பழங்குடிகளை பாடாய்படுத்தும் தமிழக அரசு  சிவசுப்பிரமணியன் பேட்டி (பகுதி-2)

செழியன்.ஜா

தமிழகத்தில் அரசு பழங்குடிகளையும், காடுகளையும் கையாளும் முறை மிக மோசமாக உள்ளது. கல்வி,பொருளாதாரம்,சூழலியல் பாதுகாப்பு,அடிப்படைத் தேவைகளுக்கான ரேஷன் பொருள்கள் பெறுவது, ஓட்டுப் போடுவது என எல்லாவற்றிலும் தமிழக பழங்குடிகள் சந்திக்கும் பிரச்சினைகளை சொல்கிறார் சிவ சுப்பிரமணியன்.

பழங்குடிகளே  காடுகளைப் பாதுகாக்க முடியும்

வனத்துறை வேலைக்குக் கேரளா, கர்நாடகா அரசுகள் 60 சதவிகிதம் அந்த மாநில பழங்குடிகளையே  நியமனம் செய்கின்றன.. ஆனால்  தமிழ்நாடு  அந்த காடுகளை பற்றி அனுபவமே இல்லாத நபர்களை நியமிக்கிறார்கள்.   நகர்புரத்தில் இருப்பவருக்குக் காட்டிற்குள் வேலை கொடுக்கிறார்கள்.அவரால் காட்டிற்குள் என்ன வேலை செய்ய முடியும்? காடு,விலங்குகள் பற்றிய எந்த வித அனுபவமும் இல்லாத, அந்த மண்ணை சேராத நபர்கள் தமிழக வனத்துறையில் அதிகம்! இவர்களால் காட்டிற்கு எந்தப் பயனும் இல்லை.பாதகங்களே அதிகம் உண்டாகிறது.

பழங்குடி மக்களுக்குக் காடு நன்கு அத்துப்படி. மற்றும் சொந்த வாழிடம். வனவிலங்குகள் செயல்பாடுகள் தெரியும், காட்டின் வழித்தடங்களில் தினமும் சென்று வருவார்கள். அவர்களைப் பணி நியமனம் செய்வதே காட்டை பாதுகாக்க, காட்டு உயிரினங்களைப் பாதுகாக்கச் சிறந்த  முறையாகும்.!

.காட்டை அழித்தவர்கள் என்று இதுவரை எந்த பழங்குடி மக்கள் மீதும் குற்றச்சாட்டுகள் இல்லை. தமிழக வனத்துறையில் இவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தால் காடு காடாகவே இருக்கும். பழங்குடிகளுக்கும் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுவரை பழங்குடி மக்களுக்கு பத்து பதினைந்து விழுக்காடு  வேலைவாய்ப்பைக் கூட அரசு உருவாக்கவில்லை.

பழங்குடிகளின் கல்வி

பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் அரசு பள்ளிக் கூடங்கள் ஒழுங்காக நடப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் பள்ளிகள் மூடியே இருக்கிறது.

பெரும்பாலும் அங்கு உள்ள பள்ளிகளில் ஐம்பது சதவிகிதம் மாணவர்கள் கூட படிப்பது இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களைப் பள்ளிக்கு வரவைக்கவோ, கற்பிக்கவோ ஆர்வம் காட்டுவதில்லை. பிள்ளைகளும் படித்தால் என்ன நன்மை என்று தெரியாமல் மாடு மேய்க்கச் சென்று விடுகிறார்கள். அரசு, கல்வித்துறை, ஆசிரியர்கள் தரப்பில் முயற்சி எடுத்து இருந்தால் அங்குள்ள மாணவர்களின் முழு வருகையை உறுதிப்படுத்தி இருக்கலாம். மற்றும் பழங்குடிகள் பாடத்திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்.

பழங்குடிகளுக்குத் தொடர்பே இல்லாத கல்வியை அவர்களுக்குத் தருகிறார்கள். அவர்கள் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ற கல்வி தரப்படுவதில்லை!. காடு அவன் பூமி. அந்த பூமியை பாதுகாக்கும் விதத்தில் கல்வி இருக்க வேண்டும். மாடு, ஆடு, கோழி வளர்ப்பு முழு குடும்பத்தையும் காப்பாற்றிவிடும். இவற்றை இன்னும் எப்படி மேம்படுத்தலாம், இன்னும் சிறப்பாகச் செய்வது தொடர்பான கல்வி இருக்கவேண்டும். அவனை நகரவாசிகளாக மாற்ற முயற்சிக்க  வேண்டாம்.அவன் காடு வாழ் மனிதனாகவே இருக்க விரும்புகிறான். அந்த இயற்கை வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியை அரசு தர வேண்டும்.

பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லையென்றாலும், நடைமுறை சார்ந்த கல்வியாக மாதம் நான்கு வகுப்புகளேனும் நடத்த வேண்டும்.

சுடர் அமைப்பு

சத்தியமங்கலத்தில் சுடர் என்று அமைப்பை நடராசன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் பழங்குடி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வருவது,  அவர்களைப் படிக்க வைப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று இதற்காகவே பத்து ஆண்டுகளாகப்  போராடிக் கொண்டு இருக்கிறார். ஏறக்குறைய 40 கிராமத்தில் இருக்கும் பிள்ளைகளை படிக்கவைக்க முயற்சி செய்து வருகிறார். இவருடைய குற்றச்சாட்டு எந்த பள்ளியிலும் ஆசிரியர்கள் வருவதில்லை என்பதே. ஏன் வருவதில்லை என்பதை பார்ப்போம்.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லை பள்ளிகள்

ஆசிரியர் எங்கோ ஓரிடத்தில் இருப்பார்.கல்வி கற்கும் பிள்ளைகள் எங்கோ ஓரிடத்தில் இருக்கும். தொலைதூரம் பயணப்பட்டு வந்து பாடம் எடுக்க ஆசிரியர்கள் விரும்புவதில்லை. தமிழ்நாடு-கர்நாடகா எல்லை பாலாறு ஆகும். பாலாற்றின் வலது கரை கர்நாடகா, இடது கரை தமிழ்நாடு. இடது கரையில் வேலாம்பட்டி, குட்டையூர் என்று இரண்டு ஊர்கள் உண்டு. இந்த இரண்டு ஊரில் பெரும்பாலும் இருப்பவர்கள் சோளகர்,  லிங்காயத்து சமூகத்தைச்  சேர்ந்தவர்கள். இந்த ஊரில் இரண்டு பள்ளிகள் உண்டு. அந்தியூர் தொடக்கக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் வருகிறது. இங்கிருந்து ஒரு ஆசிரியர் பள்ளிக்குச்  செல்லவேண்டும் என்றால் 80 கிலோமீட்டர் ஆகும். எப்படி தினமும் சென்று வரமுடியும். வாரம் ஒரு நாள் திங்கட்கிழமை சென்று மறுநாள் கிளம்பி வந்துவிடுவார். இப்படிச் சென்றால், அங்குப் படிக்கும் மாணவர்கள் நிலைமை என்னாகும். இதைவிட அங்கேயே தங்கி, காடுகளைப் பற்றித் தெரிந்த பட்டதாரி இளைஞர்களை   பணியமர்த்தலாம்.

காடுகளை ஒட்டி, மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த சிக்கல்கள் உண்டு. அந்தந்த இடத்தின் அருகில் இருப்பவர்களை ஆசிரியராக நியமிப்பதே இதற்கு தீர்வாகும்!

தமிழக அரசிடம் சரியான திட்டம் இல்லை

கேரளா வனத்துறை 100 சதவிகிதம் அந்த இடத்திற்கு ஏற்ற பயிர்களை மலைகளில் பயிரிடப் பழங்குடிகளை ஊக்கப்படுத்துகிறார்கள். எந்தவித சமவெளி பயிர்களும் மலையில் பயிரிட அனுமதி இல்லை.ஆனால்,தமிழ் நாட்டில் நிலமை தலைகீழாகவுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பரம்பிக்குளம் ஆழியார் ஆணை, பெருவரிபள்ளம் அணை, தூனக்கடவு ஆணை இந்த மூன்று அணையிலும் அங்கு உள்ள பழங்குடிகள் மீன்களைப்  பிடித்து உணவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் விற்பனை செய்ய முடியாது. கேரளா வனத்துறை இங்கு உள்ள மீன்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தவில்லை. அப்படி மீன்களை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டு இருந்தால் அந்த அணைகள் முழுவதும் வணிகர்களின் கைகளில் சென்றுவிடும். காடுகளை முழுமையாகப்  பாதுகாப்பதால் கேரளாவில் அதிக மழை பெய்கிறது.

கர்நாடகாவில் 80 சதவிகிதம் பாரம்பரிய பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள். சமவெளி பயிர்கள் 20 சதவிகிதம் மட்டுமே பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு அளவு கர்நாடகா மோசமாக இல்லை, கேரளா முழுமையாக காடு சூழ் பகுதியாக இருக்கிறது.

மலைவாழ் மக்களுக்கு என்று எந்தவித கமிட்டியும் இல்லை. காடுகள் சார்ந்த ஆய்வாளர்கள், அறிஞர்கள், மலைவாழ் மக்களுக்கான சமூக ஆர்வலர்கள்,, பழங்குடிகள் இவர்களை ஒருங்கிணைத்து ஒரு கமிட்டி இருக்கவேண்டும். அந்த கமிட்டி இங்கு எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதாக எதிர்காலத்திற்கு இந்த மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை, வழிகாட்டலைத் தரவேண்டும். ஆனால் எந்த வித கமிட்டியும் இல்லை.

வன பாதுகாப்புக் குழு என்று ஒன்று உள்ளது. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இந்த குழு அமைத்துவிடும். சில திட்டங்கள் இவர்கள் உருவாக்குகிறார்கள் வீடு கட்டித்தருவது. கடன் ஏற்பாடு செய்து தருவது என்று. ஆனால் ஓட்டு மொத்தமாகப் பார்க்கும் போது  வனத்தைப் பாதுகாக்க எந்த அக்கறையும் இந்த குழுவுக்கு இருப்பதில்லை. காட்டைக் கொண்டு தாங்கள் என்ன ஆதாயம் அடையலாம் என்ற வகையிலும் சிலர் செயல்படுகிறார்கள்.

ரேஷன் வாங்க,ஓட்டுப் போட …எத்தனை அவஸ்த்தைகள்!

ஒவ்வொரு தேர்தலிலும் 60 விழுக்காடு ஓட்டுகள் மட்டுமே பதிவாகும். ஏன் இவ்வளவு  குறைவாகப் பதிவு ஆகிறது என்றால்,. ஈரோடு மாவட்டம் பவானி சாகரில் இருந்து 40 கிலோமீட்டர் உள்ளே சென்றால் தெங்குமரடா ஊர் வரும். இந்த பகுதி மக்களின் அனைத்து தேவையும் பவானி சாகர், சத்தியமங்கலம் நகரில் முடிந்துவிடுகிறது. ஆனால் இவர்களின் ரேஷன் காடு, குடியுரிமையும் நீலகிரி மாவட்டத்தில் இருக்கிறது.. இங்கு இருப்பவர்கள் கோத்தகிரி சென்று தான் ஓட்டு செலுத்தவேண்டும். இதே போல் கத்திரி மலை கீழ் நிலம் சேலம் மாவட்டத்தில் வருகிறது. கத்திரிமலை மக்களின் ரேஷன், ஓட்டு ஈரோடு மாவட்டத்தில் வருகிறது.  இங்கிருந்து ஏழு மலை தாண்டி பர்கூர் நியாயவிலை கடையில் தான் பொருள் வாங்க வேண்டும்.

இப்படி தெளிவில்லாமல் பழங்குடிகளின் ரேஷன், ஓட்டு முறைகள் இருப்பதால் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தங்கள் வாழிடத்தில் ஓட்டுப் போடும் வாய்ப்புகள் இல்லாததால், குறைந்த அளவே அங்கே ஓட்டுகள் பதிவாகின்றன. மறுசீரமைப்பு செய்தபொழுது இவற்றையெல்லாம் மாற்றி அமைத்து இருக்கலாம்.

உண்ணிச்செடி கூடை

இன்று காடுகளை அழிக்கக் கூடிய மிக முக்கியச் செடி  உண்ணிச்செடி ஆகும். இந்த செடி ஒட்டுண்ணி மாதிரி. எங்கு இது படர்ந்தாலும் பக்கத்தில் இருக்கும்  மரங்களைச் சாகடித்துவிடும். வளரவிடாது. இவற்றின் வளர்ச்சியைத் தடுக்க, முழுவதும் அழிக்கத் தமிழக அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. ஆனால், இந்த உண்ணிச்செடிகளின் தண்டுகள் பலமான தண்டுகள். இந்த தண்டுகளை வெட்டி எடுத்து அதிலிருந்து கூடை, நாற்காலி, உணவு மேஜை தயார் செய்கிறார்கள்.

இந்ததயாரிப்புகளை கர்நாடகா வனத்துறை ஊக்குவிக்கிறது. அப்படி செய்யப்படும் பொருட்களை வனத்துறை கொள்முதல் செய்து நகர்புறத்தில் விற்பனைக்கு அனுப்புகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த நிலை இல்லை. கர்நாடகா வனத்துறை மாதிரி இங்கும் உண்ணிச்செடிகளில் பொருட்கள் செய்யவதை ஊக்கப்படுத்தினால் பழங்குடி மக்களுக்கும் வேலை கிடைத்தது போல் இருக்கும், உண்ணிச்செடிகளும்  அதிகரிக்காமல் மட்டுப்பட்டு இருக்கும்.

கர்நாடகா எப்படிச் செயல்படுகிறது

வனப் பகுதிகளில் வாகனங்களின் நடமாட்டத்தை கர்நாடக,கேரள அரசுகள் சிறப்பாக கட்டுப்படுத்துகின்றன.

மாலை காட்டுயிர்கள் கேரள, கர்நாடக பகுதிகளில் சாதாரணமாக கடந்து  செல்வதைப்  பார்க்கலாம். மான் கூட்டங்கள் மேய்ந்து கொண்டு இருக்கும். மாலை வாகனம் இல்லை என்பது காட்டுயிர்களுக்குச் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது. மாலை வாகனம் செல்வதற்கான  தடையைக் கர்நாடக வனத்துறை மிகக் கடுமையாக  கடைப்பிடிக்கிறது.

அதேபோல் கேரளாவுக்குச் செல்லும் வழிப்பாதையும் மூடிவிட்டார்கள். ஆனால் தமிழ்நாடு நிலைமை மோசம்! இங்கே விலங்குகள் நடமாடினாலே எமலோகத்திற்கு அனுப்பிவைத்துவிடும் அளவுக்கு வாகன நடமாட்டங்கள் அதிகம்!

தமிழ்நாடு எப்படிச் செயல்படுகிறது?

பன்னாரியில் இருந்து சாம்ராஜ் நகர் வரை நான்குவழிப் பாதை, அந்தியூர் இருந்து கொள்ளேகால் வரை இரண்டு வழிப் பாதை. இந்த இரண்டு பாதையிலும் 24 மணி நேரமும் வாகனம் செல்கிறது. மற்றும் பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் வரை இடையில் ஆறு அல்லது எட்டு செக்போஸ்ட் உண்டு. ஒரு செக்போஸ்ட்ல்  லாரிக்கு 500 ரூபாய் சுங்கம் கட்டணம் செலுத்தவேண்டும்.  ஒரு லாரி  கோயம்புத்தூரில்  கிளம்பி பெங்களூர் செல்வதற்கு ரூ3000 முதல் ரூ4000 வரை சுங்கம் கட்டணம் செலுத்த வேண்டும்.கிடதட்ட இது ஒரு அதிகாரபூர்வமான பகல் கொள்ளை!

சுங்கச்சாவடி ஏற்படுத்திய ஊழல் வழிகள்

அதே லாரி மலைப்பாதை வழியாகச் சென்றால் பன்னாரியில் ஒரு சோதனை சாவடி உள்ளது. அதேபோல் அந்த பக்கம் புளிஞ்சூரில் ஒரு சோதனை சாவடி உண்டு. 500 ரூபாய் கொடுத்தால் போதும் பெங்களூர் சென்றுவிடலாம்.. மூன்றாயிரம் மிச்சம் ஆகிறது அதனால் 24 மணிநேரமும் லாரி சென்று வருகிறது. ஒரு நாளைக்கு இந்த சோதனை சாவடியில் அமர்ந்து இருக்கும் வருவாய்த்துறை, போக்குவரத்துக்கு துறை, வருமானவரித் துறை, காவல் துறை, வனத்துறை இந்த ஐந்து பேருக்கும் 3 லட்சம் ரூபாய் வசூலாகிறது. மாதம் ஒரு கோடி வரை வசூலாகிறது. பட்டவர்த்தனமாக வெளிப்படையாக நடைபெறுகிறது. இது எதுவும் கணக்கில் வராத பணம். அனைத்து மட்டத்திற்கும் இந்த ஊழல் பணம் செல்கிறது.

இப்படி வனவிலங்கு நடமாட்டம் இருக்கும் இரவு நேரத்தில் 2000 முதல் 3000 வாகனங்கள் செல்வதால் அந்த பகுதி காட்டுயிர்கள் எல்லாம் மிகவும்  பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் நிறைய விலங்குகள் வாகனத்தில் அடிபடுவது, இறப்பது, என தினம்தோறும் நடக்கிறது.

சுங்கச்சாவடிக்குப் அதிகமாக பணம் கட்டுவதற்குப் பயந்தே  காட்டுப் பாதையைப்  பயன்படுத்துகிறார்கள்.  சுங்கம் கட்டணத்தைக் குறைத்தால் ஊழலுக்கே வாய்ப்பில்லை. காட்டுப் பகுதியும் பாதுகாக்கப்படும்.

எப்படி கர்நாடகா தங்கள் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் மிககடுமையான வழிமுறையை கடைபிடிக்கிறதோ அதே வழிமுறையை தமிழ்நாடும் கடைபிடிக்க வேண்டும். இதனால் காடு பாதுகாப்பாக இருக்கும்.காட்டுயிர்கள் நலமாக வாழும். சோதனைசாவடி ஊழல்கள் ஒழியும்.

ஆதாயத்திற்காக பழங்குடி பெண்களைத் திருமணம் செய்கிறார்கள்!

மலையை ஒட்டிய நகர்பகுதிகளில் தேர்தலில் நிற்பதற்கு என்று பழங்குடிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படும். சில பஞ்சாயத்துகளில் அப்படி பழங்குடிகள் நிற்கலாம். அதற்காக நகரவாசிகள்கள்  பழங்குடி பெண்ணை திருமணம் செய்து வந்து விடுகிறார்கள். இப்படி திருமணம் செய்வதால் பல சலுகைகள் பெற முடியும்.. நகரவாசிகள் பழங்குடி பெண்ணை திருமணம் செய்துவிட்டால் குழந்தைக்கு பழங்குடி சான்றிதழ் வாங்கலாம். மற்றும் தேர்தலில் மனைவியை நிற்கவைத்து தலைவராகலாம். அரசு வேலையும் சமூக அடிப்படையில் வாங்கிவிடலாம். இவ்வளவு சலுகைகள் இருப்பதால் இப்பொழுது பழங்குடி பெண்களை ஆதாயத்திற்காக  திருமணம் செய்யும் மோசமான கலாச்சாரம் உருவாகி வருகிறது.

பழங்குடிகள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு தேர்தல் தொகுதி ஒதுக்கினால் இதுபோல் தவறு நடைபெறாது. அதைவிட்டு நகரப்பகுதிகளில் எதற்கு இவர்களுக்கு தொகுதி ஒதுக்க வேண்டும். மறுசீரமைப்பு நடைபெற்ற பொழுதாவது இந்த முரண்களைக் கலைந்திருக்க வேண்டும்.

மொத்தமாக பார்க்கும் பொழுது தமிழக பழங்குடிகள் நிலை மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. தமிழக அரசு இதை முதன்மையாக எடுத்து இவர்களின் வாழ்க்கையில், கல்வியில், வேலைவாய்ப்பில், பாரம்பரிய பயிர் முறைகளில் முன்னுரிமை கொடுத்துப் பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்சம் கேரளா, கர்நாடகா மாநில பழங்குடிகள் அளவுக்காவது தமிழக பழங்குடிகள் வாழவேண்டும்.

காட்டுயிர், வீரப்பன் பற்றி அடுத்து பகுதியில் பார்க்கலாம்.

சிவ சுப்பிரமணியன்

30 ஆண்டுக்கால பத்திரிகையாளர், எழுத்தாளர் ,மனித உரிமைச் செயற்பாட்டாளர். வீரப்பனை முதன்முதலில் காட்டுக்குச் சென்று சந்தித்து எழுதியவர்.பழங்குடி சமூக மக்களின் பல பிரச்சினைகளை அடிக்கடி எழுதிக் கவனப்படுத்தி, சில தீர்வுகளுக்குக் காரணமானவர்.

 # பொய் வழக்கும்,போராட்டமும்

 # அழகிய தமிழ் பெயர்கள்   ஆகிய நூல்களின் ஆசிரியர்.

’வீரப்பன் வாழ்ந்ததும்,வீழ்ந்ததும்’ என்ற நூலை விரைவில் வெளியிட உள்ளார்.

தொடரும்…

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time