அமைச்சரவை விரிவாக்கத்தின் நோக்கங்கள் அற்பமானவை!

சாவித்திரி கண்ணன்

பாஜகவிடம் மிக முக்கியமான சில குணாம்ச மாற்றங்களை இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பார்க்க முடிகிறது. அது தன் இயல்பேயான மேல் சாதி ஆதிக்கத்தில் இருந்து சற்றே அசைந்து கொடுத்துள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், பெயரளவுக்கேனும் அனைத்து தரப்பினருடனும் இசைந்து வாழ்வது இன்றியமையாதது என்ற புரிதலுக்கு வந்துள்ளது.

பாஜகவின் அமைச்சரவை விரிவாக்கத்தின் நோக்கம் ஆட்சி மீது சமீபகாலமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மட்டுப்படுத்தும் முயற்சி தான்! கொரானா கையாளுவதில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவுகள் அந்த துறையின் அமைச்சரான ஹர்ஷவர்த்தனை தூக்கினால் சரியாகிவிடப் போவதில்லை. உண்மையை சொல்வதானால் அந்த தோல்வி தனிப்பட்ட ஒருவரது அல்ல. உதாரணத்திற்கு செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை இயக்கும் வாய்ப்பு தமிழக அரசுக்கு மறுக்கப்பட்டது. அதன் மூலம் ஒரு மாநில அரசே தன் தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நல்ல வாய்ப்பு வலிந்து தடுக்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் இஷ்டத்திற்கு தடுப்பூசி விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கு அனுமதித்தது போன்றவை யார் தவறு?

அதே போல உச்ச நீதிமன்றம் சமீப காலமாக ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. மக்கள் விரோத சட்டங்கள் கொண்டு வரப்படுவதால் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன! இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை மட்டுமே பொறுப்பாக்க முடியுமா..?

ஊடகங்கள் பாஜக அரசை விமர்சித்து எழுதுவதற்கு ஊடகங்களை கையாண்ட பிரகாஷ் ஜாவாடேகர் பொறுப்பாக முடியுமா..? அல்லது பாஜக அரசின் செயல்பாடுகள் காரணமாக முடியுமா..?

அப்படிப்பார்த்தால் சீனாவுடனான மோதல், எல்லையில் பதட்டம், பொருளாதாரப் பின்னடைவுகள், வேலை இழப்புகள், சிறு, குறுந்தொழில்கள் நலிந்தது..உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு பிரதமர் தான் பொறுப்பேற்க வேண்டும்!

2014 ல் பாஜகவின் அமைச்சரவையில் மொத்தமுள்ள 44 அமைச்சர்களில் உயர் சாதியினர் 22, பிற்படுத்தப்பட்டவர்கள் 13, தலித் சமுதாயத்தினர் 3, பழங்குடிகள் 6.

மொத்த கேபினெட் அமைச்சர்கள் 22 பேரில் 14 பேர் உயர்சாதியினர். அந்த உயர்சாதியினரில் பிராமணர்கள் மட்டுமே 10 பேர்.

இஸ்லாமியரில் பெயரளவிற்கு ஒருவர் மட்டுமே இடம் பெற்றார்.கிறிஸ்த்துவர் உள்ளிட்ட மற்ற மதத்தவர்களுக்கு இடமில்லை. ( ஆனால், காங்கிரஸ் அமைச்சரவையில் நான்கு இஸ்லாமியர் மூன்று கிறிஸ்த்துவர்கள் இடம்பெற்றனர்)

அதே போல இந்தியா என்பது அன்றைய நிலவரப்படி 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைக் கொண்டதாக இருந்தது. இதில் பெரும்பாலான மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவமே பாஜக தரவில்லை.பிறகு இரண்டாண்டுகள் கழித்து அமைச்சரவை விரிவாக்கம் செய்த போது சில மாறுதல்கள் செய்து ஒரளவு விடுபட்ட பிரிவினரை சேர்த்துக் கொண்டார்கள்!

2019 பாஜக அமைச்சரவை முந்தைய அமைச்சரவையில் இருந்து பெரிய மாறுதல் ஒன்றையும் பெறவில்லை. அதன்படி, பிற்படுத்தப்பட்டவர்கள் 13 பேர் தலித் சமுதாயத்தினர் 6 பேர், பழங்குடியினர் 3 பேர் உயர்சாதியினர் 32 பேர் இடம்பெற்றனர்.

ஆனால், தற்போது பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்காக்கப்பட்டு 27 பேராக உயர்ந்துள்ளனர். அதே போல தலித், பழங்குடியினர் (12+8) எண்ணிக்கையும் 20 என்பதாக உயர்ந்துள்ளது. உயர்சாதியினர் எண்ணிக்கை 30 தாகவுள்ளது! குறிப்பாக யாதவ், குர்மி, தார்ஜி, குஜ்ஜார், கோலி, பைராகி, துளுகவுடா..போன்ற பல பிரிவுகளையும் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளனர். இது ஒரளவுக்கு சமூகத்தின் பல தளங்களிலும் கட்சியை கொண்டு போகும் வாய்ப்பை உருவாக்கித் தரலாம்.

அதே சமயம் பிற்படுத்தப்பட்டவர்கள் 27 பேருக்கு அமைச்சர் பதவிகள் தரப்பட்ட போதும் கேபினெட் அந்தஸ்து என்பது வெறும் ஐந்து பேருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. இதே போல எஸ்.சி, எஸ்.டியிலும் 20 பேருக்கு அமைச்சர் பதவிகள் கிடைத்த போதும் வெறும் ஐந்து பேருக்கு மட்டுமே கேபினெட் அந்தஸ்து தரப்பட்டுள்ளது.

பெண்களில் 11 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை பெருமையாக எடுத்துக் கொண்டாலும் அதிலும் இருவருக்கு மட்டுமே கேபினெட் பொறுப்பு கிடைத்துள்ளது! அவர்களும் உயர்சாதியினரே!

இந்த வகையில் உயர் சாதியினர் 30 பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 20 பேருக்கு கேபினெட் அந்தஸ்த்து தரப்பட்டுள்ளது என்பது கவனத்திற்கு உரியதாகும். அதிலும் 10 பேர் பிராமணர்கள் என்ற கணக்கில் மாற்றமில்லை.

அருந்ததியினர் போன்ற சமூகத்தின் மிக அடித்தளத்தில் உள்ள பிரிவினருக்கு பாஜக அதிகார பகிர்வை வழங்கியுள்ளது என்பதை நாம் வரவேற்கத் தான் வேண்டும். அதே சமயம் இப்படிப்பட்டவர்களை பதவி கொடுத்து ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பாகத் தான் இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கேற்ப தான் ஆட்களையும் செலக்ட் செய்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். திமுகவில் ஒரு அ.ராஜா போல திறமையாளர்களான தலித்துகளை பாஜக பயன்படுத்தாது என்பதை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

பல சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிகார பகிர்வு என்பது ஒரு வாக்கு வங்கிக்கான தந்திரோபாயமாக மட்டுமே கையாளப்பட்டக் கூடாது! அந்த கொள்கையில் ஒரு ஈடுபாடு வேண்டும்.அப்போது தான் அந்தந்த பிரிவுகளில் திறமைசாலிகளை அடையாளம் கண்டு பயன்படுத்த முடியும்! இணை அமைச்சர் பதவி என்பதையே ஒரு டம்பி போஸ்டாக – சாதி சமரசத்திற்கு தரக் கூடிய பதவியாக – பாஜக கையாளுகிறது என்பது தான் வேதனையாகும்.

இஸ்லாமியர்,கிறிஸ்துவர் ஆகியோருக்கு பெயரளவிற்கு தான் தலா ஒரு இடம் தர முடிந்துள்ளது பாஜகாவால்! இன்னும் பாஜகவினர் மனம் விசாலப்படவில்லை என்பதற்கு இதுவே போதுமானதாகும்!

தேர்தல் நெருங்கி வருகிறதே என்பதற்காக உத்திரபிரதேசத்தை சேர்ந்த எட்டு பேர் அமைச்சராக இருக்கும் போது மேலும் ஆறு பேருக்கு அமைச்சர் பதவி என்பது சரியான அணுகுமுறை தானா..?

மாகாராஷ்டிரத்தில் நாராயண் ரானேவிற்கு அமைச்சர் பதவி தந்துள்ளது என்பது சிவசேனாவிற்கு வைக்கப்பட்ட செக்! மேற்கு வங்கத்தில் அதிரடியாக நான்கு பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது என்பது மம்தாவிற்கு வைக்கப்பட்ட செக்!

சிறிய மாநிலமான குஜராத்திற்கு ஐந்து அமைச்சர்கள், கர்நாடகா என்ற சிறிய மாநிலத்திற்கு நான்கு அமைச்சர்கள் என்பதெல்லாம் கட்சி வளர்ச்சி கருதி வழங்கப்பட்ட பதவிகளே!

ஆக, இப்படியாக சாதிய பிரதிநிதித்துவங்கள், கட்சி வளர்ச்சி, தேர்தலுக்கான காய் நகர்த்தல், எதிர் கட்சிகளுக்கான செக் என்பதான அமைச்சரவை விரிவாக்கம் என்பது, பாஜக தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கான காரியமே தவிர, நாட்டின் வளர்ச்சி சம்பந்தப்பட்டதல்ல. மக்கள் விரும்பாத மதவாதப் பாதைகள், மக்கள் விரோத சட்டங்கள்,மேல்சாதி ஆதிக்க மனோபாவங்கள் ஆகியவற்றை விலக்கி கொள்ளாத வரை, வேறு எதை செய்தாலும் ஆர்.எஸ்.எஸ்,  பாஜகவின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரப் போவதில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time