மன அழுத்தங்களை போக்கும் இயற்கை உணவுகள்! 

எம்.மரிய பெல்சின்

மன அழுத்தம் எனப்படும் டிப்ரஷன்! சாதாரணமாக இன்று எல்லோருக்கும் ஏற்படுவதே! அது போன்ற நேரங்களில் அதிலிருந்து, சிக்காமல், சிதறிவிடாமல் வெளியேற வேண்டும்! மருந்து, மாத்திரைகளை நாடாமல், மந்திர, தந்திரவாதிகளிடம் செல்லாமல், பெரிய செலவில்லாமல் இது சாத்தியம்!

பல்வேறு சூழலில் பலரையும் பாடாய்ப்படுத்திவரும் பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. இதை சரிசெய்வதற்கு நம்மைச் சுற்றி மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் காய், கனிகள், மூலிகைகள் போதும்! ஆனாலும், பலர் நமது மண்ணின் மருத்துவத்தை நம்பாமல் வேறு பல சிகிச்சைகளை மேற்கொண்டு பலனின்றி சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மனநலக் கோளாறு என்றதும் பேய், பிசாசு பிடித்துவிட்டதாகக் கருதி மந்திரவாதிகள் மற்றும் சிலரது பின்னால் சிலர் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும், சிலர் உளவியல் மருத்துவரை நாடி ஏகப்பட்ட மருந்து ,மாத்திரைகளை உட் கொள்கின்றனர். இங்கே நாம் சொல்லக் கூடிய எளிய வழிமுறைகள் மிக சுலபத்தில் மன அழுத்தத்தை விடுவிக்கும், வாருங்கள்.

மருதாணி, வல்லாரைக்கீரை, பூசணிக்காய், அகத்திக்கீரை போன்ற எளிதில் கிடைப்பவற்றைக் கொண்டே மனநலக் கோளாறுகளை சரிசெய்துவிடலாம் என்றால், உங்களால் நம்பமுடியுமா? நம்பிக்கையுடன் இவற்றை ஒரு மருந்தாக நினைத்து உணவாக எடுத்துக்கொண்டால், மனநலக் கோளாறுகளை சரிசெய்யலாம்.

தன்வந்திரி சித்தர் என்று ஒருவர் இருந்தார். அவர் தனது சீடர்களின் நினைவாற்றல் மற்றும் அறிவுக்கூர்மையை அதிகரிக்க வல்லாரைக் கீரையில் சில மருந்துகளைச் செய்து கொடுத்ததாக சித்தர்கள் பற்றிய குறிப்புகளில் காண முடிகிறது. மூலிகைகளின் மகத்துவம் அறிந்து அவற்றை மிகச்சரியாக பயன்படுத்தி பலன் பெற்றவர்கள் நமது சித்தர் பெருமக்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

வல்லாரை… சக்தி வாய்ந்த ஓர் மூலிகை என்று சொன்னால் அது மிகையாகாது. வல்லாரையை சூரியன் உதிப்பதற்கு முன் பச்சையாக மென்று சாப்பிட்டு அதன்பிறகு 4 மணி நேரம் வேறு எதையும் சாப்பிடக்கூடாது. 4 மணி நேரம் கழித்து நன்றாக பசியெடுக்கும்போது அரை லிட்டர் அளவு பசும்பால் குடிக்க வேண்டும். பிறகு மீண்டும் பசியெடுக்கும்போது உப்பு, புளி குறைவாக உள்ள உணவை எடுத்துக்கொண்டால் மனநோயின் தீவிரம் குறையும். இதை சிலநாட்கள் தொடர்ந்து செய்துவந்தாலே மனநோயின் தீவிரம் மெதுவாக குறைந்து நாளடைவில் கோளாறுகள் விலகிவிடும்.

இதேபோல் பூசணிக்காய்… இதில் வெண்பூசணி எனப்படும் கல்யாண பூசணிக்காயைத்தான் நாம் மருந்தாக எடுத்துக்கொள்ள இருக்கிறோம். தென்மாவட்டங்களில் இந்தக்காயை தடியங்காய் என்பார்கள். மருத்துவ குணம் நிறைந்த இந்த மூலிகையின் மகத்துவம் தெரியாமல் நாம் திருஷ்டி சுத்தி தரையில் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறோம். திருஷ்டிகாய் என வாசலில் கட்டி தொங்கவிடுகிறோம். பிறரது பொறாமை, துவேஷப் பார்வைகளில் இருந்து வெண்பூசணி நம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் எப்படியோ ஆழமாக பதிந்து உள்ளது. ஆனால், அந்த வெண் பூசணியை உணவாகப் பயன்படுத்துவதன் மூலம் நம் மன உள் கட்டமைப்பை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை. வெண்பூசணியை தினமும் ஏதாவது ஒரு விதத்தில் உணவில் சேர்த்துக் கொண்டால், மனநலக் கோளாறுகள் நம்மை விட்டு விலகும். பூசணிக்காய் ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

வெண் பூசணிச் சாறு ஒரு தெய்வீக உணவு

பூசணிக்காயில் ஜூஸா என்று சிலர் கேள்வி கேட்பதுடன் முகம் சுளிப்பதுண்டு. அதே நேரத்தில் பூசணியில் ஜூஸ் செய்வது எப்படி? என்றும்கூட கேள்வி கேட்பார்கள். அவர்களுக்காக சிறிய குறிப்பு… தோல் நீக்கிய பூசணிக்காயின் சதைப் பகுதியுடன் ஏலக்காய், வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்தார் ஜூஸ் தயார். இப்படி தயார் செய்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது வெறுமனே கூட தோல் நீக்கிய பூசணிக்காயை மிக்சியில் அரைத்து குடிக்கலாம். அடுத்த நாள் பூசணிக்காயில் அல்வா செய்து சாப்பிடலாம். இன்னொரு நாள் பூசணிக்காய் கூட்டு அல்லது பச்சடி செய்து சாப்பிடலாம். இப்படி பூசணிக்காயில் தினம் ஒரு ரெசிபி செய்து சாப்பிட்டு வந்தாலே மனநலக் கோளாறுகள் நம்மை விட்டு விலகி விடும். உடல் சூடும் தணியும்.

தினமும் பூசணிக்காயா..?  என்றுகூட சிலருக்கு சலிப்பு அல்லது அதன்மீது வெறுப்பு ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் ஒருநாள் மாதுளம்பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடலாம். இதுவும் கூட மன அழுத்தம், மன உளைச்சலைப் போக்க உதவும்.

அமாவாசை நாட்களில் போட்டி போட்டுக்கொண்டு மாடுகளுக்கு உணவாக தரக்கூடிய அகத்திக் கீரையில் மனநலக் கோளாறுகளை சரி செய்யும் மருத்துவம் ஒளிந்திருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அகத்திக்கீரையுடன் மிளகு, சீரகம். சின்ன வெங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து நீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி குடிக்கலாம். உப்பு சேர்க்காமல் சீரகம், சின்ன வெங்காயம், அகத்திக்கீரை சேர்த்து கசாயமாக்கி கருப்பட்டி சேர்த்துக் குடித்தால் மன அழுத்தம் விலகும். குறிப்பாக மனநோயின் தொடக்கநிலையில் இது நல்ல பலனைத் தரும்.

நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அதிமதுரத்துடன் உலர்ந்த திராட்சைப்பழம் சம அளவு எடுத்து அரைத்து 100 கிராம் பாலில் கலந்து குடித்தால், மனப் பதற்றம், பரபரப்பான மனநிலை நம்மை விட்டு விலகும். அதிமதுரத்துடன் பெருஞ்சீரகம், சர்க்கரை தலா 25 கிராம் சேர்த்துப் பொடியாக்கி தேன் சேர்த்து அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், மன நோயாளிகளுக்கு வரக்கூடிய தலைவலி விலகும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மன நோயாளிகள் என்றில்லை, மற்றவர்களுக்கு வரக்கூடிய தலைவலி அனைத்தும் விட்டுவிலகும்.

கறிவேப்பிலை கொத்தமல்லி துவையல்

மல்லித்தழை… கொத்தமல்லிக் கீரையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து ஜூஸாக்கிக் குடிப்பது, மல்லித்தழையில் துவையல், சட்னி செய்து சாப்பிடுவது போன்றவை மூளையில் உண்டாகும் சூட்டினைக் குறைத்து மன அழுத்தத்தை விரட்டும். குறிப்பாக தூக்கமின்மைக்கு இந்த கொத்தமல்லிக் கீரை மிகவும் நல்லது.

வெறும் கொத்தமல்லிக் கீரை என்றில்லாமல், அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து அரைத்துச் சாப்பிடுவது நல்லது. கறிவேப்பிலையும் கூட மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது என்பதால், ஒருநாள் வெறும் கறிவேப்பிலையில் துவையல் செய்து சாப்பிடலாம். ஒரே உணவாக இல்லாமல் கொஞ்சம் மாற்றி மாற்றி செய்யலாம். தயிர் சோறுக்கு ஊறுகாய்க்கு மாற்றாக, இந்த துவையல் எடுத்துக் கொள்வது சிறப்பு!

சிவன் கோவில் வளாகங்களில் வில்வ மரங்கள்!

இதேபோல் வில்வ இலையில் துவையல் செய்து சாப்பிடலாம். உடனே வில்வ இலைக்கு எங்கே போவது? என்றுகூட சிலர் கேட்பார்கள். சிவன் கோயில் வளாகங்களில் பெரும்பாலும் வில்வ மரங்கள் இருக்கும். இதை சிவனுக்கு பூஜைக்கு வைப்பார்கள்! இது சிவ பூஜைக்கு மட்டுமல்ல, சித்த தெளிவுக்கும் உகந்ததாகும். அதனால், சிவன் கோவில்களின் அருகே பூ விற்பவர்களிடம் கேட்டால் வில்வ இலை கிடைக்கும்!

மருதாணி… மன அழுத்தங்களை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உள்ளுக்கு சாப்பிடுவதை விட மஞ்சள் சேர்த்து அரைத்து உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதே போல் மருதாணிப் பூக்களை தலையணையின் அருகே வைத்துக்கொண்டு தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும். மருதாணி உடல் சூட்டைக் குறைப்பதுடன் மன கோளாறுகளை விரட்டி அடிக்கும். மருத்துவ குணம் மிக்க மருதாணிக்கு இவ்வளவு மகிமை இருக்கிறது என்பது தெரியாமல் நாம் மருதாணிக்கு மாற்றாக கோன் வடிவில் விற்கப்படும் ரசாயனம் நிறைந்த ஒரு கலவையைத் தான் கை கால்களில் பூசிக்கொண்டிருக்கிறோம். அழகுடன் ஆபத்தும் ஒளிந்திருக்கும் என்பதற்கு இந்தக் கோன் ஒரு சாட்சி.

மெகந்தி என்பது பாரம்பரிய மிக்க ஒரு கலை. அதன் வரலாறு நீண்ட நெடியது. மெகந்தி என்ற பெயரில் வண்ணக் கலவைகளை கை கால்களில் ஓவியமாக வரைந்து அழகூட்டிக் கொள்கின்றனர். இன்றைக்கு ரசாயனங்கள் கலந்து விற்கப்படும் அந்த மெகந்தி கோன் நமக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதை உணர்ந்து நமது மண்ணின் பாரம்பரியமான மருதாணியைப் பூசி பலன் பெறுவோம்.

திருநீற்றுப்பச்சிலையை எடுத்து கசக்கி முகர்ந்து பார்த்தால், அதிலிருந்து வீசக்கூடிய நறுமணம் மனக் கோளாறுகளிலிருந்து நம்மை விடுவிக்கும். இதேபோல் நித்தியகல்யாணி பூவை முகரலாம் என்றாலும், அதன் பூக்களை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடித்தாலும் மனக் கோளாறுகள் சரியாகும்.

பப்பாளிப்பழம் அடிக்கடி சாப்பிட்டாலும் மனநலக் கோளாறுகள் விலகும். நாயுருவி வேரினை பால் சேர்த்து அவித்து காய வைத்துப் பொடியாக்கி அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து பசும்பாலில் கலந்து குடித்தால் மன அழுத்தங்கள் சரியாகும்.

இதுபோன்ற எளிய மூலிகைகளைக்கொண்டு மனநலக் கோளாறுகளையும் உடலில் ஏற்படக்கூடிய நலக்குறைவுகளையும் மிக எளிதாக சரிசெய்ய முடியும். பரந்து விரிந்த இந்த உலகில் காணப்படும் தாவரங்கள்… செடி, கொடிகள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணம் உள்ளது என்பதை நம் முப்பாட்டன்களான சித்தர்கள் தங்களது ஞானத்தால் அறிந்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே, அவற்றின் பலன் அறிந்து செயல்படுவோம், தெளிவோம்.

கட்டுரையாளர்;  எம்.மரிய பெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time