உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்குப் பகலில் வேலை, இரவில் உறக்கம் என்பது பொதுவான ஒன்றாகும். இது இயற்கை படைப்பு. ஆனால் இதில் மாற்றத்தைக் கொண்டு வந்தான் மனிதன். அது இரவு வேலை என்பதே ஆகும். பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இரவு தனியாக ஒரு ஷிபிட் அமைத்து வேலை செய்யும் சூழலை உருவாக்கினார்கள். இது செயற்கையான ஒன்றாகும். உண்மையில் இரவு கண்விழித்து வேலை செய்யும் சூழல் மனித உடலுக்கு இல்லை. ஆனால் அதை வலுக்கட்டாயமாக உருவாக்கிக் கொண்டான்.
இங்குதான் மனிதனுக்கும் மற்ற சில உயிரினங்களுக்கும் வேறுபாடு உண்டாகிறது..
மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்களில் 95 சதவிகிதம் பகல் செயல்பாடுகள் உடையவை. எலியை கொன்று சாப்பிடும் கழுகு பகலில் கண்விழிக்கும். ஆனால் அதே எலியைக் கொன்று சாப்பிடும் ஆந்தை இரவில் கண்விழித்துச் செயல்படுபவை.
பறவைகள் போன்று சில விலங்குகள், பூச்சிகள், ஊர்வன வகைகள் இரவில் நடமாடும். அப்படி இரவில் நடமாடும் விலங்கான தேவாங்கைத் தேடிப் பல நாட்கள் இரவு நடை நண்பர்களுடன் சென்று உள்ளேன். பகலில் நடமாடும் உயிரினங்களை பகலாடி என்றும் இரவு நடமாடும் உயிரினங்களை இரவாடி என்று அழைக்கப்படுகிறது.
…தேவாங்கைத் தேடி
சென்னை நகரத்தின் வெளிப் பகுதி கிழக்கு கடற்கரைச் சாலையில் இரவு 10 மணியளவில் தேவாங்கை பார்க்கச் செல்வது வழக்கம். 1 மணியளவில் இரவு நடை முடிப்போம். பல வாரங்கள் இரவில் நாட்கள் கழிந்துள்ளது.. அப்படியே இரவில் நடமாடும் மற்ற உயிரினங்களையும் பார்த்து வருவது வழக்கமாக வைத்துக் கொண்டோம்.
குடிக்கத் தண்ணீர், சாப்பிட பிஸ்கட், சிகப்பு நிற கண்ணாடி பேப்பர் ஒட்டிய டார்ச் லைட் எடுத்துச் செல்வோம். இரவில் நாம் அடிக்கும் ஒளி விலங்குகள் கண்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் சிகப்பு நிற கண்ணாடி பேப்பர் ஒட்டிய டார்ச் லைட்.
தேவாங்கு உருவில் மிகச் சிறிய விலங்கு. கண் பெரியதாக இருப்பதால் பார்க்கும் அனைவரும் இந்த விலங்கு பெரியதாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றும். மிக மெதுவாகவே நடக்கும். ஆபத்து என்றால் வேகமாக நடப்பதையும் ஒரு மரத்தில் பார்த்தோம். வழக்கமாக இருக்கும் ஒரு மரத்திற்குச் செல்வோம். பெரும்பாலும் அங்குத் தேவாங்கு இருக்கும். ஒரு முறை நாங்கள் பார்த்தபொழுது தேவாங்கும் எங்களைப் பார்த்தது. உடனே வேகமாக இறங்கியது தெரிந்தது. ஆனால் எங்குச் சென்றது என்று தெரியவில்லை. முழு இருட்டு. எங்கள் அருகில் இருப்பவரும் தெரியாத அளவு இருளில் நடந்து சென்றோம்.
பறவை முட்டை, சிறு உயிரினங்கள், தாவரங்கள் போன்றவற்றை இரையாகச் சாப்பிடும். புலி போன்று மிக அதிகம் வேட்டையாடப்படும் விலங்காகத் தேவாங்கு உள்ளது. இன்று மிகச் சிறிய எண்ணிக்கையில் மட்டுமே வாழ்கிறது. அடர்ந்த மரங்களில் மட்டுமே அதிகம் தங்கள் நடமாட்டத்தை வைத்து கொள்ளும். வேப்ப மரம் எங்கள் கண்ணில் தென்பட்டால் நின்று விடுவோம். காரணம் வேப்ப மரத்தில் தேவாங்கு அதிகம் பார்க்கலாம்.
பல இரவுகள் தேவாங்கைப் பார்க்கச் சென்றதில் 5 தேவாங்கிற்கு மேல் பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்குக் குறைந்த அளவே வாழ்கிறது. மாந்திரீக செயல்களுக்கு, மருந்து தயாரிக்க என்று அதிகம் தேவாங்கைக் கொல்கிறார்கள்.
ஆந்தை இரவில் முழுவீச்சில் செயல்படும்..
ஆந்தை, இரவில் நடமாடும் பறவை. பகலில் இலைகள் அடர்ந்த கிளையில் தூங்கும். முழுவதும் தூங்கும் என்று சொல்ல முடியாது. ஒரு கண் யாரவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு இருக்கும். நிறைய இடங்களில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளோம். ஒரு கண்ணை மூடி, ஒரு கண் என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கும். செஞ்சி மலை அருகிலிருந்த மரத்தில் ஆந்தை இருந்தது. மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.. சிறிது நேரம் உற்றுப்பார்த்தால் ஆந்தையும் என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. பகலில் மரத்தில் கழிக்கும் ஆந்தை ஆனால் இரவில் முழு வேகத்தில் இயங்கும். இரவு நேரத்தில் ஆந்தை மிகத் தெளிவாகப் பார்ப்பதால் சர்-சர் என்று பறக்கும். அப்படி தேவாங்கு இருக்கும் மரத்திற்கு அருகில் பட்டை கழுத்து சின்ன ஆந்தை இருந்தது. புள்ளி ஆந்தை(Spotted Owl) நம் தோட்டத்தில் சாதாரணமாகப் பார்க்கலாம். ஆனால் பட்டை கழுத்து ஆந்தை தோப்பு, வயல்வெளி போன்ற இடங்களில் பார்க்க முடியும். எலி இனம் அதிகம் ஆகாமல் அவற்றை இரையாகச் சாப்பிட்டுக் குறைப்பதில் முக்கிய இடம் ஆந்தைக்கே உண்டு. இனப்பெருக்க காலத்தில் ஒரு இரவில் நிறைய எலிகளைச் சாப்பிடும்.
நாங்கள் நடந்து செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள கடலிலிருந்து அலை எழும்பி வந்து மோதும் சத்தம் கேட்கும். கடல் மணலில் நண்டுகளைப் பிடிக்க நடமாடிக் கொண்டு இருக்கும் பறவையின் குரல் சத்தமும் அலையுடன் வந்தடையும். இரவில் நடமாடும் தேவாங்கு, ஆந்தை போன்றவற்றைப் பார்த்து வந்த நாட்களில் ஒரு விஷயத்தை கவனிக்க முடிந்தது. காகம் மனிதர்கள் குடியிருப்பில் உள்ள மரத்தில் இரவை கழிகிறது. கொஞ்சம் உள்ளே அடர்ந்த பகுதியில் உள்ள மரத்தில் காகத்தை பார்க்க முடியவில்லை. மற்றும் காகம் இரவு முழுவதும் தூங்குகிறதா என்று தோன்றுகிறது. ஒரு கிளையிலிருந்து பறப்பது மற்றும் அருகில் உள்ள மரத்தில் அமர்வது என்று சில காகங்கள் செய்கை இருந்தது. ஏன் காகங்கள் இரவில் இப்படி செய்கிறது என ஆராய்ச்சி நடப்பதாக தெரிய வருகிறது.
இரவில் பறக்கும் அந்துப்பூச்சிகள்
பட்டாம்பூச்சி மிக அழகிய வண்ணத்தில் பறந்து கொண்டு இருக்கும் பூச்சியாகும். இவை பகலில் பார்க்க முடியும். இரவில் செடி, மரங்கள் இலையில் ஓய்வு எடுக்கும். ஆனால் இதன் இன பூச்சியான அந்துப்பூச்சி(Moth) இரவில் பறக்கும் பூச்சி ஆகும். பெரும்பாலான அந்துப்பூச்சி இரவு பூச்சியாகும். சூரிய ஒளி மறையும்பொழுது பட்டாம்பூச்சி ஓய்வு எடுக்க செல்லும் அந்துப்பூச்சி வெளியே வரத் தொடங்கும். பார்ப்பதற்குப் பட்டாம்பூச்சிகள் போன்று இருக்கும் அந்துப்பூச்சியின் நிறம் பட்டாம்பூச்சி போன்ற பிரகாசமான நிறத்தில் இருக்காது.
இரவில் நடமாடும் அந்துப்பூச்சிகளைப் பார்ப்பதற்கு ஒரு மாலை வேலையில் சென்னை இயற்கை சங்கம் ஏற்பாடு செய்து இருந்த Moth Field Sessionஇல் கலந்து கொண்ட பிறகுதான் இரவில் எவ்வளவு பூச்சிகள் நம்மைச் சுற்றிப் பறந்து கொண்டு இருக்கிறது என்று தெரியவந்தது.
அந்துப்பூச்சிகள் வருவதற்கு, சூரிய வெளிச்சம் மறைந்து இருள் வரவேண்டும் அதனுடன் செயற்கை வெளிச்சமும் வேண்டும் என்பதால், செயற்கை வெளிச்சத்திற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்தோம்.
இரண்டு மரத்திற்கு நடுவில், கயிறு கொண்டு, வெள்ளை துணியைக் கட்டி(Screen), அதன் நடுவில் செயற்கை வெளிச்சத்திற்காக வெள்ளை நிற மின் விளக்கைத் தொங்கவிட்டோம். இப்பொழுது மாலை நகர்ந்து, இருளுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தது. சுற்றி இருந்த மரங்களில் பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன. அங்கு இருந்த ஒரு மரத்தில் காகம் கூடு கட்டியிருந்தது.
இப்பொழுது இருள் முழுவதும் வந்துவிட்டது. இருள் வந்ததால், மின் விளக்கு எரிய நாங்கள் வெள்ளை திரையை விட்டு சிறிது தூரம் சென்று நின்று கொண்டோம். விட்டில் பூச்சிகள் வருகிறதா என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
டாக்டர் கீதா விட்டில் பூச்சிகள் பற்றி மிக ஆழமாகத் தெரிந்தவர். நாங்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் உடனே அவரிடம் இருந்து பதில் வருகிறது. அனைத்து பூச்சிகளை பற்றியும் தெரிந்து வைத்துள்ளார்.
பறவைகள் போல் இல்லை பூச்சிகள். உருவில் மிக மிகச் சிறியவை. பறவைகளில் அதன் உருவத்தைப் பார்த்து, நிறத்தை வைத்து என்ன பறவை என்று சொல்லிவிடலாம். ஆனால் விட்டில் பூச்சிகள், பார்ப்பதற்கு ஒரு நிறம் போலவே, அதாவது மங்கிய நிறத்திலேயே உள்ளது. கண்டுபிடிப்பது சிரமமே.
செயற்கை வெளிச்சத்தில், சிறு விட்டில் பூச்சிகள் வர ஆரம்பித்தது. அவற்றை பற்றி டாக்டர்.கீதா விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தார். அருகில் இருந்தால் பூச்சிகள் வராது அதனால் தூரமாக வந்து விடுங்கள் என்று டாக்டர் சொன்னதைக் கேட்டு அனைவரும் தூரமாக வந்து விட்டோம்.
பூச்சிகள் அதிகம் வந்த பின்பு அருகில் சென்று பார்ப்போம். நடு, நடுவே பூச்சிகள் பற்றி பேச்சுக்கள் என்று இரண்டு மணி நேரம் சென்றது. பூச்சிகள்தானே என்று சாதாரணமாக நினைத்து விடமுடியாத அளவுக்கு நிறையக் காரணங்கள் உள்ளன.. இவற்றை உற்று நோக்கும்பொழுது அதைப் பற்றித் தேடிப் படிக்கும்பொழுது நிறைய விஷயங்கள் தெரியவந்தது.
குழந்தைகள், பறவைகளைவிடப் பூச்சிகளை நோக்கி அதிகம் கவனம் செலுத்துவதைப் பார்த்துள்ளேன். நாம் பூச்சிகளை அடிப்பதால் குழந்தைகளும் அவற்றை அடிக்க கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் பூச்சிகளை நோக்குபவர்கள், பூச்சிகளை நிறைய நேசிக்கிறார்கள், அதனுடன் பேசுகிறார்கள், தினமும் ஏதாவது ஒரு பூச்சியைப் பார்த்து விடுகிறார்கள், அதன் அருகில் செல்கிறார்கள். பூச்சிகளை அடிப்பது என்ற பேச்சே அவர்கள் வாழ்வில் இல்லை. பூச்சிகளை அடிப்பது தங்களை அடிப்பதாகவே நினைக்கிறார்கள்.
சிலர் தங்கள் பெயருடன் பூச்சி என்று சேர்த்து அழைப்பதை விரும்புகிறார்கள். பூச்சிகள் ஒரு அருவருப்பாண உயிரினம் என்பதே அவர்களுக்கு கிடையாது. தங்கள் குழந்தைகள் போல் பூச்சிகள் அவர்கள் வாழ்வில் இணைந்துள்ளது. அன்றைய மாலை 6 மணி முதல் 8 மணி வரை மிக உபயோகமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்..
Also read
வௌவால் இரவில் இரை தேடும் உயிரினம் ஆகும். பழம்தின்னி வௌவால்களைப் பார்ப்பதற்கு அடையார் பாலத்தில் மாலை 6 மணி அளவில் சென்று நின்றுள்ளேன். என் தலைக்கு மிக அருகில் சிறியதும், பெரியதுமாக ஆயிரக்கணக்கான வௌவால்கள் பறந்து கொண்டு இருக்கும். இப்படிப் பல நாட்கள் அடையார் பாலத்தில் நின்று பார்த்ததில் அவை சென்னை வெளியே உள்ள பல கிராமங்களுக்குச் சென்று அங்கு உள்ள மரத்தில் இரை சாப்பிடுகிறது. அப்படியான சில வௌவால்கள் சென்னை நகரத்தில் இருக்கின்றன.. காலை வேலையில் கடல் பக்கத்தில் இருக்கும் தியோசபிக்கள் சொசைட்டி அருகில் உள்ள மரங்களில் வௌவால்கள் தொங்கிக் கொண்டு இருக்கும்.
பகலில் நாம் பார்க்கும் உயிரினங்கள் போல் இரவில் சில உயிரினங்கள் வாழ்கிறது. ஒரு இரவுப்பொழுது உங்கள் பகுதியில் இரவு நேரம் சுற்றி வாருங்கள் பல உயிரினங்கள் நடமாடிக் கொண்டு இருக்கும். அவற்றைக் கவனியுங்கள். அந்த உயிரினங்கள் வாழ்வியலைக் கவனித்தால் மிக ஆச்சரியமான தகவல்கள் தெரியவரும். அவை நம் வாழ்கையில் மிக அதிகப் பங்கு வகிக்கிறது.. அவை வாழ்ந்தால் தான் நாம் வாழமுடியும்..
1 Comment