வயிற்றுப் புண், வாய்ப்புண், ஆறாத புண்களை ஆற்றலாம்!

புண்கள் பலவிதம்… அதிலும் ஆறாத புண்கள் வேறு ரகம். புண்… கொடியது என்றாலும், அவற்றை மிகச்சரியாக கையாண்டால் எளிதாகக் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக மிகச்சாதாரணமாக கிடைக்கும் கீரைகளையும் பழங்களையும் அஞ்சறைப் பெட்டி கடைச் சரக்குகளையும் கொண்டு புண்களை ஆற்றிவிடலாம்.

நாள்பட்ட புண்களில் சீழ் பிடித்து நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் உடல் உறுப்புகளை தின்று விடவும் வாய்ப்புகள் உள்ளன. புண்களால் சிலர் உறவுகளைக் கூட இழந்திருக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புண்களால் வாய் நாற்றத்தில் தொடங்கி பிடித்த உணவை உண்ண முடியாமல் சிலர் படும் அவதி சொல்லி மாளாது.

கீரைகள், பழங்கள், அஞ்சறைப்பெட்டி பொருள்கள் என அனைத்தும் நமது மண்ணின் மருத்துவத்தில் பயன்படுத்தக்கூடியவையே. மூலிகை மருத்துவம்,  இயற்கை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் எனப் பல பெயர்களில் சொன்னாலும் பொருந்தும். எளிமையானது மட்டுமல்ல, எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாத இந்த மருத்துவம் நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடியவை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலில் தொண்டையில் இருந்து தொடங்குவோம். தொண்டையில் புண் வந்தால் நம் வாயில் உள்ள எச்சிலைக் கூட விழுங்க முடியாமல் மிகவும் சிரமப்படுவோம். இது போன்ற நேரங்களில் அன்னாசிப் பழத்துண்டுகளை லேசாக கடித்து அதன் சாற்றினை சிறிது சிறிதாக விழுங்கலாம். இல்லையென்றால், அன்னாசிப்பழச் சாற்றினை தொண்டை நனையும்படி வைத்திருந்து நன்றாகக் கொப்பளித்து துப்புலாம். அன்னாசிப்பழம் நாம் சாப்பிடக்கூடிய ஒன்று என்பதால் எந்தவித சிரமமும் இல்லாமல் இந்த முறையை மேற்கொள்ளலாம்.

இதேபோல் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய மாசிக்காயை வாங்கி உடைத்து மிளகு அளவுக்கு எடுத்து வாயில் போட்டு பாக்கு மெல்வது போல் மெல்லலாம். அதன் பிறகு அந்த எச்சிலை உள்ளே விழுங்கலாம் அல்லது துப்பிவிடலாம். இது கொஞ்சம் துவர்ப்புத் தன்மையுடன் காணப்படுவதால் வாயில் நீண்டநேரம் வைக்க முடியாது. ஆனால், இது கைகண்ட மருந்து.

சளி பிடிக்காமல் வேறு காரணங்களால் வாய்ப்புண், தொண்டைப்புண் ஏற்பட்டால் தேங்காய்ப்பாலை தொண்டையில் சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கலாம். மணத்தக்காளிக் கீரை அல்லது மணத்தக்காளி பழத்தை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினாலும் தொண்டைப்புண் சரியாகும். தொண்டைப்புண்ணுக்கு சோற்றுக்கற்றாழை சாப்பிடுவது நல்லதே. அகத்திக்கீரை சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். ஆனால், சளி பிடித்து இருமுவதால் தொண்டையில் புண் ஏற்பட்டால் மணத்தக்காளிக் கீரை, அகத்திக்கீரை, தேங்காய்ப்பால் சாப்பிடக்கூடாது.

சளி பிடித்திருக்கும்போது தொண்டையில் புண்ணாகியிருந்தால் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்துக் கரைத்து தொண்டையில் படும்படி வைத்திருந்து துப்பலாம். லவங்கப்பட்டை, கிராம்பு அல்லது ஏலக்காயை நீரில் போட்டு கொதிக்க வைத்து தொண்டையில் வைத்திருந்து வாய் கொப்பளிக்கலாம். உள்ளே விழுங்கினாலும் தவறில்லை. இதுதவிர துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி இலைகளை நீர் விட்டு கொதிக்கவைத்து வெதுவெதுப்பான சூட்டில் தொண்டையை நனைக்கலாம். இந்த கொதிநீரை அப்படியே விழுங்கலாம். இந்த சிகிச்சை சளியால் ஏற்படக்கூடிய தொண்டைப் புண்ணுக்கு ஏற்றது.

வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகிறவர்களுக்கு தேங்காயை அரைத்து பால் எடுத்து அதனுடன் தேன் சேர்த்துக் குடிக்கலாம். அகத்திக்கீரையில் பொரியல், கூட்டு செய்தும் சாப்பிடலாம். அகத்திக்கீரையுடன் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டுப்பற்கள் சேர்த்து சூப் செய்தும் குடிக்கலாம். மணத்தக்காளிக் கீரையை கடைந்து சாப்பிடலாம். மாசிக்காய் சாப்பிடலாம். கல்யாணப் பூசணிக்காயை அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம். வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். புதினா இலையை மென்று சாப்பிடலாம். புதினா ஜூஸ், புதினா துவையல், சட்னி செய்து சாப்பிட்டாலும் வயிற்றுப்புண் சரியாகும்.

அகத்திக் கீரை வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தாகும்!

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் புண் வந்து அவர்களை ரொம்பவே சிரமப்படுத்தும். சாப்பாடு. அலர்ஜி காரணமாக வரக்கூடிய இந்தப் புண்களை நன்னாரி சர்பத் மூலம் சரி செய்யலாம். கடைகளில் விற்கப்படும் நன்னாரி சர்பத்துக்குப் பதில் நாமாகவே நன்னாரி சர்பத் தயாரித்து அருந்துவதே சிறந்தது. நன்னாரி வேரை தட்டிப்போட்டு கொதிக்க வைத்து சூடு ஆறியதும் அதில் சிறிது எலுமிச்சைச்சாறு, தேன், சர்க்கரை சேர்த்துக் குடித்தால் மூத்திர எரிச்சல் அடங்குவதுடன் அந்த இடத்தில் உள்ள புண்ணும் ஆறும்.

மண்பானையில் நீர் ஊற்றி நன்னாரி வேரையும் வெட்டி வேரையும் சேர்த்து ஊற வைத்தும் குடிக்கலாம். நன்னாரி, வெட்டி வேர் ஊறிய நீருடன் சப்ஜா விதை, சர்க்கரை சேர்த்துக் குடித்தால் இதமாக இருப்பதுடன் தாகமும் அடங்கும். அத்துடன் நீர்க்கடுப்பு, எரிச்சல், புண் என அனைத்தும் சரியாகிவிடும்.

அகர் அகர்… இதைப் பற்றி எத்தனைபேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இது ஒரு கடல்பாசி. இது பெரிய மளிகைக்கடைகளில் கிடைக்கும். இதை நீரில் ஊற வைத்து சர்க்கரை சேர்த்துக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் இடத்தில் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும்.

கரும்புச்சாற்றுடன், சிறிது இஞ்சிச்சாறு சேர்த்துக் குடித்து வந்தாலும் சிறுநீர் கழிக்கும் இடத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் சரியாகும். அடிவயிறு மற்றும் தொப்புள் பகுதியில் விளக்கெண்ணெய் வைப்பதாலும் பிரச்சினை சரியாகும். காலையில் குளிக்கும் போது தலைக்கு நல்லெண்ணெய் வைத்துக் குளிக்கலாம். நெல்லிக்காய் ஊறிய நீரைக் குடித்தாலும் சிறுநீர் கழிக்கும் இடத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் சரியாகும். நெருஞ்சில் செடி அல்லது நெருஞ்சில் முள்ளை நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்தாலும் நீர்க்கடுப்பு சரியாகும். லவங்கப்பட்டை மற்றும் ஏலக்காயை நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்தாலும் சிறுநீர் கழிக்கும் இடத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் சரியாகும்.

இதேபோன்று மலம் கழிக்கும் இடத்தில் புண் உண்டாகி சிலர் அவதிப்படுவார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மாசிக்காயும், கடுக்காயும் போதும். மாசிக்காயை நீர் விட்டு உரசி (இழைத்து) புண் வந்த இடத்தில் தடவி வந்தாலே பிரச்சினை சரியாகிவிடும். கடுக்காயை தட்டிப்போட்டு நீர் விட்டு கொதிக்கவைத்து சூடு ஆறியதும் கழுவினாலும் புண் ஆறிவிடும். பிரச்சினை உள்ள அந்த இடத்தில் தேன் தடவலாம். கற்றாழை ஜெல்லையும்கூட தடவலாம். உருளைக்கிழங்கை மையாக அரைத்து புண்ணின் மீது பற்று போடலாம். மூல நோய் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம் என்பதால் காரம் அதிகமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகளை சாப்பாட்டில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் மலம் போகும் இடத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் சரியாகும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

புண்களைக் குணப்படுத்த மருத்துவம் செய்யும் நேரத்தில் பிரச்சினையை தீவிரப்படுத்தும் உணவுகளை உட் கொள்ளாமலிருப்பது நல்லது. உதாரணமாக ஒருவருக்கு புண் ஏற்பட்டிருந்தால் கத்தரிக்காய் சாப்பிடாமலிருப்பது நல்லது. காரமான உணவுகள், மசாலா உணவுகள், சிவப்பு இறைச்சி, ஊறுகாய் போன்றவை தவிர்ப்பது நன்று. இது போன்று சிலவற்றை கடைபிடித்தால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும் என்பது உறுதி. மது அருந்துபவர்கள் உடனே அதை கை விட வேண்டும். வயிற்றுப் புண் உள்ளவர்கள் புண் ஆறும் வரை காபியை தவிர்ப்பது விரைவில் குணமாக உதவி செய்யும். வாய்ப்புண் உள்ளவர்கள் புகையிலை, சிகரெட், பீடியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய குழிப்புண் பிரச்சினைதான் இன்றைக்கு பலரையும் பாடாய்ப்படுத்தி எடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய குழிப்புண்களை ஆற்றுவதற்கு கானாவாழை என்ற மூலிகையை அரைத்து பற்று போட்டால் நல்ல குணம் கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் என்றில்லை… படுத்த படுக்கையாக உள்ளவர்களின் முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் வரக்கூடிய படுக்கைப் புண்களையும் இந்த கானாவாழை மூலிகை குணப்படுத்தும் என்பது கூடுதல் தகவல். இதேபோல் ஆவாரம் இலையை அரைத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து சிறு தீயில் சூடாக்கி பொறுக்கும் சூட்டில் புண்ணின் மீது கட்டி பருத்தித் துணியால் கட்ட வேண்டும். இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டி வந்தால் குழிப் புண்கள் காணாமல் போகும்.

இது போன்ற ஆறாத புண்களையெல்லாம் ஆற்றும் வல்லமை படைத்தவை மூலிகைகள்.மற்றும் இயற்கை உணவுகள்! நம்பிக்கையுடன் இவற்றைச் உட்கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time