குத்தகைக்கு விட்டு குந்தி தின்பது தேச அவமானம்!

-சாவித்திரி கண்ணன்

தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் அரசின் வசமுள்ள சொத்துகள், மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு  குத்தகைக்கு தரப் போகிறார்களாம்! இந்தியாவின் சமானிய குடிமக்களுக்கு உயர்தரத்தில் அணுகக்கூடிய வகையில் உள் கட்டமைப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இதை செய்வதாக சொல்லப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் 25 விமான நிலையங்கள், 400 ரயில் நிலையங்கள், 15 ரயில் விளையாட்டு அரங்கங்கள், 26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், ,சுரங்கம், எரிவாயுக் குழாய் உள்பட 12 அமைச்சகங்களின் 20 சொத்துக்கள் குத்தகைக்கு விட்டு நிதி திரட்டப்பட உள்ளது.

அதாவது, ”எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துவதைப் போல, நாங்களொன்றும் அரசு சொத்தை விற்கவில்லை.குத்தகைக்குத் தான் விடுகிறோம்” என்கிறார்கள்!

ஏன் குத்தகைக்கு விட வேண்டும்..? அரசாங்கத்தால் அதை நிர்வகிக்க முடியவில்லை, அதற்கான நிர்வாகத் திறமை, உழைப்பு, நேர்மை பற்றாகுறையால் விற்கிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் தானே!

சுதந்திரம் பெற்றது தொடங்கி 74 ஆண்டுகளிலான கடும் முயற்சியால், அர்ப்பணிப்பால் உருவாக்கப்பட்டு இது நாள் வரையிலான அரசாங்கங்களால் நிர்வகிக்கப்பட்டவை தாமே இவைகள்!

உங்களால் ஏன் முடியவில்லை. ஏனென்றால், நீங்கள் உட்கார்ந்து தின்று பழக்கப்பட்ட பரம்பரை! உழைத்து காசு சேர்த்தால் அது பெருமை! உட்கார்ந்து சாப்பிட்டால் அது சிறுமை என்பதை உணராத பண்ணை, மிராசுதாரர்களின் வாரிசுகளால் உருவாக்கப்பட்ட கட்சி தானே பாஜக!

தேசிய நெடுஞ்சாலைகளை  ரூ.1,62,200 கோடிக்கும், ரயில்வே  வழித்தடங்களை  ரூ.1,52,496 கோடிக்கும் குத்தகைக்கு கொடுக்கிறார்கள் என்றால், வாங்கியவர்கள் இவற்றில் கொடுத்த பணத்தையும் தாண்டி நல்ல லாபம் பார்க்காமல் இருக்கமாட்டார்களே! இதனால் இயல்புக்கு மாறாக அதிக பேருந்து மற்றும் ரயில் கட்டணங்கள் உயரும்! சரக்கு கட்டணங்களும் உயரும். விலைவாசிகளும் உயரும்!

மின் உற்பத்திக்கு ரூ.39,832 கோடியும், மின் பகிர்மானத்திற்கு  ரூ.45,200 கோடியும் குத்தகைப் பணம் கொடுக்கிறார் என்றால், அவர்   சமூக சேவை செய்யவா வருவார்..? குறைந்த கூலி, நிறைந்த லாபம் என்பது தானே முதலாளிகளின் மந்திரச் சொல்!   இனி தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாகுமே! மின் கட்டணங்களும் தாறுமாறாக உயருமே!

இந்த ரீதியில் இயற்கை எரிவாயு பைப்லைன்    ரூ.24,462 கோடி ! பைப்லைன் உற்பத்தி ரூ.22,504 கோடி! தொலைத் தொடர்பு ரூ.35,100 கோடி! கிடங்குகள்   ரூ.28,900 கோடி! சுரங்கம் ரூ.28,747 கோடி! விமான நிலையங்கள் ரூ.20,782 கோடி! துறைமுகங்கள் ரூ.12,828 கோடி! விளையாட்டு அரங்கண்ங்கள்  ரூ.11,450 கோடி! நகர்புற ரியல் எஸ்டேட்    ரூ.15,000 கோடி..என எல்லாவற்றையும் தூக்கி குத்தகைக்கு விட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தின்மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில், 2021-22-லிருந்து 2024-2025-ம் ஆண்டு வரை மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதில் என்ன பயன்? ‘குந்தி சாப்பிட்டால் குன்றும் அழியும்’ என்பது பழமொழி. குத்தகைக்குவிடுவதா வளர்ச்சி..? தன் மக்களையே சுரண்டி பணம் ஈட்டுவதால் பலன் என்ன..? மக்கள் பலன் பெறுவதில் தான் வளர்ச்சி உள்ளது!

”டாஸ்மாக் மது விற்பனையால் அரசுக்கு வருமானமா..? இழப்பா..?” என்றால், ”கண்டிப்பாக பேரிழப்பு தான். உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பகுதி உடல் நலன் குன்றி நோயாளியாகிறது என்றால், அவன் நாட்டுக்கும் பாரம்,வீட்டுக்கும் பாரமாகிவிடுகிறான் என்பதை கண் கூடாக காண்கிறோமே..!”

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை குத்தகைவிட்டு பணமாக்கி இதன்மூலம் அரசுக்கு வருமானத்தை ஈட்டும் வழியை உருவாக்குவது தான் தேசிய பணமாக்கல் திட்டம் என நிதி ஆயோக் விளக்கம் அளித்துள்ளது. அப்ப அரசாங்கத்தையும் கூட சேர்த்து தான் குத்தகைவிட்டுப் போங்களேன்.

நிர்வாகமும், தெரியாது, நேர்மையும் கிடையாது, உழைக்கவும் தயாரில்லை..என்றால், எதற்கு அரசாங்கம்..? நாடாளுமன்ற கட்டிடத்தை குத்தகைக்கு விடுங்கள், உள்ளே நுழையும் எம்.பிக்கள் இவ்வளவு கொடுத்து தான் நுழைய வேண்டும். எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ..அதற்கு தக்க கட்டணம் மணிக்கணக்கில் வசூலிக்கப்படும் என்று வசூலித்து தாங்கள் லாபம் பார்த்து அரசுக்கும் தருவார்கள் தானே!

பொதுத் துறை நிறுவனம் எனும் விதை நெல்லை விற்கும் மாபாவிகள்!

”மக்கள் பணத்தில் இந்தியாவின் ஆபரணங்களான பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. 70 வருடமாக அரசு கஷ்டப்பட்டு உருவாக்கிய நிறுவனங்கள் தற்போது தனியார்வசம் சென்று கொண்டுள்ளன! அரசு துறையில் ஒரு சில தனியார் நிறுவனங்களை மட்டும் அனுமதித்து, அவர்களின் ஆதிக்கத்தை வளர்த்துவிட பாஜக அரசு அரசு நினைக்கிறது. இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.இதனால் மக்களின் வேலைவாய்ப்புதான் பாதிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் கோலோச்சுவதால் வேலைவாய் குறையும். இளைஞர்களின் வேலை வாய்ப்பு ஏற்கனவே பறிக்கப்பட்டுவிட்டது, விவசாய சட்டங்கள் மூலம் விவசாயிர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டது. தனது சில பணக்கார நண்பர்கள் பலன் அடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பிரதமர் மோடி இது போன்ற திட்டங்களை கொண்டு வருகிறார்.” என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

‘அரசாங்கம் என்பது வெறும் அதிகாரத்திற்கு மட்டுமானதல்ல, அறத்தை நிலை நாட்டவும் தான்’ என்பது புரியாதவர்கள் ஆட்சிக்கு வந்திருப்பது நம் போதாத காலமாகும்.

பொதுத் துறையை பொசுக்கவா மல்லிகா சீனிவாசன்..?

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவல்ல பணம் ஈட்டும் வழிமுறைகள்! வெள்ளைக்காரனை எதிர்த்து கப்பல்விட முயன்றாரே வ.உ.சிதம்பரனார்! ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டார். நாம் செய்ய வேண்டும். அதை சேவை நோக்கோடு செய்ய வேண்டும் என்று தானே! இன்று குப்பை அள்ளுவது தொடங்கி குடிநீர் விநியோகம் வரை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு குத்தகைவிட விரும்புகின்றனர் ஆட்சியாளர்கள்! இது அவமானம்! அரசாங்கம் என்ற இயந்திரத்தை இயக்கி, மக்களுக்கு தொண்டு செய்யத் தான் மக்களால் ஓட்டு போடப்பட்டது!

சொத்து மற்றும் பணம் ஈட்டுவது என்பது உற்பத்தி சார்ந்ததாக இருந்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் நலமாகும். அது வேலை வாய்ப்பை தருவதோடு,சேவையும், இணைந்ததாக இருந்தால் அது தான் அறம்! இதெல்லாம் அறத்தின் வழி செயலாற்ற விரும்பும் ஆட்சியாளர்களுக்குத் தான் புரியும். தனியார் கைகளுக்கு குத்தகைக்கு போவது காலப் போக்கில் தனியாருக்கே கைமாறுவதாகவும் கூட ஆகலாம்! அதன் முதல் கட்டம் தான் இந்த குயுக்திகள் நிறைந்த குத்தகை திட்டம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time