பகத்சிங் தூக்கிலிடப்பட்டதில் காந்தியின் உண்மையான நிலைபாடு என்ன?

- பீட்டர் துரைராஜ்

இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த புரட்சியாளரான பகத்சிங் தூக்கிலிடப்பட்டதில் காந்தியின் நிலைபாட்டை வரலாற்று ஆவணங்களுடன் சொல்லும் நூலை இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் வி.என்.தத்தா (V.N.Datta) எழுதியுள்ளார்.

வி.என்.தத்தா எழுதிய ‘Gandhi and Bhagath Singh’ என்ற இந்த நூலை ‘காந்தியும் பகத்சிங்கும்’ என்ற பெயரில் அக்களூர் ரவி மொழிபெயர்த்துள்ளார். பகத் சிங் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்ட சமயத்தில் காந்தியடிகள்  முயற்சித்திருந்தால் பகத்சிங் மரணதண்டனையை தடுத்து இருக்கலாம் என்பது பரவலாக சொல்லப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த நூல் குறித்து சென்னை காந்தி கல்வி நிலையத்தில் அறிமுகக் கூட்டம் ஒன்றும் நடந்தது.

‘பகத்சிங் வழக்கு, தூக்கு அதில் காந்தியின் பாத்திரம் குறித்து எண்ணற்ற நூல்கள் வந்துள்ளன. அவை அனைத்தையும் ஒருங்கே இந்தஒரே நூலில் பார்க்க முடியும்’ என்று சொல்லி  இந்த நூலை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார் மார்க்சியவாதியான பட்டாபிராமன்.

சைமன் குழு வருகையை(1928) எதிர்த்துப் போராடிய லாலா லஜபதிராயின் மரணத்திற்கு காரணமான, ஆங்கிலேயரான துணைக் கண்காணிப்பாளர் சாண்டர்ஸ் சரியாக ஒருமாதம் கழித்து அதே நாளில் (டிசம்பர் 17) சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த வழக்கில் விடுதலையான பகத்சிங் டில்லி மத்திய சட்டசபை மீது (1929, ஏப்ரல் 8) குண்டு வீசுகிறார். அதன் தொடர்ச்சியாக சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு 1931 ம் ஆண்டு மார்ச் 23 ம் நாள் (காந்தி இர்வின் ஒப்பந்தத்தி்ற்கு பிறகு, கராச்சி காங்கிரசுக்கு முன்பு) தூக்கிலிடப்படுகிறார். .

பகத்சிங் சுயமாகவே தன்னை உருவாக்கிக் கொண்டவர் .தனக்கான உத்வேகத்தை பல்வேறு இடங்களிலிருந்து பெற்றுக் கொண்டவர்.பகத்சிங்கை சோசலிஸ்ட் என்று சொல்லுவது ‘ஒற்றைப் பரிமாண பார்வை’ என்கிறார். பகத்சிங் பள்ளி ஆசிரியராக, பல பத்திரிக்கைகளின் ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். பெல்காமில்  நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கு பெற்றிருக்கிறார்.

அகிம்சையை கடைபிடித்த காங்கிரஸ் கட்சி வன்முறையில் ஈடுபட்ட பகத்சிங் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமா என்றால்.., பொறுபேற்றது என்பதே வரலாறு!. காவல் அதிகாரியை கொன்ற ஒருவனை பிரிட்டிஷ்  அரசாங்கம் சும்மா விட தயாராக இல்லை என்பது தான் யதார்தமாக இருந்தது!  பகத்சிங்கை மரண தண்டனையை தனிப்பட்ட இர்வினால் ரத்து செய்திருக்க  முடியமா, என்பது போன்ற வாதங்கள் வருகின்றன. காந்தியின் வேண்டுகோளுக்கு ஆதரவாக இர்வின் எடுக்கக்கூடிய நிலைப்பாட்டிற்கு எதிராக பிரிட்டிஷ் அதிகார வர்க்கமும், ஆளுநர்களும் கிளர்ச்சியில் ஈடுபட தயாராக இருந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் தத்தா.

வரலாற்றாசிரியர்கள் காந்தி மீது வைக்கும் குற்றச்சாட்டை மிகச் சுருக்கமாகக் ’அகிம்சையற்ற வழியில் நம்பிக்கையற்ற காந்தி பகத்சிங் விவகாரத்தில் முழுமனதுடன் முயற்சிக்கவில்லை’, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அதனை வலியுறுத்தி அழுத்தம் தந்திருந்தால் பகத் சிங்கும் அவரது சகாக்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்’ என்பதாக பார்க்க முடிகிறது.

காந்தியை விமர்சிக்கும்    ஏ.ஜி.நூரனி, டி.பி.தாஸ்,  எம்.என்.குப்தா,  டி.எஸ்.தியோல், அசோக் செல்லி போன்ற இன்னும் சிலரின் கருத்துகளை  எடுத்துரைக்கும் ஆசிரியர் தத்தா,  காந்திக்கு ஆதரவாக குல்தீப் நய்யார்,  கே.கே குல்லார், அனில் நவ்ரியா, பாஸின் போன்ற வரலாற்றாசிரியர்களின் ஆதாரங்களையும் பதிவு செய்கிறார். வைஸ்ராய் இர்வின் தனக்கு அளிக்கப்பட்ட வழியனுப்பு விழாவில் காந்தி தன்னிடம் பகத்சிங் விடுதலை குறித்து வேண்டுகோள் வைத்ததை ,  இர்வின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ட்ரூ ராபர்ட்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

பேச்சு வார்த்தையின்போது ‘காந்தி தண்டனை குறைப்பு விஷயத்தை என்முன் வலுக்கட்டாயமாக எடுத்துரைத்த போது…. அகிம்சையின் தூதரான இந்த மனிதர்… தான் ஏற்று கொண்டிருக்கும் கொள்கைக்கு நேரெதிரான நோக்கத்திற்கு இவ்வளவு முனைப்புடன் வேண்டுகோள் வைப்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கமுடியும் என்று யோசித்தேன்’ என்ற இர்வினின் கூற்றை ஆசிரியர் காந்திக்கு ஆதரவாக மேற்கோள் காட்டுகிறார்.

மார்ச் 31 அன்று எழுதிய கடிதத்தில் (அன்று அவர்களை தூக்கில் போடப்போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது) காந்தி, ‘தண்டனை நிறைவேற்றம் என்பது, திரும்பப் பெற முடியாத ஒரு செயல். எடுத்த முடிவில் சிறிதளவேனும் தவறு இருக்க வாய்ப்பு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், திரும்பப் பெறமுடியாத இந்தச் செயலை மறுபரிசீலனைக்காக தள்ளிப்போடும்படி நான் உங்களை வற்புறுத்துகிறேன்.’ என்று கூறுகிறார்.

தண்டனை நிறைவேற்றப்பட்டப் பிறகு ’இரக்கமற்ற செயல்’ ‘பொது மக்களின் எண்ணத்திற்கு மதிப்பளிக்காத அரசாங்கம்’ என்று காட்டமாக அரசாங்கத்தை விமர்சித்தார் காந்தி.  பத்திரிக்கையாளர் மத்தியில் பேசும்போது,  ’தூக்குத்தண்டனைகளை நிறுத்துவது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்ற குற்றத்தை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்’  என்பவர், ‘பகத் சிங் விஷயத்தை ஒர் மனிதநேய பிரச்சனையாக முன்வைத்தேன்’   ‘இந்த விஷயத்தில் என் ஆன்மாவையே நான் தந்தேன்’  என்று தன் மனத்தை திறப்பதையும் ஆசிரியர் பதிவு செய்கிறார்.

காந்தியவாதியும், புதுதில்லி காந்தி அருங்காட்சியக இயக்குனருமான அ.அண்ணாமலை ‘பகத் சிங் புகழை, செய்த தியாகத்தை குறிப்பிடுவதைவிட காந்தியடிகளின் செயல்களை விமர்சிப்பதற்கே அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது’ என்று வருத்தப்படுகிறார். ‘பகத் சிங் வெடிகுண்டு வீசியதற்காக தூக்கிலிடப்படவில்லை;அவர் லாகூரில் துணைக் கண்காணிப்பாளர் சாண்டர்ஸ் -ஐ கொலை செய்தமைக்காக தூக்கிலிடப்பட்டார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்கிறார்.

பகத்சிங் மரணதண்டனையின்  மேல்முறையீட்டு மனு லண்டன் பிரிவி கவுன்சிலின் பரிசீலனையில் இருந்தபோது அதற்கு உதவியவர்   காந்தியுடன் நெருக்கமான நண்பர் போலக்; பஞ்சாப் அரசுக்கு கருணை மனு தயாரித்து கொடுத்தது காந்தியின் சீடர் ஆசப் அலி;அதை திருத்திக் கொடுத்தது காந்தி!  என்பது போன்ற பல செய்திகளை இதில் காண முடியும். பகத்சிங் வாழ்க்கை வரலாற்றை எழுதிய குல்தீப் நய்யார் உட்பட பலரை நேர்காணல் செய்து இந்த நூலை எழுதியுள்ளார்.

பகத்சிங் தூக்கிலிடபட்ட விவகாரத்தில் காந்தியின் நிலைபாடு என்ன என்ற வரலாறு குறித்த சரியான புரிதல் வேண்டுபவர்கள்  இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time