கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவது தேச துரோகமா?

- சாவித்திரி கண்ணன்

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவ மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழும், (UAPA), 505 இந்தியன் பீனல் கோட் சட்டப்படியும் போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய ஒரு சட்டத்தை கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய இளம் மாணவர்கள் மீது போட்டுள்ளனர்.

இன்று, நேற்றல்ல, எனக்கு விபரம் தெரிந்தது முதல் நான் கிரிகெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடிய இஸ்லாமியர்களை பார்த்தும், கேள்விப்பட்டும் வருகிறேன். சம்பந்தப்பட்ட நிகழ்வின் காணொலியை பார்த்த போது அந்த அரங்கத்தில் உள்ள அனைத்து காஷ்மீர் இளம் மாணவர்களும் தன்னெழுச்சியாக மகிழ்ச்சியில் துள்ளியதைக் காண முடிந்தது.

இதன் மூலம் பாகிஸ்தானியர்களை அவர்கள் பகைவர்களாக கருதவில்லை. மாறாக பங்காளிகளாக பார்க்கிறார்கள்! பாகிஸ்தானியர்கள் மீது இயல்பிலேயே ஒரு அன்பும், பிணைப்பும் அவர்களுக்கு இருக்கிறது. இதை சட்டம் போட்டு தடை செய்ய முடியாது!  அப்படி செய்ய நினைப்பது மேலும் அவர்களை எதிர் நிலைக்கு தள்ளுவதாகத் தான் முடியும்.

பாகிஸ்தான் நமக்கு எதிரி நாடல்ல, அது பக்கத்து நாடு. அந்த நாட்டோடு நமக்கு பல்வேறு பிணைப்புகள் உள்ளன! அங்கு சந்தையில் விற்பனையாகும் பாதிக்கு மேற்பட்டவை இந்திய உற்பத்தி பொருட்களே! அவர்கள் விரும்பி பார்ப்பதெல்லாம் இந்திய சினிமாக்களே! அவர்கள் இந்திய சினிமா ஹீரோக்கள் போட்டோக்களை தங்கள் வீடுகளில் மாட்டி வைத்துள்ளனர். இந்திய சினிமா பாடல்களைத் தான் அவர்கள் விரும்பி கேட்கின்றனர்.’சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் பாகிஸ்தானில் சக்கை போடு போட்டது!

பாகிஸ்தான் டிவி சேனல்களில் நமது இந்திய நிறுவனங்கள் நிறைய விளம்பரங்களை தந்து கொண்டுள்ளனர். வியாபார ரீதியில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை பெரிதும் நம்பி உள்ளது போலவே, இந்திய வியாபாரிகளும் பாகிஸ்தானை நம்பி உள்ளனர்.பாகிஸ்தான் வீதிகளில் இந்திய சினிமா பிரபலங்களின் படங்கள் விற்பனை செய்யப்படுகிறது.  ‘பாகிஸ்தானில், இந்தியாவின் தாக்கம்’ என தனி கட்டுரையே எழுதலாம்!

‘பாகிஸ்தான் பகைநாடு’ என நமது அரசாங்கம் கருதுமானால், அவர்களோடு விளையாட முடியுமா? விளையாட்டு என்பதே இரு நண்பர்களுக்கு இடையில் தான் சாத்தியப்படும்.

வெற்றி பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்களை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார் வீராட்கோலி! அது அனைவராலும் ஏற்கப்பட்டது. அவர் மீது  நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் அரசுக்கு உண்டா..? எடுத்தால், அதைவிட தலைகுனிவு வேறு இருக்க முடியுமா?

ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடிய மாணவர்கள் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரானா கூறுகையில், மாணவர்கள் ‘தலீபானிய எண்ணங்களுடன்’ உள்ளனர். டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்கள், ‘நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக’ சிறையில் தள்ளப்படுவார்கள்’’ என ஆவேசப்பட்டுள்ளார்.

இப்படியாக வெறியூட்டும் அரசியல்வாதிகள் –  பாகிஸ்தானை பகையாக கற்பித்து, தங்கள் தேசபக்தி அரசியல் பிழைப்பை நடத்துபவர்களிடம் இருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன! பல பகுதிகளில் பட்டாசுகளும் வெடித்தன.  இதையடுத்து இந்த நிகழ்வுகள் தொடர்பாக கரண் நகர் மற்றும் சௌரா காவல் நிலையங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்கிம் செளரா கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதானது சர்வதேச ரீதியாக இந்தியாவிற்கு மிகப் பெரிய கெட்ட பெயரையே பெற்றுத் தரும்.

ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பாகங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன! எத்தனை லட்சம் பேரை சிறையில் தள்ளுவீர்கள்?

பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள பாய் குருதாஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில், பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த சிலர் இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர். காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டதை ஒரு மாணவர் ஃபேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார். இந்தச் சூழலில் பஞ்சாப் மாணவர்கள் குறுக்கிட்டு காஷ்மீர் மாணவர்களை தாக்கியவர்களை தடுத்து நிறுத்தி பாதுகாத்துள்ளனர் என்பது ஆறுதல் அளிக்கிறது.

இதே போல ஹைதராபாத்திலும் பல இளைஞர்களிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றி மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.

அவ்வளவு ஏன்? சென்னை அடையாறில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மத்தியில் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் செயல்பாடுகள் புகழ்ந்து பேசப்பட்டதை நான் நேரில் கண்டேன்.

”மச்சான் சான்ஸே இல்லடா! பாகிஸ்தான்காரனுங்க செம்மையா ஆடிட்டாட்ங்க. அதுவும் பாபர் அசாம் லெவலே வேற!’’

”ஆமா, அருமையான ஆட்டம், சூப்பர்ப்’’

”யெஸ், பியூட்டிவுல் பெர்பாமன்ஸ்டா.. பாகிஸ்தான் டீம்’’

இந்த உரையாடலை நிகழ்த்தியவர்கள் யாருமே இஸ்லாமிய இளைஞர்கள் அல்ல!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. சென்னை அணியும் ,கொல்கத்தா அணியும் மோதுகின்றன!

சென்னை அணியில் ஒரு தமிழன் கூட இல்லை. கொல்கத்தா அணியில் கணிசமான தமிழக வீர்கள் உள்ளனர். இதில் யாருடைய வெற்றியைக் கொண்டாடலாம்? எந்த அடிப்படையைக் கொண்டு கொண்டாடலாம் என்றெல்லாம் இளைஞர்கள் பார்ப்பதில்லை. யாருடைய ‘பெர்மான்ஸ்’ நல்லா இருக்கோ கொண்டாடுகிறார்கள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தங்கள் மேலாடையில் ஒரு பக்கம் பாகிஸ்தான் அணியைக் குறிக்கும் விதத்திலும், மற்றொரு பக்கம் தோனி, மற்றும் வீராட் கோலியின் படங்களை போட்டும் இருப்பார்கள்! அவர்கள் யாரும் அங்கு ‘பாகிஸ்தான் துரோகி’ என முத்திரை குத்தப்படுவதில்லை.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள பிரச்சினைகளை இரு அரசாங்கமும் பேசித் தீர்க்கட்டும். அது வரை இரு நாட்டு மக்களும் ஒருவரை ஒருவர் பகையாக நினைக்க வைக்கப்படும் அரசியல் சூழ்ச்சியில் இருந்து நாம் வெளியேற வேண்டும். இது காந்தியின் தேசம். சர்வதேச நாடுகளிலும் அமைதியின் சின்னமாக, சமாதானத்தின் அடையாளமாக காந்தி தான் பார்க்கப்படுகிறார். நம் வழி, காந்தி வழியாக இருக்கட்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time