தமிழகத்தின் உண்மையான அதிகார மையம் யார்?

சுரேஷ்குமார், கும்பகோணம், தஞ்சாவூர்

ஒ.பி.எஸ்சுக்கு தற்போதைய ‘பாஸ்’ யார்?

உங்கள் கேள்வியிலேயே அவர் தனக்கான பாஸ்களை மாற்றிக் கொள்பவர் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது! அவரது முதல் பாஸ் டி.டி.வி தினகரன், அதற்குப் பிறகு சசிகலா, பிறகு ஜெயலலிதா, இதன் பிறகு மோடி, குருமூர்த்தி..என்பதாகத் தொடர்ந்தது. தற்போது எதிர் முகாமிலேயே தனக்கு பாதுகாப்பான பாஸ் ஒருவரை கண்டறிந்துள்ளார். ஒன்றிய அரசின் தயவை விட, உள்ளூர் அரசின் தயவால் தான் தன் அரசியல் எதிரிகளோடு மோத முடியும் என அவர் சமீபகாலமாக சார்ந்து நிற்கக் கூடிய ‘பாஸ்’ சபரீசன்!

ஆர்.ரமேஷ், பெங்களூர்

இலங்கையின் மக்கள் புரட்சி உணர்த்தும் படிப்பினைகள் என்ன?

அந்நிய நாடுகளின் தயவில் வாழக் கூடாது. இருப்பதைக் கொண்டு தற்சார்புடன் வாழ வேண்டும். உள்நாட்டு மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட தலைமை ஒரு நாள் ஒட்டுமொத்த மக்களாலும் விரட்டி அடிக்கப்படும்.

பாண்டித்துரை, அரசரடி, மதுரை

தமிழக அரசில் உண்மையில் எத்தனை அதிகார மையங்கள்  உள்ளன..?

கோட்டையில் முதல்வரை காட்டிலும், முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் அதிகாரம் தான் கொடிகட்டிப் பறக்கிறது. ”இது உதயசூரியன் ஆட்சியா? உதயசந்திரன் ஆட்சியா? தெரியவில்லை..” என மூத்த அமைச்சர் துரைமுருகனே ஸ்டாலினிடம் புலம்புகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்!

அடுத்ததாக கூடுதல் உளவுத் துறை டி.ஜி.பி. டேவிட்சன் தேவார்சீவாதம்! இவர் சொல்வதே முதல்வருக்கு வேதவாக்கு! ஆக, அவர் காட்டும் திசை வழியில் ஆனவரை பயணிப்பார்!

இதற்கும் மேலாக, அந்தரங்க உதவியாளர் தினேஷ்! இவர் சொல்லுக்கு மறுபேச்சே இல்லை. எல்லாவற்றுக்கும் இவர் தான் வழிகாட்ட வேண்டும்.

இவர்களை எல்லாம் மிஞ்சும் சக்தி படைத்தவர் முதல்வரின் மருமகன் சபரீசன்! தமிழகத்தின் உள்துறை, காவல்துறை அனைத்தும் இவர் கண்ட்ரோல். அதனால் தான் ஒன்றிய அரசு ஸ்டாலினை இயக்க சபரீசனை ரிமோட் கண்ட்ரோலாக வைத்துள்ளது. நான் சொல்வது எதுவும் ரகசியமல்ல, தமிழக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்..உள்ளிட்ட உயர் அதிகாரத்தில் உள்ள அனைவரும் உணர்ந்தும், பேச முடியாத உண்மை!

இதெல்லாம் போக கிச்சன் கேபினெட்டும் வலுவாக இயங்கி வருகிறது! இவர்களுக்கு இடையிலான உள் முரண்பாடுகளை சரிகட்டவே ஸ்டாலினுக்கு நேரம் போதவில்லை.

ஆளுமை இல்லாத தலைவர்கள் அதிகாரத்திற்கு வந்தால், அவரரும் ஆதிக்கத்தை நிலை நாட்டத் துடிப்பார்கள்..! என்பது நிதர்சனமாகியுள்ளது.

அ.அறிவழகன், மயிலாடுதுறை

அதிமுகவில் அனைவரும் தன் தலைமையின் கீழ் வர வேண்டும் என பேசி உள்ளாரே சசிகலா?

பேசத் தான் முடியும். பேசட்டுமே! தன் குடும்பத்திற்குள்ளேயே அவரால் தன் தலைமையை ஏற்க வைக்க முடியவில்லை. தினகரன், திவாகர், விவேக் உள்ளிட்டவர்களை ஓரணியில் திரட்டி தன் தலைமையை ஏற்க வைப்பதையே சசிகலாவால் உறுதிபடுத்த முடியாது.

கோமதிநாயகம், கோவை

சசிகலா மற்றும் தினகரனோடு ஒ.பி.எஸ் சேர வாய்ப்புள்ளதா?

இனி சசிகலாவுக்கோ, தினகரனுக்கோ ஒ.பி.எஸ் தேவை இல்லை. ஒரு வகையில், தன் இரண்டு எதிரிகளையும் ஒருவரை ஒருவர் மோத வைத்து, தன் துன்பங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட ஒ.பி.எஸ்சை பழி வாங்கிவிட்டார் சசிகலா!  ஒ.பி.எஸ்சும் அதிகாரம் இருக்கும் பக்கம் மட்டுமே சென்று ஒட்டிக் கொள்ளும் இயல்புள்ளவர்.

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம், சென்னை

தமிழக மக்களை சந்திக்க சுற்றுப் பயணம் கிளம்புகிறாராமே கமலஹாசன்?

அவருக்கும் ஒரு ரிலாக்‌ஷேசன் வேண்டாமா? டூர் போவது தவறா? விக்ரஸாக விக்ரம் வெற்றியை சாதித்தார்! அடுத்து இந்தியன் –2 அசைன்மெண்ட் இருக்கும்! இடைப்பட்ட காலத்தில் அரசியல்ல கொஞ்சம்  என்ஜாய் பண்ண வர்றார் பொறுக்கலையா… உங்களுக்கு?

க.செபாஷ்டின், வேலூர்

இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என சாதுவாக பேசி வந்த ஒ.பி.எஸ் கட்சிக் கதவுகளை உடைத்து உள்ளே சென்று அலுவலக பைல்களை களவாடி உள்ளாரே?

கட்சிக்குள் ஆதரவாளர்களை திரட்ட முடியாத கோழைத்தனத்தின் உச்சம்!

கொள்ளைக்காரனாக மாறிய அவமானகரமான செயல்!

இதற்குப் பெயர் சாகஸம் அல்ல. திமுக அரசின் தயவோடு நடத்திய சதிச் செயல்!

செல்வகுமார், சென்னை

செவிலியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் கேட்டால், அதற்கு 15 லட்சம் லஞ்சமாக கேட்கப்படுகிறதே?

சமூகத்தின் அடித்தட்டில் உழலும் சேவையாளர்களே செவிலியர்கள்! இவர்களிடம் லஞ்சம் கேட்பது கொடுமை!

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மிக நல்லவர்! ஆனால், தன் துறையில் தலைவிரித்தாடும் ஊழல்களை தடுக்க முடியாதவராக உள்ளார்! அவர் சுதந்திரமாகக் கூட செயல்பட முடியவில்லை என தெரிய வருகிறது! இந்த அநீதி உடனே தடுக்கப்பட வேண்டும்.

வேல்முருகன், சுங்குவார் சத்திரம், காஞ்சிபுரம்

ஆரியர், திராவிடர் என்ற பிரிவு ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது என கூறியுள்ளாரே ஆளுனர் ஆர்.என்.ரவி?

ஆர்.என்.ரவி அவர்கள் அடிக்கடி பேசுகின்ற சமாச்சாரங்களை பார்க்கும் போது, இவர் வகிப்பது, ஆளுனர் பதவியா? அகில இந்திய பிராமணர் சங்கத் தலைவர் பதவியா? என்ற குழப்பம் வருகிறது.

எஸ்.கண்ணப்பன், சேத்தியாதோப்பு, கடலூர்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதே?

விவசாயிகளை தாயின் பரிவோடும், தந்தையின் தலைமைப் பண்போடும் வழி நடத்தியவர் நம்மாழ்வார்! விவசாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு பலியிடத் துடிக்கும் அரசு பாஜக அரசு, அவர் எதிர்த்த அனைத்தையும் குறிப்பாக நெடுவாசல் மீத்தேன் திட்டத்தையும், மான்சாண்டோவின் மலட்டு விதைகளை இந்திய மண்ணில் விதைக்கும் திட்டத்தையும் ஆதரித்து நடைமுறை படுத்திக் கொண்டே நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா வழங்க தீர்மானம் இயற்றுகிறது!  நல்ல வேளை நம்மாழ்வார் உயிருடன் இருந்திருந்தால், பாதர் ஸ்டேன்சாமியைப் போல சிறையில் தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு இருப்பார்!

க.அப்துல்நாசர், ஹைதராபாத்

ஆன்லைன் ரம்மிக்கு தமிழகத்தில் தடை சட்டம் வருமா?

எண்ணற்றோர் வாழ்வை தொலைத்து, தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமான ஆன்லைன் ரம்மியை தடை  செய்யும் வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு தெளிவாக அறிக்கை தந்துள்ளது நீதிபதி சந்துரு தலைமையிலான குழு! ஒரு நல்ல மக்கள் நல அரசென்றால், இதை இந்த நேரத்திற்கு தடை செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசின் தலைமைக்கு என்ன தடுமாற்றமோ தெரியவில்லை. இன்னும் மெளனம் கலையவில்லை.

எல்.ஞானசேகரன், ஈரோடு

அதிமுக பொதுக் குழுவிற்கு தடைகோரும் ஒபிஎஸ் மனுவை விசாரித்த பிறகு தீர்ப்பை பொதுக்குழு நடைபெறும் காலை 9 மணிக்கு வழங்குவதாக நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி சொல்லியதற்கான காரணம் என்ன? அனைவரையும் கடைசி நேரம் வரை டென்சனின் உச்சத்தில் வைக்க விரும்பினாரோ..?

எனக்கும் முதலில் இப்படித்தான் நினைக்கத் தோன்றியது. ஆனால், அவரது தீர்ப்பை படித்த பிறகு இப்படிப்பட்டவரைப் போய் நாம் சந்தேகப்பட்டுவிட்டோமே என வருந்தினேன்.

அவருடைய தீர்ப்பில், ”ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர், உறுப்பினர்களை சமாதானப்படுத்தி, கட்சியின் நலன், வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற, பொதுக் குழுவை அணுகுவதை விடுத்து, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவது துர்அதிர்ஷ்டவசமானது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள், நீதிமன்றத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்…” என நீதியரசர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த தீர்ப்பை நீதியரசர் முந்திய நாள் வழங்கி இருந்தாலூமே கூட, ஒ.பி.எஸ் மத்திய, மாநில அரசுகளின் அதிகார பலத்தோடு, நீதிமன்றத்தின் கதவுகளை நள்ளிரவில் தட்டி, விடிகாலையில் தான் விரும்பிய தீர்ப்பை நிர்பந்தித்து பெறுவார் என்பது முன்னுபவமாக இருந்ததால் தான் காலை 9 மணிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார் என்பதை உணர்ந்த போது நீதியரசரின் சமயோசித யுக்தியை எண்ணி வியந்தேன்.

ச.ராஜலட்சுமி, மதுரவாயில்

குஜராத் கலவரத்தில் எளிய பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த தீஸ்தா செதல்வாத்  மீது குற்ற வழக்கு பதிந்தது போல தற்போது மேதாபட்கர் மீதும் குற்ற வழக்கு பாய்ந்துள்ளதே?

மேதாபட்கர் ஒரு எளிமையான சமூக போராளி. காந்திய வழிமுறைகளில், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், எளிய மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் குரல் கொடுத்து வருகிறார். இது பாஜக அரசுக்கு நன்றாகவே தெரியும். என்ன செய்வது அவர் பாஜக அரசின் கார்ப்பரேட் நல அரசியலுக்கு எதிராக அல்லவா உள்ளார். நம்மாழ்வாரைப் போல, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மேதா பட்கர் இறந்துவிட்டிருந்தால், அவருக்கு பாரத ரத்னா வழங்கி சிறப்பித்து இருக்கும்!

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time