எந்தக் காய்ச்சலுக்கும் இயற்கை மருத்துவத்தில் தீர்வு!

-எம்.மரியபெல்சின்

மீண்டும் கொரோனாவா? மிரள வேண்டாம்! எல்லோரும் பயப்படுமளவு ஊரெங்கும் சளித்தொல்லை, ஜலதோஷம், காய்ச்சல் என வாட்டியெடுத்து பாடாய்ப் படுத்துகிறது. இயற்கை மருத்துவம் என்றென்றைக்கும் நம்மை காக்கும் என்ற உறுதியுடன் சில மருத்துவ ஆலோசனைகளை பகிர்கிறேன். தற்போது இந்த கட்டுரையில் நான் தரும் ஆலோசனைகளே கொரானா காலத்தில் பலரை மீட்டுக் கொண்டு வந்தது! ஆகையால், இது யாவருக்கும் பலனளிக்கும்!

இயற்கைச் சூழலை நாம் ரொம்பவே கெடுத்து வைத்துள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஊர் உலகமெங்கும் பருவமழை அது அதற்குரிய காலங்களில் பெய்வதில்லை. ஆனபோதிலும் வரலாறு காணாத மழை பெய்து மக்களை வாட்டி வதைக்கிறது. வச்சா குடுமி அடிச்சா மொட்டை கதைபோல வெயில் வாட்டி வதைப்பதும், மழை வெளுத்து வாங்குவதும் தொடர்கிறது. சமீபகாலமாக க்ளைமேட் சேஞ்ச் எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக வானிலையில் நிறைய மாற்றங்களை காண முடிகிறது. நிலைமை இப்படியிருக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக பகுதி பகுதியாக மழை பெய்கிறது. தென் தமிழகத்தில் சில நாட்களாக பெய்து வந்த மழை கடந்த சில நாட்களாக வட தமிழகத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது.

திருடனைப் போல திடீரென மழை பெய்கிறது. இன்றைக்கு யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு மழை பெய்கிறது. இப்படி திடீர் திடீரென பெய்யும் மழையால் மக்களின் உடல்நிலையில் நிறைய மாற்றங்களைக் காண முடிகிறது. முன் தயாரிப்பில்லாமல் செல்லும் பலர் மழையில் நனைவதால் ஜலதோஷத்தில் தொடங்கி தும்மல், சளி, இருமல், காய்ச்சல் என அது ஒரு தொடர்கதை போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. மழையும், குளிர்ச்சியான சூழலும் சிலரது உடல்நிலைக்கு ஒத்துக் கொள்ளும்; வேறு சிலரை உண்டு இல்லையென்று செய்து விடும்.

மழை மற்றும் குளிர்காலங்களில் மூக்கடைப்பில் தொடங்கி, ஜலதோஷம், சளி, காய்ச்சல் என பாடாய்படுத்திவிடும்.  காய்ச்சல்…என்பது  இயற்கையின் தன்னிச்சையான கழிவு நீக்கும் செயலாகும்! உடலில் கலக்கும் அந்நியப் பொருள்கள், கழிவுகள், விஷமுண்டாக்கும் பொருள்கள் என அனைத்தும் உடலில் வெப்பத்தை உண்டாக்கி, காய்ச்சல் மூலம் இயற்கையாக வெளியேற்றி விடும். காய்ச்சல் வந்துவிட்டால் மருந்துகள் மூலம் தடுக்காமல் இயற்கையான கழிவு சுத்திகரிக்கும். இந்த வேலைக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் வந்துவிட்டால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, உணவு முறை மாற்றத்தால் டைபாய்டு, நிமோனியா மற்றும் விஷக் காய்ச்சல்கள் கூட விரைவில் குணமாகும். மருந்துகள் கொடுப்பதனால் மட்டுமே, காய்ச்சலை முற்றிலும் குணப்படுத்திவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. காய்ச்சல் குணமாக மருந்து சாப்பிட்டு விட்டோமே என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை உண்டால், மூன்று நாள்களில் சரியாக வேண்டிய காய்ச்சல் மேலும் மூன்று நாள்கள் வாட்டி வதைக்கும்.

காய்ச்சல் பாதித்த நேரங்களில் சிலருக்கு குமட்டல், வாய்க் கசப்பு, எச்சில் ஊறுதல், புளிப்புத் தன்மை, சுவையற்ற நிலை போன்றவை இருக்கும். மேலும் எதையும் சாப்பிடப் பிடிக்காது. பசிக்காவிட்டால் எதையும் சாப்பிடாதீர்கள்! பசித்த நேரங்களில் சில உணவுப் பொருள்களை மட்டும் இரண்டு மூன்று வேளைகளாகப் பிரித்து சிறிது சிரமப்பட்டுச் சாப்பிடுவது நல்லது. பெரும்பாலும் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகள் நல்லது. இவற்றைத் தனியாகச் சாப்பிட முடியாது என்பதால், சிலர் பாலில் நனைத்துச் சாப்பிடுவார்கள். இது நல்லதுதான் என்றாலும் ஒன்றுக்குமேல் சாப்பிட முடியாது. ஆகவே, இணை உணவாக கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லித்தழை துவையல், புதினாத் துவையல் மற்றும் பச்சை மிளகு, புதினா, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த துவையல் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். காய்ந்த புதினாக்கீரை, காய்ந்த கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை ஒரே அளவாகச் சேர்த்து அரைத்துப் பொடியாக்கி (உப்பு சேர்த்து) சாப்பிடலாம்.

பகல் உணவில் குழைய வேக வைத்த புழுங்கலரிசிச் சோற்றுடன், மிளகு ரசம் சேர்த்துச் சாப்பிடலாம். வெள்ளைப் பூண்டு, மிளகு, வெந்தயம் சேர்த்து செய்த ரசம், சூப், குழம்பு போன்றவற்றையும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த புழுங்கலரிசிப் பொங்கலும் நல்லது. இரவு உணவு காலை உணவைப் போல ஆவியில் வெந்த உணவுகளான இட்லி, இடியாப்பமாக இருந்தால் நல்லது. பாலில் வெள்ளைப் பூண்டு சேர்த்து வேக வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கல்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பால் அருந்துவது நல்லது. மேலும், எப்போதும் வெந்நீர் அருந்துவது நல்லது. பிரெட், பால் சாப்பிடலாம். இவற்றைச் சாப்பிடும்போது வாழைப்பழம் சாப்பிடாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் காய்ச்சல் நேரங்களில் பழமா? என்று பெரும்பாலும் யாரும் சாப்பிடுவதில்லை. பழம் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது. சளி பிடிப்பது போன்று தெரிந்தால் பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.

உணவுடன் இணை உணவாக அரிசிக் கஞ்சியில் செய்த வடகம், வற்றல் போன்றவற்றை காய்ச்சல், தலைவலி நேரங்களில் சாப்பிடலாம். இவை சாப்பிடச் சுவையாக இருப்பதுடன் உடலுக்குத் தெம்பு தரும். சளிக்காய்ச்சல், தலைவலி, தும்மல், இருமல், ஜலதோஷம் இருக்கும் போது தூதுவளைத் துவையல் ஓர் அருமையான இணை உணவாகும். வீடுகளில் வளர்க்கும் துளசி, ஓமவல்லி, தூதுவளை இலைகளுடன் மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதும் காய்ச்சல் நேரங்களில் பலன் தரும்.

பத்து மிளகை வாணலியில் சற்றே கருகுமளவு வறுத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கஷாயமாக்கிக் குடிக்க வேண்டும். காலை, மாலை, இரவு என குடித்து வந்தால் இரண்டொரு நாள்களில் எந்தவிதமானக் காய்ச்சலும் குணமாகும். இதேபோல் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, நான்கைந்து மிளகு, ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் சேர்த்து வடிகட்டி தேன் கலந்து குடித்தாலும் காய்ச்சல் குணமாகும்.

தேனுடன் தண்ணீர் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட சீதளக்காய்ச்சல் சரியாகும். தேனுடன் இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட்டால் பசி உண்டாகும். இதனால், வாய்க் கசப்பு நீங்குவதுடன் புளித்த ஏப்பம் வருவது நிற்கும். காய்ச்சலின்போது மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சைப் பழச் சாறு அருந்தலாம். ஃபுளூ காய்ச்சல், மலேரியா மற்றும் குளிர் காய்ச்சலின்போது எலுமிச்சைச் சாற்றை வெந்நீரில் கலந்து அருந்தினால், நிவாரணம் கிடைக்கும். பலருக்கு நெஞ்சில் சளி கட்டியிருந்தால் காய்ச்சல் குறையாது. என்னதான் காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டாலும், காய்ச்சல் குறையாது. அப்படிப்பட்ட சூழலில் சளியைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிக் குறைத்தால் காய்ச்சல் தானாகவே விலகிவிடும்.

சளியைத்துரத்த எளிய வழிகள் பல உள்ளன. வேப்ப எண்ணெயைச் சூடாக்கி பொறுக்கும் சூட்டில் நெஞ்சு, விலா, முதுகுப் பகுதிகளில் தேய்க்க வேண்டும். உடனே, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, அதன்மேல் ஒரு துணியை வைத்துச் சூடாக்கி, வேப்பெண்ணெய் பூசிய இடங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதைக் காலை மற்றும் இரவு நேரங்களில் செய்துவந்தால், நெஞ்சில் கட்டியிருக்கும் சளி விலகும். இதேபோல் இரவில் பூண்டுப்பால் அருந்துவது பலன் தரும்.

பூண்டுப்பால் செய்வது எப்படி என்று பார்ப்போம். தோலுரித்த பூண்டுப் பற்கள் 10 எண்ணிக்கை எடுத்து 50 மில்லி பால், 50 மில்லி நீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பாதி வெந்ததும் இரண்டு சிட்டிகை மிளகுத் தூள், இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிடவும். நான்கில் ஒரு பங்காக வற்றியதும் அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாகக் கடைந்து குடிக்கவேண்டும். இதை இரவு உணவுக்குப் பிறகு செய்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும். மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சுத்தமாகும், இருமல் விலகி, சளி கரையும் என்பதால் நிம்மதியான தூக்கம் வரும்.

தலையணையில் நொச்சி இலைகளை வைத்துக்கொண்டு தூங்கினால், தலைபாரம் நீங்குவதுடன் சுவாசம் சீராகும். பகல் நேரத்தில் நொச்சி இலையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து ஆவி (வேது) பிடிக்கலாம். துளசி, புதினா, இஞ்சி சேர்த்து நீர் விட்டுக் கொதிக்க வைத்து தேவைப்பட்டால் தேயிலை சேர்த்து பால், சர்க்கரை சேர்த்து வழக்கமான டீயைப்போல செய்து குடித்தாலும் சளித்தொந்தரவுகள் விலகும்!

வெற்றிலையைத் தீயில் வாட்டி, அதனுடன் ஐந்து துளசி இலைகளை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாதக் குழந்தைக்கு காலை, மாலை 10 சொட்டுகள் வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும். இதேபோல் வெறும் வெற்றிலையை தீயில் வாட்டி மார்பில் ஒத்தடம் போட்டு வந்தால் சளி குறையும். கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு, சூடுபடுத்தி மார்பில் கட்டி வந்தால் மூச்சுத்திணறல், இருமல் கட்டுப்படும். இலைச்சாறுடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளைப் பாதிக்கும் சளி, இருமல், ஜலதோஷம் குணமாகும்.

உடல் நலக்குறைவின்போது நார்ச்சத்து குறைந்த உணவுகளையே பெரும்பாலும் உட்கொள்ளச் சொல்வார்கள். அதற்கு ஏற்றது பார்லி. எளிதில் செரிமானமாகும் பார்லி சளி சவ்வுப்படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றக் கூடியது. ஆகவேதான், காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுப்பது அந்தக் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்துள்ளது. நம் உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள்தான் உடலில் நீர்ச்சத்துப் பராமரிப்புக்குக் காரணமாகும். பார்லி கஞ்சி என்பது அரிசியை வேக வைப்பதுபோல வேக வைத்து உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம், அதேபோல் பார்லி சூப்பும் அருந்துவதற்கு நல்லது.

ஒரு டேபிள்ஸ்பூன் பார்லியை அரை வேக்காடாக வேக வைத்து பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளுடன் ஐந்து பல் பூண்டு சேர்த்து நன்றாகக் குழைய வேக வைக்க வேண்டும். பிறகு இன்ஸ்டன்ட் சூப் பவுடர் சேர்த்துக் கொதிக்க வைத்து மிளகுத்தூள், உப்பு, கொழுப்பு நீக்கிய பால் (சிறிது) சேர்த்துப் பரிமாறலாம். சூப்பை பார்லியுடன் சேர்த்தும், சேர்க்காமலும் குடிக்கலாம். மேலும் பொதுவாக காய்ச்சல் வந்த நேரங்களில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்பதே நல்லது.

கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time