் நோய்களுக்கு பயன்படும் பட்டியல் அடங்கிய மூலிகைக் குறளில் சொல்லப்படும்  மூலிகையில்  அம்மான் பச்சரிசியும் ஒன்று.

‘விரணமலக் கட்டுமே கந்தடிப்புச் சேர்ந்த தினவிவைகள் தேகம் விட்டு போம்…’ என்ற பழம் பாடல், புண், மலக்கட்டு, தோல் நோய்கள், வெள்ளைப்படுதல் போன்றவை அம்மான் பச்சரிசியால் குணமாகும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

அம்மான் பச்சரிசி இலைகளை எடுத்து சின்ன வெங்காயம், சிறிதளவு பூண்டு ஆகியவற்றை சேர்த்து, கடுகு ,உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட்டு வர மலச் சிக்கல் அகலும் என்பது பாட்டி வைத்தியம். இந்த சமையல் முறை இப்போதும் கிராமங்களில் உள்ளது.

அம்மான் பச்சரிசிக்கு நெருப்புப் புண், மலச்சிக்கல், நமச்சல், பரு, மறு நீகள் ஆகிய குணம் உண்டு. இதன் பாலை நக சுற்றுக்கு   தடவி வர குணமாகும்.  பித்த வெடிப்பு, கால் ஆணி சரியாக இதனால் சரியாகும்.


சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம் ஆகியவற்றைப் போக்கும் குணம் உண்டு. இது தாது விருத்தி செய்வதால் இதனை, ‘ தாவர வெள்ளி பஸ்பம் ‘என்றும் கூறுவர்.

இதன் பாலை வைத்துக் கொண்டு ஒரு வித்தை கூட காட்டலாம். ஒரு காகிதத் துண்டில் அம்மான் பச்சரிசி பாலால் , ஏதாவது ஓர் உருவம் வரைந்து,  அதை நன்கு உலர்த்தி பின் நண்பர்களிடம் காட்டவும். பின் அனைவரும் அது வெறும் காகிதம் தான் எனக் கூறியதும், அதை தீயில் கொளுத்தி காட்ட வரைந்த உருவம் தோன்றும்.  இவ்வாறு வித்தை காட்டவும் ஒரு சிறந்த மூலிகையாக இது திகழ்கிறது. இது மூலிகை ஜாலம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பல மூலிகை  ஜாலங்கள் உண்டு

வலி நிவாரணி, வீக்கத்தைக் கரைக்கும் தன்மை  அம்மான் பச்சரிசிக்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.  இது கிருமிநாசினி செய்கையைக் கொண்டிருப்பதால் தொற்றுக்களை அழிக்கும்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வைரலாக பரவிய காலகட்டத்தில் அம்மான் பச்சரிசி பெரிதும் பயன்பட்டது. இதன் இலையில் 100 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 100 மி.லி. வீதம் பருகி வரும் நிலையில், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் மற்றும் ரத்த அணுக்களை குறையவிடாமல் தடுத்து, டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அம்மான் என்றால், மாமனை குறிக்கும்.  இது  அம்மான் பச்சரிசி என்று ஏன் அழைக்கப்பட்டது?என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க!

“கூருமம் மாணொத்தகண்ணாய் கூறு ” என்ற குணபாட பாடலில் சொன்னபடி அம் ” மான் ” என்பதாலா  ? எப்படி இருந்தாலும், இது ஒரு முக்கிய மூலிகை என்பதில் சந்தேகம் இல்லை .
அடுத்த வாரம் வேறு ஒரு முக்கிய மூலிகையுடன்  சந்திப்போம் !

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்

நம்ம ஊரு மூலிகைகள் உள்ளிட்ட நூலின் ஆசிரியர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time