விலங்குகள் மனிதர்களைக் கொல்ல விரும்புவதில்லை..!

-செழியன்.ஜா

விலங்குகளால் மனிதன் இறப்பதை விட, மனிதனால் காட்டு விலங்குகள் இறப்பது நூறு மடங்கு அதிகம்..! புலால் உண்ணும் விலங்குகள் பொதுவாக மனிதனைக் கொல்வதில்லை என்பது ஆச்சரியமாகத் தெரிந்தாலும்,அதுவே முற்றிலும் உண்மையாகும். மனிதன்-விலங்கு மோதல் சூழல் எப்படி ஏற்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்..!

இயற்கையாக விலங்குகளுக்கு மனிதன் இரை கிடையாது. சட்டப்படி மனிதனுக்கும் காட்டு விலங்குகள் உணவு கிடையாது. இப்படியிருக்க விலங்குகள் ஏன் மனிதனைக் கொல்கின்றன…? சிறுத்தை ஒன்று  லாரி ஓட்டுனரை அதிகாலை கொன்றது, புலி மனிதனை அடித்திழுத்துச் சென்றது,யானை வன ஊழியரைத் தாக்கியது என்று பத்திரிகையில் அவ்வப்பொழுது செய்திகள் வரும். இதே வேளையில் நாட்டில் எண்ணற்ற சிறுத்தை, புலி, யானை போன்றவற்றை மனிதன் வேட்டையாடி கொல்வது, கடத்துவது என்று நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இவை அதிகம் கவனத்திற்கு வருவதில்லை..

புலி, சிறுத்தை, யானை போன்றவை கணக்கீடு நடக்கும் போது மட்டுமே இந்த விலங்குகள் குறைந்து வருவது தெரியவரும்..!

எனக்கு  நேரடியாகத் தெரிந்த நிகழ்வு இங்கு குறிப்பிடுகிறேன். கோவை-மருதமலை கோவில் அடிவாரத்தில் நிறைய வீடுகள் கட்டிவருகிறார்கள். இந்த இடம் காடு சூழ்ந்த பகுதி. யானைகள் உலாவும் இடம் ஆகும். இந்த குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வந்துவிட்டது அதனை விரட்ட இப்படி வெடி வெடிக்கிறார்கள் என்றார்கள்..

இரவு நேரம் தங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்பு போன் செய்து யானை ஏதாவது தெருவில் நடமாட்டம் இருக்கிறதா என்று கேட்டு வரும் பழக்கமும் உள்ளது. அப்படி யானை இருந்தால் மீண்டும் வெடிச் சத்தம் கேட்கும்.  பகல் வேலை ஒரு நாள், வீட்டின் பின்புறம் வீட்டிலிருந்தவர்கள் அமர்ந்து இருந்தார்கள்.  தோட்டத்திலிருந்த  வாழை மரத்தில் தும்பிக்கையை நுழைத்து உள்ளது யானை. இவர்கள் சற்று தள்ளி இருந்ததால் தப்பித்து அப்படியே  தவழ்ந்து  வீட்டிற்குள் சென்று விட்டார்கள். தினமும் இதேபோல் ஏதாவது ஒரு வீட்டில் நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வு ஆகும்.

அந்த பகுதியிலிருந்த ஒரு தெருவில் இரவு 9 மணியளவில் யானை சென்று கொண்டு இருப்பதை வீடியோவில் அனுப்பி இருந்தார்கள்.. இரவு இரண்டு மணியளவில் சிறுத்தை ஒன்று இந்த பகுதியைக் கடந்து பாரதியார் பல்கலைக்கழகம் வழியாகச் செல்வதாக அங்கு இருக்கும் காவலர் சொன்னதாகச் சொன்னார்கள். சிறுத்தைகள் வாழும் பகுதியும் ஆகும். இவை அனைத்தையும் மேலோட்டமாக பார்க்கும்பொழுது உடனே தோன்றுவது யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம். உடனே அவற்றை பிடிக்க வேண்டும், இப்படியே இது தொடர்ந்தால் மக்கள் அச்சத்துடனே வாழ வேண்டியதிருக்கும் என்று தோன்றும். இந்த கருத்து சரியென்று தோன்றினாலும் அவையும் மேலோட்டமே ஆகும்.  ஆனால் உண்மை நிலை என்ன ?

கோவை காந்திபுரத்தில் யானை நுழைந்தது என்ற செய்தியை என்றாவது படித்து இருப்போமா? காந்திபுரத்தில் வசிக்கும் மக்கள் தீபாவளி பண்டிகையில் மட்டுமே பட்டாசு வெடிப்பார்கள் மற்ற நாட்களில் இல்லை. காரணம், யானைகள் அங்கு இல்லை. மனிதன் வாழும் பகுதி என்பதால் யானைகள் இல்லை. ஆனால் மருதமலை யானை, சிறுத்தைகள் வாழும் பகுதி. அங்கு நாம் சென்று வீடு காட்டினால் யானை வரவே செய்யும். பல ஆயிரம் வருடங்களாக யானைகள் நடமாடிய இடம். ஒரே  தெருவில் நடமாட இவை தெரு நாய்களல்ல.  பரந்த காட்டுப் பகுதியில் தனக்கென்று ஒரு பாதையை அமைத்து அதில் சென்று வந்து கொண்டிருக்கும்.

யானை ஒரே இடத்தில் நின்று வாழும் உயிரினம்  இல்லை என்பதால் அவற்றுக்கு மிகப் பெரிய வாழிடம் வேண்டும்.  காரணம் ஒரு நாளில் 200 கிலோ உணவும், இருநூறு லிட்டர் நீரும் அருந்தும். இவை ஒரே இடத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்காக மிக நீண்ட பகுதியை தேர்ந்தெடுத்துச் சென்று வந்து கொண்டு இருக்கும். அப்படி யானை செல்லும் வழித்தடத்தில் நாம் வீடு கட்டினால் யானையின் அச்சுறுத்தலுக்கு ஆளாவோம். அப்படித்தான்  மருதமலை அடிவாரத்தில் வீடு கட்டிவாழந்து வருபவர்கள் நிலைமை உள்ளது.

ஆரம்பக் காலத்தில் மனிதர்கள்-விலங்குகள் இணைந்தே காட்டில் வாழ்ந்து வந்தார்கள். அன்று நகரம் என்பது இல்லை. உலகமே காடுதான். நாகரிகம் என்ற பெயரில் மனிதன் ஒரே இடத்தில் தங்கி வாழ ஆரம்பித்த போதுதான் இடம் பிடிக்கும் ஆர்வத்தில் சண்டை போடத் தொடங்கினான். விலங்குகள் நம்மை விட்டு விலக ஆரம்பித்தன. பல ஆயிரம் வருடங்கள் கடந்தது விலங்குகளைக் காடுகளில் மட்டுமே வாழும் உயிரினமாக மாற்றிவிட்டோம். இன்று விலங்குகளோடு வாழும் மனிதர்களைப் பழங்குடி மக்கள் என்று வகைப்படுத்திவிட்டோம். நாம் நாகரிக மனிதனாகிவிட்டோம்.

நகரத்தில் வாழும் மனிதன் காடுகளில் வாழும் விலங்குகளிடம் உள்ள உறவுமுறையை இழந்ததால் விலங்குகளை எதிர் கொள்ளும் திறனையும் இழந்துவிட்டோம். பட்டாசு வெடித்து விலங்குகளை விரட்டும் நிலைக்கு வந்துவிடோம் .  ஆனால் விலங்குகள் எப்படி  இயற்கையாகப் படைக்கப்பட்டதோ அப்படியே இன்றும் வாழ்ந்து வருகின்றன.

ஒரு நாட்டின் பரப்பளவில் 33 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு காடுகள் பரப்பளவு  2019 அறிக்கையின்படி 20.67 சதவிகிதம் மட்டுமே உள்ளது.  இவை உயருமா என்றால் சந்தேகமே. மனிதர்கள் எந்த இடத்தையும் விடாமல் கட்டிடம் கட்டிக் கொண்டே இருப்பதால் காடுகள் அளவு உயர்வது போல் தெரிந்தாலும் 33 சதவிகிதத்தைத் தொடுவது கனவாகவே கூடப் போகலாம்.

விலங்குகள் பெரும்பாலும் மனிதர்களைக் கண்டால் விலகியே செல்ல நினைக்கும். உதாரணமாக சிறுத்தை கூச்ச சுபாவம் உள்ள மிருகம் தான்.  மனிதர்களைத் தாக்கவோ, அச்சுறுத்தவோ செய்யாது. விலங்கு, பறவை ஆராய்ச்சியாளர் ஜெகநாதன் இப்படிக் குறிப்பிடுகிறார். அவர் ஒரு முறை காட்டு பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தபொழுது நடைபாதையில் சிறுத்தை படுத்து இருந்ததை பார்த்து அவை நகரட்டும் என்று ஒதுங்கி மரத்தின் பின்புறம் நின்று இருக்கிறார். சில நொடிகளில் சிறுத்தை இவரைக் கவனித்து வேகமாக அருகில் உள்ள புதரில் ஓடி மறைந்ததாகச் சொன்னார். இதை இன்னும் அழுத்தமாக எங்களைப் பார்த்துத் தலைதெறிக்க ஓடிய சிறுத்தை என்று குறிப்பிடுகிறார். காரணம் சிறுத்தையின் குணம் அப்படி!. தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைகளை எதிர் கொள்ளாத மனிதர்கள் இருப்பது மிகக் குறைவு. சாதாரணமாகவே அவர்கள் சிறுத்தையை கடந்து செல்கிறார்கள்..!

புலியும் மனிதர்களைக் கண்டால் விலகியே செல்லும். புலி ஆராய்ச்சியாளர் உல்லாஸ் கரந்த், குட்டிகளுடன் இருந்த ஒரு தாய் புலியை எதிர் கொண்டதை தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். நான் இருப்பதைப் பார்த்து வேகமாக  ஜீப் நோக்கி வந்தது. கொஞ்சமும் பதட்டப்படாமல் இருக்க வேண்டும்  என்பதால்  அப்படியே  இருந்தேன்.. என் கூட இருந்தவர்கள் பயந்து   கீழே இறங்கி ஓடலாமா என்று முயற்சித்தனர். அவர்களிடம் மெல்லிய குரலில் வண்டியை விட்டு இறங்காதீர்கள் என்று சொன்னேன். ஆனால் வேகமாக வந்த புலி ஜீப்பிற்கு சில அடிகள் முன்பு பாதையை விட்டு விலகி புதரில் மறைந்ததது. புலியின் நடவடிக்கையை பற்றி நன்கு தெரியும் என்பதால் பதட்டம் கொள்ளவில்லை என்று குறிப்பிடுகிறார்.

குட்டிகளுடன் இருப்பதால் தாய் புலி எப்பொழுதும் மிக ஜாக்கிரதையாக இருக்கும். குட்டிகளுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் இருக்கச் சிறிது ஆக்ரோஷமாகக் கூட இருக்கும். இவர்கள் தன் குட்டிகளை ஆபத்து விளைவிக்க வந்தவர்கள் என்று நினைத்துப் பயமுறுத்த இப்படிச் செய்தது..  ஆகச் சிறுத்தை- புலி போன்ற பலம் வாய்ந்த விலங்குகள் மனிதர்களைப் பார்த்து அமைதியாகவே சென்றுவிடும்.

அப்போ மனிதர்களைச்  சிறுத்தை,  புலி கொல்வதில்லையா என்றால் நிச்சயம் கொல்லும். ஆனால் அவை அபூர்வமானது ஆகும். ஏன் கொல்கிறது ?

அதற்கு முன்பு புலி, சிறுத்தை  போன்ற விலங்குகள் இரை பிடிக்கும் முறைகளைப் பார்ப்போம்.

ஒரு புலியால் காட்டில் மானை நினைத்தவுடன் பிடித்து விட முடியாது. புலி பலமானது என்றாலும் பல முறை முயற்சி செய்த பிறகே மான் மாட்டும். உயிருக்கு ஓடும் விலங்கு, இரைக்கு ஓடும் விலங்கு இரண்டில் பெரும்பாலும் உயிருக்கு ஓடும் விலங்கே வெற்றிபெறும். அதனால் மான்தான் அதிக முறை வெற்றிபெறும். எட்டு முறை முயற்சி செய்தால் ஒரு முறை மான் மாட்டும் புலிக்கு. மற்ற இரைகொல்லி விலங்குகளுக்கும் இப்படியே இரை மாட்டும்.

சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் மனிதர்களைக் கொன்று சாப்பிடும் பழக்கத்திற்கு வந்தால் அதற்குப் பல காரணங்கள் உண்டு.

ஒரு புலிக்கு வயதானால், சண்டை ஏற்பட்டு பல் உடைந்தால், முள்ளம்பன்றி தாக்கி உடல் காயம்பட்டால், கால் பலவீனம் அடைந்தால் மான் கிடைப்பது மிகச் சிரமமாகிவிடும். நீண்ட நாள் பட்டினி இருக்கவேண்டிய நிலை வரும். உடல் வலு இழந்து கம்பீரம் குறைந்து காட்டில் நடமாடிக் கொண்டு இருக்கும்.  இந்த நிலையில் வீட்டு வளர்ப்பு விலங்குகளை அடித்துச் சாப்பிடலாம். காரணம் சுலபமாக இவை மாட்டிவிடும். இன்னும் சில புலிகள்  மனிதனைக் கொன்று சாப்பிடலாம். சில நாட்களிலே மனிதனை அடித்துச் சாப்பிடுவது மிகச் சுலபம் என்று இந்த விலங்குகளுக்குத் தெரிந்துவிடும். மான் துரத்திச் சென்று பிடிக்க வேண்டும் ஆனால் மனிதன் மிகச் சுலபமாக மாட்டிவிடுகிறான் என்று அதன் நினைவில் நன்கு பதிந்துவிடும்.

சிறுத்தை, புலியைப் பார்த்தால் அந்த பயத்திலேயே மனிதனுக்குப் பாதி உயிர் போய்விடும்.  மனிதர்களை அடித்துச் சாப்பிடும் சிறுத்தை அந்த இடத்தில் இருந்தால் மனிதனை  மிகச் சுலபமாக அடித்துக் கொன்றுவிடும். சாதாரணமாக மனிதனைப் பார்த்தால் பயந்து ஓடும் சிறுத்தை இங்கு முற்றிலும் மாறுபட்ட குணத்தைக் காட்டும்

அனைத்து காயம்பட்ட, வயதான புலிகளும் மனிதனைச் சாப்பிடாது. அவற்றில் சில மட்டுமே மனிதர்களைத் தாக்கும் நிலைக்கு வரும். இப்படி ஆட்கொல்லி புலிகளாக மாறுவது அபூர்வமான நிகழ்வாகும்.

’வேட்டை இலக்கியம்’ என்ற புத்தகம் எழுதியுள்ள ’ஜிம் கார்பட் தன்னுடைய “குமாயுன் புலிகள்” புத்தகத்தில்  மனிதர்களைக் கொன்று சாப்பிடும் புலியை எப்படி சுட்டு பிடித்தார் என என்று எழுதி இருப்பார்.. புத்தகத்தின் சுவாரஸ்யத்திற்கு நிறையச் சரடுகளையும் சேர்த்து எழுதி இருப்பார்.

ஆட்கொல்லியாக மாறிய புலி பகல்-இரவு என்றெல்லாம் பார்க்காது! எந்த நேரத்திலும் மனிதனைத் தாக்கிச் சாப்பிடும்.  ஆனால் சிறுத்தை இதில் மாறுபட்டது. இரவு மற்றும் அதிகாலை போன்ற நேரத்தில் மட்டுமே பெரும்பாலும் மனிதனைத் தாக்கும்..! சிறுத்தைக்கு மனிதனை எதிர்கொள்ளும் பயத்தில் இருள் சூழ்ந்த நேரத்தில் இப்படிச் செய்யும். பத்திரிகைகளிலும் சிறுத்தையால் தாக்கிக்கொல்லப்பட்ட மனிதர்கள் குறித்த செய்திகளை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.

இப்படி ஆட்கொல்லியாக இந்த விலங்குகள் மாறிவிட்டால் இவற்றை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பது உண்மை. போகப் போக  மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கும் இவை வரத் தொடங்கும். பெரியவர்கள்-சிறியவர்கள்-குழந்தைகள் என்றெல்லாம் பார்க்காது என்பதால்,  இந்த ஆட்கொல்லி புலி அல்லது சிறுத்தையைக் கொல்லவேண்டும் அல்லது உயிருடன் பிடித்து அடர் காட்டில் விட்டுவிடவேண்டும்..

அடர் காட்டில் விட்டாலும் இவை மனிதர்களைத் தேடி வரவே செய்யும். அதனால் சாதாரணமான புலி, சிறுத்தை போன்று இவற்றைப் பார்க்காமல் இவ்வகை ஆட்கொல்லி புலி, சிறுத்தையை சுட்டு பிடிப்பதே ஒரே வழி. ஆனால் ஒரு புலி ஆட்கொல்லியாக மாறியுள்ளதைக் கண்டுபிடிப்பது மிக மிகச் சிரமம். அதுவும் புலி, சிறுத்தை அதிகம் நடமாடும் காட்டில் எவை ஆட்கொல்லி புலி என்பதை உறுதிப்படுத்துவதும் மிகக் கடினமே.

மனிதர்கள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள் அல்லது உயிரிழந்து வருகிறார்கள் என்று தெரியவந்து இது புலியோ, சிறுத்தையோ செய்து இருக்கலாம் என்று உறுதிப்படுத்தி, எந்த சிறுத்தை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால், சாதாரணமான அப்பாவி சிறுத்தை உயிர் இழக்கவேண்டி வரும்..சமீபத்தில் கூடலூரில் இவ்வகை புலி ஒன்றைச் சுட்டுப் பிடித்தனர்.ஆனால் இதற்கு விலங்கு ஆர்வலர்களிடம் இருந்து  பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

ஒரு மனிதனைக் கொன்றுவிட்டால் உடனே அதனை ஆட்கொல்லி புலியாக அறிவிக்கக் கூடாது என்று புலிகள்  கமிட்டியில் உள்ள  ஓசை காளிதாஸ் குறிப்பிட்டுள்ளார். அதற்காக இன்னொரு  மனிதனைக்  கொள்ளும்வரை  காத்திருக்கக்  கூடாது என்றும் குறிப்பிடுகிறார்.

யானை வழித்தடம் முற்றிலும் குறைந்து வரும் இந்த காலத்தில், அதன் வழித்தடத்தில் கட்டடம் கட்டுவதால் அவை எதிர்பாராதவிதமாக  நம்மை துரத்தவோ, கொல்லவோ செய்யும். அதே போல் சிறுத்தையும்,  புலியும்  செய்யும். காரணம், சாதாரணமான புலி மனிதர்களைக் கொன்று நான் பார்த்ததில்லை என்று ஜிம் கார்பட் சொல்கிறார்.

மனிதர்களை விலங்குகள் கொல்வது அதன் செயல் இல்லை.  நம் வீட்டில் தெரு நாயைக் கூட அனுமதிக்காத  நாம் விலங்குகள்  இடத்தை ஆக்கிரமிக்கும்பொழுது அவை நம்மைத் தாக்கவே செய்யும்..!  காடு விலங்குகளின்  வாழிடம். மனிதன் அங்கே அந்நியனாவான்.  நம் இடத்தில் நாம் இருப்போம், அதன் வாழிடத்தில் விலங்குகள் இருக்கட்டும்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time