இந்த நூற்றாண்டின் சாதனைப் படம் த்ரிஷ்யம்..!

-ரதன் சந்திரசேகர்

த்ரிஷ்யம் 2013 ல் ஜீத்து ஜோஸபின் எழுத்து – இயக்கத்தில் வெளியான

‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் கேரளாவை ஓர் உலுக்கு உலுக்கியது.

சிறந்த திரைப்படத்துக்கெனவும் , கான்ஸ்டபிள் பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக  கலாபவன் ஷாஜோனுக்கும் கேரள அரசின்  விருதுகளைப் பெற்றுத் தந்தது த்ரிஷ்யம்.    சிறந்த நடிகை (ஆஷா ஷரத்) மற்றும்  சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றது. தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் , சிறந்த நடிகர் (கலாபவன் ஷாஜோன் ) என மூன்று விருதுகளைப் பெற்றது.

இந்தியாவின் சிறந்த த்ரில்லர் படங்களில் முதல் வரிசையில்போய் அமர்ந்தது த்ரிஷ்யம்.

அது குறித்து மேலும் சில சுவைக்கும் தகவல்கள்….

ஏறத்தாழ 15 கோடி ரூபாய்க்கு இதன் ரீமேக் உரிமை விற்கப்பட்டதாகச் சொல்லுகிறார்கள்…!

2014 இல் ‘த்ரிஷ்யா’ என்ற பெயரில் கன்னடத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டது  இந்தப் படம்.  இயக்கம் பி.வாசு . இசை இளையராஜா.

மோகன்லால் நடித்த வேடத்தில் வி.ரவிச்சந்திரனும், மீனா நடித்த வேடத்தில் நவ்யா நாயரும்,  சித்திக் நடித்த வேடத்தில் நம் பிரபுவும், கலாபவன் ஷாஜன் நடித்த கான்ஸ்டபிள் பாத்திரத்தில் அச்யுத் குமாரும் நடித்திருந்தார்கள். போலிஸ் ஐஜியாக மலையாளத்தில் நடித்த  ஆஷா ஷரத்தே இதிலும் ஐஜி.

வெற்றியும் விருதும் கைகோத்த படம் இது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை அச்யுத் குமாருக்கு பெற்று தந்தது.

அதே 2014 இல் ‘த்ருஷ்யம்’ என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இயக்கியவர்  யார் தெரியுமா? நடிகை ஸ்ரீப்ரியா! இசை : ஷரத். மோகன்லால் நடித்த வேடத்தில் வெங்கடேஷ் .   மீனா நடித்த வேடத்தில் மீனாவே தான்.  சித்திக் நடித்த வேடத்தில் நரேஷ்.  கான்ஸ்டபிள் பாத்திரத்தில் ரவி காலே. போலிஸ் ஐஜியாக நதியா நடித்தார். தெலுங்கிலும் பெருவெற்றி பெற்று விருதுகளும் பெற்றது த்ருஷ்யம்.

இது,2015 ல்  தமிழில் ‘பாபநாசம்’ ஆனது. மலையாளத்தில் எழுதி இயக்கிய ஜீத்து ஜோஸப்பே தமிழிலும் இயக்கினார். கமலஹாசன்,கௌதமி இணையுடன், சித்திக் நடித்த வேடத்தில் ஆனந்த் மகாதேவனும்,  கான்ஸ்டபிள் பாத்திரத்தில் கலாபவன்  மணியும் நடிக்க, போலிஸ் ஐஜியாக ஆஷா சரத்தே நடித்தார்.இசை : ஜிப்ரான். வெற்றியும் பாராட்டுகளும் குவிந்தன.

இந்தப் படங்களின் வெற்றி,  அதே 2015இல்  ‘த்ரிஷ்யம்’ என்ற பெயரிலேயே   ஹிந்திக்கும் மொழிமாற்றம்  செய்யப்பட  காரணமாயிற்று.  அஜய் தேவ்கன் ஹீரோ.  ஜோடி ஷ்ரேயா.  போலிஸ் ஐஜியாக தபு, வன்மம் கொண்ட  கான்ஸ்டபிள் பாத்திரத்தில் கம்லேஷ் சாவந்த், ஐஜி கணவராக ரஜத் கப்பூர்  நடிக்க, நிஷிகாந்த் காமத்  இயக்கினார். இசை : விஷால் பரத்வாஜ். மொழிமாற்ற உரிமைச் சண்டையெல்லாம் நடந்து களேபரமாகி, வசூலை குவித்தது ஹிந்தி த்ரிஷ்யம். எதன்பொருட்டோ, இதற்கு உத்தரப்பிரதேச அரசு வரிவிலக்கும் அளித்தது.

ஆயிற்றா?

இப்போது த்ரிஷ்யம் கடலைத் தாண்டியது. ஆமாம்,  இலங்கையில் ‘தர்மயுத்தா’ என்று சிங்கள மொழி பேசியது  த்ரிஷ்யம்.

இயக்கியது யார் தெரியுமா? பல்லாண்டுகள்முன் தமிழில் பிரபு நாயகனாக நடிக்க ‘தர்மசீலன்’  என்றொரு படம் வந்ததே, நினைவிருக்கிறதா? அதன் இயக்குனரான செய்யாறு ரவிதான் இந்த  சிங்களப்பட இயக்குநர்.

இதில் நடித்த கலைஞர்களைச் சொன்னால் புரியவா போகிறது? இருந்தாலும் சொல்கிறேன்.  மோகன்லால் நடித்த வேடத்தில் ஜேக்ஸன் அந்தோணியும், மீனா நடித்த வேடத்தில் திலானி ஏகநாயகேவும்,  கலாபவன் ஷாஜன் நடித்த கான்ஸ்டபிள் பாத்திரத்தில் குமார திரிமதுராவும் நடித்திருந்தார்கள். போலிஸ் ஐஜியாக குஸும் ரேணுவும் சித்திக் நடித்த வேடத்தில் டக்ளஸ் ரணசிங்கேவும் நடித்திருந்தார்கள். சச்சித் பெரிஸ் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் ‘பூவே உனக்காக’ புகழ் சரவணன். இலங்கையின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து இலங்கை சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை அள்ளிக்குவித்தது ‘தர்மயுத்தா ‘.

சரி, முடிந்ததா, இல்லை. த்ரிஷ்யம் 2019இல் சைனாவுக்கும் போனதுதான் ஆச்சரியம்.

‘மேய்ப்பன் இல்லாத ஆடு’ இதுதான் தலைப்பு. Sheep without a Shepherd . மலேசிய சீன  இயக்குநரான ஸாம் க்வா இயக்கினார். சீன நடிகர்கள் பெயரையெல்லாம் விக்கிப்பீடியாவில் தேடிப்பிடித்து எழுதி உங்களைக் கடுப்பேற்ற விரும்பவில்லை. சீனாவின் மாண்டரின் மொழியில் வெளியான இந்த படம், சீன திரைப்பட வரலாறில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது என்பதைச் சொல்லித்தான் ஆகவேணும்.

ஆஸிஃபா, நிர்பயா மற்றும் பொள்ளாச்சி கூட்டுப்  பாலியல் வன்புணர்வுக் கொடுமைகளில், சட்டத்தைத் தாண்டி, குற்றங்களின் வேர்க் காரணிகளைப் புறந்தள்ளி, பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட’மனிதமிருகங்களை’ தூக்கிலிடவேண்டும், கல்லால் அடித்துக் கொல்லவேண்டும், ஆணுறுப்பை அறுத்தெறியவேண்டும்  என்றெல்லாம் நமது மக்கள் கொந்தளித்தார்கள் அல்லவா? ஹைதரபாத்தில் இளம்பெண் மருத்துவர்  பாலியல் குழு வன்முறைக்காளாகி, சுட்டெரித்துக் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேர் தெலுங்கானா காவல்துறையால் என்கௌண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டபோது, நாடே மகிழ்ந்து பாராட்டி சுட்டுக் கொன்ற காவலர்களை  பூத்தூவி வரவேற்ற  மக்களின் பொது  மனோபாவம் என்று ஒன்றுண்டல்லவா? உலகெங்கும் நிலவும் அந்த பொதுப்புத்திதான் – த்ரிஷ்யம்  படத்தை வாரி அரவணைத்துக் கொண்டாடியதற்கான  உளவியல் காரணம் என்று புரிந்துகொள்கிறேன்.

பெற்ற மகளை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய ஓர் இளைஞனை துரதிர்ஷ்டவசமாகக் கொலை செய்ய நேர்ந்த பெற்றோரின் மனநிலையை முதன்மையாகக் கணக்கிலெடுத்து, சட்டம், நீதியையெல்லாம் புறந்தள்ளி தண்டனை வழங்கிய  நியாயத்தை இந்த பொது மனோபாவம் வழிமொழிகிறது.  சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவி,  கொலை குற்றத்திற்கான தண்டனையிலிருந்து சாதுர்யமாகத் தப்பிய ஒரு தந்தையின்  புத்திசாலித்தனத்தை  இத்தகைய பொதுப்புத்தி மகிழ்ந்து பாராட்டி வரவேற்றது.

இதுவே இந்தியாவின் பெரும்பான்மை மொழிகள் மற்றும்  நாடுகடந்த மொழிமாற்ற முயற்சிகளிலும் ‘த்ரிஷ்யம் ‘ ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பெருவெற்றியை ஈட்டியதற்கான காரணம்.  அதாவது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை மன்னிக்கவே கூடாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் என்பதே உலகம் முழுமையிலும் உள்ள மக்களின் ஒருமித்த உணர்வாகத் தெரிய வருகிறது.

இப்போது, ஒரிஜினலான அதே மலையாளத்தில், அதே மோகன்லால், மீனா  நடிப்பில், அதே ஜீத்து ஜோஸப் இயக்கத்தில்,’த்ரிஷ்யம் ‘ இரண்டாம் பாகம்   தயாராகிவிட்டதென்பது சிறப்புச் செய்தி. கொரோனா கோரத்தாண்டவத்தால் படம் அமேஸான் இணைய தளத்தில் இந்த வாரம் வெளியாகுமென்கிறார்கள்! இது உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time