பொதுத்துறை நிறுவனங்களை பொலிகடாவாக்கி வரும் மத்திய பாஜக அரசு, அவற்றுக்கு இறுதி கட்ட மரண அடி கொடுக்க, மல்லிகா சீனிவாசனை பொதுத் துறை நிறுவன வாரியத் தலைவராக நியமித்துள்ளது! டி.வி.எஸ்.சுந்தரம் அய்யங்கார் குடும்பத்தின் மல்லிகா, இந்தியாவின் மிகப் பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனத்தின் (TAFE) தலைவராக உள்ளார். மல்லிகாவை பொதுத் துறை வாரியங்களின் தலைவராக நியமித்ததன் மூலம் பல லட்சம் கோடி முதலீடுகள், 12.34 லட்சம் தொழிலாளர்கள் உள்ள கொண்ட – சேவையை லட்சியமாக – இந்திய பொதுத் துறை நிறுவனங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது பாஜக அரசு!
பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக இந்தியா மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது! நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக சில கோடிப் பேருக்கு வேலை வாய்ப்புகள் தந்துள்ளது. ஜவகர்லால் நேருவின் சோசலிச பாதையில் இந்தியா உலகின் ஆகச் சிறந்த பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. வெறும் ஐந்து நிறுவனங்களில் ஆரம்பித்து, 348 நிறுவனங்கள் என்ற விஸ்வரூப வளர்ச்சிக்கு வந்தது! ஆனால், 2014 ல் பாஜக அரசு பொறுப்புக்கு வந்தது முதல் பொதுத்துறை நிறுவனங்களை சிறுகச்,சிறுக அழிக்கும் முயற்சியை ஆரம்பித்தது! திட்ட கமிஷனையே கலைத்துவிட்டது. சிறப்பாக இயங்கி வந்த பொதுத் துறைகளை சீரழிக்கும் நோக்கத்துடன் அந்நிய மூலதனத்தை அதிகமாக அனுமதித்தது! கல்வித் துறையிலும் கூட வெளிநாட்டு பேராசைக்கார நிறுவனங்களை அனுமதித்து, கல்வியை கடைச் சரக்காக்கியது!
2018-19 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள 348 பொதுத்துறை நிறுவனங்களில் 249 நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் 86 நிறுவனங்கள் கட்டமைப்பில் உள்ளதாகவும், 13 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பதவிக்கு வந்த நான்கைந்து ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு படிப்படியாக பொதுத்துறை நிறுவனங்களை மூடியது! லாபகரமாக இயங்கி வந்த பி.எஸ்.என்.எல் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்காமலும், 4ஜி அலைக்கற்றை உரிமத்தை வழங்க மறுத்ததாலும் நஷ்டத்திற்கு தள்ளியது.
இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின் படி நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் 3 அல்லது 4 அலகுகளாக அடக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள 300 பொதுத்துறை நிறுவனங்களை 12 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள லாபத்தில் ஓடும் நிறுவனங்களும் அடங்கும்.
இந்த நிறுவனங்களில் தனியார்மயமாக்கல், பிற துறைகளுடன் இணைத்தல், துணை நிறுவனமாக மாற்றுதல் மற்றும் முழுவதுமாக மூடுதல் போன்றவற்றின் மூலம் பொதுத்துறை நிர்வாகம் குறைப்பு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது!
இவ்வாறு பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் வகையில் மத்திய நிதி ஆயோக் திட்டத்தின் வழியாக மத்திய அமைச்சரவை முடிவு செய்யும் என தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது மல்லிகா சீனிவாசன் நியமன ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மல்லிகா ஒரு வெற்றிகரமான பெண் தொழில் அதிபர். அவர் ஏற்கனவே ஒரு மிக பெரிய நிறுவனத்தின் பெரும் சுமையை தூக்கிச் சுமப்பவர். அவரது நிறுவனம் ஆசியாவின் இரண்டாவது பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமாகும்! 80க்கு மேற்பட்ட நாடுகளுக்கு டிராக்டரை ஏற்றுமதி செய்கிறது. இது தவிர டாடா போன்ற சில பெரிய நிறுவனங்கள், பெரிய கல்வி நிறுவனங்களில் செயலாளராகவும் உள்ளார்! மிகவும் பிஸியான அவரால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சியில் முழுமையான ஈடுபாடு காட்ட இயலாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தனியார் தொழில் முதலாளிகள் பொதுத் துறை நிறுவனங்களை எதிரியாக பாவித்து வளர்ந்தவர்கள். பொதுத் துறை நிறுவன முடக்கத்தில் தான் தனியார் நிறுவனங்களின் எதிர்காலம் உள்ளதென நம்புபவர்கள்.
இதை நாம் பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை! டிவிஎஸ் நிறுவனம் தமிழகத்தின் டிரான்ஸ்போர்ட் சேவையில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. அப்போது 1972 ல் தமிழகத்தில் போக்குவரத்து நிறுவனங்களை தேசியமயமாக்கி பொதுத் துறையாக்கும் சட்டம் கொண்டு வந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.அதை எதிர்த்து நீதிமன்றம் சென்று போராடியவர் தான் சுந்தரம் அய்யங்கார்! அவரது குடும்ப பெண் தான் தற்போது பொதுத் துறை வாரியத்தின் தலைவர் என்பது இந்திய பொதுத் துறை நிறுவனங்களின் எதிர்காலத்திற்கு வைக்கப்பட்ட வேட்டாகும்!
பிரபல தொழில் அதிபரான அமால்கமேஷன் குருப் நிறுவனங்களின் சேர்மன் சிவ சைலத்தின் மகள் தான் இந்த மல்லிகா. மல்லிகாவின் கணவர் டிவி.எஸ் நிறுவன அதிபர் வேணு சீனிவாசன் மீது ஏற்கெனவே சில மோசடி புகார்கள் உள்ளன. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர். அதனால், தமிழக கோவில்களை புனரமைப்பதாகச் சொல்லி, ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோவில் ஆகிய சில கோவில்களை தன் கட்டுப்பாட்டில் எடுத்து, திருப்பணியில் ஈடுபட்டார். அந்த சமயம் அவர் பொறுப்பில் வந்த கோவில்களில் மிக அரிய சிலைகள், மற்றும் கலை பொக்கிஷங்கள் காணாமல் போயின! அதற்கு மாற்றாக போலியானவை அங்கு நிறுவப்பட்டன என சர்ச்சை வெடித்தன. இதன் காரணமாக இவர் மீது எப்.ஐ.ஆர் கூட பதிவானது. ஆனால் தனக்கு இருக்கும் செல்வாக்கால் பிரதமர் அலுவலகம் வரை லாபி செய்து தப்பித்துவிட்டார்!
Also read
ஆக, திருடன் கையில் சாவி கொடுத்த கதையாக பொதுத் துறை நிறுவனங்கள் எனும் பொக்கிஷத்தை நம்பகத் தன்மையற்ற தனியாரிடம் தாரை வார்த்துள்ளது பாஜக அரசு! இது குறித்து நான் ஏற்கனவே,
‘பொதுத் துறை நிறுவனங்கள் எனும் விதை நெல்லை விற்கும் மாபாவிகள்’ என்ற நமது அறம் இணைய இதழ் கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன்!
பாஜக அரசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த – தனியாரை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாத- ராணுவத் தளவாட உற்பத்தி, விண்வெளி, அணுசக்தி துறை, மின்சார வினியோகம், நிலக்கரி, கனிமம்..உள்ளிட்ட எட்டுத் துறைகளில் தனியாருக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறது!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இத்ழ்
1 Comment