காட்சி மொழியின் கவிஞன் கே.வி.ஆனந்த்!

-சாவித்திரி கண்ணன்

அதிர்ச்சியில் இருந்து மீள சில மணி நேரங்கள் ஆனது!

ஒளிப்பதிவில் கவிதை பாடியவன்! அவன் ஒளிப்பதிவில் காட்சிகளை காண்கையிலேயே கவிதை அனுபவத்தை பெறலாம்! பிரேம் பை பிரேம் கவிதை தான்! இன்றைக்குள்ள இயக்குனர்களில் அதிக வாசிப்பு பழக்கம் உள்ளவர்.

1988 தொடங்கி 33 ஆண்டுகள் ஒரே சீரான நட்பை இருவரும் பராமரித்தோம்! போட்டோ ஜர்னலிசம் தான் எங்கள் இருவரையும் இணைத்தது.ரொம்பவும் எனர்ஜடிக் மனிதன்.தான் இருக்கும் இடத்தை உற்சாகமாவும்,உயிர்ப்பாகவும் வைத்திருக்கும் கலை அறிந்தவன்!

அசைட் பத்திரிகை மூலம் தான் எங்கள் நட்பு உருவானது! அப்போது தான் அவன் பத்திரிகை துறைக்குள் வந்தான். அசைட் தவிர்த்து கல்கி போன்றவற்றுக்கும் போட்டோ எடுத்து வந்தான்! அடையார் அசைட் அலுவலகம் அருகிலேயே அவனுடைய வீடும் இருந்ததால் அவ்வப்போது செல்வேன். அவன் தாயாரின் உபசரிப்பை மறக்க முடியாது. என்னைப் போல செய்தி புகைப்படங்களை எடுப்பதை விடவும் பத்திரிகைகள் தரும் அசைன்மெண்ட்களை மட்டும் தான் அவன் செய்வான்! அதில் ரொம்ப ஸ்பெசலிஸ்ட்டாக திகழ்ந்தான்! சாதாரணமானவர்கள் கூட அவன் கேமராவில் அழகானவர்களாகத் தெரிவார்கள். இதைவிட சிறப்பாக யாரும் புகைப்படம் எடுத்துவிட முடியாது என சொல்லத்தக்க அளவில் தான் ஒவ்வொரு படமும் இருக்கும்!

1989 ல் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வை கவரேஜ் செய்ய அசைட் பத்திரிகைக்காக நண்பர் எல்.ஆர்.ஜெகதீஸனுடன் புறப்பட்ட போது,” நானும் கூட வரட்டுமா” என்றான். ”தாரளமாக வா,சந்தோஷம் ” என அவனையும் அழைத்துச் சென்றோம்! அவன் பதிவு செய்தவை அசத்தலாக இருந்தன! அவன் இண்டஸ்டிரியல் அட்வர்டைசிங் போட்டோவும் செய்தான்! அப்படி ஒரு சில சமயங்களில் அவனுக்கு உதவியாக என்னை அழைத்துச் செல்வான்!

எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோருடன் நாவல்களுக்காக வந்த ஒரு இதழில் ஆனந்த் தனக்கென ஒரு தனி ராஜ்ஜியமே நடத்தினான். அப்போதே அவனுக்கு என்று ஒரு ரசிகர் வட்டாராம் உண்டானது! திருவல்லிக்கேணியில் அதற்காக ஒரு அலுவலகமும் போட்டிருந்தனர்.

இடையிலே டைம்ஸ் ஆப் இந்தியாவில் போட்டோகிராபராக அப்ளிகேஷன் போட்டான். செலக்ட் ஆகவில்லை. திடீரென்று ஒரு நாள் பிரபல சினிமா போட்டோகிராபர் ஸ்ரீராமிடம் அசிஸ்டெண்ட் ஆக சேர்ந்துவிட்டேன் என்று என்னிடம் சொன்னான்! அன்று நான் பத்திரிகை துறையைவிடவும், சினிமாவை ஒரு படி குறைவாக மதிப்பீடு செய்திருந்தேன்! ஆகவே, அந்த செய்தி எனக்கு உவப்பானதாக இல்லை! எனவே. அவனை வாழ்த்தவோ, உற்சாகப்படுத்தவோ முடியாதவனாக கேட்டுக் கொண்டேன்.

‘’எனக்குத் தெரியும். நீ விரும்பமாட்டாய். ஆனால், பெருவாரியான மக்களின் விருப்பமே சினிமா தானே! உன்னை மாதிரி ஆளுங்க சினிமாவுக்குள்ள வரவே முடியாது. அங்க முதல்ல சுயமரியாதை. சுயஅறிவு எல்லாவற்றையும் தொலைத்து தான் வேலை பார்க்கணும். வெற்றிபெற்ற பிறகு கேட்காமலே மரியாதை, புகழ் எல்லாம் தேடி வரும், அது வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும்’’ என்றான்.

மீரா படத்தில் அவன் பி.சி.ஸ்ரீராம் அசிஸ்டெண்டாக வேலை செய்தான்! அதில், ‘’ஓ பட்டர்பிளே பாடல்காட்சியில் ஒரு சீனில் கூட்டத்தோடு நடனம் ஆடியிருக்கேன். படம் வந்தவுடன் கண்டிப்பாக பார்த்து சொல்லு’’ என்றான். அவனுக்காகவே அந்தப் படம் பார்த்தேன்.

‘தென்மாவின் கொம்பத்தே’ படம் 1994 வெளியானது. அன்று சைதை தாடண்டர் நகரில் இருந்த என் வீட்டிற்கு வந்து அதன் பிரிவுயூ காட்சிக்கு அழைத்து சென்று காண்பித்தான்! படத்தில் ஒளிப்பதிவு தான் ஹீரோ! ஒவ்வொரு காட்சியும் சுகானுபவமாக இருந்தது! சினிமா ஒளிப்பதிவில் உனக்கென ஒரு தனித்துவமான இடம் உருவாகும் என்றேன்.

அதன் பிறகு காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், இந்தியன் என்று அசத்தினான். ‘’சிவாஜி படத்தில் ரஜினியோடு வேலை செய்திருக்கேன். பிரிவியூ ஷோ பார்க்க வா’’ என்று பிரசாத் ஸ்டுடியோ அழைத்துச் சென்றான். அந்தப் படத்தை என்னால் பார்க்க முடியாமல் தியேட்டருக்கு வெளியில் வந்து உலாத்தினேன். அதை எதிரில் உள்ள அலுவலகத்தில் இருந்து கவனித்துவிட்டான்!

‘’என்ன கண்ணா படம் பிடிக்கலையா..?’’ என்று சிரித்துக் கொண்டே செல்போனில் வந்து கேட்டான்.

‘’உன்னுடைய கேமராவிற்காக பார்க்கலாம் என்றால் கூட முடியவில்லை. படம் படு குப்பை! இப்படிப்பட்ட படங்களில் வேலை செய்வதற்கே ரொம்ப சகிப்புத் தன்மை வேண்டும். எனக்கு அவசரமில்லை. நீ எப்போ வேலையை முடித்து வருகிறாயோ காத்திருக்கேன். ஆனால், படத்தை இதுக்கு மேல பார்க்கமுடியலை’’ என்றேன்.

அவனது முதல்படம் ‘கனா கனா கண்டேன்’ எனக்கு பிடித்திருந்தது! ‘படம் நல்லா இருக்கு’ என்று தொலைபேசியில் சொன்னேன்!

இதற்குப் பிறகு கோ படம் எடுத்த போது, அரசியல் கதை என்பதால் போனில் அடிக்கடி பேசினான். ஒரு நாள் திருவான்மியூர் காமராஜ் நகர் வீட்டிற்கு வந்து என்னை காரில் அவனது ஈ.சி.ஆரில் உள்ள ஒரு பங்களாவிற்கு அழைத்து சென்று, அவனே தேனீர் தயாரித்து தந்து நீண்ட நேரம் விவாதித்தான்! பிறகு அவனே வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டான்.

அயன், மாற்றான் இரண்டுமே எனக்கு பிடித்திருந்தது.சமகால சமூக அரசியல், கடத்தல் ஆகியவற்றை மிக நுட்பமாக காட்சிபடுத்தியவை இந்தப் படங்கள்! இப்படி எடுப்பதற்கு நிறைய தேடல் வேண்டும். ஹோம்வொர்க் செய்ய வேண்டும். பல பேரிடம் கலந்து பேசி காட்சியின் நம்பகத்தன்மைக்கு வலுவூட்ட வேண்டும். ஆனந்த் அதையெல்லாம் செய்ய கடும் உழைப்பை தந்திருக்க வேண்டும் என உணர்ந்தேன்.

ஆனால், விவசாயம் குறித்து பேச வந்த ‘காப்பான்’ ஏமாற்றமாக இருந்தது. ஆனால், அது பற்றி நான் எந்த விமர்சனமும் செய்யவில்லை!

அவன் செய்தி தாள்களை ஆழமாக வாசிப்பவன். நியூஸ் சேனல்களை கவனமாக பார்ப்பவன். ஜர்னலிசத்தில் இருந்து சினிமா துறைக்கு சென்றதால்.., நிகழ்கால சம்பவங்கள், அரசியல் போக்குகளை ஊன்றி கவனித்து அதை தன் சினிமாவில் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவான்! அதற்காகவே என்னைப் போன்ற பத்திரிகையாளர்களிடம் இடைவிடாமல் தொடர்பு வைத்திருந்தான்!

சமீப காலமாக அறம் இதழை வாசித்துவிட்டு அவ்வப்போது போன் செய்து பேசி வந்தான். ‘’தற்போது, மாபியாக்களின் அரசியல் செல்வாக்கு பற்றி ஒரு படம் எடுக்கிறேன்…’’ என அது சம்பந்தமாக நான்கைந்து முறை தொலைபேசியில் பேசினான்.

‘’அரசியலுக்கு வெளியே மாபியாக்கள் செயல்பட்ட காலம் என்று ஒன்று இருந்தது. ஆனால், அரசியல்வாதிகளே மாபியாக்களாக மாறிவிட்ட காலத்திற்குள் தான் நாம் வாழ்கிறோம்! தற்போது மாபியாக்கள் என்று தனியாக யாரும் இல்லை. அவர்களே நம் அரசியல் தலைவர்களாக, ஆட்சியாளர்களாக மாறி நிற்கிறார்கள்! ஜெயலலிதாவும், சசிகலாவுமே அதற்கு சமீபத்திய உதாரணம்’’ என்றேன்.

இந்த மாதிரி ஓவ்வொரு முறையும் போன்கால்கள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கூட செல்லும்! கடைசியாக, ‘’உன் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொண்டேன். சாரி’’ என இங்கிதமாக சொல்வான். ‘’உன்னை மாதிரி ஆட்கள் இப்படி பொறுப்பாக விவாதிப்பதே மகிழ்ச்சியளிக்கிறது. நான் எழுதினால் ஒரு சில ஆயிரம் பேர் படிப்பார்கள்! நீ சினிமாவில் சொல்லும் போது கோடிக்கணக்கானவர்களுக்கு விழிப்புணர்வு தரலாம். ஆகவே, எனக்கு வருத்தமில்லை’’ என்றேன்.

 

ஒரு நாள் என்னோட ஸ்டோரி டிஸ்கஷனுக்கு நீ முழுமையாக நேரம் கொடுக்கணும். அதுக்கு ஒரு சன்மானம் நான் தருவேன், அதை தயக்கமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும்’’.என்றான்.

”ஆகட்டும் வருகிறேன்’’ என்றேன்.

இன்று அவன் சாவிற்கு தான் அவன் வீடு செல்ல நேர்ந்தது! அதுவும் வாசலில் வேனை நிறுத்தி, ஒரு சில நிமிடங்களில் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டனர். போட்டோ, வீடியோ எடுக்க மீடியாக்கள் நெருக்கியடித்த நிலையில், முகத்தை சரியாக பார்க்க முடியாமலே அஞ்சலி செலுத்தி வந்தேன்.

”அவர் 15 நாட்களுக்கு முன்பு கொரானா தடுப்பு ஊசி முதல் டோஸ் போட்டுகிட்டு வந்தார் சார். அது முதல் அவர் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. நல்லா இருந்தவரு திடீரென்று நெஞ்சுவலின்னு ஆஸ்பிட்டல் போனாரு. அவருக்கு கொரானாவும் அட்டாக் ஆகியிருக்கு, இறந்துட்டார்’’ என்றான், அவரது அசிஸ்டெண்ட் இளைஞன்.

இந்த தடுப்பூசி தகிடுதத்த அரசியல் குறித்து உன்னிடம் விரிவாக பேசி ஒரு சினிமா எடுக்க உன்னை தூண்ட வேண்டும் என்றல்லவா நினைத்திருந்தேன். அதற்குள் நீயே அதற்கு பலியாகிவிட்டாயே நண்பனே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time