பீகார் தேர்தல் – தந்திரத்தால் சாதித்த வெற்றி!

சாவித்திரி கண்ணன்

பீகார் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றிக் கோட்டைத் தொட்டது எப்படி என்று பார்த்தால், பாஜகவின் அரசியல் தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகத் தான் பார்க்கிறேன்.

தேர்தலுக்கு முந்திய கள ஆய்வில் எல்லோருக்கும் தெரிய வந்தது என்னவென்றால், ’மகாபந்தன்’ எனப்படும் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்பதே! லாலுவுவின் மகன் தேஜஸ்வி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.அவரும் பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்றது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மூன்றுமுறை ஆட்சி கட்டிலில் இருந்துவிட்ட நிதீஸ்குமார் மீதான சலிப்பு சற்று பீகார் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் சொல்லப்பட்டது! அதே சமயம் பாஜக மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்று எந்த ஒரு செய்தியும் வரவில்லை!

நிதீஸ்குமார் மீது அதிருப்தி என்றால்,அது அவரை மட்டும் பாதிக்குமாம்! அவரோடு சேர்ந்து ஆட்சி புரிந்த பாஜகவை அது கொஞ்சம் கூட பாதிக்காதாம்! பீகாரில் மூன்றாவது இடத்தில் இருந்த பாஜக தன் கூட்டாளியை மட்டும் பலவீனப்படுத்திவிட்டு தான் முதல் இடத்திற்கு வந்துவிட்டது. முதல் இடத்தில் இருந்த நிதீஸின் ஐக்கிய ஜனதா தளம் இந்த முறை மூன்றாவது இடத்திற்கு பாஜகவால் தள்ளப்பட்டுவிடும் என்று நான் அறம் இணைய இதழில் அனுகூல சத்ருவாக நிதீஸை அழித்து வளரும் பாஜக என்று எழுதி இருந்தேன்!

நிதீஸ்குமாரின் கீழ் துணை முதல்வராக பா.ஜ.கவின் சுசில் குமார்மோடியை இது நாள் வரை பயிற்சி பெற வைத்ததன் மூலம்  அவரையே தற்போது முதல்வராக்கி விட்டு நிதீஸ்குமாரின் முக்கியத்துவத்தை பா.ஜ.க குறைத்துவிட வாய்ப்புள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் பாஜகவுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி நிதீஸை தேய்பிறையாக்கி, பாஜகவை வளர்பிறையாக்கிய வரலாறு என்பது மக்கள் நம்பிக்கையை கூடுதலாக வென்றெடுத்து பாஜக பெற்றதல்ல, அது முழுக்க,முழுக்க தந்திரத்தால் கட்டமைக்கப்பட்டது! இதற்கு தனி நபர் யாரும் உரிமை கொண்டாடமுடியாது! அது பாஜகவின் பின்பு இயங்கும் ஆர்.எஸ்.எஸ் வகுத்து கொடுத்த செயல்திட்டம்!

வெற்றிக்கு வித்திட்ட இரண்டு சூழ்ச்சிகள்

# பீகாரில் முஸ்லீம் வாக்குகள் அதிகம். லாலு கட்சிக்கு முஸ்லீம் வாக்கு வங்கி மிகப் பெரிய பலம்.ஆகவே அதை உடைக்க வேண்டும். எனவே செல்வாக்கான AIMIM தலைவர் ஓவைசியை மிரட்டி, ஆர்.ஜே.டியுடன் சேரவிடாமல் தனித்து நிற்கச் செய்தனர்! இதன் மூலம் 24 இடங்களில் ஆர்.ஜே.டீக்கு வர வேண்டிய இஸ்லாமிய வாக்குகள் அப்படியே பிரிந்து ஓவைசிக்குப் போனது! இதன் மூலம் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள சீமாஞ்சல் என்ற மிகப் பெரிய பகுதியிலேயே பாஜக வெற்றி பெற முடிந்தது! அங்கே மகாபந்தனுக்கு வெற்றி பிரகாசமாயிருந்த முஸ்லீம்கள் அதிகமான தொகுதியிலேயே அது தோல்வியை தழுவியது!

# பீகாரில் தலித் வாக்கு வங்கி என்பது வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கும் அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த தலித்து கட்சிகளை மகாபந்தன் கூட்டணிக்குள் செல்லவிடாமல் தடுத்தது. மாயாவதியின் கட்சியான பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தலித் கட்சிகள் தனியே களம் கண்டன! அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் நெருங்கிய கூட்டாளியான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தியை கூட்டணியில் இருந்து வெளியேற்றி தனியே நிற்க செய்தனர் – அதுவும் நிதீஸ் கட்சி நிற்கும் இடங்களில் மட்டும் நின்று அவர்கள் நிதீஸை தோற்கடிப்பார்களாம்! பாஜக நிற்கும் தொகுதியில் பாஜகவை ஆதரிப்பார்களாம்! இந்த மோசடிக்கு தன்னையே பலிகடாவாக்கிக் கொண்டு பாஜகவை வெற்றி பெற வைத்துள்ளார் சிராஜ்பாஸ்வான். இவரை கூட்டணிக்குள் வைத்திருந்தால் லோக் ஜனசக்திக்கும் கணிசமான தொகுதிகள் கிடைத்திருக்கும்.ஐக்கிய ஜனதாதளமும் நல்ல வெற்றியை ஈட்டியிருக்கும்! ஆனால், ஒரு தலித் கட்சியை அரவணைத்து அழிக்க வேண்டும் என்பது தானே பாஜகவின் திட்டம்! ஒரே ஓரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று, தன்னையும் அழித்துக் கொண்டு, 30 இடங்களில் நிதீஸின் ஐக்கிய ஜனதா தளத்தின் தோல்விக்கு காரணமாயிற்று, இந்தக் கட்சி!

ஆக, முதல் திட்டத்தின் மூலம் முஸ்லீம் வாக்குவங்கியை பிரித்து மகாபந்தனுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளிலேயே அவர்களை மண்ணைக் கவ்வ வைத்தார்கள்!

இரண்டாவது திட்டத்தின் மூலம் கூடவே தங்களுக்கு நெருக்கமாக உள்ள நீதிஸை பலமிழக்க வைத்துவிட்டு தாங்கள் முன்னுக்கு வந்து விட்டனர்!

இத்துடன் முகேஷ் சஹினிஸ் என்ற சினிமா பிரபலத்தின் புதிய கட்சிக்கு வாய்ப்பளித்து வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டனர்!

இந்த தேர்தலில் எதிர்பாராத ஒரு நிகழ்வு என்னவென்றால், பீகாரில் இடதுசாரிகளுக்கு ஒரு வலுவான தளம் ஏற்பட்டுள்ளது. சி.பி.எம்,சி.பிஐ, சி.பி.எம் மார்க்சிஸ்ட்,லெனிஸ்ட் கட்சிகள் 29 தொகுதிகளில் நின்று கணிசமான இடங்களை வென்றுள்ளனர்.

காங்கிரஸின் பலவீனம் என்ன?

காங்கிரஸ் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க தவறியது. இதற்கு பீகார் காங்கிரஸ் தலைமையும் முயற்சிக்கவில்லை. தேசிய காங்கிரஸ் தலைமையும் முயற்சிக்கவில்லை. மாகாபந்தன் கூட்டணியில் தனக்கு 70 சீட்டுகளை உறுதிபடுத்திக் கொண்ட காங்கிரஸ் அதில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போனது. கூட்டணிக்குள் ஏதாவது வலுவான இஸ்லாமிய மற்றும் தலித் கட்சியை உள்ளுக்கு இழுத்து நிற்க வைத்து தன் தொகுதிகளில் கொஞ்சம் விட்டுத் தந்திருந்தால் சுமார் 45 இடங்களில் அது வெற்றி உறுதியாக வெற்றி பெற்று இருக்கும்! காங்கிரஸின் செய்ல்பாடில்லாத தேக்க நிலைக்கு மாறக பாஜக இமைப்பொழுதும் சோராமல் இயங்கி வருவது குறிப்பிட தக்கதாகும்!

மிகப் பெரும்பாலோர் ஓட்டுமெஷினில் ஏதாவது சூட்சுமம் செய்து வெற்றி பெற்று இருப்பார்களோ என்ற கோணத்தில் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். அதற்கு வாய்ப்பு இல்லாமலில்லை! ஆயினும் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தான் தோன்றுகிறது. எனினும், அது குறித்தும் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘அறம்’ சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time