என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்..?

-சாவித்திரி கண்ணன்

வழக்கத்திற்கும் அதிகமாகவே இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்த விமர்சனங்கள் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன!

திமுக அரசின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் அதிகரித்துள்ளதன் விளைவாகவே இதை பார்க்க முடிகிறது.

இன்றைய கவர்னர் உரையில் வரவேற்கதக்க முதல் அம்சம் ஒரு திராவிட இயக்க அரசாங்கத்திற்கு இசைவாக கவர்னர் பேசியுள்ளார் என்பதே! எனினும், இது சந்தர்ப்ப சூழலுக்காக அவரது உதடு உரைக்கும் வார்த்தைகளே  என்ற புரிதல் இல்லாமல் நாம் புளகாங்கிதமடைந்துவிடக் கூடாது!

நீட் தேர்வு ரத்து முயற்சிகள், உழவர் சந்தை, விவசாயத்திற்கு தனி பட்ஜெட், தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை, சிங்காரச் சென்னை, 15 நாட்களில் ரேஷன் கார்டு, பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களை தடுக்க நடவடிக்கை, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெறும் முயற்சி..பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் எல்லாம் சிறப்பு! மகிழ்ச்சி!

வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் அலுவலங்களில் தமிழ் ஒரு இணை மொழியாக இருக்க வேண்டும்.அதற்கு சட்ட திருத்தம் வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். நல்லது. அதே சமயம் தமிழக அரசின் அலுவலகங்களிலே கூட தமிழைக் காட்டிலும் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை தருவது எப்போது மாற்றத்திற்கு வரும் என்று கேட்கத் தோன்றுகிறது. இதை ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு என்ன தடை?

தமிழக அரசின் ஆலோசகர்களாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.

மத்திய பாஜக அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம்.

மத்திய அரசின் நிதி அமைச்சக செயலாளராக பதவி வகித்த டாக்டர்.எஸ்.நாராயணன்.

நோபிள் பரிசு பெற்ற எஸ்தர் டாப்ளோ. மற்றும் ழான் த்ரே.

இந்த அறிவிப்பிற்கு ஒரு பக்கம் பலத்த வரவேற்புகளும், மற்றொரு பக்கம் பலத்த எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளன!

மேற்படியாளர்கள் மிகப் பெரிய திறமைசாலிகள், அறிவாளிகள் ஆகவே தமிழகத்தையே மாற்றிவிடுவார்கள் என பலரும் புகழ்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர். அவர்கள் எப்படிப்பட்டவர்களாக வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும்.

இப்போது நிதி அமைச்சராக உள்ள பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழ் நாடு மாநில வளர்ச்சி கொள்கைகுழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயரஞ்சன் மற்றும் அவரது குழுவினர்களே போதுமானவர்கள்! நிறைய ஆலோசகர்கள், அறிவாளிகள் சேர்ந்தால் வேலைகள் நடக்காது, விவாதங்கள் தான் நடக்கும்!

தன் மீதும், தன் சகாக்கள் மீதும் முதலமைச்சர் நம்பிக்கை வைக்க வேண்டும்!

முதலாவதாக இவர்கள் ஐவரும் தமிழ் நாட்டிற்கு வெளியே இருப்பவர்கள்! அந்நியர்கள் வந்து தான் நம் தலைவிதியை மாற்ற முடியும் என நினைப்பதும், நம்புவதும் சுய அறிவின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இயல்பாகும்!

இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து, உழன்று  நாளும், பொழுதும் அக்கரையோடு சிந்தித்தும்,எழுதியும் வரும் எண்ணற்றோர் ஏன் ஆட்சியாளர்கள் கண்களுக்கு தெரிவதில்லையோ!

எங்கோ இருக்கும் – தரப்போகும் சம்பளத்திற்காக செயல்படப் போகும் – அறிவாளியைவிட உள்ளூரிலே உறுத்தாக சிந்தித்து எழுதுபவர்களை ஏன் பயன்படுத்த மறுக்கிறார்களோ!

கலைஞர் அவர்கள் கல்வியாளர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணனை தன் ஆலோசகராக பயன்படுத்தி பல சாதனைகளை நிகழ்த்தியது நியாபகம் வருகிறது.

இதில் அரவிந்த் சுப்பிரமணியம் பாஜக அரசில் நான்காண்டுகள் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். நாடு இன்று சந்திக்கும் பல சிக்கல்களில் அவருக்கு எவ்வளவு பங்கிருக்குமோ தெரியவில்லை! பாஜக அரசு ஒருவரை பயன்படுத்தி இருக்கிறது என்றால்.., அதுவே அவரை நாம் நிராகரிக்க போதுமானது என்பேன். ஐ,எம்.எப்பில்  வேலை பார்த்தவரான அரவிந்த் சுப்பிரமணியை தமிழ்நாட்டிற்கு அழைத்து பொறுப்பு தந்தால், அவர் தமிழ் நாட்டிற்கு பயன்படமாட்டார். தமிழ்நாட்டை பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்குத் தான் பயன்படுவார்.

இந்த ஆலோசகர்களுக்காக தரப்படும் சம்பளங்கள் எவ்வளவோ..! அவர்கள் வந்து போகத் தரப்படும் விமானக் கட்டணங்கள், வந்தால் தங்க வைக்கும் செலவுகள் ,தரப்படும் சலுகைகள் அனைத்தும் மக்களின் வரிப்பணம்! இவ்வளவையும் பெற்றுக் கொண்டு இவர்கள் வெளி நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தமிழ் நாட்டை விற்கவே துணை போவார்கள்.

ரகுராம் ராஜனும், அரவிந்த் சுப்பிரமணியனும் தங்கள் பதவி காலத்திற்குப் பிறகு அமெரிக்காவை நோக்கி ஓடியவர்கள்! சொந்த நாட்டிற்கு சுயமாக தானாக ஒரு துரும்பை எடுத்து போடக் கூட துப்பில்லாதவர்கள்!

நோபிள் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ ஜெயலலிதா காலத்திலேயே தமிழகத்திற்கு அழைக்கப்பட்டு சில பிராஜக்டுகள் தரப்பட்டவர் தான். அதனால் தமிழகம் என்ன நன்மை கண்டு, மாற்றம் பெற்றது என்பது தெரியவில்லை.

பெல்ஜியத்தின் ழான் த்ரே இந்தியாவின் அடித்தள மக்களின் வாழ்க்கை, மற்றும் பொருளாதார நிலை குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். கவனத்திற்குரிய பல்வேறு புத்தகங்கள் எழுதியவர் என்பதை நாம் மறுக்கவில்லை. அதற்கு வேண்டுமானால் அழைத்து ஒரு விருது தந்துவிடலாம்.

மொத்தமுள்ள ஐவரில் மூவர் பிராமணர்கள், இருவர் ஆங்கிலேயர்கள்!  அந்தணர்கள் மீதும் ஆங்கிலேயர்கள் மீதும் இருக்கும் கண்மூடித்தனமான மோகம் நாட்டிற்கோ, மக்களுக்கோ நல்லதல்ல!

சுயத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், உலகத்தின் அனைத்து அறிவாளிகளை அழைத்து வந்தாலும் அதில் பலன் பெறப் போவது கண்டிப்பாக நாமாக இருக்கமாட்டோம்!

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time