சட்டவிரோத மேகதாது அணைக்கட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசே காரணம்.!–பிஆர் பாண்டியன் குற்றச்சாட்டு!

--மாயோன்

தமிழக அனைத்து விவசாயிகளின்  ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி .ஆர். பாண்டியன் இன்று மதியம் ” அறம்” இணையதள இதழுக்கு அளித்த பேட்டி:

” மேகதாது அணை கட்டும் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளித்ததன் மூலம் ஒரு சட்ட விரோத செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இந்த செயலால்இரு மாநில நல்லுறவுக்கு சீர்கேடு ஏற்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

காவிரி பிரச்சினைக்கு நடுவண் அரசால் தீர்வு காண முடியாத நிலைமை ஏற்பட்டதால்தான், நடுவர் மன்றத்தில் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டது.

நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகி ,ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தண்ணீர் என்பது இறுதி செய்யப்பட்டு ,காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது.

நடுவர்மன்றம்  என்பது தராசு கோல் போல நீதி வழங்கும் நடுநிலை அமைப்பு. நடுவர்மன்றம் மைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான போதே கர்நாடக அரசு கடுமையாக எதிர்த்ததை நாடு அறியும்.

நடுவர் மன்ற தீர்ப்புப்படி , தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றால், காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட வேண்டும்.

நடுவர் மன்றத் தீர்ப்புபடி இப்போது நமக்கு 40 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். தண்ணீர் இல்லாததால்  மூன்று லட்சம் ஏக்கரில் உள்ள குறுவைப் பெயர்கள் தற்போது கருகும் நிலையில் உள்ளன. சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி உள்ளது.

தமிழகத்திற்கு நடுவர் மன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய தண்ணீரை கொடுக்காமல் ,அதற்கு மாறாக, மேகதாது அணை கட்டும் முனைப்பில் அந்த மாநில அரசு இறங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு காவிரியில் எந்தவிதமான பணிகளிலும் ஈடுபடக்கூடாது. அப்படியிருக்கும் போது,

புதிதாக காவிரியில் அணை கட்டுவதற்கு, கர்நாடகத்திற்கு மத்திய அரசு  வரைவு திட்ட அனுமதியை எப்படி  கொடுக்கலாம்? இது ஒரு சட்ட விரோதம் இல்லையா!

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுமானம் குறித்து சம்பந்தப்பட்ட கர்நாடகம் தமிழகம் கேரளா புதுச்சேரி மாநிலங்களின் முதலமைச்சர்களோடு அல்லது நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களோடு பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி தமிழக நலனுக்கு எதிரானது மட்டுமின்றி உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானதாகும். குறிப்பாக 2013 ஆம் ஆண்டு அன்றைய கர்நாடக முதலமைச்சர் ஜகதீஷ் ஷட்டர் அவர்களோடு அன்றைய தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தால் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டு தோல்வியடைந்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் நிறைவாக இனி தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி குறித்து எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்பதை தெளிவாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி, உள்நோக்கம் கொண்டதாகும். எனவே இதனை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நிரந்தர தலைவர் நியமனம் செய்து தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

காவிரியில் தமிழகம் வழியே கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து ராசி மணல் அணை கட்டி மேட்டூர் அணை மூலம் பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்ள தமிழ் நாடு அரசு செயல்பட  வேண்டும்.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எங்களைப் போன்ற விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்திருந்தால் , அக்கூட்டத்தில் வலுவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கக்ஷகூடும்.

இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு மென்மையான போக்கை பின்பற்றுவதாக நாங்கள் கருதுகிறோம். மத்திய  அரசை  கவனத்தை ஈர்க்கவும் , கர்நாடக அரசை எதிர்த்தும் இதற்காக நேற்றைய தினம் உண்ணாவிரதம் இருந்தோம்.

தமிழக அரசு இனியாவது உறுதியான ஒரு நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள 25 இலட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலைவனம் ஆகிவிடும். காவிரி ஆற்றிலிருந்து சென்னை உட்பட  32 மாவட்டங்களுக்கு குடிநீர் செல்கிறது. அந்த குடிநீரும் பறிபோய்விடும்.

பாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பாக கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய பாஜக அரசு  செயல்படுகிறது.

காவிரி பிரச்சினையில் சட்டவிரோதமாக நடந்துகொண்ட பாரதப் பிரதமர் மீதும் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மீதும் இந்திய ஜனாதிபதியிடம் தமிழக அரசு புகார் தெரிவிக்க வேண்டும்.

மேகதாது அணை கட்டும் வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும்.

ஜனாதிபதியிடம் முறையிட்டும் மத்திய அரசின் சட்ட விரோத நடவடிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் உரிய சட்ட வழிகளைப் பின்பற்றி உச்சநீதிமன்றத்தை நாடவேண்டும்.

மத்திய நீர்ப்பாசனத்துறை மேகதாது அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் இருந்து கர்நாடக அரசும் மத்திய அரசும் காவிரி பிரச்சினையில் எப்படி நடந்து கொள்கின்றன என்பதை உணர முடியும்.

காவிரி விவகாரத்தில் இந்திய இறையாண்மைக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் போக்கை இனியாவது மைய அரசு கைவிட வேண்டும்.”

‌ இவ்வாறு பிஆர். பாண்டியன் கூறினார்

நேர்காணல்;மாயோன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time