ஆட்டம் காணும் அரசு! அடங்க மறுக்கும் மோடி!

- பேரா.யோகேந்திரயாதவ்

பதவியேற்ற ஏழு ஆண்டுகளில்,  மோடி அரசாங்கம் இப்போது போல எப்போதும் ஆட்டம் கண்டதில்லை. அதனுடைய   ஈர்ப்பின் சக்தி குறைந்து வருகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலையைக் கோளாறாகக் கையாண்டது –  குறைவான பரிசோதனை செய்தது மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது, பெருந்தொற்றை எதிர்கொள்ள ஆயத்தமில்லாமல் போனது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி போடுதலில் ஏற்பட்ட குளறுபடிகள் – கொடுமையின் எல்லையை நிரூபித்துள்ளது… ஆகியவை மோடி மீது வலுவான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது!

மோடியின் பரம விசுவாசிகள் பலருக்கே கூட, இந்த முக்கியமான காலகட்டத்தில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லாமல் போனதானது, சர்வ வல்லமை பெற்ற  என்ற பிரதமரைச் சுற்றி கட்டி எழுப்பப்பட்ட கற்பனைக் கதையில்  ஓட்டையை ஏற்படுத்திவிட்டது. பிரதமரின் முழுமையான கட்டுப்பாட்டில்  விடயங்கள் இல்லை என்றும், அவர் தோன்றுகின்ற அளவுக்கு  சக்திவாய்ந்தவராக இல்லை என்றும் அவர்கள் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர்.

மகா சக்திவாய்ந்த பிரதமர் என  மிக கவனமாக வடிவமைக்கப்பட்ட பிம்பம் அரசியல் அரங்கில் நொறுங்கி  வருகிறது. இந்த அரசாங்கத்தின் அநீதிகளை ஒரு சிறிய உறுதி வாய்ந்த குழு எதிர்த்து நிற்கமுடியும் என்பதை CAA எதிர்ப்பு போராட்டங்கள் காண்பித்திருக்கின்றன. இந்த அரசாங்கத்தை பின்னுக்கு தள்ள முடியும் என்பதை விவசாயிகள் இயக்கம் ஏற்கனவே நிரூபித்திருக்கறது. பாஜக மற்றும்  பிரதமர் தேர்தல் வலிமையை மகா மோசடி என்று மேற்கு வங்கம்  கூறியிருக்கிறது.

ஏழு ஆண்டுகாலம் தங்கு தடையில்லாமல் அதிகாரத்தை பயன்படுத்திய பின்னர், அனைத்து எதேச்சதிகார ஆட்சியாளர்களையும் துன்புறுத்துகின்ற  ஒரு உண்மையை மோடி அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிஉள்ளது: அதாவது அதிகாரம் சிதைக்கும். முழுமையான அதிகாரம் முழுமையாக சிதைக்கும்.

மோடியை கண்டனம் செய்வது அவரது தோல்விக்கு வழிவகுக்காது.

மன்மோகன்சிங்கின் இரண்டாவது  ஆட்சியின் முடிவின் ஆரம்பம் 2012ல் தொடங்கியதை  ஒத்திருக்கிறது மோடி அரசாங்கம்! பிரதமர் தனது வசீகரத்தை இழந்து விட்டார்!  ஆட்சி நிர்வாகத்தின் தவறுகளையும், செயல்களையும் மறைப்பதற்காக இவர்கள் சுற்றிவிட்ட மலையளவு பொய்களின் பாரத்தால் மோடி அரசு நொறுங்கிவிடும் என்று தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றுபடவேண்டும்.

தன்னைத்தானே  சரிப்படுத்திக்கொள்ளுகின்ற, சனநாயகத்தின் சுயமான பொறியமைவுகள் இந்த அரசாங்கத்தின் அத்துமீறல்களை, கட்டுப்படுத்தும் என்று அவற்றின் மீது நம்பிக்கை வைத்தும்,  வரலாறு, நமக்கான வேலையைச் செய்யும் என்று நம்பியும், மோடி  ஆட்சி முடிவின் ஆரம்பம் தொடங்கிவிட்டது என்று அனுமானம் செய்வதில்  ஆபத்து இருக்கிறது.

எதுவுமே உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்க முடியாது. இந்த நேரத்தில், மோடி அரசாங்கத்தின் மீது வெகுமக்கள் கொண்டுள்ள கோபத்தை அதிகப்படியாக கணிப்பதற்கோ, அதற்கான வெகுமக்கள் ஆதரவை குறைத்து மதிப்பிடுவதற்கோ  நமக்கு சாத்தியப்பாடு உள்ளது. இன்று, மோடி அரசாங்கத்தின் மீது அதிருப்தியும், ஏமாற்றமும் பரவலாக உள்ளது, ஆனால் அப்படி இருப்பதனாலேயே அது வெகுமக்களின் நிராகரிப்புக்கு காரணமாக அமைந்துவிடாது. அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது பற்றி கவலைப்படாமல், ஆட்சியில்  இருப்பவர்களை ஆதரிக்கும்  பெரும் மக்கள் பிரிவு உள்ளது. பதவியில் இருப்பவர்களை போராடி  வெளியேற்றுகின்ற அளவிற்கு, எஞ்சிஉள்ளவர்களுக்கு, ஏமாற்றமானது, வெறுப்பாக மாறாமல் இருக்கலாம்.  அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒருங்கே கைகோர்த்துக் கொண்டிருக்கும் காட்சி, வாக்காளர்களை உற்சாகப்படுத்தாமல் போகலாம்; இது ஒரு மனிதனுக்கு எதிராக ஒரு கும்பல் என்ற எண்ணத்தை மட்டுமே வலுப்படுத்தும்.

இது தவிர, மோடி அரசாங்கமானது, எதிர் தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நேரத்தில், ஆளுகின்ற  நிறுவனத்தின் பிரச்சார சக்தியையும் நாம்    குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. பழியை திசை திருப்புவது, பொதுமக்களை திசை திருப்புவது மற்றும் பொதுமக்களுடனான  சந்திப்பை  தாமதப்படுத்துவது போன்ற வழக்கமான விளையாட்டுகளை அரசாங்கம் தொடங்குவதற்கு முன்பு பிரச்சனைகளை சுழற்றிவிடுகின்ற அதன் சுழற்சி வல்லுனர்கள்,  புயல் அடித்து ஓயட்டும் அதாவது பிரச்சனைகளின் தீவிரம் குறையட்டும் என்று காத்திருக்கிறார்கள். சவால் விடுபவர்கள் மீது கொடூரமான தாக்குதல் ஒன்றை நடத்த ஒரு வாய்ப்பான தருணத்திற்காக அவர்கள காத்திருக்கிறார்கள். அரசாங்கத்தினுடைய கதைகளானது, பணம், ஊடகம் மற்றும் அமைப்பு இயந்திரங்களின் உதவியுடன் ஊதி பெரிதாக்கப்படும்.

ஒன்று மட்டும் நிச்சயம்: டாக்டர் மன்மோகன் சிங்கைப் போல அல்லாமல், பிரதமர் மோடி தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட  வகையில் வரம்பு கடந்த சக்தி மற்றும் அனைத்து வழிகளையும்,  பயன்படுத்தாமல், இறுதிவரை சண்டைசெய்யாமல் போக மாட்டார்.

மோடியிடம் நிறைய தவறுகள் இருந்தபோதிலும், அவற்றை கண்டனம் செய்துகொண்டிருப்பது மட்டுமே அவரை தோல்விக்கு இட்டுச் செல்லாது; மக்கள் இருக்கின்ற ஆட்சியை தூக்கி எறிவதற்கு முன் அதற்கு ஒரு மாற்றைத் தேடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாற்று இல்லை, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதனின்  பார்வையில் அப்படிப்பட்ட மாற்று இல்லை. இது தற்போதுள்ள எதிர்க்கட்சிகளை புறந்தள்ளுவது அல்ல.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம்தான் ஆனால் அது போதுமானது அல்ல. எதிர்க்கட்சிகளை, ஒன்றாக வைத்திருக்க ஒரு பசை (விடயம்) தேவை. மக்களிடையே நம்பிக்கையைக் கொடுப்பதற்கு ஒரு வெளிச்சம் தேவை. இப்போதைக்கு, இவற்றில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தற்போதுள்ள எதிரணிக்கு கூடுதலான பலம் சேர்க்கும் ஒரு மாற்று நமக்கு தேவைப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, மோடிக்குப் பதிலாக வரக்கூடிய அப்படிப்பட்ட ஒரு மாற்றுக்கு, இந்தியாவின் எதிர்காலம் பற்றியான  நேர்மறையான மற்றும் நம்பகமான ஒரு செய்தி வேண்டும். ஒரு கட்டத்தைத் தாண்டி, கடந்த காலத்தில் என்ன தவறு நடந்துள்ளது என்பதைப் பற்றி மக்கள் கேட்கத் தயாராகஇல்லை; எதிர்காலத்தில் எவ்வாறு விடயங்களை சிறப்பாக அமைக்கலாம் என்பதை அவர்கள் அறிய விழைகிறார்கள். இந்த முறை அது போலி கனவுகளாகவோ அல்லது வெறும் வெத்து வேட்டு பேச்சுக்களாகவோ இருக்க முடியாது. ஏற்கனவே, அதை நம்பி  விழுந்துவிட்டதால், மக்களுக்கு இப்போது உறுதியான , நம்பக்கூடிய ஒன்று தேவைப்படுகிறது. அந்தச் செய்தி அனைவருக்குரியதாகவும் , எளிமையானதாகவும், நம்பிக்கையை ஊட்டுவதாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட செய்தி இன்று பொது வெளியில் இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் சித்தாந்தங்களிலிருந்து செப்படி வித்தைகள் செய்து அதைக் கொணர முடியாது. கடந்த காலத்தின் பழைய சித்தாந்தங்களின் மொழி இன்றைய இந்தியாவுக்கு பொருந்திப்போகாது. ஒரு புதிய செய்தியானது, புதிய கருத்துக்களின் ஒன்றிணைவாகவும், புதிய கொள்கைகள் மற்றும் நிலைபாடுகளின் புதிய சேர்க்கையாகவும் இருக்க வேண்டும்.

நமக்கு ஒரு நேர்மறையான மற்றும் நம்பக்கூடிய செய்தி கிடைத்ததும்,அச்செய்திகளைக் கொண்டு செல்ல நமக்கு நம்பகமான தூதர்கள் தேவை. அவர்களின் வார்த்தைகள், சாதாரண அரசியல்வாதிகளின் வார்த்தைகளைவிட, கூடுதல் நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும். இன்று நம்முடன் ஜே.பி என்று அழைக்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயண் இல்லை. அதே சமயம், தன்னலமற்ற பொது சேவை, நேர்மை மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்ட பண்புகளாகக் கொண்ட தலைவர்கள் இந்திய பொது வாழ்க்கையில்  இல்லாமல் இல்லை. அவர்களில் சிலர் இந்த வரலாற்று தேவையை நிறைவுசெய்ய முன்வர வேண்டும்.

இறுதியாக, இந்தச் செய்தியை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல நமக்கு ஒரு சக்திவாய்ந்த இயந்திரம்/கட்டமைப்பு தேவை. இந்த இயந்திரத்திற்கு இரண்டு பாகங்கள் தேவைப்படுகிறது: அவை அமைப்பு மற்றும் தொடர்புகள் ஆகும். இன்று, இந்த இரண்டு விடயங்களிலும் பாஜகவுக்கு இணையான வகையில் எதிரணியிடம்  எதுவும் இல்லை.

 

பல எதிர்க்கட்சிகளிடம் கட்சியின் அணிகள் உள்ளனர்.   எதிர்க்கட்சிகளை களத்திற்கு கொண்டு வருவது ஒரு மாற்றை உருவாக்குவதற்கு அவசியமாகிறது. ஆனால் அது மட்டும் போதாது. ஒரு புதிய மாற்றானது இதுவரை அரசியல் களத்திற்கு வராமல் இருந்த குடிமக்களின் – முக்கியமாக இளைய குடிமக்களின் –  ஒரு மாபெரும் அணிதிரட்டலை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.  தற்போதைய சவாலை எதிர்கொள்ள இந்தப் புதிய ஆற்றலை அரசியலுக்கு கொண்டு வருவது அவசியம். ஒரு சக்திவாய்ந்த தகவல் தொடர்பு கட்டமைப்பும் –  பாஜகவினுடைய தகவல் தொழில்நுட்ப குழுவிற்கு இணையானதாக –  கண்டிப்பாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் பொய்களை கட்டவிழ்த்துவிடுகின்ற படையை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ஒரு உண்மை படை தேவை.

இத்தகைய நேர்மறையான மற்றும் சாத்தியமான மாற்றை உருவாக்குவதுதான், இந்தியா என்ற கருத்தாக்கத்தை நம்புகிறவர்களுக்கும், நமது அரசியலமைப்பு விழுமியங்களை மதிக்கிறவர்களுக்கும், ஜனநாயகம் சிதைக்கப்படுவது குறித்து நம்பிக்கையிழக்கிறவர்களுக்கும், நமது குடியரசை மீட்டெடுப்பதில் உறுதியாக இருப்பவர்களுக்கும் அதி முக்கியமான உடனடி அரசியல் பணியாகும்.

இன்றைய போராட்டங்கள் நமக்கு ஒரு குறிப்பை வழங்குகிறது: அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்குவதற்கு முன்பு விவசாயிகளின் இயக்கம் தலைமைப்பாத்திரம் வகித்து முன்செல்லுகிறது, அதைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களும் மற்றும் பிற அமைப்புகளும் செல்லுகின்றன. இது எதிர்காலத்திற்கான ஒரு முன்மாதிரியாகலாம்.

கட்டுரையாளர்; பேரா.யோகேந்திரயாதவ்

சமூக அரசியல் ஆய்வாளர்,

ஊழல் எதிர்ப்பு போராளி,

விவசாய போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர்

அகில இந்திய தலைவர்

சுயஆட்சி இந்தியா

மொழிபெயர்ப்பு : கே.பாலகிருஷ்ணன்,

சுயஆட்சி இந்தியா.

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time