நெல் விளைச்சல் வீழ்ந்தது! அரிசிக்கு கையேந்தும் தமிழகம்!

சாவித்திரி கண்ணன்

நானும் விவசாயி தான் என்று சீன் காட்டினால் சரியாகிடுமா? தமிழ் நாட்டில் விவசாயம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்துத்துக் கொண்டுள்ளது!

தமிழக விவசாயத்தின் யதார்த்ததை அணுவளவும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி! ”விவசாய உற்பத்தி பொருள்களை வெளி நாட்டுக்கு அனுப்பி விவசாயிகள் லாபம் பார்க்க ஏற்பாடு பண்ணுவோம்’’ என்று பேசியுள்ளார்!

கடந்த 13 ஆண்டுகளாக அரிசி விளைச்சல் அதள பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது!

அண்டை மாநிலங்களுக்கெல்லாம் அன்ன தாதாவாக அரிசியை அனுப்பிக் கொண்டிருந்த தமிழகம் தற்போது தன் தேவைக்கே அண்டை மாநிலங்களை நம்பி உள்ளது!

தமிழகத்தின் மொத்த அரிசித் தேவை 91 மெட்ரிக் லட்சம் டன்கள்! ஆனால், உற்பத்தியாவதோ வெறும் 56 மெட்ரிக் லட்சம் டன்கள் தாம்! ஆகவே, பற்றாகுறையை நாம் ஆந்திரா,கேரளம் கர்நாடகம் மேற்குவங்கம் போன்ற மா நிலங்களில் இருந்து கையேந்தி வாங்கித் தான் சமாளிக்கிறோம். ஆக, இருப்பவர்களுக்கே பற்றகுறையென்றால், இவர் ஏற்றுமதி செய்வாராம்!

சரி உற்பத்தி செய்த நெல்லையாவது பாதுகாக்க முடிகிறதா?

இதோ தற்போதைய மழையில் காவேரி டெல்டாவில் ஆங்காங்கே பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்தன! ஏன்? வாய்க்கால்களும்,ஏரி,குளங்களும் தூர்வாரப்படாததால் தண்ணிர் வயக்காட்டில் தேங்கி பயிர்களை அழித்துவிடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால்,அரசு கணக்கில் தூர்வாரப்பட்டதற்கான செலவுகள் கோடிக்கணக்கில் காட்டப்பட்டு இருக்கின்றன!

ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்த நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால் ஏற்படுகிற இழப்புகள் சொல்லில் அடங்காது! நாள் கணக்கில் நெல் மூட்டைகளோடு நடு ரோட்டில் காத்திருக்க வைக்கையில் மழை வந்து அழிப்பது பாதி, வாங்கிய நெல்மூடைகளை நீங்கள் பாதுகாக்கத் தெரியாமல் அழிப்பது மீதி என்றி சீரழிக்கிறீர்கள்! கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை கட்டிக் கொடுக்க கூட துப்பு கெட்ட எடப்பாடி பழனிச்சாமி வெளி நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுவாராம்!

எதுக்கு வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்? நீங்கள் வாங்கிய கடனை அரிசி தந்து அடைக்கும் முயற்சியா?

நெல் விளைச்சல் ஏன் வீழ்ச்சியடைந்த்து கொண்டே செல்கிறது என்று ஒரு நாளாவது விவசாயிகளிடையே பேசியிருப்பீர்களா? தமிழ் நாட்டில் என்று ரேஷன் கடையில் விலையில்லா அரசி போடத் தொடங்கினீர்களோ..அன்று முதல் விலை மதிப்பில்லா நெல் உற்பத்திக்கு நாம் ஏன் மெனக்கிட வேண்டும் என்ற விரக்தி மேலோங்கியது. நாமும் ரேஷனில் ஓசியில் வாங்கி சாப்பிட்டுப் போவோமே…. என்று விவசாயிகள் மனதளவில் விரக்தி அடைந்ததை அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ளவில்லை. இந்தியாவில் நம்மை விட பின் தங்கிய மாநிலங்கள் பல உள்ளன! அவை எதுவுமே ஓட்டு அரசியலுக்கு அரிசியையோ,கோதுமையையோ ஓசியில் தூக்கி கொடுப்பதில்லை! தமிழ் நாட்டில் ஓட்டுவங்கி அரசியல் அரிசி உற்பத்தியை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

மூன்று போகம் விளைந்த தமிழகத்தில் இன்று ஒரு போகம் தான் உருப்படியாக நடக்கிறது. ஆனால், அதுவும் குறைவான நிலப்பரப்பில் தான்! அதாவது சம்பா சாகுபடி தான் பெருமளவு நடக்கிறது. குறுவையும் , தாளடியும் தள்ளாடிக் கொண்டுள்ளது!

ஒரு காலத்தில் தமிழகத்தில் 78 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் நடந்தது.ஆனால் அது தற்போது சரிபாதியாக குறைந்து 37 லட்சம் ஹெக்டேரில் தான் நடக்கிறது.குறைந்த நிலத்தில் கூடுதல் உற்பத்தி செய்ய ரசாயன உரங்களை டன் கணக்கில் கொட்டி நிலத்தை காலப்போக்கில் மேன்மேலும் மலடாக்கி வருவது தான் கண்ட பலனாக உள்ளது.

தமிழ் நாட்டில் கைவிடப்பட்ட விவசாய நிலங்கள் எவ்வளவு என்றாவது யோசித்திருப்பீர்களா…? அப்படி கைவிடப்பட்ட நிலங்களை ரியல் எஸ்டேட் செய்வதற்கு தானே உங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் புத்தி போகிறது. இன்றைய நிலவரப்படி தமிழ் நாட்டில் 30 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் தரிசு நிலங்களாகிவிட்டன!

மோசமான நீர்மேலாண்மையை சீர் செய்தாலே விவசாயப் பிரச்சினைகளில் பாதி குறைந்துவிடும். உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலை கிடைத்தால் மீதி பிரச்சினைகளையெல்லாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம்! வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் இன்றைய நிலையில் உள்ளுர் மக்கள் பட்டினியால் சாக வேண்டியது தான், யதார்த்தம் தெரியாத எடப்பாடியாரே!

உருப்படியாக விவசாயத்திற்கு என்ன தேவை என்று தெரிந்து பேசுங்கள்! வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தலைபாகை கட்டிக் கொண்டு கையில் நெற்பையிரை பிடித்தபடி வயலில் நின்று போஸ் கொடுத்தால் மட்டும் போதாது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time