இயற்கைக்கு என்ன திருப்பித் தரப் போகிறோம்..?

-செழியன்.ஜா

இயற்கை தான் நம்மை வாழ்விக்கிறது! அந்த இயற்கைக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்..? சுற்றிலுமுள்ள இயற்கையை தெரிந்தும், தெரியாமலோ  அழித்து கொண்டே  இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன..?  புதிய கிருமிகளின் தாக்கங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் தொடர்பு உண்டா..?

இயற்கையை பாதுகாக்க நமக்கான பொறுப்புகளை உணரவும், உயிரினங்கள், மரங்கள்  சூழ இருப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறியவும்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் தான்  ஜூன் 5.  உலக சுற்றுச்சூழல் தினம்!

நம்முடைய எந்த செயலும் அடுத்தவரை பாதிக்க கூடாது என்பது போல் அந்த செயல் இயற்கையையும் பாதிக்க கூடாது. நம்மை போல் பிறரை நினை அதனுடன் சுற்றுச்சூழலும் சேர்த்து நினைத்து கொள்ள வேண்டும்.  டைனோசர் அழிவு மனிதனால் அல்ல. ஆனால், இன்று அனைத்து உயிரினங்கள் அழிவும்  மனிதனால் மட்டுமே நிகழ்கிறது..

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன். படிக்கும்பொழுது பெருமிதம் கொள்வோம். நாம் தேர் கொடுக்க வேண்டாம். முல்லைச் கொடியை வெட்டாமல் இருப்போம்.  எட்டுவழி சாலையில் எவ்வளவு முல்லை கொடிகள் இருக்கும். எதற்கு இந்த சாலை? மனிதர்கள் சென்று வர. பொருட்களை கொண்டு செல்ல.  இந்த செயலுக்கு யாரிடம் அனுமதி கேட்கிறோம் அங்கு வாழும் மனிதர்களிடம். உண்மையில் அங்கு வாழும் உயிரினங்களிடமும்  சேர்த்து அல்லவா அனுமதி கேட்க வேண்டும்?

மனிதனை தவிர்த்து எந்த உயிரினங்களும் பேசாதே? ஆம் அம்பாள் என்று பேசினாள்..?  அதனால்தானே பல தவறுகள் நடக்கிறது. மற்ற உயிரினங்கள் பேசாது என்ற நினைப்பில், தைரியத்தில் நிலங்களை-காடுகளை அதன் ஒப்புதல் இல்லாமல் அழிக்கிறோம்.

மனிதன் வாழ்த்தானே பூமி? இந்த நினைப்பு மட்டுமே மனிதர்களிடம் மேலோங்கி உள்ளது. காடு அழிப்பு, மரங்கள் அழிப்பு, உயிரினங்கள் அழிப்பு இன்றைய மனிதர்களுக்கு பொழுபோக்காக மாறிவிட்டது. இதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு நிகழும் என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இன்று கொரோனா பரவல் எதனால் நிகழ்ந்தது என்று நினைக்கிறீர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல, கொரோனா. காடு, காட்டுயிரினங்கள் அழிப்பாலே ஏற்பட்ட விளைவே விலங்குகளின் உடலில் இருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ் தான் கொரோனா ஆகும்.

சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டே இருந்தால்.. நாளும் நாளும் புதுப் புது நோய்களோடு உலகமே போராட வேண்டியது தான்! சுற்றுச் சூழலை அழிக்காமல் இருந்தால் இயற்கையே நம்மை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்குமே!

1972ஆம் ஆண்டு  ஸ்டாக் ஹோம் நகரத்தில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபை ஜூன்-5, ல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவோம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஒரு  கருப்பொருளை முன் வைத்து இந்த தினத்தை கொண்டாடி வருகிறார்கள். முதன் முதலில் 1974 ஆம் வருடம் முதல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொழுது ”ஒரே பூமி” (Only one Earth) என்ற கருப்பொருளை சொல்லி கொண்டாடபட்டது.

2021ஆம் வருடம் கொண்டாடும் சுற்றுச்சூழல் தினத்திற்கு “சுற்றுச்சூழலை மறு சீரமைப்போம்” (Ecosystem Restrotation) என்ற தீம் கொண்டு கொண்டாடப்படுகிறது.. அது என்ன  சூழலை மறுசீரமைப்போம்?

நீர் நிலைகள்  மனிதனுக்கு நீர் ஆதாரம் வழங்கும் இடம். ஆனால் வீட்டிற்கு உள்ளேயே உள்ள குழாயில் நீர் வருவதால் நம் நீர்நிலைகள் நன்றாக இருப்பதாக நினைத்து கொள்கிறோம். கொஞ்சம் நீர் நிலைப்பகுதிகளுக்கு சென்று பாருங்கள். மாசு அடைந்து, குப்பைகள் கொட்டி அடைத்து, பல நிறுவனங்களின் கழிவு நீர்கள் கலந்து, மரங்கள், செடிகள் இல்லாமல் சென்னையிலேயே நிறைய இடங்களில் பார்க்கலாம். குறிப்பாக பெரும்பாக்கம் சதுப்பு நிலத்திற்கும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும் சென்னை மக்கள் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டும்.

மிக அதிக அளவில் மாசு அடைந்து இருப்பதை நேரடியாகவே மிக நெருக்கத்திலேயே பார்க்கலாம். வளர்ச்சி என்ற பெயரில் இந்த நீர் நிலைகளையும் சுருக்கி கொண்டே செல்வதை பெரும்பாக்கம் சுங்கச்சாவடி அருகில் பார்த்தால் எந்த அளவு அந்த நீர் நிலையை மணல் கொண்டு மூடி அதில் சிமெண்ட் சாலை போடப்பட்டு இருப்பதை காணமுடியும்.

இப்படி நம் நீர்நிலைகள் நிலை  இருப்பதனால்தான் வீராணம் ஏரியில் இருந்து நீர் கொண்டு வரும் நிலை இருக்கிறது. இங்கு இருக்கும் நீர் நிலைகள் தூர் வாரி, சுத்தப்படுத்தி பாதுகாத்தால் தூய நீர் இங்கேயே கிடைக்கும். இதைத்தான் சுற்றுச்சூழலை மறுசீரமைப்போம் என்ற கருப்பொருளை கொண்டு கொண்டாடப்படுகிறது.

நம் எதிர்கால குழந்தைகளுக்கு எதைவிட்டு விட்டு நாம் செல்கிறோம்?  இப்படிப்பட்ட  நீர் நிலைகளையா?  1977ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் “குழந்தைகளுக்கு ஒரே ஒரு எதிர்காலம் மட்டுமே” என்ற கருப்பொருளை கொண்டு கொண்டாடியது. இன்றும் அதே கருப்பொருளை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில் தான் நாம் உள்ளோம்.

ஏரி, குளம், ஆறு, கடல் பகுதி, காடு, விவசாய நிலங்கள்,சதுப்பு நிலங்கள் என்று அனைத்து பகுதிகளையும் சீரமைக்க வேண்டும்.

இவையெல்லாம் ஒரு அமைப்போ, நிறுவனமோ செய்யவேண்டியவை தனிமனிதனாக நான் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி தோன்றலாம். நாம் சாப்பிட்டு வீசி எரியும்  நெகிழியை சரியான குப்பை தொட்டியில் போடுவது, வீட்டில் இருந்து குப்பைகளை வெளியே கொட்டாமல் அதற்கான வண்டி வரும்பொழுது அதில் சேர்ப்பது. முடிந்தால் உங்கள் வீட்டருகில் மரங்கள் வளர்ப்பது, கொஞ்சம் சமூக எண்ணமும் இருந்தால் அருகில் உள்ள நீர் நிலை பகுதிக்கு குழுவாகச் சென்று சுத்தம் செய்வது என்ற சிறு சிறு பங்களிப்பை செய்யலாம்.

நீங்கள் வீசி எரியும் பாலீதீன் கவர்கள் பல பறவைகள் வயிற்றில் இருக்கிறது. இன்று தெருவில் சுற்றும் மாடு சாப்பிடுவதில் அதிகம் பாலீதீன் பைகள் கலந்து உள்ளன. இவை எல்லாம் அவற்றுக்கு எவ்வளவு வேதனைகளை ஏற்படுத்தும்..?  மாட்டுக்கு வலி நிவாரணமாக தரும் கொடூர மருந்தான டைக்ளோபினாக்தான்  பாறு கழுகு என்ற கழுகு இறப்பதற்கு காரணமாகிறது. இது தெரிந்தும் பல இடங்களில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி மனிதர்களாகிய நாம் சூழலை, உயிரினங்களை பல வடிவங்களில் அழித்து கொண்டு வருகிறோம். அவற்றை சீரமைப்போம் என்பதற்காக இன்றைய நாள்  கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்தும். பாகிஸ்தான் இந்த வருடம் நடத்துகிறது. அடுத்த 5 வருடத்தில் பாகிஸ்தானில் உள்ள காட்டின் பசுமையை அதிகரிக்க 10 பில்லியன் மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுனாமி அலையை தடுக்க கூடிய அலையாத்தி காடுகளை வளர்க்க உள்ளனர். பள்ளி, கல்லூரி, பெரிய நகரங்களில் மரங்களை அதிகமாக நடத் திட்டமிட்டு உள்ளனர்.

சமீப வருடமாக இந்தியாவில் ஒரு பறவை அதிகம் பேசபட்டு வருகிறது. நம் வீட்டருகில் விளையாடிக் கொண்டி ருந்த சிட்டுக் குருவிகளை இப்பொழுது தேடி கொண்டு இருக்கிறோம்.

எங்கே போனது சிட்டுக் குருவிகள்..?

சிட்டுக் குருவி இப்பொழுது இல்லை. அவை அழிந்துவிட்டது என்ற விவாதங்களும், செய்திகளும் வருகின்றன.

இவை உண்மையா? சிட்டுக் குருவிகள் தானாக அழிந்துவிட்டனவா..? செல்போன் கதிர்விச்சுதான் காரணம்’ என்று அதன் மீது பழி வேறு போட்டுவிட்டோம்.

சிட்டுக் குருவிகள் அழியவில்லை. மனிதனின் சுயநலத்தால் அவை மனிதர்களிடம் இருந்து விடுபட்டுக் கொண்டன!  மனிதர்கள் அருகில் வாழும் பறவை சிட்டுக் குருவியாகும். நம் வீட்டு முற்றத்தில் கூடு கட்டி, நாம் காயவைக்கும் தானியத்தை உண்டு வாழ்ந்துவந்தன.

இன்று எந்த வீடு, சிட்டுக் குருவிகள் கூடு கட்டும் அளவுக்கான சூழலில் உள்ளன. வீட்டு ஜன்னல்களையெல்லாம் அடைத்துவிட்டு ஏசி போட்டுக் கொள்கிறோம்! மரங்களற்ற கான்கிரிட் காடுகளாக  நகரங்கள் காட்சியளிக்கின்றன. இதில் சிட்டுக் குருவி எப்படி கூடு கட்டும்?

தானியம் காயவைக்கும் பழக்கம் முற்றிலும் இன்று இல்லை. கோணிப்பைகளில் அரிசிகளை மளிகை கடையில் வைத்து இருந்த காலம் போனது. ஒரு அரிசியும் கீழே சிந்தாத அளவு பாலித்தின் பை கொண்டு அரிசி வருகிறது. ஆக நாமும் தானியங்கள் காயவைப்பதில்லை, மளிகை கடை கோணிப்பைகளும் பாலிதீன் பையாக மாறிவிட்டது. அதனால் சிட்டுக் குருவிகள் நம்மை விட்டு நகர்ந்து , அவற்றுக்கான இடத்தை தேடிச் சென்று கொண்டு இருக்கின்றன.

நம்முடைய தேவைக்கு மட்டும் வாழ்ந்து கொண்டு இருப்பதால் செல்போன் கதிர்விச்சுதான் சிட்டுக் குருவிகளை அழித்துவிட்டது என்று சொல்லி வருகிறோம்.  இப்படி நம்மை சுற்றி இருக்கும் சூழலை ஏதோ ஒரு விதத்தில் அழித்து கொண்டு இருப்பதற்கு நாம் காரணமாக இருக்கிறோம். இதை உணர்ந்து சிறிய அளவில் நம் பங்களிப்பை செய்தாலே போதும் சுற்றுச்சூழலை காப்பாற்றிவிடலாம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன் வைத்து உலகம் முழுவதும் பல போட்டிகள், விழிப்புணர்வுகள் நடக்கிறது. ஓவியம் வரைதல், இயற்கை வினாடி வினா, காணொளி வழியாக இயற்கையை அறிமுகப்படுத்துவது என்று நடைபெறுகிறது.

https://www.genevaenvironmentnetwork.org/world-environment-day/ என்ற வலைத்தளத்தில் இயற்கை சார்ந்து இந்த மாதம் நடைபெறும் விழிப்புணர்வு விஷயங்கள் பட்டியலிட்டு உள்ளனர். இது போல் இன்னும் எண்ணற்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. நீங்களும் உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் சிறுவர்களுக்கு சிறு போட்டிகள் வழியாக இயற்கை பற்றிய விழிப்புணர்வை  முன்னெடுக்கலாம்.

ஒரு மாநிலத்தின் மொத்தம் பரப்பளவில் 33சதவிகிதம் காடாக இருக்கவேண்டும். ஆனால் 17.41 சதவிகிதம் மட்டுமே தமிழகத்தில் உள்ளது.  ஆண்டுக்காண்டு இதுவும் வளர்ச்சித் திட்டங்கள் பெயரில் சுருக்கப்பட்டுக் கொண்டே வருகிறது!

பல நூறு வருடங்களாக இயற்கையை அழித்து அதுதான் நாட்டின் வளர்ச்சி என்று மனிதன் நினைத்து செயல்பட்டான். ஆனால் இந்த நூற்றாண்டில்  இயற்கையை அழைப்பதால் ஏற்படும் இன்னல்களை அனுபவித்து வருகிறான்!  இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனித இனம் எதிர்காலத்தில் வாழமுடியும் என்ற நிலைக்கு மனிதன் வந்துள்ளான் என்று Jacques-Yves Cousteau சொல்லியுள்ளார்.

இயற்கையை கற்றுக் கொள், இயற்கையை நேசி, இயற்கையின் அருகில் செல், ஒரு போதும் இயற்கை உன்னை கைவிடாது என்று Frank Lloyd Wright பேசி உள்ளார்.

உலகில் ஒரே ஒரே மாஸ்டர் இயற்கை மட்டுமே என்று Rembrandt எழுதி உள்ளார்.

ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத வார்த்தை Development  என்று சூழலியாளர் தியோடர் பாஸ்கரன் குறிப்பிட்டு உள்ளார். ஆக இன்று ஒரு நாள் மட்டும்தான் என்றில்லை, வாழ்நாள் முழுவதும் நாம் நம் சூழலை, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை நம் மனதில் நிலை நிறுத்துவோம். நம் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் ஆரம்பத்தில் இருந்தே புரிய வைப்போம்.

கட்டுரையாளர்; செழியன்.ஜா – சுற்றுச் சூழல் களச் செயற்பாட்டாளர். காக்கை கூடு பதிப்பக நிறுவனர்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time