அலம்பல் செய்யும் சாதிச்சங்கங்கள்! அராஜகம் காட்டும் திமுக!

-ஈட்டி

தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பிரச்சினைகள் மீது தனி கவனம் வந்துவிடுகிறது! சாதிசங்கங்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கிவிடுகின்றன! சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆகிய இந்த இரண்டு இடங்களும் தினமும் பரபரப்பாக காணப்படும் இடம். காரணம் அரசியல் கட்சிகள் ஆகட்டும் சமூக அமைப்புகள் ஆகட்டும் தங்களுக்குள்ள பிரச்சினையை தீர்த்துக் கொள்ள ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் உண்ணாநிலை அறப்போராட்டம் என நடத்துவதற்கு போலீசார் இந்த இடத்தில்தான் அனுமதிக்கிறார்கள்.

இந்த இரண்டு இடங்களிலும் அதிமுக,திமுக ஆகிய இரண்டு கட்சிகளைத் தவிர வேறு யார் கூட்டம் நடத்தினாலும் ஒரு 500 பேர் வருவது அதிகம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் அகில இந்திய வேளாளர், வெள்ளாளர் கூட்டமைப்பு மற்றும் வேளாளர் பெயர் பாதுகாப்புக்குழு சார்பில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அனைவரும் தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி உறுப்பினர்கள் தங்கள் அமைப்பில் இருப்பதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விட்டனர். இவர்கள் பிரதமர் மோடியையும் விட்டு வைக்கவில்லை.

”மோடி நீ ஒரு பேடி, எங்கள் ஜாதியில் தலையிட நீ யார்…’’ என்று ஒருவர் ஆவேசமாக பேசினார். பிறகு பேச வந்தார் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் . இவர் தான் உண்ணாநிலை அறப் போராட்டத்தை துவக்கி வைப்பவர் என்று அழைப்பிதழில் போடப்பட்டு இருந்தது. ஆனால், ஐசரி கணேஷ் வந்ததோ 11 30 மணிக்கு தான்!

”வரலாற்று சிறப்புமிக்க எங்களது வேளாளர் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். எங்கள் வேளாளர் பெயரை வேறு யாருக்கும் தரக்கூடாது அதற்கான எந்த தியாகங்கள் ஆக இருந்தாலும் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்…’’ என்றவர் சில நிமிஷங்களைக் கூட முழு நாள் உண்ணாவிரதத்திற்கு தியாகம் செய்ய இயலாமல் உடனே புறப்பட்டுவிட்டார்!

இந்த அமைப்பினர் வெளியிட்டிருந்த நோட்டீசில் சில உன்னதமான பெரியவர்களின் படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன! அதில் ’’சாதியும்,,மதமும்,சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி’’ என சாதிக்கு எதிராக எண்ணற்ற பாடல்களை எழுதிய வள்ளலார் படமும்,. அது போல சிவனடியாராக திகழ்ந்த அப்பர் பெருமானின் படமும், இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது! மாபெரும் மக்கள் தலைவராகவும், தியாகச் செம்மலாகவும் திகழ்ந்த போதிலும் கடைசி காலத்தில் வறுமையில் வாடிய வ.உ.சிதம்பரனாரின் படமும் இருந்தது! இவர்களுடன் சமூக சமத்துவத்திற்காக பாடுபட்ட நீதிக் கட்சித் தலைவர் பன்னீர் செல்வத்தின் படமும் இருந்தது. அத்துடன் தீரன் சின்னமலை படமும், சாதிகளுக்கு அப்பாற்பட்ட தமிழினப் போராளியாய் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படமும் இருந்தது!

தேர்தல் நெருங்க, நெருங்க இப்படி சாதி அமைப்புகள் எத்தனை பேரை சாதி அடையாளப்படுத்தி, சந்தோஷப்படப் போகிறார்களோ..என திகிலாக இருக்கிறது..!

அகில இந்திய வேளாளர்,  வெள்ளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பட்டுக்கோட்டை   ஏ ஆர் ஏ அண்ணாதுரை என்பவர் இந் நிகழ்ச்சிக்கு வரும்போதே கழுத்தில் ஆளுயர மாலை தலையில் மலர் கிரீடம் என ஒரு 30 பேர் சூழ வந்தார். அந்த 30 பேரும் அவரை வருங்கால முதல்வர் வாழ்க என வாழ்த்தி முழக்கமிட்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் அவரை முதலமைச்சர் என்றே அழைத்தனர். காலை முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

அதே நேரம் ஆர்ப்பாட்ட மேடைக்குப் பின்னே இருந்த கடையில் நீர்மோர் வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்கள் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, அதன் அருகிலுள்ள சிறிய சிற்றுண்டி கடையில் வழக்கத்தைவிட இட்லி பொங்கல் சீக்கிரமாக விற்று தீர்ந்தது சிறப்பம்சம். வாழ்க, உண்ணாவிரதப் போராட்டம்.

அதே வள்ளுவர் கோட்டம் அருகே, அடுத்த நாள்( பிப்ரவரி22) திமுகவின் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாநிதி மாறன் எம்.பி தலைமை தாங்கினர்.

சுமார் இரண்டாயிரம் திமுகவினர் திரண்டனர். வள்ளுவர் கோட்டமே திணறியது.

வழக்கம்போல் மேடைக்கு பின்புறம் இருந்த பெட்டிக்கடையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் 10 மணி அளவில் தயாநிதி மாறன் எம் பி அங்கு வந்தார். விஜயா தாயன்பன் உட்பட 4 பேருக்கு மட்டுமே 2 நிமிடங்களுக்கு பேச அனுமதி வழங்கப்பட்டது காரணம் சுட்டெரிக்கும் வெயில். தொடர்ந்து தயாநிதி மாறன் ஒரு பத்து நிமிடங்கள் பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  தயாநிதிமாறன் பேசுகையில், “இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை. முதலாவதாக தமிழகம் தான் திமுக சார்பில் முதலாவதாக கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. தாய்மார்களின் தலையில் மண்ணை அள்ளி போட்டுள்ளார் மோடி. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணமில்லை என நிதியமைச்சர் பூசி மெழுகுகிறார்.கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் ஏன் விலை உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் பெட்ரோல் விலையை குறைத்து விடலாம். எங்கள் வரிப்பணத்தீல் நீங்கள் சொகுசாக வாழ வேண்டுமா? இன்னும் இரண்டு அமாவாசையில் இந்த ஆட்சி முடிந்து விடும்! தாய்மார்களின் மடியில் கைவைத்தவர்களுக்கு சரியான பாடத்தை தாய்மார்கள் புகட்டுவார்கள்” ,என்றார்.

ஆனால், பெட்ரோல் விலை உயர்வுக்கு அம்பானியின் ரிலையன்ஸ் ஆயில் கார்ப்பரேசன் தான் காரணம் என்பதையோ, மோடி ஆட்சியில் பொதுதுறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் அம்பானிக்கு கிட்டதட்ட தாரைவார்க்கப்பட்டிருப்பது பற்றியோ வெளிப்படுத்தவில்லை! ஒரு கார்ப்பரேட் எப்படி மற்றொரு கார்ப்பரேட்டை அம்பலப்படுத்துவார்..?

இது ஒருபுறமிருக்க, அங்கிருந்த அனைவரையும் வெயில் கடுமையாக சுட்டெரித்தது.அதன்  காரணமாக பல திமுகவினர் மேடைக்கு பின்புறம் இருந்த நிழலில் தஞ்சம் அடைந்தனர். தயாநிதி மாறன் வந்த போது மேடையில் ஒலிபெருக்கியில் பேசிய ஒரு உடன்பிறப்பு நிர்வாகி, மேடைக்கு பின்னிருந்த திமுகவினரை முன்புறம் வரும் படி பல முறை அழைத்தார். ஆனால் அனைவரும் பெட்டிக்கடையில் நீர்மோர் குடிப்பதிலும், பழங்கள் சாப்பிடுவதிலும் மும்முரமாய் இருந்தனர். உடனே, ஆத்திரமடைந்த அந்த நிர்வாகி ஒருமையில்,”டேய் ஒழுங்கா கடையை மூடு என்று ஒரு அதட்டல் போட்டதோடு அவன் மூடுறானா பார்..’’ என்று தொண்டர்களுக்கு கட்டளையிட்டு நகர்ந்தார். பாவம், அந்த சிறுகடை நடத்துபவர் மிரண்டுவிட்டார்.  உடனே, அவசர, அவசரமாக கடையை இழுத்து மூடினார். இதை எல்லா நிருபர்களும் பார்த்தோம்.

காலம் காலமாக இங்கு எத்தனையோ ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது  எந்த ஒரு இயக்கமும் இப்படி கடையை மூடச் சொன்னதில்லை. ஆனால் நேற்று திமுக ஆர்ப்பாட்டத்தில் அதிரடியாக கடையை மூடச் சொன்னது ஒருவித பதற்றத்தை அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் ஏற்படுத்தியது..!  பொது இடத்தில் போராட்டம் நடத்துபவர்கள் அங்குள்ள இயல்பு நிலை பாதிக்காமல், சகஜமான மக்கள் செயல்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படாமல் தங்கள் கொள்கைகளை, நோக்கங்களை வெளிப்படுத்தி செல்லும் போது தான் அவர்கள் மீது மக்களுக்கு ஒரு மரியாதை ஏற்படும். அங்கு நடைபெற்ற திமுகவினரின் செயல்கள் தாங்கள் இப்போதே ஆட்சிக்கு வந்துவிட்டது போல் இருந்தது! ”இது போன்ற சம்பவங்களும்,அணுகுமுறைகளும் தொடருமானால், திமுகவினர் இன்னும் மாறவில்லையே என்ற அதிருப்தி தான் மேலோங்கும்..இதை தளபதிக் கிட்ட யார் சொல்வது..” என ஒரு உடன்பிறப்பே வருத்தப்பட்டார்!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time