திரிபுரா கலவரங்கள் அரசே ஆதரித்த வன்முறையா..?

- சாவித்திரி கண்ணன்

எங்கெல்லாம் மதச் சிறுபான்மையினர் உள்ளனரோ.., அங்கெல்லாம் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்! வங்காளதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் துர்கா பூஜை கொண்டாடும் போது முஸ்லீம்களால் தாக்கப்பட்டனர்! அதில் ஆறுபேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த சம்பவம் மூன்றுபுறமும் வங்காளதேசத்தால் சூழப்பட்ட திரிபுராவில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது! வங்கதேசக் கலவரம் நடந்தது அக்டோபர் 15 தில்! அதைத் தொடர்ந்து திரிபுராவில் அக்டோபர் 22 தொடங்கி 27 வரை தொடர்ந்து கலவரம் நடந்துள்ளது. முஸ்லீம்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்!

திரிபுராவில் நீண்ட நெடுங்காலம் மாணிக்சர்கார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்தது. அப்போதெல்லாம் பக்கத்தில் உள்ள வங்க தேசத்தில் என்ன கலவரம்னடந்தாலும், அது திரிபுராவில் உள்ள இந்து-முஸ்லீம் ஒற்றுமையை குலைத்ததில்லை! 2018ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலங்கள் தீவைக்கப்படுவது, லெனின் சிலைகள் தகர்ப்பு ஆகியவற்றின் உச்சமாக இது வரை 21 கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

திரிபுரா கலவரம் குறித்த அறிக்கையை மாநில அரசிடம் தேசிய மனித உரிமை ஆணையம் கேட்டு உள்ளது.

திரிபுராவில் 8.6% முஸ்லீம்கள் உள்ளனர். அவர்கள் வங்க தேசக் கலவரத்தை ஆதரிக்கவில்லை. தற்போது பாஜக ஆட்சியில் அவர்கள் தாங்கள் முற்றிலும் பாதுகாப்பற்று உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்ட உண்மையறியும் குழு திரிபுராவில் கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிட்டு, பலதரப்பட்ட மக்களிடம் விசாரித்து பெற்ற தகவல்களை டெல்லியில் வெளியிட்டுப் பேசினர். இந்தக் குழுவில் ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்களின் ஒருங்கிணைப்பு குழுவும், மக்கள் சிவில் உரிமைக் கழகமான பி.யு.சி.எல் அமைப்பும் அடங்கும்.  இவர்கள், திரிபுராவில் ஆய்வு நடத்திய பிறகு பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை தந்தனர். அதில், ”தொடர்ந்து நான்கு நாட்கள் 51 இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. சிறுபான்மை மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். இதில் 12 மசூதிகள் சேதமடைந்துள்ளன! 9 கடைகள், மூன்றுவீடுகள் சூறையாடப்பட்டு, எரிக்கப்பட்டு உள்ளன! பல கார்கள் தீ வைக்கப்ப்ட்டு உள்ளன!ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்! இதில் போலீசார் போதுமான முனைப்பு காட்டி கலவரத்தை தடுக்கவில்லை.

மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சில குடும்பங்கள் முன்கூட்டியே பயந்து வீட்டை காலிசெய்து போயுள்ளனர். அவர்கள் வீட்டையும் சூறையாடி உள்ளனர். பல குடும்பங்கள் நான்கு நாட்கள் உயிரை கையில் வைத்துக் கொண்டு வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இன்னும் சில முஸ்லீம்களை இந்துக்கள் தங்கள் வீட்டில் வைத்து காப்பாற்றி உள்ளனர்! கலவரத்திற்கு பிறகு சில குடும்பங்கள் அடியோடு புலம் பெயர்ந்து நகர்புறத்திற்கு குடியேறி உள்ளனர்.

நாங்கள் விசாரித்த வகையில், இந்தக் கலவரம் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டு உள்ளது. வங்காளதேச கலவரத்தைத் தொடர்ந்து தாங்கள் தாக்கப்பட வாய்ப்புள்ள சூழலை ஊகித்துக் கொண்ட இஸ்லாமிய அமைப்பான ஜமாத் இ உல்மா முதலமைச்சர் பிப்லாப் குமாரை சந்தித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால், அந்த வேண்டுகோள் அலட்சியப்படுத்தப்பட்டது வேதனையானது.

       திரிபுரா கலவரத்தை கண்டித்து போராட்டம்

அதுவுமின்றி, வங்காள கலவரத்தை கண்டித்து ஊர்வலம் நடத்த பஜ்ரங்தல், வி.ஹெச்.பி, ஹிந்த் ஜாக்ரன்மன்ஞ் ஆகிய இயக்கங்கள் ஊர்வலம் நடத்தினால்.., அதன் நோக்கம் வன்முறை என்பது அரசுக்கு தெரியாதா..? அவர்களுக்கு எச்சரிக்கையுடன், கட்டுப்பாடுகளை விதித்து போலீஸ் கண்காணிப்பை பலப்படுத்தி இருக்கலாமே. இவை எதையும் மாநில அரசு செய்யவில்லை. ஆக நிர்வாகத் திறமையின்மை. அரசின் கையாகாலத்தனம் ஆகியவையே இந்த கலவரத்திற்கு காரணம்’’ எனக் கூறினார்கள்.

இப்படியாக உண்மையை போட்டு உடைத்த உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் மீது தற்போது தீவிரவாத தடுப்பு சட்டமான உபா சட்டம் பாய்ந்துள்ளது! இது அனைத்து தரப்பிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போல கலவரம் நடந்த பகுதிகளில் ஆய்வு நடத்தி உண்மைகளை வெளிக் கொணர்வது பலகாலமாக நடப்பது தான். அந்த வகையில் இந்த குழுவில் இடம் பெற்ற அமித் ஸ்ரீவத்சவ், ஹாஸ்மி, முகேஷ் மற்றும் அன்சாரி இந்தூரி ஆகியோர் மீது உபா சட்டம் பாய்ச்சப்படுவது இது வரை நடந்திராதது. இதன் மூலம், ‘திரிபுரா கலவரத்தை அரசே ஆதரிக்கிறதா..?’ என்ற சந்தேகம் வலுப்பட்டு வருகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time