எல்லா அதிகாரிகளுமே யோக்கியமானவர்களா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

-சாவித்திரி கண்ணன்

உண்மையிலே ஒரு நல்லாட்சி தர வேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிகிறது. அவருடைய நோக்கத்திற்கு உகந்ததாக அதிகாரிகள் நியமனங்கள் இருக்கின்றனவா..?

திமுக ஆட்சியின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான பாராட்டுகள் ஊடகங்களில் குவிகின்றன.

அமைச்சர்கள் நியமனங்கள், அதிகாரிகள் நியமனங்கள் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளன.

புதிதாக பதவியேற்ற ஆட்சியாளர்களின் நோக்கங்களும், அணுகுமுறைகளும் அவர்கள் மீது நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்துகின்றன…!

உண்மை தான்! மாற்றுக் கருத்தில்லை.

காரிருள் சூழ்ந்த தமிழக அரசியல் களத்தில் ஆங்காங்கே ஏற்றப்பட்டு வரும் மெழுகுவர்த்திகளே பெரும் நம்பிக்கையை விதைப்பனவாக உள்ளன.

தோற்றுப் போன எதிர்கட்சிகளை திமுக தலைமை அணுகும் விதம் நாகரீக அரசியலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது! அமைச்சரவை பதவி ஏற்பில் கலந்து கொள்ள வந்த ஒ.பி.எஸ் மற்றும் தனபால் நடத்தப்பட்ட விதமும், விஜயகாந்தை தேடிச் சென்று உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றதும், பிறகு தன்னை வாழ்த்த வந்த தே.மு.தி.க வினரிடம் ஸ்டாலின் அன்பு பாராட்டியதும் டாக்டர் ராமதாஸின் அறிக்கைக்கு ரெஸ்பான்ஸ் செய்யும் விதமாக அவரை தொடர்பெடுத்து பேசியதும், ‘’வாவ்..சூப்பர்..இந்த அணுகுமுறை தொடரட்டும்…’’ என தமிழக மக்களின் உள்ளம் குளிர்ந்தது.

அமைச்சர்கள் நியமனங்களிலும் நல்லவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள் சற்று தூக்கலாக இருந்தனர். இதனால், மற்ற சிலரை பற்றிய சந்தேகங்கள், பழைய குற்றச்சாட்டுகள் அடங்கிவிட்டன.

அதே போல அதிகாரிகள் நியமனங்களிலும் ஓட்டுமொத்தமான மதிப்பீட்டில் அதிக நல்ல அதிகாரிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளனர் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது! அதே சமயம் எந்த அதிகாரியும் 100% சுத்த சுயம்பிரகாசமானவர்களல்ல. ஏனெனில், எல்லோருமே பலம், பலவீனங்கள் உள்ளவர்களே!

அப்படி பலம், பலவீனம் இரண்டையும் சீர்தூக்கி பார்க்கும் போது பலம் அதிகமாக இருந்தால் பலமானவர் என்று நாம் ஒருமித்து முடிவெடுக்கிறோம்.

பொதுப் பார்வைக்கு இந்த அளவுகோலே போதுமானது.

தலைமைச் செயலாளர் இறையன்புக்கு பொதுவாக சமூகத்தில் நல்ல பெயர் உண்டு. ஒரளவு நல்ல நிர்வாகியும் கூட. ஆனால், அவர் தன் பணிகளைக் கடந்து அதிகமாக கவனிக்கப்பட்டிருப்பது அவரது எழுத்துக்களுக்காவும், பேச்சுகளுக்காகவும் தான்! நாகை மாவட்ட துணை ஆட்சியரில் ஆரம்பித்து காஞ்சிபுரம் ஆட்சியர், பிறகு செய்திதுறை, சுற்றுலாதுறை என பல துறைகளில் இருந்தவர். இவ்வளவு நல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரியை ஜெயலலிதா முக்கியத்துவம் இல்லாமல் செய்தார்.

இறையன்பு ஏராளமான மேடைகளில் சொல்வீச்சில் ஆர்வம் காட்டுவார். சேனல்களிலும் சிறப்பு நிகழ்வுகளில் பேசுவார். அத்துடன் இல்லாமல் உளவியல், வர்த்தக நிர்வாகம், ஆங்கில இலக்கியம், மேலாண்மை..என பலவற்றை படித்து தேர்வெழுதி ஏகப்பட்ட டாக்டரேட் பட்டங்களை வாங்கி குவித்தார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவ்வாறு அரசு சம்பளத்தை பெற்றுக் கொண்டு படிப்பு, எழுத்து, பேச்சு..என சதா சர்வகாலமும் தன் போக்கில் தன்னை வளர்த்துக் கொள்வதிலேயே பெருமளவு நேரத்தை செலவழித்தார் என்ற வகையில் என்னை பொறுத்த வரை இவர் மீது பெரிய மரியாதை இல்லை. இவர் படித்தது வேளாண்மை. அதுவும் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராக தேர்வானார். ஆனால், இன்று வரை இவரால் விவசாயத் துறைக்கு எந்தப் பயனும் இல்லை. எத்தனையோ துறைகளில் பொறுப்பேற்றவர் வேளாண்மை சம்பந்தப்பட்ட துறையில் இது வரை பொறுப்பு ஏற்கவில்லை. விவசாயம் தொடர்பாக எந்த நூலும் எழுதவில்லை.

தனது ஐ.ஏ.எஸ் பதவி காலத்தில் இவர் அநீதிகளை எதிர்த்து சமர் புரிந்த நிகழ்வுகள் என்று பெரிதாக ஒன்றுமில்லை. நீக்கு,போக்காக தன் பதவியை தக்கவைத்துக் கொண்டு போனவர் தான். அதே சமயம் தீய மனிதரில்லை. இந்தி, சமஸ்கிருதம் இரண்டிலும் புலமையுண்டாம்! கொஞ்சம் இந்துத்துவ ஆதரவாளர். இவருடைய சகோதரர் திருப்புகழ் ஓய்வு பெற்ற பிறகும் பிரதமர் மோடியின் ஆலோசனை குழுவில் உள்ளார். எனவே, மத்திய ஆட்சியாளர்களுக்கு இணக்கமான ஒரு நிர்வாகத்தை தான் இறையன்பு செய்வார்.இனியாவது எழுத்து, படிப்பு, பேச்சு..என நேரத்தை செலவழிக்காமல் தலைமை செயலாளர் என்ற மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த பணியில் முழுமையாக நாட்டம் கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்!

ஆனால், உதயச் சந்திரன் நல்ல களப் பணியாளர், செயற்பாட்டாளர். கல்வித்துறையா?, டி.என்.பி.எஸ்சியா? தொல்லியல் அகழ்வாராய்ச்சி துறையா? எங்கும் மக்கள் நலன் சார்ந்து தன் முத்திரையை பதித்தவர். இவரைப் போலவே அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்சும் நல்ல களப் பணியாளர். அநீதிகளுக்கு தலை வணங்காமல் செயல்படும் ஆற்றலைக் கொண்டவர். இதை அவர் வணிக வரித்துறை இயக்குனராக இருந்த போது அந்த துறையின் அமைச்சர் கே.சி.வீரமணியின் நிர்பந்தத்திற்கு பணியாமல் பணியாற்றியவர். அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் அரசியல்வாதிகள் அழுத்ததிற்கு இணங்காமல் தகுதியான ஏழைகளுக்கு வேலை தந்த நிகழ்வுகளே சாட்சி.

எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ்சும் சென்ற ஆட்சியாளர்களால் பந்தாடப்பட்டவரே! அவர் மீது பெரிய ஊழல் புகார்கள் எதுவுமில்லை. அந்த வகையில் அவரும் துடிப்பாக செயல் புரிவார் என நம்பலாம். அதே சமயம் மற்றொரு முதல்வரின் உதவியாளர் உமாநாத் ஊழல் மன்னன் விஜயபாஸ்கரின் சுகாதாரத் துறையில் மருந்து கொள்முதல் துறையின் பொறுப்பு வகித்தவர். அந்த துறை மிக மோசமான முறைகேடுகளுடன் இயங்கியது அனைவரும் அறிந்ததே! அந்த துறையில் யோக்கியமாக ஒரு அதிகாரியை சற்று நேரம் கூட பணியாற்ற அனுமதிக்கமாட்டார் விஜயபாஸ்கர்.

உளவுத் துறை ஏடிஜிபியாக போடப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையான அதிகாரி. அதே துறையில் உளவுத் துறை அதிகாரியாக இருந்து தற்போது உளவுத் துறை உள் நாட்டு பாதுகாப்பு என்ற பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள ஈஸ்வரமூர்த்தி அவர்களும் எந்த குறையும் காணமுடியாத நேர்மையான அதிகாரிகள் மட்டுமல்ல. மிகத் தகுதி வாய்ந்தவர்கள்!

சி.பி.சி.ஐ.டியின் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ள ஷகில் அக்தர் அப்பழக்கற்ற நேர்மையாளர். இவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் சென்ற ஆட்சியாளர்கள் போலீஸ் பயற்சி கல்லூரிக்கு தூக்கியடித்துவிட்டனர்.

சென்ற ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை என்பது லஞ்சம் ஒளித்து வைக்கும் துறையாக சீரழிந்து இருந்தது. அதனால், ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட துறையாக இருந்தது லஞ்ச ஒழிப்புத் துறை. தற்போது அதன் இயக்குனராக கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் அந்த துறையை உயிர்ப்புடன் இயங்க வைக்கும் ஆர்வம் இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது என்பது தெரிய வருகிறது. கூடுதல் டிஜிபியாக நிர்வாக பிரிவுக்கு பொறுப்பு ஏற்றுள்ள ரவி மீதும் புகார்கள் கிடையாது. திருவள்ளூர் எஸ்.பியாக இருந்த அரவிந்தன் சிறந்த மனிதாபிமானி. எளிய மக்களை தேடிச் சென்று சேவை செய்பவர். இவர் சி.ஐ.டி சிறப்பு பிரிவின் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.

சென்னை மாநகர கமிஷனராக போடப்பட்டுள்ள சங்கர் ஜிவால் மீது புகார்கள் பெரிதாக எதுவும் இல்லை. நல்ல அதிகாரியே!

சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள தாமரைக் கண்ணன் மீது பல புகார்கள் உள்ளன. இவர் மீது ஊழல் புகார்கள் மட்டுமல்ல, சாதியப் பார்வை அதிகமுள்ளவர் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. குட்கா விற்பனை சம்பந்தப்பட்ட புகார்களில் அடிபட்டவர். 2006 -2011 வரையிலான திமுக ஆட்சியில் திமுக விசுவாசி போல வலம் வந்தவர். ஆனால், அதிமுக ஆட்சியில் அப்படியே அதிமுக விசுவாசியாக செயல்பட்டார். இவர் சசிகலாவின் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டவர். அப்படி அறியப்படுவதை பெருமையாக கருதியவர். சாதியக் கண்ணோட்டத்துடன் இவரால் பழிவாங்கப்பட்ட காவலர்கள் பலர் உண்டு. அவர்களின் கண்ணீர் கதைகளை எழுத பக்கங்கள் போதாது! இப்படிப்பட்டவருக்கு எப்படி முக்கியத்துவம் கிடைத்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பல நல்ல நியமனங்களுக்கு இடையில் ஒரு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தவறு கவனம் பெறாமலே போய்விடக் கூடாது என்பதால் கவனப்படுத்தினேன். மற்றபடி பொதுவாக மிகப் பெரும்பாலான அதிகாரிகள் நேர்மையாளர்கள், திறமைசாலிகள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time