அழிந்து வரும் யானைகள்…! மனித குல அழிவுக்கே வித்திடலாம்!

- தி.கா.சரவணன்

யானைகளை யாருக்குத் தான் பிடிக்காது. அதன் கம்பீரத்தை பார்க்கும் போதே ஏதோ ஒரு உற்சாக ஊற்று நமக்குள் தோன்றுகிறது! அது நடக்கும் நடையழகோ வித்தியாசமானது. அதன் மிகச் சிறிய கண்கள், பெரிய காதுகள், நீண்ட தும்பிக்கை..யாவும் பரவசம் தரக் கூடியவை!

வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. யானை முகம் கொண்ட கடவுளை ஆண்டு தோறும் வழிபடும் நாம் யானையை பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையை கொண்டிருக்கிறோம்…? ஒரு பக்கம் யானையின் தலைதான் கடவுள். மற்றொரு பக்கம் உயிருள்ள அதே யானையை பிச்சை எடுக்க வைத்திருக்கிறோம். இது என்ன முரண்பாடு…?

நாம் வாழும் இந்த காலத்தில் நம்மோடு வாழ்கின்ற உயிரினங்களில் ஆகப்பெரியது யானை. அடுத்து வருகிற தலைமுறைக்கு அவற்றை விட்டு வைத்திருப்போமா என்பது கேள்விக்குறியாகி வருகிறது. நீண்ட சடைகளை வைத்திருந்த யானைகளை 13,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வேட்டையாடி அழித்து விட்டதாக தொல்லியல் தகவல் ஒன்று கூறுகிறது.

யானைகளின் உடல் அமைப்பு

மனிதனின் மூளை ஒன்றரை கிலோ. ஆனால் பெரிய விலங்கினமான யானையின் மூளையோ நான்கரை முதல் ஐந்தரை கிலோவாக  இருக்கிறது. அதன் இதயமோ 20 கிலோ. ஆனால் உடல் எடையைப் பார்க்கும்போது யானை மனிதனை விட 100 மடங்கு பெரியது என்றே கூறலாம். யானையின் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு 100 லிட்டருக்கும் மேல். சுத்த சைவமான யானை தனது உணவை செரிக்க 24 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. யானைகள் ஒரு நாளைக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரை உணவு எடுத்துக் கொள்கின்றன.

யானை போட்ட இரு குட்டிகள்!

பொதுவாக யானைகள் ஒரே ஒரு குட்டியைத்தான் ஈனும். உலகில் எங்கேனும் ஒரு மூலையில் ஒரு யானை இரண்டு குட்டிகளை பெற்றெடுத்த சம்பவங்கள் நடந்தது உண்டு. தமிழ்நாட்டில் 1980ஆம் வருடம் முதுமலை சரணாலயத்தில் வளர்க்கப்பட்ட தேவகி என்ற பெண் யானை இரண்டு குட்டிகளை ஈன்றதாக வனத்துறை குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியக்காடுகள் உலகத்தின் பல்லுயிரிய வாழ்விடங்களில் ஒன்று. ஆனால் இங்கு மனிதர்கள் செய்யும் இடையூறுகளால் பெரிதும் பாதிக்கப்படும் உயிரினங்களில் யானைக்குத்தான் முதலிடம். யானைகள் வாழுமிடம் எப்போதும் செழிப்பாக இருக்கும். அவைகளுக்கு இலைகளும், தண்ணீரும் மிகவும் முக்கியம். யானைகள் விரும்பி உண்ணும் மூங்கில் இலைகள் அவை சாப்பிடும்போது கீழே சிந்தும். இவற்றை மற்ற விலங்குகளான மான், கரடி, பன்றி முயல் போன்ற விலங்கினங்கள் சாப்பிடுகின்றன.

அதுமட்டுமின்றி இவ்வாறு மரக்கிளைகளை தனது உணவுக்காக முறித்துப் போடுவதால் அவைகளின் ஊடாக சூரிய வெளிச்சம் அடர்ந்த காடுகளில் மண்ணுக்கு சென்று அவற்றை மேலும் வளமாக்குகிறது. இதன் மூலம் புல், பூண்டுகளின் எண்ணிக்கையும், வளர்ச்சியும் அதிகரிக்கிறது. சொல்லப் போனால் புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கான உணவாக இருக்கும் மான் போன்ற விலங்குகள் அதிகம் உருவாக காரணமாக இருப்பது யானைகளின் உணவுப் பழக்கங்கள்தான்.

வனங்களை தழைத்தோங்க வைப்பதில் யானைகளுக்கு பெரும் முக்கியத்துவமுண்டு. அவை பல்வேறு தாவரங்களை விதையோடு சாப்பிட்டுவிட்டு போடும் சாணத்தால் தான், காடுகளுக்குள் ஏராளமான தாவரங்கள், மறு விதைப்பு செய்யப்படுகின்றன. காடுகளில் புதர்களைத் தகர்த்தும், மரங்களை உடைத்தும் யானைகள் பாதை ஏற்படுத்துகின்றன. இது மற்ற விலங்கினங்களுக்கு பாதை ஏற்படுத்தி தருகின்றன! வறட்சி காலங்களில், ஈரப்பதமுள்ள இடங்களை மிகச் சரியாக அடையாளம் கண்டு  தோண்டி, தண்ணீர் எடுப்பது யானைகளின் வழக்கமாகும். இது மற்ற விலங்கினங்களுக்கும் பயன்படுகிறது. அதேபோல, பாறைகளில் உள்ள தாதுப் பொருட்களையும்,உப்பு மண்ணையும் கண்டறியும் திறன் கொண்டவை யானைகள்!

யானைகளின் வாழ்வியல் போரட்டம் நிரம்பியது! கடும் மழை, சுள்ளென்ற வெயில், பனி, இரவு, பகல் பாராமல் யானை நடந்து கொண்டே இருப்பது அதன் இயல்பு. பெரும்பாலும் கூட்டமாக இருக்கும் இவை அதிக குடும்ப பாச உணர்வுடன் வாழும் பாங்கு கொண்டவை. யானைகளுக்கு அன்பும் நன்றி உணர்வும் அதிகம்! யானைகளின் பெரும்பாலான ஆயுள் காலம் தண்ணீரையும், உணவையும் தேடி அலைவதிலேயே கடந்து விடுகிறது.

யானைகள் கொல்லப்படுவது ஏன்..?

யானைக்கும் மனிதர்களுக்கும் என்ன பிரச்சினை என்று பார்த்தால், அவற்றில் பெரும்பாலானவை மனிதர்களின் தவறுகளே பிரதானமாக உள்ளது. குறிப்பாக யானைகளின் வாழ்விடங்களை அழித்து விவசாயம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பது. நீர்நிலைகளை அழிப்பது. அடுத்தபடியாக யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து அல்லது மாற்றி அமைத்து பல்வேறு வன ஓய்வு விடுதிகள், ரிசார்ட்கள் அமைத்து பணம் சம்பாதிப்பது போன்ற மனிதனின் சுய நல குணாதிசயங்களே யானைகளின் அழிவுக்கு காரணமாகி வருகின்றன.

காடுகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்கள் தங்கள் பயிர்களை யானைகள் அழித்து விடாமல் இருக்க இரும்பு வேலி அமைத்து அதில் மின்சாரம் பாய்ச்சி யானைகளைக் கொல்கிறார்கள்! இன்னும் சிலர் விஷம் வைத்துக் கொல்கிறார்கள்! இன்னும் சிலர் யானைகள் மீது வெடி மருந்துகளையோ,தீவட்டிகளை எறிந்துமோ கொல்கிறார்கள்!

இவை தவிர, யானைகளை ஆதாயம் கருதி அழிப்பவர்களும் உள்ளனர்!  யானைகளின் தந்தங்கள், யானை முடி, யானையின் பல், எலும்பு போன்றவை மட்டுமல்ல அவற்றின் சிறுநீர், சாணம் கூட விற்பனைப் பொருளாக பார்க்கப்படுகிறது. இவற்றை விற்பனை செய்யும் மாபியா கும்பலிடம் சுற்றிச் சுழலும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்திற்காக இவைகள் கொல்லப்படுகின்றன. ஏன் நம்மில் பலர் யானை முடி மோதிரம் அணியும் பழக்கம் உள்ளவர்கள் தான். ஆனால், அதை அணிந்ததால் நமக்கு நடந்ததென்ன என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.

இவைகள் மட்டுமின்றி, அடர்ந்த வனப்பகுதிகளில் கொண்டு வரப்படும் மின் திட்டங்கள், இவைகளுக்காக அமைக்கப்படும் மின் வழித்தடங்கள், மற்றும் இரயில் பாதைகளும் யானைகளை கொல்லும் பெரிய காரணிகளாக விளங்குகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரயில்கள் மோதி கணிசமான யானைகள் இறந்துள்ளதாக என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

1970க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் 13 லட்சமாக இருந்த ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை வேட்டைக்காரர்களால் 7 லட்சமாக குறைந்தது என்ற தகவல் நமக்கு அதிர்ச்சியூட்டுகிறது. தற்போதும் ஆப்ரிக்காவில் தினமும் ஐம்பது யானைகள் வரை வேட்டையாடி அழிக்கப்படுகின்றன!

இந்தியாவில் யானைகள்!

இந்தியாவில் பிரிட்டிஷார் காலத்தில் ஐம்பதினாயிரம் யானைகள் இருந்துள்ளன! ஆனால், அவை காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்துள்ளன!

இந்நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் விற்பனை தடைச்சட்டம் ஓரளவுக்கு யானைகளையும் மற்ற விலங்குகளையும் அழிவில் இருந்து காத்து வருகிறது. 2017 ல் எடுத்த கணக்கின்படி இந்தியாவில் 27,312 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை தற்போது மெல்ல,மெல்ல அதிகரிக்கப்பட்டு வருகிறது!

இந்தியாவிலேயே கர்நாடக வனப் பகுதியில் தான் ஆறாயிரத்து சொச்சம் யானைகளுள்ளன! அதற்கடுத்து ஆந்திரா, கேரள வனப் பகுதியில் ஐயாரத்து சொச்சம் யானைகள் உள்ளன! தமிழகத்தில் இரண்டாயிரத்து எழுநூற்று சொச்சம் யானைகள் உள்ளன! இவை சத்திய மங்களம், ஓசூர், முதுமலை, ஆனைமலை ஆகிய இடங்களில் அதிகமாக உள்ளன!

இருப்பினும் மறைமுகமாக நடைபெற்று வரும் யானை அழிப்பு தொடரவே செய்கின்றன! இந்தியாவில் ஆண்டுக்கு 350 முதல் 400 யானைகள் வரை கொல்லப்படுவாதாக கணக்கிடப்பட்டுள்ளது. யானை போன்ற நேசத்திற்குரிய காட்டுயிர்களை அழிப்பதானது உயிர் சங்கிலியின் முக்கிய கன்னியை அறுப்பதை போன்றதாகும்! யானைகள் இல்லையேல் அவற்றின் தயவால் வாழும் பல பல்லுயிரினங்கள் அழியும்! காடுகள் அழியும். காடுகளின் அழிவு, நாடுகளை பாலைவனமாக்கும்! ஆகவே, யானைகளின் அழிவு விரைவில் மனித இனம் அழிவதற்கான தொடக்கமாகவும் மாற வாய்ப்புண்டு!

வனக்குடும்பத்தின் தலைமகன் யானை. இவற்றை பாதுகாப்பது நமது கடமை. அதை விடுத்து அவற்றிற்கு பொட்டு வைத்து, நீள பதாகைகள் கட்டி அழகு பார்ப்பதை விட அவற்றை அதன் போக்கில் வாழ விடுவதே நாம்  அவற்றுக்கு செய்யும் நன்மையாக இருக்கும்!

இன்றைய தினம் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உலக யானைகள் தின விழா வெகு சிறப்பாக கொண்டப்பட்டது.

அதன்பின்னர் யானைகளுக்கு பிடித்தமான பல்வேறு வகையான உணவுகள் முதுமலை புலிகள் காப்பக ஆதிவாசி குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள் மூலம் தரப்பட்டது. யானைகளுக்கு பலாப்பழம், அண்ணாசி பழம், வாழை, மாதுளை, உள்ளிட்டவை தராளமாக வழங்கப்பட்டன.

உலகம் மனிதர்கள் வாழ்வதற்கானது மட்டுமல்ல,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

என்றாரே நம் வள்ளுவப் பெருந்தகை!

கட்டுரையாளர்; தி.கா.சரவணன், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், திருப்போரூர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time